Serial Stories நீரோட்டம்

நீரோட்டம்-3

3

மூர்த்தி கஸ்தூரிக்காக முரளியிடமும்  சண்டைக்குப்  போனார். “டேய், இதெல்லாம் பாவம்டா! நீ எனக்கு ஏதும் தரவேண்டாம். புருஷன இழந்துட்டு, நிக்கறவளுக்கு உதவி செய்யலேன்னாலும், ஏமாத்த நினைக்காதே! “என்று மூர்த்தி கூறியதை முரளி காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. 

அவராவது அண்ணன் என்பதற்காகவோ, என்னவோ எதிர்த்துப் பேசாமலாவது அசட்டையாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். மைதிலிக்கு அதுவும் கிடையாது. என்றுமே பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசும் வழக்கம் இல்லாதவள். மாமனாரையே மதிக்காதவளுக்கு, கணவனின் அண்ணனா ஒரு பொருட்டு! அதுவும் கணவனே அசட்டையாக இருக்கும் போது!

நேரிடையாகவே கேட்டாள். “எங்களால முடிஞ்சதை இதுவரைக்கும் செஞ்சுட்டோம். அவ்ளோ அக்கறை இருந்தா நீங்க கூட்டிட்டு போய் வெச்சுகோங்க. இரண்டு வருஷமா அவர் ஒழுங்கா வேலைக்குப் போகாம, நாங்கதான் சாமானெல்லாம் வாங்கிப் போட்டுட்டு இருக்கோம். மாமாக்கும் நாங்க தான் செலவு பண்ணோம். செலவு பண்ணும் போதெல்லாம் யாருக்கும் கண்ணு தெரியல. இப்ப பங்குக்கு மட்டும் சரியா வந்துடறாங்க”

இனிமேல் பேசினால் மரியாதை இருக்காது என்று மூர்த்தி புரிந்து கொண்டார். அங்கேயே இருந்து, வீட்டுச் சூழ்நிலையை உள்ளபடி அறிந்திருந்தாலாவது, எதாவது கேட்கலாம். இப்போது பேசினால் உள்ள மரியாதையும் போய்விடும் போல இருக்கிறது. 

அம்மா உடல்நிலை சரியில்லாத போது கணேசன் கணக்குப் பார்க்காமல், உடன் பிறந்த சகோதரர்களையும் எதிர்பார்க்காமல் செலவு செய்தது மூர்த்திக்கும், ஏன், முரளிக்குமே தெரியுமே. 

அவளிடமும் கஸ்தூரியிடம் சொன்னதையே சொல்லப் போனார். ஆனால் கஸ்தூரி தடுத்து விட்டாள். கஸ்தூரி மூர்த்தியிடம், “வேண்டாம், விட்டுடுங்க. அம்மா, அப்பாக்குச் செய்ததுக்குக் கணக்கு பாக்கறது கேவலம். அவரைத் திருத்த வேண்டிய நாமே, அந்தத் தப்பைச் செய்ய வேண்டாம். 

ஒண்ணா இருக்கற இந்த வீட்டை நான் விக்கவும் முடியாது. எப்படியும் வேற இடத்துக்குப் போயும் என்னால தனியா இருக்க முடியாது. 

என் பொண்ணோட ஒதுங்க ஓர் இடம் வேணும். இங்கேயே இப்படியே இருந்துக்கறேன். நவீனாவுக்கு ஒரு கல்யாணம் பண்ற வரைக்கும் நான் இங்க தான் இருந்தாகணும். அதுக்கப்புறம் பாத்துக்கலாம்.”என்று சொல்லவும், அவளைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது மூர்த்திக்கு. 

சுஷ்மாவும் இதையே சொன்னாள். “வேண்டாம்,விட்டுடுங்க.நவீனாவுக்கு இந்த வருஷ படிப்பு முடியட்டும். நாம கூட்டிட்டுப் போய்டுவோம். கஸ்தூரி விருப்பம் இருந்தா நம்ம கூட வந்து இருக்கட்டும். இல்லாட்டா இங்கேயே எங்கேயாவது நல்ல இடமா பாத்து நாமளே தங்க வெச்சுடுவோம்”என்ற சுஷ்மாவின் யோசனையை கஸ்தூரியும் ஏற்றுக் கொண்டாள். 

சுஷ்மாவின் இந்த யோசனை மைதிலிக்கு விருப்பமில்லை. நவீனாவை அனுப்பத் தயாராக இருந்தவளுக்கு கஸ்தூரி போய்விட்டால், வீட்டு வேலைக்கு நல்ல ஆள் வேண்டுமே என்று கவலை ஏற்பட்டது. 

இயல்பிலேயே சோம்பேறியான மைதிலி, அருண் பிறந்த போது மருத்துவர்களின் அறிவுரைப்படி முதல் ஐந்து மாதங்கள் படுக்கையிலேயே இருந்தாள். பின்னர் அறுவை சிகிச்சை செய்ததால் ஆறுமாத ஓய்வு. இதில் உடம்பு மிகவும் பருத்து விட, சின்னச் சின்ன வேலைகள் கூட இயல்பாய் செய்ய முடியாதல் சுணங்கினாள். 

இப்போது கஸ்தூரி போய்விட்டால், வேறு ஆளை அல்லவா தேட வேண்டும்! கணேசன் இருந்த போதாவது சமையல் வேறாகத் தான் இருந்தது. அதனால் தன்னால் முடிந்ததைச் செய்தும், ஆட்களை வைத்துக் கொண்டும் அவஸ்தைப் பட்டு வந்தாள். 




கணேசன் இறந்த பிறகு கஸ்தூரியை கீழ் வீட்டுக்கு அனுப்பியதோடு, சமையலையும் ஒன்றாகச் செய்யும்படிப் பார்த்துக் கொண்டாள். 

காசும் குடுக்காமல், பொறுப்பாகவும் வேலை செய்பவளை இழக்க மனம் வரவில்லை. “ஏன், எங்கயோ போய்த் தங்கணும்? ஊர்ல இருக்கறவங்க நாங்க துரத்திட்டோம்னு பேசவா? நவீனாவை நீங்க கூட்டிட்டுப் போய்ப் படிக்க வைங்க. கஸ்தூரி அக்கா இங்கயே இருக்கட்டும். அப்படி அவங்களுக்கு இங்க இலவசமா தங்க விருப்பம் இல்லேன்னா பேருக்கு எதாவது குடுக்கட்டும்”என்றாள் பெருந்தன்மையாகப் பேசுபவள் போல. 

கஸ்தூரிக்கு இதுவும் சரியென்று தான் தோன்றியது. தனியாக இருந்து சாதிக்கப் போவது என்ன என்று தோன்றியது. ஹாஸ்டலுக்குக் கொடுக்கும் பணத்தைச் சேர்த்து வைத்தால் நாளை நவீனாவின் திருமணத்திற்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டாமே என்று தோன்றியது. 

மூர்த்திக்கும் சுஷ்மாவுக்கும் மைதிலியின் எண்ணம் புரிந்தாலும், அவள் எதிரிலே ஒன்றும் சொல்ல முடியவில்லை. மைதிலி, கஸ்தூரியையும், சுஷ்மாவையும் தனியாகப் பேசவே விடவில்லை. 

கடைசியில் அந்த வருடம் படிப்பு முடியுமட்டும் நவீனா அங்கேயே படிக்கட்டும் என்றும், அடுத்த வருடம் எதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம் என்றும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். 

அவர்கள் எதோ தாங்கள் முடிவெடுத்து விட்டதாகவும், அதைத் தாங்கள் நிறைவேற்றி விடலாம் என்றும் நினைக்க, நடந்ததோ வேறு ஒன்று. 

மனிதன் நினைப்பதெல்லாம் எப்போதும் நடந்து விடுகிறதா, என்ன! நாம் கடவுளை மறந்து விடக் கூடாது என்றோ என்னவோ, அடிக்கடி இடைஞ்சல்களைக் கொடுக்கிறான். அவனைத் திட்டுவதற்காகவேனும் நினைப்போம் அல்லவா? 

அந்த வருடம் படிப்பு முடிய ஆறு மாதங்கள் இருந்தன.  நாலாவது மாத ஆரம்பத்தில் சுஷ்மாவிடமிருந்து போஃன் வந்தது. 

கணேசன் இருந்த போது வாங்கிய போஃன் அது. இருவீட்டுக்கும் ஒரேஎண் தான். அதை முரளியும், மைதிலியும் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அதனுடைய எக்ஸ்டென்ஷன் தான் கணேசன் பகுதியில் இருந்தது. 

கணேசன் நண்பர்கள் யாராவது போன் செய்வார்கள்.அல்லது அலுவலகத்திலிருந்து வரும். கஸ்தூரிக்கோ தனியாகப் பேசுபவர்கள் யாரும் இல்லை. எனவே போன் அவர்களுக்கு அத்தியாவசியமாக இருந்ததில்லை. எனவே எப்போதுமே மைதிலிதான் எடுப்பாள். 

இப்போதும் மைதிலிதான் போஃனை எடுத்ததால், சுஷ்மா அவளிடமே பேசவேண்டியதாயிற்று. 

மூர்த்திக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது என்றும் அதனால் ஓரிரு மாதங்களில்  ஜெர்மனி போகவேண்டி இருக்கும் என்றும், சில மாதங்கள் கழித்து ப்ரீதாவின் பரிட்சை முடிந்ததும் அவளைக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டில் விட்டு விட்டு சுஷ்மா மட்டும் அவ்வப்போது போய்விட்டு வருவதாக ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னாள். 

மைதிலிக்கு இது எல்லாமே சுவாரசியமில்லாத, அத்துடன் வருத்தம் தரும் செய்திகள் தான். ஏற்கனவே அவர்களைப் பார்த்து பொறாமைப் பட்டுக் கொண்டு இருப்பவளுக்கு இந்த செய்திகள் மேலும் எரிச்சலைத் தான் தந்தது. 

அசுவாரசியமாகக் கேட்டுவிட்டுக் கஸ்தூரியைக் கூப்பிட்டாள். அரைகுறையாய்க் கேட்டுக் கொண்டிருந்த கஸ்தூரிக்குத்தான் வருத்தமாக இருந்தது. சுஷ்மாவுக்கு கஸ்தூரியை எப்படி ஆறுதல் படுத்துவது என்றே தெரியவில்லை. 

“கஸ்தூரி, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. சோதனைகள் தாங்கும் உறுதி உனக்கிருக்கிறதா?ன்னு  கடவுள் சோதிச்சுப் பாக்க விரும்புறார் போல இருக்கு. நான் என்ன செய்யறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியல. 

நவீனாவும் எங்கம்மா வீட்ல இருந்து படிக்க நான் ஏற்பாடு பண்றேன். எங்க அம்மா, அப்பா அவளையும் நல்லாவே பாத்துப்பாங்க. நானும் வரும்போது பாத்துப்பேன். நீயும் பாத்துட்டு வரலாம். என்ன சொல்றே? “என்று கேட்டபோது கஸ்தூரி திடமாக மறுத்துவிட்டாள். 

“அக்கா! ஏற்கனவே அப்பாவை இழந்த பொண்ணை, நான் இருக்கும்போதே அம்மாவையும் பிரிஞ்சு இருக்க அனுப்ப எம்மனசு ஒப்பலைக்கா. நீங்கன்னா அது வேற மாதிரி. என்னாலயும் தனியா அடிக்கடி போக முடியாது. ஏங்கிப் போய்டுவாக்கா. நீங்க சொன்ன மாதிரி கடவுள் நினைச்சா, அதை நம்மால மாத்த முடியுமா? பாப்போம்கா. எதாவது மாறுதல் நடக்காமலா போகும்?”

வேறு வழிதெரியாமல் ஏற்றுக் கொள்ளப் பட்ட முடிவு. மாடிப் பகுதிக்கு மைதிலி குடும்பத்தினர் சென்றுவிட இரட்டை அறைகள் உள்ள கீழ்ப்பகுதியில் கஸ்தூரியும், நவீனாவும் வந்தார்கள். 

நவீனாவுக்காக பார்த்துப் போடப்பட்ட ஊஞ்சல் நவீனா பார்ப்பதற்குக் கூட உத்தரவு வாங்கிக் கொண்டு போகவேண்டிய சூழ்நிலையாக மாறியது. 

அளவுக்கு மீறி எப்போதுமே ஆசைப்படாத கஸ்தூரி சூழ்நிலைக்கேற்ப மாறினாள். மகளையும் அப்படியே வளர்த்தாள். 

 மைதிலிக்கு இரண்டாவது பிரசவம் ஆனது. 

அருணைப் பார்த்துக் கொள்ள நவீனாவும், பிறந்த குழந்தையைப் பார்த்துக் கொள்ளவும், மைதிலிக்கு பத்தியம் சமைத்துப் போட கஸ்தூரியும் கிடைத்த தெம்பில் பங்கஜம் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு மைதிலியின் ஏழாவது மாதமே  வந்து சேர்ந்தார். அப்போது அவளின் கணவர், மைதிலியின் அப்பா இருந்தார். எனவே பிரசவம் ஆன இரண்டாவது மாதம் ஊருக்குப் போனார்

மைதிலியின் குழந்தைகளான அருண், தீபக் இருவரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கஸ்தூரிக்கு வந்தது. 

அவர்களுக்கு விளையாட்டுக் காட்டவும்,கஸ்தூரி வேலையாயிருக்கும் போது அவர்களைப் பார்த்துக் கொள்ளவும் நவீனா பழகினாள். 

அதையெல்லாம் கூட கஸ்தூரி சகித்துக் கொண்டாள். “கணவனின் பிரிவையே ஏற்றுக் கொண்டேன். வேலை செய்வது தானா பிரமாதம்? எப்படியாவது நவீனாவை ஒரு பட்டப் படிப்பு படிக்க வைத்து விடவேண்டும். பிறகு அவள் வழியை அவள் பார்த்துக் கொள்வாள்.”என்று தனக்குள் நினைத்துக் கொள்வாள் கஸ்தூரி. 

படிப்பின் முக்கியத்துவத்தை மட்டும் அடிக்கடி மகளுக்கு மறக்காமல் சொல்லிக் கொண்டே இருப்பாள். அவளும் நன்றாகவே படித்து வந்தாள். 

மைதிலியின் தாயார் வரும்போது மட்டும் கஸ்தூரிக்கு வேலைகள் கூடும். “எடுப்பாரும், பிடிப்பாரும் இருந்தால் பிள்ளை களைச்சாப்பல இருக்கும்”என்பார்கள். 




கஸ்தூரியைப் பார்த்துவிட்டால், மைதிலியின் அம்மா பங்கஜத்தம்மாளுக்கு இல்லாத வலியெல்லாம் வந்துவிடும். நைசாகப் பேசிக் கொண்டே கஸ்தூரியை வேலை வாங்குவாள். 

“கஸ்தூரி, உன்னைப் போல எம் பொண்ணுக்கு வேல செய்யத் தெரியல. எம் பொடவையைக் கொஞ்சம் தோச்சு மடிச்சுத் தரயா? 

மத்யானம் தூங்கி எந்திரிச்சா, எதானும் சாப்பிடணும் எனக்கு! தேங்காப்பால் ஊத்தி முறுக்கு செஞ்சயே, அன்னிக்கு! பிரமாதமா இருந்தது.. அது கொஞ்சம் செஞ்சு தரயா? 

பாவம், நீயே வேலைக்கும் போய்ட்டு வந்து, வீட்லயும் தடுமாறறே! எனக்குக் கையைத் தூக்கவே முடில! தலைக்குக் குளிச்சே பத்து நாள் ஆச்சு! உன்னால முடிஞ்சப்போ.. லீவுநாள்ல .. சீக்கா போட்டு கொஞ்சம் தலை தேச்சு விடறயா? 

இப்படி எதாவது யோசித்து, யோசித்து வேலை வாங்கிக் கொண்டே இருப்பாள். 

கஸ்தூரியும் வேலை செய்ய அஞ்சுபவள் இல்லை என்பதால் இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டாள். 

மூர்த்தியும் சுஷ்மாவும் ஜெர்மனிக்குப் போவதற்கு முன் அங்கு வந்தார்கள். எப்பொழுது திரும்பி வர முடியும் என்று தெரியவில்லை என்றும், எப்படியும் குறைந்தது ஐந்து வருடம் ஆகும் என்று மூர்த்தி தெரிவித்தார் 

“இதோ பாரு கஸ்தூரி. கணேசன் போனதால உனக்கு யாரும் இல்லேன்னு மட்டும் நினைச்சுக்காதே. என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோ. நான் கட்டாயம் போயே ஆகணும்னு வற்புறுத்தறாங்க. இல்லேன்னா நான் போகவே மாட்டேன். ப்ரீதாவைப் போலவே நவீனாவையும் நல்லா படிக்க வைக்கறதோட, அவ கல்யாணமும் என் பொறுப்பு. 

இப்போ தானே அவ எட்டு க்ளாஸ் படிக்கறா. அவ காலேஜ் வர்றதுக்குள்ள நான் இங்க மறுபடி வந்துட முடியும்னு நினைக்கிறேன். மத்ததை வந்து நான் பாத்துக்கறேன். சுஷ்மி எப்படியும் மும்பை வருவா. அவ வர்ற போது உன்னையும் வந்து பாக்க சொல்லியிருக்கேன். ஜாக்ரதையா இரு. என் ப்ரெண்ட் ஒருத்தன்  இதே தெருவுல  இருக்கான். உன்னால தீக்க முடியாத பிரச்சனை எதாவது ன்னா உடனே நீ அவனைத் தொடர்பு கொள்ளலாம்  .”என்று பலவாறு ஆறுதல் கூறிவிட்டு மூர்த்தியும் சுஷ்மாவும் புறப்பட்டார்கள். 

 கஸ்தூரி வாயைத் திறக்காமல் வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலைகளும் செய்து வந்ததில் வீட்டில் பெரிய பிரச்சனை ஒன்றும் நிகழவில்லை. 

மாதத்திற்கு தேவையானப் பொருள்களைக் கஸ்தூரியே வாங்கிப் போட்டாள். அவளே சமைக்கவும் செய்ததால், சாமான்கள் வீணாகாமல் பார்த்துக் கொண்டாள். 

கஸ்தூரியின் மாமனார் இருந்தவரை அதிகமாகத் தலைகாட்டாத மைதிலியின் அம்மா இப்போது அடிக்கடி வர ஆரம்பித்திருந்தார்..

 கணேசன் இருந்தவரையாவது கொஞ்சம் தயக்கம் இருந்தது. அவனும் போனபிறகு அரச பதவியைக் கைபிடிக்க ஆலோசனை சொல்லும் மந்திரி போல மகளுக்கு எதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

வீட்டை எழுதி வாங்கிக் கொண்டது கூட அவரின் ஆலோசனை தான். 

கஸ்தூரிக்கு மகளை நல்லபடியாக வளர்த்து, படிக்க வைத்து, அவளை யார் கையையும் எதிர்பார்க்காமல் ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்தபின், ஒரு நல்ல குடும்பமாய்ப் பார்த்துத்  திருமணம் செய்து விட்டால் 

பொறுப்பு தீர்ந்து விடும். கணவனின் ஆசையையும் நிறைவேற்றி விடுவாள். அதில் தான் அவள் கவனம் இருந்தது. 

ஆனால் அதைக் கெடுப்பதெற்கென்றே வந்தது போல் தொல்லைகள் ஆரம்பித்தன.

மைதிலியின் தாயாரும், அவள் மகனும் படுத்தும் பாடு நவீனாவையும் பாதித்ததைக் கஸ்தூரியால் தாங்க முடியவில்லை.




What’s your Reaction?
+1
6
+1
13
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!