Serial Stories நீரோட்டம்

நீரோட்டம்-4

4

அக்காவைப் பார்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு 

சிலசமயங்களில் சுந்தர் மட்டும் தனியாகவும் வந்துவிடுவான். நவீனா படித்துக் கொண்டிருக்கும் அறையில் நுழைந்து, “நான் பாட்டுக்கு உக்காந்திருக்கேன். நீ படி”என்பான். “நான் சொல்லித் தரட்டுமா? “என்று அருகில் வந்து உட்காருவான்.

எதாவது லூசுத்தனமாக உளறிக் கொண்டு அவளையே சுற்றிச் சுற்றி வருவான். நாளுக்கு நாள் அவன் சேஷ்டைகள் அதிகரித்தன. 

மைதிலியிடமோ, அவள் தாயிடமோ இதைச் சொல்லலாம் என்றால், அவர்கள் குற்றத்தை நவீனாவிடமே திருப்புவார்கள். 

அவர்களை வராதே என்றும் சொல்ல முடியாது. கஸ்தூரியை வீட்டை விட்டு போகச் சொல்லிவிட்டால்? சிறுபெண்ணான நவீனாவைக் கூட்டிக் கொண்டு எங்கு தனியாக இருக்க முடியும்? காலம் இருக்கும் இருப்பில் யாரையும் நம்ப முடியாதே! 

அப்படியே தனியாகப் போனாலும், கஸ்தூரி

அலுவலகம் விட்டு வரும்வரையோ, அல்லது அவள் விடுமுறை நாட்களிலோ நவீனா தனியாக இருக்க நேரிடுமே! அது இப்போதைய நிலையை விட ஆபத்தல்லவா? 

இப்போது வெறும் தொல்லைகள் மட்டும் தான். அவளைத் தனியே கூட்டிக் கொண்டு போனால், அபாயத்தை தானே தேடிக் கொண்டு போனது போல் எதாவது நடந்து விட்டால்? 

“எந்த தைரியத்தில் கூட்டிக் கொண்டு போனாய்?”என்று ஊர் உலகமே தூற்றாதா? இந்த உலகத்தில் பெண்ணைத் தூற்ற ஒரே வழி, அவள் கற்பைப் பற்றி பேசி கேலி செய்வது தானே! இதை அக்கம் பக்கத்துப் பெண்களே செய்வார்களே! 

வயது வந்த பெண்ணை வீட்டில் விட்டு விட்டு அவளால் வேலைதான் நிம்மதியாகச் செய்ய முடியுமா? மகள் கண்ணில் படாமல், கணவனின் படத்துக்கு முன்னே நின்று புலம்புவாள். அழுவாள். 

 ஆறுதல் சொல்லவோ, “அழாதே”என்று தேற்றவோ  அவளுக்கு யார் இருக்கிறார்கள்?இருக்கும் துணையான மகள், “தந்தை இல்லையே”என்று வருந்தக் கூடாது என்பதற்காக அவளிடம் எதையும் காட்டிக் கொள்ள மாட்டாள். 

அவள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் புத்திசாலியான நவீனா தங்கள் நிலமையைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இருந்தாள். 

இரவில் சிலசமயங்களில் தாயின் கலங்கிய கண்களைப் பார்த்துக் கேட்பாள். 

“ஏம்மா, அழுதியா? நான் பொண்ணா பொறந்ததால தான உனக்கு இவ்வளவு கஷ்டம்? 

“சீ, சீ

உளராதே! என்னோட வாழ்க்கையின் மகிழ்ச்சியே நீதான்! குழந்தைகள்ள ஆணென்ன! பெண்ணென்ன! அன்பான குழந்தைகளைப் பெத்த எல்லோரும் குடுத்து வச்சவங்க தான்! இந்த விதத்துல நான் அதிர்ஷ்டசாலி தான்! உங்கப்பா போனதும், உன்னை எப்டி வளக்கப் போறனோன்னு வருத்தப் பட்டேன். 

மனசறிஞ்சு நடக்கற குழந்தையா, நல்லா வளர்றே. என் சினேகிதிங்கள்ளாம் உன்னைப் பாராட்டறப்போ மகிழ்ந்து போறேன்”

“அப்போ ஏம்மா அழறே”? சுதாரிக்கும் கஸ்தூரி மெதுவாகச் சொல்வாள்“இத்தனை சமத்துக் குழந்தையைப் பாத்து ரசிக்க உங்கப்பா இல்லையேன்னு தான் எனக்கு வருத்தம்”. 

ஒருவகையில் அது உண்மையும் கூட. கணேசனுக்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. நவீனா பிறந்து போது தலைகால் தெரியாமல் குதித்தான். அவளை அப்படிக் கொண்டாடினான். 




அந்தக் குழந்தையை வீட்டில் வைத்து கொண்டாட அவள் குடுத்து வைக்கவில்லையே! 

நவீனா வயிற்றில் இருக்கும் போதே பிறக்கும் குழந்தை பெண்ணாகத்தான் பிறக்க வேண்டும் என்று கணவன், மனைவி இருவருமே ஆசைப்பட்டார்கள். 

இருவரின் எதிர்பார்ப்புக்கு தகுந்தமாதிரியே பிறந்ததோடு, புத்திசாலியாகவும், பெரியவர்களின் சொற்பேச்சு கேட்டு நடப்பவளாகவும் இருந்தது, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருந்தது. 

நவீனா படித்த பள்ளியிலும் நன்றாகப் படிக்கிறாள் என்று பெயரெடுத்ததோடு நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப் பட்ட பெண் என்ற  பெயரையும் எடுத்திருந்தாள். 

இதையெல்லாம் நினைக்கும் போதுதான் கஸ்தூரிக்குத் துக்கம் பொங்கும். தகப்பன் இருந்து சீராட்டி வளர்க்க வேண்டிய பெண்ணை, இப்படிக் கஷ்டப் படுத்த வேண்டியிருக்கிறதே என்று துக்கப் படுவாள். 

மகளும், தாயும் இரவில் தான் மனம் விட்டு பேச முடியும். அந்த நேரத்தில் தான், ஒருவரை ஒருவர் அன்புடன் பார்த்து சமாதானம் ஆவார்கள். 

பலவாறு குழம்பிய கஸ்தூரிக்கு அவள் தோழி உமா தான் வழி ஒன்றைச் சொன்னாள். அதற்குப்பிறகுதான் நவீனாவை ஹாஸ்டலில் சேர்த்து விட்டாள் கஸ்தூரி. 

அம்மாவைப் பிரிந்து இருப்பது வருத்தம் என்றாலும், நிலைமையைப் புரிந்து கொண்ட நவீனா நன்றாகப் படித்து இப்போது கல்லூரிப் படிப்பையும் முடித்து விட்டாள்.

பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை எதற்கும் பயந்து கொண்டிருந்த நவீனா கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போது வாழ்க்கையை எதிர்நோக்கக் கற்றுக் கொண்டாள். அதற்கு அவள் அம்மா வாழ்க்கையே உதாரணமாக இருந்தது. 

அப்பா இறந்தபோது அம்மாவின் வயசு முப்பத்தைந்து தான். இத்தனை நாள் அவளுக்குத் தொல்லைகள் ஏற்படாமலா இருந்திருக்கும்? எதையும் வெளிக்காட்டாமல் தன்னையும் காத்துக் கொண்டு, தன் பெண்ணையும் காப்பாற்றி வருகிறாளே! 

அம்மா! நீ க்ரேட் மா! தனக்குள் அம்மாவை நினைத்துப் பெருமை கொண்டாள். இத்தகைய அம்மாவுக்கு மகளாகப் பிறந்து விட்டு போயும் போயும் சுந்தர் போன்ற கிறுக்குப் பயல்களுக்கா பயப்பட வேண்டும்? 

அம்மாவிடம் செல்லில் பேசும் போது அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தாள் நவீனா. 

“நவீ, நீ இன்னும் சின்னப். பெண்ணா? வீட்லயே ஒருத்தனைப் பாத்துப் பயப்பட? பதினாறு வயசுல உன்ன தனியா விட பயந்தது, உனக்கு அறியா வயசுங்கறதால. புதுசா பாக்கும் எல்லாமே புதுமையா இருக்கும். நல்லது கெட்டது அறியா வயசு. ஏமாந்துடப் போறியேன்னு பயப்பட்டேன். 

இப்போ நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கற வயசு. அதுவும் உன்னை மாதிரி பொறுப்பு தெரிஞ்சு நடக்கற பொண்ணுக்கு நான் என்ன சொல்லித் தரணும்? 

உனக்கு விஷயம் சொல்லக் கூப்பிட்டனே தவிர, நீ வராம இருன்னு சொல்றதுக்கு இல்ல. 

பாட்டி கிட்ட மட்டும் வாய் பேசாம இருந்துக்கோ, போதும்! 

இந்த மூணு வருஷத்துல நீ எவ்வளோ கதைகள் படிச்சிருப்பே. பாத்திருப்பே. ஏன், உன் தோழிகள் யாருடைய அனுபவங்கள் கூட கேட்டிருக்கலாம். 

நீ வெளி உலகத்தைப் பார்ப்பதற்கான நேரம் வந்தாச்சு. இன்னும் கூட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. இப்படிப் பயந்தா எப்படி நீ வேலைக்குப் போக முடியும்? உன்னைக் காப்பாத்திக்க முடியும்? நாளைக்கு உன் குழந்தைக்கு என்ன சொல்லி வளப்பே? பயந்து பயந்து வாழுன்னா? 

ஒரு பொண்ணு எப்பவும் ஜாக்கிரதையா இருக்கக் கத்துக்கணும். தைரியமாவும் இருக்கணும். 

இதை நீ இந்த மூணு வருஷத்துல புரிஞ்சுக்கலேன்னா, நீ படிச்ச படிப்புக்கே அர்த்தமில்லாம போயிடுமே! படிப்பு அறிவுக்குத், தெளிவைக் குடுத்து பயத்தைப் போக்கி வாழக் கத்துக் குடுக்கலேன்னா அதைப் படிச்சு என்ன பிரயோஜனம்”அம்மாவின் ஆதங்கத்துடன் கூடிய அக்கறையான வார்த்தைகள் நவீனாவுக்கு புத்துணர்ச்சியைத் தூண்டிவிட்டது. 

செல்லில் அம்மாவுடன் பேசுவதை எப்போதும் பதிவு செய்து கொள்வது நவீனாவின் வழக்கம். அந்த வாரம் முழுவதுக்குமான உற்சாகத்தை அது அவளுக்குக் கொடுக்கும். 

“இன்றைய பேச்சு வாழ்க்கை முழுவதுக்குமான பாடம்” என்று நினைத்துக் கொண்ட நவீனா, 

“மாட்டேன். இனி பயப்பட மாட்டேன். “என்று தனக்குத் தானே உற்சாகமூட்டிக் கொண்டாள். 

முதலில் அவள் பதிவு செய்ததைக் கேலி செய்த சித்ரா தானும் அதைக் கேட்டாள். பின்னர் அப்படியே நவீனாவைக் கட்டிக் கொண்டு, “குடுத்து வச்சவடீ நீ”என்று சொல்லவும் பெருமையுடன் சிரித்தாள் நவீனா. 

ஹாஸ்டலை விட்டு புறப்படும் நாளும் வந்தது. சாமான்களையெல்லாம் கட்டி வைத்துவிட்டுத் தயாராக இருந்தார்கள் நவீனாவும், சித்ராவும். 

சித்ராவும் நவீனாவுடன் அவர்கள் வீட்டிற்கு வருவதாகவும், அங்கு இரண்டு நாட்கள் தங்கிவிட்டு பின்னர் இருவருமாக சித்ராவின் கிராமத்துக்குப் போவதாகவும் ஏற்பாடு செய்து கொண்டார்கள். 

கஸ்தூரி வந்து கூட்டிக் கொண்டு வந்தாள். உள்ளே நுழையும் போதே, “ஹாய் நவீ, எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதினயா? உனக்கென்ன நல்லாதான் எழுதி இருப்பே”என்று இளித்தவாறு கூறிக் கொண்டே கைகுலுக்குவதற்காகக் கையை நீட்டியபடி வந்த சுந்தர் பக்கத்தில் இருந்த சித்ராவைப் பார்த்ததும் மெலிதாக விசில் அடித்தான். “இது யாரு நவீ? உன்னோட பிரண்டா? “என்றான் ஆவலோடு அவளையும் அறிமுகம் செய்து கொள்ளும் பொருட்டு. 

அவனை அருவெறுப்புடன் பார்த்தவாறு முகத்தைச் சுழித்தாலும், கையை நீட்டாமலே, “ம், ம், நல்லாதான் எழுதியிருக்கேன்”என்றவாறு தங்கள் அறையை நோக்கி சித்ராவையும் இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் நவீனா. 

“ஏண்டி இப்பிடி இழுத்துட்டு வரே? உம் மாமன நான் கரெக்ட் பண்ணிடுவேன்னா?”என்று சிரித்தாள் சித்ரா. 

“சீ, வாயை மூடு! வந்ததும் வராதுமா எரிச்சல் மூட்டாதே! நானே இரண்டு நாள் எப்டி கடத்தப்போறமோன்னு கடுப்புல இருக்கேன்”என்றாள் நவீனா எரிச்சலுடன். 

“நீ அடிக்கடி சலிச்சுப்பயே, அந்த அரை….”வார்த்தைகளை சித்ரா முடிக்கும் முன்பு கதவின் மேல் ‘லொட்லொட்’என்று சத்தம் செய்துவிட்டு “நான் வரலாமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்து விட்டான் சுந்தர். 




“அதான் வந்துட்டீங்களே, அப்புறம் என்ன கேள்வி? வரதுக்கு முன்ன கேக்கணும்னு தெரியாதா? என் பிரெண்ட் வேற இருக்கால்ல! “என்று கடுகடுத்த குரலில் நவீனா கூறியதைச் சுந்தர் லட்சியம் செய்தவனாகவே தெரியவில்லை. 

“என்ன நவீ, அது கூட எனக்குத் தெரியாதா? கதவைத் தட்டிட்டு தானே வந்தேன். எதாவது வேணுமான்னு கேக்க தான் வந்தேன். அப்றம் மரியாதை தெரியாத மனுஷங்கன்னு உன் பிரெண்ட் நம்மள நினைச்சுடக்கூடாது பாரு! “

“எங்களுக்கு ஒண்ணும் வேணாம். நாங்க பாத்துக்கறோம். அவ தான் இந்த வீட்டுக்குப் புதுசு. நான் இல்லையே! “என்று சுந்தரிடம் அலட்சியமாகக் கூறியவள்

அதே வேகத்தில் சித்ராவிடம் திரும்பினாள். 

“ஏண்டி சித்து, தலைவலின்னு சொன்னியே, கொஞ்சநேரம் தூங்கறயா”

“நாம எப்ப சொன்னோம்”என்று விழித்தாள் சித்ரா. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு, “ஆமாம், ஆமாம், சொன்னேன்”என்றாள் சிரிப்பை மறைத்துக் கொண்டு. 

“நான் வேண்ணா மாத்ரை கொண்டுட்டு வரட்டா?”ரோஷமே இல்லாமல் பேசுபவனிடம் நாசூக்கெல்லாம் பயன்படாது என்று முடிவெடுத்தவளாய், “நாங்க கொஞ்சம் தூங்கணும்னு சொன்னேன்”என்று அழுத்தம்திருத்தமாய்க் கூறியதும் வேறு வழியின்றி, “சரி, நான் அப்றம் வந்து பேசறேன். டேக் ரெஸ்ட் சித்து”என்று நகர்ந்தான் சுந்தர். 

அவன் நகர்ந்ததுமே பின்னாலேயே போய்க் கதவை தாழ் போட்டுவிட்டு’பொத்தென’கட்டிலில் அமர்ந்து, “விவஸ்தை கெட்ட ஜென்மம்”என்று வாய்விட்டுத் திட்டினாள். 

அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள் சித்ரா. “அடியேய்! உன் மாமன்காரன் அதிவேகமா ரூட் போடறாண்டி! பாத்து அரைமணி ஆகல, சித்துவாமே, சித்து. என்னை என்ன நினைச்சிட்டிருக்கான், நாளை வரட்டும்”கறுவினாள் சித்ரா. 

இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு, கஸ்தூரி பக்கத்து அறையில் படுத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் போய் விட்டாள். 

கதவைத் தாழிட்டு விட்டு இருவரும் இரவு உடை மாற்றிக் கொண்டார்கள். அந்த அறையில் இரண்டு கட்டில்கள் இந்தப் பக்கம் ஒன்றும், அந்தப் பக்கம் ஒன்றுமாய் போடப்பட்டிருந்தன. 

சித்ராவை ஒரு கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு இன்னொரு கட்டிலில் தான் படுத்துக் கொண்டாள் நவீனா. கதவை யாரோ ‘படபடவென’தட்டும் சப்தம் கேட்டது. 

“அந்த லூசா தான் இருக்கும். அப்றமா வரேன்னுட்டுப் போச்சே!” என்று ஆத்திரத்துடன் கூறியவாறே பட்டெனக் கதவைத் திறந்த நவீனா, “எத்தனை வாட்டி சொல்றது? புதுசா வந்திருக்கறவ உங்களைப் பத்தி என்ன நினைப்பா? “படபடவென பொரிந்து கொட்டியவள் ‘சட்டென’வாயை மூடிக் கொண்டு, “சாரி பாட்டி! நீங்கன்னு நினைக்கல”என்றாள். கண்களை உருட்டிக் கொண்டு கைகளை இடுப்பில் வைத்தவாறு முறைத்துக் கொண்டு நின்றிருந்தார் மைதிலியின் தாயார் பங்கஜம். 

“நல்லாருக்குடிம்மா, உங்க அட்டகாசம். நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணுங்களா இருக்கீங்களே! என்னவோ இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கியே! அப்படியே உன் பிரெண்டையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.அதுக்கு ஏண்டீ இந்தக் கத்து கத்தறே? இங்க எந்த திருடன் வரப் போறான்னு கதவ அதுக்குள்ள இழுத்து மூடி வெச்சிருக்கீங்க?” அவளை விட வேகமாய்ப் படபடத்தவாறே உள்ளே நுழைந்த பாட்டி சித்ராவின் அருகே போய் நின்றாள். 

ஏனோ பாட்டியைப் பாத்ததுமே சித்ராவுக்குப் பிடிக்காமல் போனது. தன்னையறிமாமல் எழுந்து உட்கார்ந்தாள். “பரவால்லயே! இவ்வளவு மரியாதை தெரியுதே! இதுவே பெரிசு தான் “என்றாள் பாட்டி சித்ராவைக் கூர்மையாக பார்த்தவாறே. 




What’s your Reaction?
+1
7
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!