Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே-11

11

 

அந்த அக்ரிமென்டை வெளிப்பக்கமாக  கண்டதுமே தாண்டவராயரின் முகம் வெளுத்து விட்டது .

 

” இரண்டு வருடங்களுக்கு முன்பு நீங்கள் இந்தோனேசியாவுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தம். இங்கே துறைமுகம் அமைக்க  அவர்களுக்கு கொடுத்த உறுதி .இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த தொழிலுக்கான உங்கள் ஏற்பாடு தொடங்கிவிட்டது தாண்டவரே. முதலில் முழுக்க முழுக்க உங்களுக்காகவே இதனை தொடங்க எண்ணினீர்கள். இந்தோனேசிய டீம் இங்கே உள்ளூரில் மக்கள் செல்வாக்கு இல்லாமல் இந்த தொழிலை நடத்த முடியாது என்று சொல்லி விட , கொஞ்ச நாட்கள் இதனை கிடப்பில் போட்டீர்கள் .இந்த ஏரியாவில் செல்வாக்கான ஒரு ஆளை தேடினீர்கள். இந்ந தொழிலில் அதிக இன்ட்ரெஸ்ட் காட்டாத , மக்கள் பலம் உள்ள ஒரு படித்த பணக்காரன் உங்களது மிக அவசிய தேவை . .நான் கண்ணில் பட்டேன்.  என்னை உங்கள் பக்கம் இழுக்க திருமண திட்டம் தீட்டினீர்கள் .ஒரு ஆண்டாக என்னுடன் நெருக்கமான பழக்கம் வைத்துக் கொண்டீர்கள். தொழில் தொடர்பு வைத்துக் கொண்டீர்கள். எனக்கு நெருக்கமானவரானீர்கள். “

 

” ஆறு மாதங்களுக்கு முன்பு மெல்ல திருமண பேச்சை எடுத்தீர்கள் . எங்கள் குடும்ப நல விரும்பியாக பாட்டி , அம்மாவிடம் அக்கறையாக பேசினீர்கள். நான் உங்கள் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டேதான் இருந்தேன் தாண்டவரே .உங்கள் முதல் இந்தோனேசிய ஒப்பந்தத்தின் போதே உங்களை கண்காணிக்க தொடங்கிவிட்டேன். எனக்கு இந்த மண்ணில் ஆரம்பிக்கப்பட போகும் ஒவ்வொரு தொழிலும் முக்கியம். அவை என் மண்ணுக்கு ,என் மக்களுக்கு ஊறு விளைவிக்காதவையாக இருக்க வேண்டும் . அன்றே இரண்டு வருடங்களுக்கு முன்போ , இதோ இப்போது ஆறு மாதங்களுக்கு முன்போ இந்த தொழிலை …இந்த திருமணத்தை என்னால் நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அது இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும்.நீங்கள் இன்னொரு பணக்காரனை உங்கள் மகளுக்கு மணமகனாக  , உங்கள் தொழில் பார்ட்னராக தேடி பிடித்திருப்பீர்கள் . அதுநடக்ககூடாது ….”

 

” .இந்த தொழில் அடியோடு நசுக்கப்பட வேண்டும். அதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை .அதனால்தான் இந்த திருமணத்தை கல்யாண பந்தல் வரை கொண்டு வந்தேன் .என் ஊர் மக்கள் அனைவர் முன்பும் உங்கள் குணத்தை தோலுரித்து காட்டிவிட்டேன் .இனி நீங்கள் இங்கே தொழில் தொடங்க முடியாது .அப்படியே ஏதாவது தில்லுமுல்லு செய்து தொடங்கினாலும் நாங்கள் உங்கள் தொழிலுக்கு எதிராக கோர்ட்டில் கேஸ் போடுவோம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன .” கையிலிருந்த அக்ரிமென்ட் பேப்பர்களை ஆட்டிக் காட்டினான் .

 

” இந்த பேப்பர்கள் இல்லாமல்தான் இவ்வளவு நாட்களாக சட்டப்படி உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தேன். இதனை சமீபத்தில்தான் என் மிக நலம் விரும்பி ஒருவர் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார் …” சொல்லிவிட்டு கண்கள் சுழற்றி சஷ்டியை தேடிக் கண்டுபிடித்து புருவம் உயர்த்தி ஒற்றைக் கண்ணை மூடித் திறந்து பட்டவர்த்தமாக கண்ணடித்தான் .

 

சஷ்டி வேகமாக அவனுக்கு முதுகு காட்டி நின்று தூணில் சாய்ந்து கொண்டாள். எப்பாடி …இவன் எப்பேர்பட்ட வில்லாளகண்டனாக இருக்கிறான் …? கமுக்கமாக  எவ்வளவு வேலைகள் பார்த்திருக்கிறான் ..?பிரமிப்புடன் தலையாட்டி உடல் சிலிர்த்துக் கொண்டாள் அவள் .

 

நான் ஏதோ அவனது திருமணத்தை நிறுத்த போவதாக பெரிதாக திட்டம் தீட்டிக் கொண்டிருக்க , இவன் முன்பே அந்த ஏற்பாடுகளிள் தான் இருந்திருக்கிறான் .இத்தனை வேலைகளை வருடக் கணக்காக செய்து விட்டு , நேற்று வந்த என்னிடம் மிரட்டல் வேறு …?

 

அவனது வருட திட்டமிடல்களில் தானொரு சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையானதை  உணர்ந்தாள் சஷ்டி .திடுமென அவளுக்கு ஒன்று தோன்றியது .இவனது திட்டங்கள்   இவனது வீட்டினர்களுக்கு எந்த அளவு தெரியும் …? அவனது அம்மா , பாட்டி , தங்கை என ஒவ்வொருவராக ஆராய , பாட்டியை தவிர்த்து மற்ற இரு பெண்களுமே குழப்பமான முக பாவத்துடனேயே இருந்தனர். ஆக , பாட்டிக்கு மட்டும்தான் இவன் திருமணத்தை நிறுத்த போவது தெரியும் .சஷ்டி இந்த சேதியால்  எண்பது வயதிலும் தளராமல் நின்ற பாட்டியை ஆச்சரியமாக பார்த்தாள் .

 

பேரனின் திருமணம் நின்றதற்கான வருத்தம் பாட்டியிடம் சிறிதும் இல்லாமலிருக்க , அவருக்கு மாற்றாக பேச்சியம்மாவின் முகத்தில் கலக்கம் , ஆசை மகனின் திருமணம் நின்ற வேதனை அந்த தாயின் முகமெங்கும் அப்பிக் கிடந்தது. கண்கள் கலங்கி நீர் வடிந்து கொண்டிருந்தது . பாவம் ….தொழில் , ஊர் , மக்கள் …என எதையும் அறியாது மகனின் வாழ்வை பற்றி மட்டுமே எண்ணும் பாசமான தாய் . ஆவலுடன் வீட்டிற்கு ஒரு மருமகளை எதிர்பார்த்திருந்தவர் .இப்போது நடந்த சம்பவங்களின் வீரியம் தாங்காது கலங்கி நிற்கிறார் .




பேச்சியம்மாவின் வேதனை சஷ்டியை மிகவும் பாதிக்க  நகர்ந்து  அவளருகே போய் ஆதரவாக அவள் கைகளை பற்றிக் கொண்டாள் .” எல்லாம் சரியாகி விடும் ஆன்ட்டி .அழாதீர்கள் “

 

” ஏதோ ஓர் தொழிலிற்கும் , என் மகன் கல்யாணத்திற்கும் என்னம்மா சம்பந்தம் …? கல்யாணத்தை நடத்த வேண்டியதுதானே …? ” பேச்சியம்மாவின் ஏக்க கேள்வி சஷ்மியினுள் திடுக்கிடலை கொண்டு வந்தது .

 

சமாதானமாகி திருமணம் நடந்து விடுமா …?பதட்டத்துடன் அவள் சூழலை கவனிக்க ஆரம்பித்தாள் .

 

” அப்புறம் …உங்கள் முடிவு என்ன தாண்டவராயரே …? ” திருமலைராயன் அமர்த்தலாக கேட்டுக் கொண்டிருந்தான் .

 

” நீ என்னை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டாய் திருமலை .உன்னை நான் நிம்மதியாக இருக்க  விட மாட்டேன் …”தாண்டவராயரின் சொற்கள் கடுமையாக வந்து விழுந்தன .

 

” யோவ் .மரியாதையாக பேசு ….”

 

” கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேள் ..”

 

” அய்யா …அரசேன்னு கால்ல விழுய்யா .எங்க ராயர் மனது மாறி ஒரு வேளை உன் பொண்ணை கட்டினாலும் கட்டுவாரு …”

 

ஊராரின் பேச்சுக்களில் எச்சரிக்கையும் , கிண்டலும் நிறைந்திருக்க , தாண்டவராயரின் விழிகள் சிவந்தன .சந்திராம்பிகை முகத்தை மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் .

 

” என் மகளை ஒரு பிச்சைக்காரனுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் வைப்பேனே தவிர, உங்கள் ராயருக்கு இனி தரமாட்டேன். வாம்மா போகலாம் ” தாண்டவராயர் மகளின் கை பிடித்து இழுத்தார்.

 

” கடைசியில் அதுதான்யா நடக்க போகுது. உன் மகளுக்கு ஒரு பிச்சைக்காரனதான் கிடைப்பான் ,” ஒரு குரல் வர… 

 

” என் மகளுக்கு பிச்சைக்காரனாவது வருவான் .உங்கள் ராயருக்கு அது கூட கிடைக்காது. உங்கள் ராசாதி ராசா கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்காமல் காலம் பூராவும் பிரம்மச்சாரியாக நிற்க போகிறார் பாருங்கள் …,” சாபம் போல் இட்டு விட்டு , அதனால் பேச்சியம்மாள் விம்மி அழுவதை திருப்தியாக பார்த்து விட்டு தாண்டவராயர் தனது சொந்த ,பந்தங்களுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினார் .

 

” அழாதீர்கள் ஆன்ட்டி …” சஷ்டி பேச்சியம்மாவை சமாதானப்படுத்த முயல , அவளுக்கு துணையாக சொப்னாவும் வந்தாள் .




” ப்ச் அம்மா .இப்போது எதற்காக அழுகிறீர்கள் …? அந்த தாண்டவராயர்  சொன்னதெல்லாம் நடந்து விடுமா …? இப்போது கல்யாணம் செய்து கொள்ள அறிவிப்பு கொடுத்தாலும் அண்ணனுக்கு பெண்கள் வரிசையில் வந்து நிற்பார்கள் …கவலையை விடுங்கள் .அழாதீர்கள் …”

 

பாட்டி பேச்சியம்மாளின் அருகே வந்தார் .” ஏட்டி இப்படி ஒரு பிள்ளையை பெத்துட்டு அழுவியாடி நீயி …? என் பிள்ளைக்கு எப்படி கல்யாணம் பண்றேன்னு பாருன்னு நிமிர்ந்து நிற்க வேண்டாமா …? ” மருமகளை அதட்டினார் .

 

பேச்சியம்மாள் கொஞ்சம் கோபமாக பாட்டியை பார்த்தாள் .” என் மகன் வாழ்க்கை உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாக போய் விட்டதா அத்தை .? பொண்டாட்டி , பிள்ளையென்று சந்தோசமாக வாழ வேண்டியவனை ஊர் …மக்கள் அது இதுவென ஏதேதோ சொல்லி , இப்படி தனி மரமாக நிற்க வைத்து விட்டீர்களே …இது நியாயமா ..? “

 

மகனை மணம் முடித்து இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் எதிர் நின்று முகம் பார்த்து ஒரு வார்த்தை பேசியிராத மருமகள் இன்று நேருக்கு நேர் இப்படி பேசியதும் பாட்டியின் முகம் ஒளியிழந்தது .

 

” அம்மா பாட்டி ஒன்றும் செய்யவில்லை . இந்த திட்டங்களையெல்லாம் ஒரு வருடமாக போட்டது நான் தான் .பாட்டியிடமே இந்த விபரங்களை நான்கு மாதங்களுக்கு முன்புதான் சொன்னேன் .நீங்கள் பாட்டியை எதுவும் சொல்லாதீர்கள் …” பாட்டிக்கு ஆதரவாக பேசியபடி வந்து நின்ற பேரனின் கைகளை பற்றிக் கொண்டார் பாட்டி .அவர் கண்கள் கலங்கியருந்தன .

 

” உன் அம்மா பேசட்டும் ராயா .விடு .ஒரு தாயின் வேதனையை அவள் வெளிப்படுத்துகிறாள் .அதில் எந்த தப்பும் இல்லை .ஏன் பேச்சி எனக்கு மட்டும் என் பேரனின் வாழ்க்கையில் அக்கறை இல்லையா ..? நீ சம்மதித்தால் இங்கேயே இப்போதே வேறொரு பெண்ணை  என் பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் . உனக்கு சம்மதமா  …? “

 

உடன் பேச்சியம்மாளின் முகம் ஒளிர் விட , ” பாட்டியம்மா நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம் . உடனே எங்கள் ராயருக்கு கல்யாணம் செய்து வையுங்கள் .அந்த தாண்டவராயர் முகத்தில் கரி பூச வேண்டும். சீக்கிரம் சொல்லுங்கள் .யார் அந்த பெண் …? ” ஊர் மக்கள் ஆளாளுக்கு குரல் எழுப்பினர் .

 

சஷ்டி திடுக்கிட்டாள் .என்னதிது …திரும்பவும் இவனுக்கு திருமணமா …? ஐய்யோ …நிறுத்த வேண்டுமே …எப்படி …? பதட்டமாக நகம் கடிக்க ஆரம்பித்தாள் .

 

” என்ன இந்தக் கல்யாணத்தையும் எப்படி நிறுத்துறதுன்னு யோசிக்கிறாயா …? ” திருமலைராயன் அவளருகே சாய்ந்து குறைந்த குரலில் கேட்டு அவளுக்கு வியர்க்க வைத்தான் .

 

” நோ வே பேபி .மண்டையை போட்டு உருட்டி இருக்கிற கொஞ்சூண்டு மூளையையும் குழப்பிக்காதே . நீ எவ்வளவு பெரிய திட்டங்கள் போட்டாலும் இப்போது நடக்க போகும் இந்த கல்யாணத்தை உன்னால் நிறுத்த முடியாது …” திருமலைராயனின் ரகசிய பேச்சுக்கள் தொடர்ந்தன .

 

அவனது உறுதியில் சஷ்டிக்கு அவனை நறுக்கென கிள்ளும் வேகம் வந்தது. டேய் …ஊர் பெரிய மனுசனாடா நீ …உன் கல்யாணம் நின்னு போன கவலை கொஞ்சமாவது உனக்கு இருக்கிறதா …? அதற்குள் அடுத்த கல்யாணத்தை யோசிக்க ஆரம்பித்து விட்டாயே …என்ன மனுசன்டா நீ …? கண்களில் தீப்பொறி பறக்க அவனை முறைத்தாள். பதிலாக அவன் சபை  கூச்சமில்லாமல் கண்ணடித்தான் .முதலில் வலது கண்ணை. பின் இடது கண்ணை .மாற்றி மாற்றி அடித்து அவளுடனோர் அந்நியோன்ய சேதியை விழியால் உருவாக்கினான் .

 

சை …இதை யாரெல்லாம் பார்க்கிறார்களோ …சஷ்டிதான் பதட்டத்துடன் பரபரக்க சுற்றிலும் பார்த்தாள் .அங்கிருந்த அனைவரின் பார்வையும் அப்போது பாட்டியம்மாவின் மேலேயே பதிந்திருந்தது .

 

” இருபது வருடங்களுக்கு முன்பு நான் செய்த ஒரு பாவத்திற்கு இப்போது என் பேரனின் கல்யாணம் மூலம் பரிகாரம் செய்ய நினைக்கிறேன் …” பாட்டியின் குரல் கலங்கியிருந்தது . ஆயிரம் காளி எனும் பெயருக்கு ஏற்ப காளி போன்ற ஆக்ரோச குணத்துடனேயே இந்த ஊரில் வலம் வந்தவர் . இப்போது அதே ஊர் ஜனங்கள் முன் கண் கலங்கி நின்றார் .

 

பாட்டியின் கலக்கம்  உடனடியாக மனதில் பதிந்த அளவு அவரது வார்த்தை பதியாமல் போக , அவரது பேச்சின் சூட்சுமம் புரியாது , அவரது வார்த்தைகளின் அர்த்தத்திற்கான விளக்கத்தை தேடி பரபரத்த சஷ்டியின் விழிகள் தேங்கி நின்று கேட்டது திருமலைராயனிடமே. பாட்டி என்ன சொல்கிறார் …?

 

அவள் விழிக் கேள்விக்கு உடனடி பதில் சொன்ன திருமலைராயனின் கண் செய்தியை அவளால் உணர முடியவில்லை . இவன் ஏன் இப்படி பார்க்கிறான் …? கொத்தி விழுங்குவது போல…குழம்பி நின்றாள் அவள். 

 

 




What’s your Reaction?
+1
24
+1
16
+1
2
+1
1
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!