Serial Stories சதி வளையம்

சதி வளையம்-3

3 டாக்டர் திலீப் பேசுகிறார்!

தன்யாவும் தர்ஷினியும் டாக்டர் திலீப்பைச் சந்தித்த போது, “இந்தக் குட்டிகள் என்ன செய்யப் போகின்றது” என்று பரிகாசமாகத்தான் நினைத்தார், இருந்தாலும் பாஸ்கரையும் சதானந்த ரகுநாத வர்மாவையும் அறிமுகம் செய்து வைத்தார்.

பாஸ்கர் அவர்களை உற்சாகமாக வரவேற்றான். ஐடியில் இருப்பதால் போலும், அவர்கள் வயது அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சித்தப்பா சதானந்த வர்மா என்ன நினைத்தாரோ, அவர் முகத்தில் ஒன்றும் தெரியவில்லை.

தன்யா முதலில் மோதிரத்தை வீட்டில் தேடப் போவதாகத் தெரிவித்த போது, அவர்கள் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ‘தேடல் வேட்டைக்கு’ வந்து இறங்கிய படையும், தன்யா-தர்ஷினியின் புரொபஷனலான உத்தரவுகளும், முழுமையான முயற்சிகளும் அவர்களை அயரச் செய்தன.

தேடுதல் வெகு ஜரூராய்த்தான் நடந்தது, ஆனால் பலன் என்னவோ ஒன்றுமில்லை. மோதிரம் தொலைந்தது தொலைந்ததுதான்.

தன்யா-தர்ஷினி மனம் தளரவில்லை. இதை அவர்கள் எதிர்பார்த்ததாகவே தோன்றியது. இரவாகிவிட்டதால் மறுநாள் டாக்டர் திலீப்பை மீண்டும் சந்திப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டாள் தன்யா.

=======

மறுநாள் காலை டாக்டர் திலீப் தன் கிளினிக்கிற்குள் நுழைந்த போது, தயாராகக் காத்துக் கொண்டிருந்த தன்யா-தர்ஷினியைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“ரைட் ஆன் டைம்” என்றார். “சாதனைகளுக்கு அது ரொம்ப முக்கியம்.”

மூவரும் அமர்ந்ததும், “உங்க பிரதர் எனக்கு நல்ல ஃப்ரண்ட். ஜயகிருஷ்ண தீக்ஷிதர் பஜனை கேட்க இரண்டு பேருமே போவோம். கட்டாயம் காமராஜர் அரங்கத்தில் மீட் பண்ணுவோம்” என்றார்.

“சந்தோஷம் டாக்டர்” என்றாள் தன்யா சுருக்கமாக. “மிஸ்டர் பாஸ்கர் கேஸைப் பத்தி பேசுவோமா? முதலில் அவரோட பேக்கிரவுண்ட் பற்றிச் சொல்லுங்க.”

“ரைட், விஷயத்திற்கு வந்துடறேன். காப்பி சாப்பிடலாமில்லையா?” அவர்கள் தலையாட்டியதும் இண்டர்காமை எடுத்துப் பேசிவிட்டு, அவர்கள் பக்கம் திரும்பினார் டாக்டர் திலீப்.




“பாஸ்கர்… உங்களுக்குத் தர்மா சொல்லியிருப்பான். என் அத்தை பையன். அதைவிட ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட். அவனை நான் ரொம்ப மதிக்கிறேன். கேரளாவிலே வர்மான்னா இராஜவம்சம். இப்போ கேரளாவிலே இராஜாக்கள் இராஜ்யம் போய், சொத்துக்களும் போய் ரொம்ப ஏழையாய்க்கூடப் போனவங்க இருக்காங்க. ஆனா பாஸ்கர் ஃபேமிலி அப்படி இல்லே. பயங்கர ரிச். ராஜவம்சம்கிற கெத்து கொஞ்சம் ஜாஸ்தி. இன்னும் கேரளாலே அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களைத் “தம்புரான்”, “யுவர் ஹைனஸ்” என்றுதான் கூப்பிடுவாங்க.

“ஆனா பாஸ்கருக்கு இவங்க பந்தா எதுவும் பிடிக்கலை. அவன் அம்மா, அப்பா சின்ன வயசிலேயே போயிட்டாங்க. ஆக்ஸிடெண்ட். அவன் சென்னையிலேதான் வளர்ந்தான். அவனை அவன் சித்தப்பா பெண் சுஜாதாதான் வளர்த்தாள். அவனைவிட எட்டு வயசு பெரியவள். அவள் அப்பா சத்யநாதன் ஆர்மிக்காரர். கார்கில் யுத்தத்தில் காலமாயிட்டார்.

“அவர்களுடைய குடும்ப எஸ்டேட் எல்லாம் அவன் அப்பாவுக்கப்புறம் பாஸ்கருக்குத் தான் போகணும். மைனர் சொத்தா இருந்ததுனால அவனுடைய கடைசிச் சித்தப்பா சதானந்த ரகுநாத வர்மா இப்போ மெயிண்டைய்ன் பண்ணிண்டிருக்கார். அவன் கல்யாணத்துக்கப்புறம் அவன் கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிடுவார். அவருக்கு ஒரே பிள்ளை, விஜய்னு பேரு … விஜய ரகுநாத வர்மா…”

“உங்க பேரு திலீப ரகுநாத வர்மா இல்லையா?” சிரித்துக் கொண்டே கேட்டாள் தன்யா.

திலீபும் சிரித்துவிட்டார். “நான் அவனோட அம்மா சைட் ரிலேட்டிவ். தமிழ். படிப்புத் தான் ஒரு மனிதனோட மெய்ன் தகுதி, பிறப்பு இல்லேன்னு நம்பறவன். பாஸ்கரும் அப்படித்தான். தன் பெயரிலேர்ந்து ரகுநாத வர்மாவைக் கட் பண்ணி கெஜட்டிலேயே மாத்திட்டான். அவனோட சிம்ப்பிள் நேச்சர் பார்த்துத்தான் பத்மா அவனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா.

“இப்போ அந்த மோதிரத்தைப் பற்றிச் சொல்லிடறேன். காணாமல் போன மோதிரத்தை நானும் பார்த்திருக்கேன். பழைய தங்கம், சுற்றி மூன்று வரிசையாய் வைரக் கற்கள். பின்னாடி சான்ஸ்க்ரிட்ல ஒரு இன்ஸ்க்ரிப்ஷன். ‘ஹரி தாஸ ராஜ ரிஷி’ ன்னு இருக்குமாம். ஆக்சுவலா அழுது வடியும். ஆனா இந்த மோதிரத்தின் மதிப்பு பல லட்சங்களிலேர்ந்து ஒரு கோடியாம்..”

“என்ன டாக்டர், கதையா விடறீங்க? உயர்ந்தால் ஒரு பவுன் இருக்கற ஒரு மோதிரத்துக்கா …”

இடைமறித்தார் டாக்டர். “பவுன் மட்டும் அதனோட வேல்யு இல்லேம்மா! சுற்றிப் பதிக்கப் பட்டிருக்கும் அபூர்வ வைரங்கள், அப்புறம் ஒரு பெரிய சிகப்புக் கல். நாக மாணிக்கமாம் அது. பேத்தல் தான், பாம்பு முட்டை தான் போடும், மாணிக்கம் போட்டு நான் பார்த்ததே இல்ல. இருந்தாலும் இப்படியெல்லாம் நம்பறவங்க இருக்காங்களே!”

“நாம பார்த்தது இல்லேங்கறதுனால மட்டும் எதையும் கட்டுக்கதைன்னு ஒதுக்க முடியாது, இல்லையா?” என்று மெதுவான குரலில் கேட்டாள் தர்ஷினி. டாக்டர் திடுக்கிட்டார். அவளுக்குப் பேச வரும் என்றே அவர் எதிர்பார்க்கவில்லை போலிருந்தது. “ஆண்டிக் வேல்யு வேற இருக்கும், இல்லையா டாக்டர்?” என்று தொடர்ந்தாள்.

“வெல், யெஸ்” என்றார் டாக்டர் சுதாரித்தவராக. “இராஜ பட்டத்தையும் சொத்துக்களையும் வாரிசு கிட்ட ஹாண்ட்-ஓவர் செய்யும்போது இந்த மோதிரத்தை வாரிசு கிட்டக் கொடுக்கறதுங்கறது குடும்பப் பழக்கம். யார்கிட்ட இந்த மோதிரம் இருக்கோ அவங்கதான் ராஜபட்டம் பெற்றுச் சொத்துக்களையும் அடைவாங்கன்னு கூட நம்பிக்கை இருக்கு. பாஸ்கரோட சித்தப்பா மோதிரத்தைப் பாஸ்கருக்கு 21 வயசு ஆகும்போதே பூஜை எல்லாம் பண்ணிக் கொடுத்துட்டார். அவனுக்குக் கல்யாணம் ஆனதும் எஸ்டேட்ஸும் லீகலா கைமாறும்.”

“ஓகே, புரிஞ்சது டாக்டர். இந்த மோதிரத்தை எடுத்தது யாராயிருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?” என்றாள் தன்யா. டாக்டர் முகம் சுருங்குவதைப் பார்த்ததும் “ஆஃப் த ரெகார்ட்” என்றாள் அவசரமாக.

காப்பி வந்தது.

திலீப் புன்னகைத்தார். “விஜய்னுதான் முக்கால்வாசிப் பேர் நினைக்கறாங்க” என்றார் மெதுவாக.

“குடும்பச் சொத்துக்கள் தனக்கு வந்துடும்கறது மோட்டிவ், இல்லையா? விஜய் டைப் எப்படி?”

“டிபிகல் யூத். பொறுப்பே கிடையாது. காலேஜ் ட்ராப்-அவுட். எல்லா கெட்ட பழக்கமும்  உண்டுன்னு சொல்லிக்கறாங்க. எப்போதும் அவனைச் சுற்றி ஒரு கிங்கரர் படை வேற..”

“போதும், புரிஞ்சுடுச்சு” புன்னகைத்தாள் தன்யா. “ஸோ, டாக்டர் சந்தேகப்படறது விஜய்யைத்தான், இல்ல?”

“இல்ல” என்றாள் தர்ஷினி.

டாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது.




“எல்லா கேஸிலேயும் ஒரு விஜய் இருப்பான் டாக்டர். ஒரு பொறுத்தமான சஸ்பெக்ட், ஒரு விக்டிம். நீங்க சந்தேகப்படறது அவனை இல்லைங்கறது நீங்க விஜய்யைப் பற்றிப் பேசின வேகத்திலேயே தெரிஞ்சுடுச்சு. கமான், உங்க நண்பருக்கு உதவணும்னு எண்ணமிருந்தா ஃப்ராங்கா பேசுங்க” என்றாள் தர்ஷினி.

“அது பாஸ்கருக்கு உதவும்னா இதுக்குள்ள சொல்லியிருப்பேனே” என்றார் டாக்டர் மெதுவாய்.

“ஸோ நீங்க சந்தேகப்படறது பாஸ்கரைத்தான்” என்றாள் தன்யா.

இதுங்களைச் சாதாரணமா நினைச்சது தப்பு,  என்று நினைத்துக் கொண்டார் டாக்டர். ஒண்ணு நேரே நின்று பொளேர்னு அறையற சிங்கம். இன்னொன்று கண்ணுக்கே தெரியாமல் வானத்திலே வெகு உயரத்தில் பறந்துட்டு இருக்கும்போதே கபால்னு கீழே வந்து இரையைக் கவ்வற கழுகு. 

தன் தலையை ஒரு நிமிடம் உதறிக் கொண்டு, காப்பியை ஒரு வாய் குடித்துக் கொண்டார். “சரி, வெளிப்படையாவே சொல்லிடறேன். பாஸ்கர் கல்யாணம் பண்ணிக்கப் போற பத்மாவோட ஃபேமிலி டாக்டர் நான் தான். நல்லவங்க தான். ஆனா ரொம்பக் கஷ்டத்திலேர்ந்து முன்னுக்கு வந்தவங்க. கல்வியறிவு அவ்வளவு இல்லே. பட்டிக்காடுன்னே சொல்லலாம். பத்மாவோட சம்பளத்தைத் தான் சார்ந்து இருக்காங்க. பத்மா தம்பி இன்னும் வேலைக்கு வரல.

“பத்மா ஒரு… ஒரு ஃபன்டாஸ்டிக் கேர்ள்” என்றார் டாக்டர் பரவசமாய். “அறிவாளி, திறமைசாலி, ரொம்பப் பொறுப்பானவளும் கூட.”

“அப்போ பாஸ்கர் தானே அந்த மோதிரத்தை மறைக்க வேண்டிய அவசியம் என்ன டாக்டர்?”

“பாஸ்கருக்கு அவன் அம்மா-அப்பா வெச்சுட்டுப் போன சொத்தே ஏராளம் இருக்கு, இந்தக் குடும்ப எஸ்டேட்டெல்லாம் தேவையே இல்ல. அந்தக் குடும்பத்தோட ரோதனையிலிருந்து தப்பிக்க அவன் இப்படிச் செய்திருக்கலாம். கல்யாணம் நின்னுடும்னு அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.”

“ரொம்ப வீக் காரணம், டாக்டர். நிஜம் ப்ளீஸ்.”

டாக்டர் தயங்கித் தயங்கித் தொடர்ந்தார். “ஓகே, ஓகே. பத்மா குடும்பத்தைப் பற்றிச் சொன்னேன். பத்மா க்ரேட் தான். ஆனா அதுக்காக இந்தச் சாதாரணக் குடும்பத்தில சம்பந்தம் பண்ணணுமான்னு பாஸ்கர் நினைச்சிருக்கலாம். நேரடியா கல்யாணத்தை நிறுத்த முடியாம இந்தத் திருட்டுப் பழி போட்டிருக்கலாம்.”

“டாக்டர், நீங்க முதல்ல பாஸ்கர் பத்திச் சொன்னதுக்கும் இப்போ சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லையே?”




“அடிப்பார் அடிச்சா அம்மியும் நகருமே!”

“யார் அந்த அடிப்பார்?”

“அக்கா சுஜாதா.”

“சுஜாதாவே இதைப் பண்ணியிருக்கலாமே?”

“நோ சான்ஸ்.”

“எதனால அப்படிச் சொல்றீங்க?”

“சைகாலஜி. சுஜாதா ஒரு ஸ்னாப். அதாவது தன் இராஜ குடும்ப பேக்ரவுண்ட் பத்தி ரொம்பப் பெரிசா நினைக்கிறவ. அவளுக்கு இந்தச் சம்பந்தம் பிடிக்கல தான். ஆனா அதை நேரடியாக் காட்டுவாளே தவிர இந்த மாதிரி அண்டர் ஹாண்ட் வேலையெல்லாம் வராது. பட்பட்னு மனதிலே இருக்கறதைப் பேசிடுவாள். சூது பண்றது, திட்டம் போடறது இதெல்லாம் அவளுடைய சுபாவத்துக்கே விரோதம்.”

“அப்போ பாஸ்கர்தான் அந்த மோதிரத்தை மறைச்சு வச்சுட்டு நாடகமாடறார்னு சொல்றீங்க.”

“அப்படி நினைக்கக் கூட மனசு வலிக்குது. பாஸ்கர் ரொம்ப நல்லவன். ஆனா பணக்காரர்களை நம்ப முடியாதுன்னு மனசிலே ஒரு ஓரத்திலே படுது. பாஸ்கரைப் பற்றின என் அனுபவமோ அதைத் தப்புன்னு சொல்லுது. ஆனா என் இந்த சந்தேகத்திற்குப் பின்னால் வலுவான காரணம் ஒண்ணு இருக்கு.”

“என்னன்னு சொல்லலாமா?”

“சொல்ல முடியாது. அது சிநேகிதத் துரோகம். அதிகமாப் பேசிட்டேனோன்னு நானே வருத்தப் பட்டுக்கிட்டிருக்கேன். தேவையே இல்லாம பாஸ்கர் மேல நீங்க சந்தேகப்படும்படியாகப் பண்ணிட்டேன். உண்மையான திருடன் தப்பிச்சுக்க வாய்ப்புக் கொடுத்துட்டேன்.”

“அப்படி நீங்க வருத்தப்படவே வேண்டாம் டாக்டர்” என்றாள் தன்யா. “நம்பர் ஒன், நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் பாஸ்கர் மேல ஏற்கனவே எங்க சந்தேகப் புள்ளி விழுந்தாச்சு. நம்பர் டூ, இப்போ எங்களுக்கு எல்லார் பேரிலேயும் சந்தேகம் இருக்கு.”

“நீங்க உள்பட” என்றாள் தர்ஷினி.

அந்த அடியிலிருந்து டாக்டர் மீள்வதற்குள் “ஸீ யூ” சொல்லி மின்னலைப் போல் அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.

மின்சாரம் தாக்கியதைப் போல் உணர்ந்தார் டாக்டர் திலீப்.




What’s your Reaction?
+1
7
+1
8
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!