Serial Stories vana malai pol oru kathal வானமழை போல் ஒரு காதல்

வானமழை போல் ஒரு காதல்-1

1

 

ர்ர்ர்ரிரிரிங்ங்ங் …. என்ற மணி சத்தம் ஒலித்ததும் கசகசவெனற பேச்சுச் சத்தம் ஆரம்பமாகி விட அந்த லெக்சர்ர் வேறு வழியின்றி தனது புத்தகத்தை மூடி வைத்தார்.  ” நாளை அனைவரும் வகுப்பிற்கு வர வேண்டும். முக்கியமான போர்ஷன் எடுக்கப் போகிறேன் ”  என்று நினைவுறுத்தி விட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்.

 




” ஷ்…ஷப்பா ஒரு முக்கால் மணி நேரம் இந்த அம்மாவை தாங்குவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே…”  பெருமூச்சை வெளியேற்றினாள் வாசுகி. கூடவே எழுந்து நின்று போன லெக்சர்ரின் முதுகிற்கு கைகூப்பி ஒரு வணக்கத்தையும் வைத்தாள்.

 

” அய்யய்யோ நாளைக்கு ஏதோ முக்கியமான போர்ஷன்னு  சொல்லுதேடி ”  ராதா கலங்க…”  விடுடி அதை நாளைக்கு பாத்துக்கலாம் ” சாரதா சமாதானம் செய்தாள்.

 

” ம்கூம்டி  இந்த  கிளாஸை கட் பண்ணெல்லாம் முடியாது .பேசாமல் நாளைக்கு லீவு போட்டுட்டா என்னடி …? “பேராசை மின்னும் கண்களுடன் கேட்டாள் வாசுகி.

 

” உன்னால முடியும்டி… எங்களால முடியாது .காலேஜுக்கு லீவுன்னா  என்ன எதுக்கு எப்படினு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு கொல்லுவாங்க எங்க வீட்டில…”

 

” அது உங்க பிரச்சனை. நீங்க எப்படியும் போங்க .நான் முடிவு பண்ணிட்டேன் .நான் நாளைக்கு லீவு போட தான் போறேன் ” அறிவித்தவள்அப்போதே  அவள் மனதிற்குள் லீவிற்கான  காரணங்களைத் தேட துவங்கிவிட்டாள்.

 

” ஏய் பேசாம நாம எல்லாருமா சேர்ந்து கிளாஸ் கட் அடிச்சிட்டு சினிமாவுக்குப் போகலாமா ? சரண்யா கேட்க…இதையே முயற்சித்துப் பார்த்தால் என்ன என்னும் யோசனை வாசுகி வந்தது.

 

” அய்யய்யோ வீட்டுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் . என்னால் முடியாதுபா ” ராதாவின் பயம் குரலில் தெரிந்தது

 

” சே … நாமெல்லாம் பசங்களா பிறந்திருக்கனும்டி .இப்படி போரடிக்கிற கிளாஸ் எல்லாம் அட்டென்ட் பண்ண வேண்டிய அவசியம் இருந்திருக்காது .கட் பண்ணிட்டு ஜாலியா இருந்திருக்கலாம். ” 

 

” ஆமாம்டி கிளாசை கட்  அடிச்சிட்டு ஒரு சினிமா . அப்புறம் டீ கடையில முன்னாடி பெஞ்சில் உட்கார்ந்து கண்ணாடி கிளாஸ்ல டீ வாங்கி குடிச்சு …” வாசுகி விழிகள் கோளமாய் விரிய விவரித்தாள்.

 

” ஆமா அப்படியே சிகரெட்டை பத்த வச்சி ஸ்டைலா ஒரு தம்மு …” சரண்யா சொல்ல பட் டென அவன் தலையில் கொட்டினாள் வாசுகி.

 

” ஏய் தப்பா பேசாத கொன்னுடுவேன் ” விரல் ஆட்டி எச்சரித்தாள். ”  வேணும்னா  இதை ட்ரை பண்ணலாம்…” 

 

” எதைடி ? ” ஆர்வமாக  கேட்டனர் தோழிகள்.

 

” நம்ம காலேஜ் போகிற வழியில் அந்தக் குட்டிச் சுவர் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு போக வருகிற பெண்களை கிண்டல் செய்வார்களே சில தடி மாடுகள் .அதைப்போல் ட்ரை செய்யலாம்…” 

 

” ஐயோ பொண்ணுங்களே பொண்ணுங்களை கிண்டல் பண்றதுல என்னடி சுவாரசியம்  இருக்கப் போகுது ? “

 

” சீ லூசு நாம பசங்கள கிண்டல் பண்ணனும்டி …” வாசுகி சொல்ல ஒத்துக்கொண்டு மெலிதாய் கைதட்டினர் தோழிகள் .இப்படியாக தங்களுக்கு வாய்க்க கிட்டாத வாழ்வை பேசி மட்டும் தீர்த்துக்  கொண்டார்கள். அவ்வளவுதான் அவர்களது எல்லை. பேச்சை தாண்டி இதுபோலெல்லாம்  செய்வதற்கு துணிய மாட்டார்கள்.

 

” ஏன்டி ஒரே ஒரு தடவை நாமளும் கிளாசை  கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போனா தான் என்ன ? ” வாசுகி கேட்க சரண்யாவும் சாரதாவும் ஆவல் மின்னும் கண்களுடன் அவளைப் பார்த்தனர் .

 

“செய்யலாமே ” ஒத்த குரலில் கோரஸ் பாடினர்.

 

” ம்ஹூம்  நான் வரமாட்டேன் ” ராதா கத்தலாய் மறுக்க போடி தொடைநடுங்கி எனும் ஏசலை அவளுக்கு தந்து விட்டு மற்ற தோழிகள் உற்சாகமாக காலேஜை கட் அடித்துவிட்டு படம் பார்க்கப் போகும் திட்டத்தை தீட்டினர்.

 

” அந்த ஹீரோ அப்படியே சாக்லேட் பாய் மாதிரி இருக்கான்டி . ஒரு சீன்ல சைடாக திரும்பி ஓரக்கண்ணால ஒரு ரொமாண்டிக் லுக் விடுவான் பாரு.

ஐயோ அப்படியே கடிச்சு திங்கலாம் போல இருக்கும் . அந்த படத்துக்கே  போகலாம்டி ”  சரண்யாவின் வாயில் ஜொள் ஏகத்திற்கும் ஊற்றிக்கொண்டிருந்தது.

 

” அது எந்த ஹீரோ ?  பெரிய மன்மதன் …” வாசுகி உதட்டை சுளித்தாள்

 




” அவன் இந்த படத்தில்தான் இன்ட்ரடியூசிங் .நான் யூட்யூப்ல அந்த படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன் .அடடா என்னம்மா இருக்கான் ?  அவனுக்காகவே அந்த படத்தை பார்க்கலாம். ஏய் ப்ளீஸ் அந்த படத்துக்கே போகலாம்டி ” 

 

” நானும் பார்த்தேன்டி நாட் பேட் பார்க்கலாம் அவனை .அந்த படத்துல ஒரு சீன் வருது ஹீரோவும் ஹீரோயினும் முதன் முதல்ல பார்க்க போறாங்களாம் .ஆப்போசிட் ரோட்ல வந்துகிட்டு இருக்காங்க .அப்போ திடீர்னு சூழல் மாறிடுது . வெயில் போயி குளிர்ந்த காற்று வீசுது .மரத்துல இருக்குற பூவெல்லாம் அவுங்க மேல விழுந்து லேசா மழை தூவுது .இது எல்லாத்துக்கும் நடுவுல அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிடுறாங்க .எப்டிடி இப்படியெல்லாம் நடக்கும் ? ” சாரதா சலித்தாள்

 

” இதெல்லாம் படத்தில் மட்டும் தாண்டி நடக்கும் .நம் வாழ்க்கையில் நடக்கவே போகாத சம்பவங்கள் படத்தில் நடப்பதால்தான்  நாம அந்தப் படத்தை அப்படி பைத்தியமா பார்க்கிறோம் “.  வாசுகி ராகம் போல் இழுத்து சொல்ல அனைவரும் சிரித்தனர்.

 

முகம் வியர்க்க பயந்து நடுங்கியபடி உடன் வந்த ராதாவை கண்டுகொள்ளாமல் மறுநாள் தியேட்டருக்கு போகும் திட்டத்தை உறுதி செய்துவிட்டு தோழிகள் பிரிந்தனர்.

 

அந்தத் திட்டத்தை மனதிற்குள் அசை போட்டபடி தனது வீட்டு காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் வாசுகி .சுட்டெரிக்காத  மாலை வெயில் தான் .ஆனாலும் திடுமென சாரல் விழத் துவங்கியது .கூடவே மென்மையான தென்றலும் .அவளது வீட்டு வாசலில் இருந்த தங்க அரளி தனது பூக்களை மெத்தென அவள் முகத்தில் கொண்டு வந்து போட்டது .அருகில் இருந்த அம்மன் கோயிலின் ஆலய மணி அடிக்கத் துவங்கியது.

 

என்ன இது… அந்தப் படத்தில் வரும் சிச்சுவேஷன் போன்றே இருக்கிறதே.. அப்படியானால் இங்கே என்னுடைய காதலன் யாரும் இருக்கிறானா ..? விளையாட்டு சிரிப்புடன் நினைத்தபடி வாசலில் செருப்புகளை உதறிவிட்டு உள்ளே நுழைந்தவள் முன்னறையில் அமர்ந்திருந்த அந்த வாலிபனை பார்த்ததும் திகைத்தாள்.

 

இவளைப் பார்த்ததும் எழுந்து நின்ற அவனது கண்களும் இவள் மேலேதான் படிந்திருந்தன. வாசுகியின் அப்பா ஜெயக்குமார் தச்சு வேலை செய்யும் தொழில் பார்ப்பவர்.வீட்டின் பின்புறம்  பட்டறை வைத்துள்ளார்.

 

வீட்டின் முன்னால் கம்பி அழி  வைத்து நீளமாக ஓடிய வராண்டாவை தனது ஆபீஸ் அறை போல் உபயோகிப்பார் .அதில் ஒரு மர மேஜையும் ஒரு நாற்காலியும் இரண்டு ஸ்டூல்களும் கிடக்கும் .வேலை விஷயமாக பேச வருபவர்களை அங்கேயே அமர வைத்து பேசி அனுப்புவார் .ஆனால் இந்த இவன் அதையும் தாண்டி உள்ளே வந்து ஹாலில் அமர்ந்து இருக்கிறான் என்றால்…

 

வாசுகி தலை சாய்த்து யோசித்தாள் .யாரும் தூரத்து சொந்தக்காரனாக இருக்குமோ  ? இவனை எங்காவது பார்த்து இருக்கிறோமா ? அடையாளம் தெரிந்து கொள்வதற்காக கண்களை அகல விரித்து இன்னமும் அவனை விழுங்கலாய்  பார்த்தாள் .ஏனெனில் ஏதாவது சொந்தக்காரன் என்றால் ஒரு வாங்க  சொல்லாவிட்டால் அம்மா ராஜாத்தி சும்மா இருக்க மாட்டாள்.

 

நான்தான் அடையாளம் தேடுகிறேன் இவன் ஏன் இப்படி பார்த்துக்கொண்டிருக்கிறான் …? ஒருவேளை என்னுடைய பிரச்சனை தான் இவனுக்குமோ ? அவனது சலிக்காத பார்வையில் எரிச்சல் வர என்னடா வேண்டும் உனக்கு ? என அவன் சட்டையை பிடிக்கலாமா எனும் யோசனை வரை போனாள் வாசுகி.

 

” அடடே என்னம்மா காலேஜ் விட்டாயிற்று  போல .உள்ளே போய் முகத்தைக் கழுவிக் கொண்டு காபி கொண்டு வா ” உள்ளறையில் இருந்து வந்த ஜெயக்குமார் கையில் ஏதோ பேப்பர்களை வைத்திருந்தார். மகளை உள்ளே அனுப்பிவிட்டு அந்த பேப்பர்களை அவனிடம் காட்டியபடி சோபாவில் அமர்ந்தார் .

 

 வாசகி உள்ளே போய் முகம் கழுவி தலைமுடியை சீர் செய்து கொண்டிருந்தபோது ராஜாத்தி அவள் கையில் இரண்டு காப்பி டம்ளர்கள் அடங்கிய டிரேயை கொடுத்தாள்.

 

” போய் அப்பாவிற்கும் அந்த தம்பிக்கும் கொடு ” 

 

” என்னது நானா  ? உயர்ந்த வாசகியின் குரலை  ” ஷ ” என்று அடக்கினாள்.

 

” நீதான்டி போ ” 

 

இதென்ன புது பழக்கம் ? இப்படி வெளியாட்களுக்கு மகளை விட்டு உபச்சாரம் செய்யும் பழக்கம் தாய் தந்தைக்கு கிடையாது. சரிதான் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த வளர்ந்து கெட்டவன் ஏதோ ஒரு  தள்ளிய சொந்தம் தான் போல தோளைக் குலுக்கிக் கொண்டு வாசுகி கடனே என காபி ட்ரேயை அவர்கள் முன் கொண்டு போய் நீட்டினாள்.

 

” எடுத்துக்கோங்க தம்பி ”  ஜெயக்குமார் உபசரிக்க அவன் அவளைப் பார்த்தபடியே காபியை எடுத்துக் கொண்டான்.

 

” என் மகள் வாசுகி .பிஎஸ்சி இந்த வருடம் முடிக்கப் போகிறாள் . இவர் தேவராஜன் .மரக்கடை வைத்திருக்கிறார் .” பரஸ்பரம் இருவரையும் அறிமுகம் செய்து வைத்த தந்தையை ஆச்சரியமாக பார்த்தாள் .இதுவும் புது வழக்கம் தான் .ஆக இவன் உறவினனும் கிடையாது .

 

யாராய் இருக்கும்  ?அடுப்படிக்குள் போய்  மூளையை புரட்டிப் போட்டு யோசித்த பின்னும் ஒன்றும் பிடிபடாமல் போக , எதற்கும் இன்னொரு முறை பார்ப்போம் என்று உள்ளிருந்து தலையை நீட்டியவள் அந்நேரம் அவனும் அவளை நிமிர்ந்து பார்த்து விட வேகமாக தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

 

கண்ண உருட்டிகிட்டு எப்படி பார்க்குறான் பாரு ? எதிரே இருந்த கண்ணாடியில் அவனைப் போன்றே கண்களை விரித்து  போஸ் கொடுத்து  பார்த்துக் கொண்டாள் .பிறகு ” சரி தான் போடா ” அலட்சியமாக கையசைத்தாள்.

 

” யாரை பேசுகிறாய் ? ” ராஜாத்தி சந்தேகமாக மகளை பார்த்தாள் .

 

” யாரும் இல்லையே …சும்மா…ஏதோ பட வசனம் … “வந்திருக்கும் விருந்தாளிக்கு தான் கொடுத்த மரியாதை  தெரிந்தால் தாய் தன்னை தோசைக்கரண்டியால்  கொத்திவிடுவாள் என்று தெரிந்து கொண்டு ஏதோ சொல்லி சமாளித்தாள் .ஆனாலும் மகள் மீதான ராஜாத்தியின் சந்தேகப்பார்வை நீங்கவில்லை.

 

” இன்று கொஞ்சம் வெளி வேலை இருக்கிறது.

 காலேஜிற்கு லீவு போட்டு விடுகிறாயா பாப்பா ? ” மறுநாள் காலை ஜெயக்குமார் கேட்க ஒரு நிமிடம் துள்ளி குதிக்க நினைத்தவள் சட்டென்று தங்களது திட்டம் நினைவு வர ” ம்கூம்பா இன்னைக்கு எனக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு .அதை மிஸ் பண்ணவே முடியாது ” சத்தியம் செய்யட்டுமா… என்னும் ரேஞ்சில் நின்றாள்.

 

“சரி போ ”  ஜெயக்குமார் கை அசைத்து விட உற்சாகமாக படியிறங்கினாள். அவர் ” இன்று அவளுக்கு முக்கியமான கிளாசாம். நாளைக்கு பார்க்கலாமா ? “என்று யாரிடமோ போனில் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தும் மூளைக்கு ஏறவில்லை .புதிதாய் ஒரு சாகசம் செய்யப் போகும் போர்வீரனின் மன நிலையில் இருந்தாள் அவள்.

 

காலேஜுக்கு உள்ளே போகாமல் வெளியில் இருந்தபடி மெல்ல நழுவினார்கள் தோழிகள் நால்வரும் .அடுத்த தெருவில் இருக்கும் சினிமா தியேட்டருக்கு போய் பார்த்தால் அங்கே திரண்டு நின்றிருந்த கூட்டம் அவர்களை மலைக்க வைத்தது.

 

” ஆன்லைன்ல புக் பண்ணி இருக்கலாமோ ? ” 

 

” இந்தப் படத்துக்கு இவ்வளவு கூட்டம் இருக்கும்னு நினைக்கலை “

 

“இப்போ எப்படி போறது ? இவ்வளவு நீண்ட வரிசையில் எப்படி நிற்பது ? “

 

” நான் வரலப்பா .திரும்ப காலேஜுக்கு போக போறேன் ” தலையை ஷாலால் மூடி தன்னை மறைத்துக்   கொண்டிருந்த ராதா மெல்லிய அழுகையின் ஆரம்பத்தில் இருந்தாள

.

” உன்னை யார்டி இங்க வரச்சொன்னது ? சத்தம் இல்லாம இவ்வளவு நேரம்  எங்க பின்னாடியே வந்துட்டு …இப்ப மூக்குறிஞ்சுட்டு …” வாசுகி அவள் தலையில் கொட்டினாள்.

 

“ஏய் அவள விடுடி .இந்தக் கூட்டத்தில் நின்னு டிக்கெட் வாங்குனோம்னா நிச்சயம் தெரிஞ்சவங்க யார் கண்ணிலாவது பட்டு விடுவோம். பேசாம திரும்ப போயிடலாம் ” சாரதா சொல்ல எடுத்த டாஸ்கை முடிக்காமல் திரும்ப போகும் எண்ணம் வாசுகிக்கு வரவில்லை.

 

” இருடி ஏதாவது வழி இருக்குதான்னு பார்க்கலாம் ” சுழன்ற கண்களின் பார்வையில் அவன் பட்டான்.இவன் நேற்று வீட்டிற்கு வந்தவன் தானே …வாசுகி அவனை நோக்கி நடந்தாள் .

 

” எக்ஸ்க்யூஸ் மீ சார் “திரும்பியவன் இவளைப் பார்த்ததும் புருவம் உயர்த்தினான் .

 

“என்னை தெரிகிறதா ? ” அவன் புருவம் யோசனையில் சுருங்கவும் …” நீங்க தேவகுமாரன் தானே ? ” இப்போது அவன் முகத்தில் புன்னகை .” தேவராஜன் ” திருத்தினான்

 

இரண்டுக்கும் பெரியதாக என்ன வித்தியாசம் மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவள்…”  நான்  …” தன்னை அறிமுகப் படுத்த முயல ” வாசுகி ” என்றான் அவன்.

 




” ஆமாம் நானேதான் .பிரண்ட்ஸோட சினிமாவிற்கு வந்தேன். நிறையக் கூட்டம் .டிக்கெட் எடுக்க முடியவில்லை .நீங்க வரிசையில் முன்னாடி நிக்கிறீங்க .எங்களுக்கும் சேர்த்து ஒரு டிக்கெட்….” அவள் பணத்தை நீட்ட தலையாட்டியபடி பணத்தை வாங்கிக் கொண்டான் அவன்.

 

தோழிகள் நால்வரும் மரத்தின் பின்னால் சற்று மறைந்தாற் போல் நின்றிருக்க பத்தே நிமிடத்தில் டிக்கெட்டுகளுடன் வந்து விட்டான் . ” என்ஜாய் த டே  ” டிக்கெட்டுகளை கொடுத்த கையோடு வாழ்த்து என்று நீண்ட அவன் கையை யோசனையாக பார்த்தாள் வாசுகி.

 

” தேங்க்யூ …” முகம் பிரகாசிக்க  ஒரு மல்லிகை சிரிப்பை படர விட்டு விட்டு கவனிக்காதது போல் அவன் கையை தவிர்த்துவிட்டு தோழிகளுடன் தியேட்டருக்குள் ஓடிவிட்டாள்.

 

படம் ஆரம்பித்து தியேட்டரின் விளக்குகள் அணைக்கப்பட்டதும் ராதாவிற்கு மட்டுமல்ல பெண்கள்  நான்கு பேருக்குமே இருள் கொடுத்த தைரியம் வந்துவிட்டிருந்தது. வெளிப்படையாக தங்கள் எண்ணங்களை யோசனைகளை தடுப்புகள் ஏதுமற்ற குரலில் தங்களுக்குள் பரிமாறியபடி உற்சாகமாக படம் பார்த்தனர்.

 

அவர்களது கொண்டாட்டங்களை அவர்களுக்குப் பின் வரிசையில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தான் தேவராஜன்.




What’s your Reaction?
+1
37
+1
24
+1
2
+1
5
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!