Serial Stories பூம்பாவை

பூம்பாவை-9

 9

“அறிவிருக்குதா உனக்கு?” – விக்ரம் திட்டினான். “கடம்பனைத் தேனடையாக்கிட்டா, தொடர்ந்து நமக்குத் தேன் யாருடா கொண்டுவருவாங்க?”

“அதுக்குத்தான் அப்பா சார் ஏதோ ஊசி மருந்து அனுப்பிருக்காரே!”

“இருந்தாலும் நாம மலைஜாதிக் கூட்டத்துக்குப் பக்கத்தில் போக முடியாது. குடியிருப்பைவிட்டு வெளிய வரும் ஆட்களைத்தான் டார்கெட் பண்ணணும். அப்போ மலைஜாதி மக்களை யாரும் சந்தேகப்பட மாட்டாங்க. யாரோ டவுன்காரங்கதான் உள்ளே வந்து ஆளுங்களைக் கடத்தறாங்கன்னு முடிவு பண்ணிருவாங்க. அப்புறம் நாம இந்தக் காட்டுக்குள்ளே போக முடியாது! அதுக்குப் பதிலா, கடம்பனைவிட்டு ஏற்பாடு பண்ணினா, காணாம போகறதுக்கு முன்னாடி அவங்க மலைஜாதி கிராமத்தில்தான் இருந்திருக்காங்கன்னு தெரிய வரும். நாம சைலண்ட்டா தேனைக் கடத்திடலாம். அப்புறம் தேனடையைப் புதைச்சிட்டா… என்ன நடக்குதுன்னே யாருக்கும் புரியாது.

“இதை விட்டுட்டு, கடம்பனைக் கடத்தறேன்னு சொல்றியே முட்டாள்! அவனைக் கூட்டிவா சீக்கிரம்” என்றதும் அவன் வேகமாக ஓடினான்.

*****

“வா கடம்பா! என்னடா இவ்வளவு நேரம் நம்ம கடம்பனைக் கூட்டிட்டு வர?” என்று நண்பனை  வேடிக்கையாகக் கேட்டாலும், விக்ரம்மின் கவனம் காரியத்தில் இருந்தது.

“அவன் நம்ம ஒத்துக்கிட்ட அடையாளப்படி அப்பவே கூப்பிட்டான். அதுக்காக… அவங்கூப்பிட்டா, நான் ஒடனே வந்து நிக்கணுமா? நான் என்ன நீ வெச்ச ஆளா? உனக்காகப் பொணந்தூக்க வெச்சிட்டயே என்ன!” – பொருமினான் கடம்பன்.

“என்ன கோபம் இது கடம்பா? ஒரு ஒஸ்தி ஜாதி ரம் வந்திருக்கு” என்று பாட்டிலைத் தூக்கிக் காட்டினான் விக்ரம். “இதைப் பார்த்தவுடனே எனக்கு உன் ஞாபகம்தான் வந்தது. உன் மொந்தைக் கள்ளெல்லாம் இதுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லை! ஒரு பெக் அடிச்சுப் பார்க்கறியா?”

“இந்தா தொரை, எனக்கு உன் ரம்மும் வேணாம், ஒண்ணும் வேணாம். உயிரோட இருக்கணும்னா கம்முனு இருந்துக்கிடு. ஆசப்படறன்னு சொன்னதாலதான மயிலை உன் இடத்துக்கு அளச்சிட்டு வந்தேன்? எங்க சாதிசனத்துப் பொண்ணுங்க கெட்டுப் போயிட்டாங்கன்னா, அவங்களை வனப்பேச்சிக்குப் பலி போட்ருவாங்க! அதனால தெரியாம தப்புப் பண்ணிட்டா, பொண்ணுங்க பயந்துக்கிட்டு அதை வெளிய சொல்ல மாட்டாக. அப்படி நெனப்பிலதான கூட்டி வந்தேன்? படுபாவி, அவள கொன்னுட்டியே! இப்ப என்னால பூவை நிமிந்து பாக்க முடியல! பாவி, படுபாவி!” வாய் விக்ரம்மைத் திட்டினாலும் கண் அங்கே இல்லை. அது ரம் பாட்டில் மேலேயே இருந்தது.

“அறிவுகெட்டத்தனமா பேசாத கடம்பா! நான் ஆசப்பட்ட பொண்ணை நானே கொல்லுவேனா? என் அறைக்கு வந்திட்டு அவ அழுதுக்கிட்டே காட்டுக்குள்ள ஓடிட்டா! அவ ஒண்ணா தற்கொலை செய்துக்கிட்டிருக்கணும், இல்ல ஏதாவது மிருகம் அடிச்சிருக்கணும்!”

“நீ இப்டிச் சொல்ற, ஆனா மயிலு தப்புப் பண்ணியிருக்கான்னு எங்க வைத்தியரு சொல்லிட்டாரே! ஆனா அவ செத்ததுக்கு வேற காரணம்னும் சொன்னாரு. எப்படியும் எங்க சாதிக் கட்டுமானம், எங்க ஆளுங்க மேல சந்தேகம் விழாது. மூப்பர், அதான் பூவு அப்பன், கூட வனப்பேச்சிக்குப் போட்ட படையல் தப்பாயிட்டதா தான் சொன்னாரு. நல்ல வேள, கீள கிராமத்துக்கு வந்திருக்கற டாக்குடர் தான் கொல பண்ணிட்டான்னு பூவு நம்பறா. அதையே மூப்பு கிட்ட சொன்னாலும் இப்போதைக்கு நமக்குப் பிரச்சனை இல்ல…”

“நீயே சொல்ற பிரச்சனை இல்லன்னு. ஊமையனை ஒரு வேலைக்காக நான் கூட்டி வரச் சொன்னேன். அவன் காட்டுத் தீயில மாட்டிச் செத்து வெச்சா அதுக்கு நானா பொறுப்பு? என்மேல பழி வந்துடக் கூடாதுன்னுதானே உன்னை ஊமையன் உடம்பை மறைக்கச் சொன்னேன். அப்புறம் என்ன, கடம்பா?”

“அப்புறம் வேற இருக்கா? இதோட போதும் உன் சாகவாசம்னுதான் சொல்ல வந்தேன். அந்த நஞ்சன் பயலு இல்ல, அவன் தான் மயிலைக் கட்டப் போறான்னு எங்க சனம் பேசிட்டிருந்தது. அவன் பட்டணத்துக்காரவுங்கள மலைப் பக்கம் பார்த்தா வெட்டிப் போட்டுருவேன்னு கருப்பண்ணசாமி மாதிரி வீச்சருவாவும் கையுமா மாதிரி மலையைச் சுத்திச் சுத்தி வந்துட்டிருக்கான். இனி தேன் வேணும், மான் கொம்பு வேணும்னு மலைப்பக்கம் வந்துடாத, இதா இருக்கானே உன் கைத்தடி, அவனையும் அனுப்பாத! சொல்லிட்டேன். நா வாரேன்” என்று சொன்னாலும், அவன் போய்விடவில்லை.

விக்ரம்முக்கு மெலிதாய்ப் பயம் தலைகாட்டியது என்றாலும் தற்போதைக்குச் சந்தேகம் டாக்டர் மீதுதான் விழுந்திருக்கிறது என்பதில் நிம்மதியும் வந்தது. “சரி, அதெல்லாம் போகட்டும் கடம்பா! உட்காரு, இந்த ரம்மை ருசி பாரு” என்றான். அதற்குமேல் ஆற்ற மாட்டாதவனாக, கடம்பன் தரையில் அமர்ந்தான்.

ரம் உள்ளே போக ஆரம்பித்தது. விக்ரம் வெளியே போனான்.




=========

என்ன செய்யலாம்? நம் மீது சந்தேகம் வந்ததாக ஒரு பொறி அடித்தால் போதும், என்னை அப்பா விடமாட்டார். அவர் ராட்சஸன், எங்கள் மீதான சந்தேகம் நீங்குவதற்கு என்னையே கொன்று இந்த மலைப்பகுதியில் வீசுவதற்கும் தயங்க மாட்டார்.

எப்படி மனிதர்கள்மீது முதலில் மலைக்காரர்களுக்குச் சந்தேகம் வந்தது? நம்ம சயிண்டிஸ்ட் என்ன சொன்னார்? இந்த மரணம் ஏதோ மிருகம் அடிச்சதாகத்தான் பார்ப்பாங்கன்னு தானே சொன்னார்? நாம் மயிலை வரச் சொன்னதால இந்தப் பயலுக்கு ஏதோ சந்தேகம் வந்திட்டு போல. அதை அவன் பூ கிட்ட உளறப் போக, அவ பட்டணத்துக்காரங்கன்ன உடனே டாக்டரைச் சந்தேகப்பட்டிருக்கணும். அவ அப்பன் தான் இவங்க சாதி சனத்துக்குத் தலைவன்னு கடம்பன் சொல்றானே! ஊமையன் விஷயம் ஊமையா ஆக்கியாச்சு, அது பிரச்சனை இல்லை.

இப்போ  நம்ம ஆராய்ச்சிக்கு உடனே தேன் வேணும். கொம்புத்தேனா இருந்தா தேவலைன்னு சயிண்டிஸ்ட் சொல்றாரு. மலைப்பக்கம் போக முடியாம அந்த நஞ்சன் பய, யார் அந்த ராஸ்கல், சுத்தறதா கடம்பன் சொல்றான். சந்தேகம் டாக்டர் மேல விழணும், நஞ்சனை மீறி நம்ம தேன் எடுக்கற வேலை நடக்கணும், இந்தக் கடம்பனையும் கைக்குள்ள போட்டுக்கணும். அதுக்கு என்ன செய்யலாம்?

ஒரு நிமிஷம். ஏதோ பொறி தட்டுகிறதே!

=========

“அட, ஏஞ்சல்! என்ன நீயே என்னைத் தேடிட்டு வந்திருக்க?”

“செத்துப் போன ஊமையன் உடம்பை எடுத்துக்கிட்டு என் சாதிக்காரன் ஒருத்தன் போனானுல்ல, அவனைப் பிடிக்க முடியல. காட்டுக்குள்ள திடீர்னு மாயமாயிட்டான். எங்க சனங்க கிட்ட இத சொன்ன நம்ப மாட்டாங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல தொரை. அதான் உன்னத் தேடிட்டு வந்தேன்” – படாரென்று விஷயத்துக்கு வந்துவிட்டாள் பூம்பாவை. அடுத்தடுத்து இரண்டு மரணங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அவள் குரலே அழுகையுடன் சேர்ந்து ஒலித்தது.

“மொதல்ல உட்காரு. அப்புறம் இதென்ன தொரைன்னு என்னைக் கூப்படற? நான் என்ன இங்க்லீஷ்காரனா? இல்ல இன்னும் ப்ரிட்டிஷ் ஆட்சி நடக்குதா? இது குடியரசு, நாம எல்லாரும் சமம். என்னை நீ மாறன்னு பேர் சொல்லியே கூப்பிடலாம்” என்றான் நன்மாறன். அவள் பதட்டத்தை அடக்குவதற்காகவே பேச்சை மாற்றினான் ஆகையால், அவள் முகத்தில் மெலிதாக உதயமான புன்னகைக் கீற்று அவனுக்குத் திருப்தியைக் கொடுத்தது.

“அப்டில்லாம் எங்க சாதி சனத்தில் யாரையும் பேர் சொல்லிக் கூப்புட மாட்டாவ” என்றாள் பூம்பாவை.

“சரி சரி, அப்போ ஃப்ரெண்ட்னு கூப்பிடு.”

“அப்டின்னா?” என்றாள் பூம்பாவை சந்தேகமாக.

“நண்பன்னு அர்த்தம், போதுமா?”

“நண்பன்னா?”

“கிழிஞ்சது போ. நண்பன்னா… ஃப்ரெண்ட். ஐயோ, சகா. இந்த… மயிலும் நீயும் எப்படி?” என்றவன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.

பூம்பாவையின் முகம் சோகத்தில் சுருங்கினாலும் சமாளித்துக் கொண்டாள். “கூட்டுக்காரன்னு சொல்றீயா?”

“ஆ… அதான்.”

“சரி. அது என்ன வார்த்தை?”

“ஃப்ரெண்ட். சொல்லு, ஃப்ரெண்ட்!”

“பிறாண்டு!”

“அதெல்லாம் செஞ்சு தொலையாதே! நகமா வளர்த்திருக்க, புலி மாதிரி! சரியா சொல்லு, ஃப்ரெண்ட்!”

“ப்ரெண்ட்டு!”

“இது பரவாயில்லை…”

வார்த்தை உருப்போடப்பட்டாலும் இருவர் மனதிலும் ஒரே விஷயம்தான் ஓடிக் கொண்டிருந்தது.




‘யார் பேச்சிமலை மனிதர்களைக் கொல்கிறார்கள்? யார் என்பது பெரிதல்ல, ஏன்?’

“ஃப்ரெண்டு! ஐ வந்திருச்சு” என்று குழந்தைபோலப் பூம்பாவை குதூகலிக்க, ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நன்மாறன் அவள் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான். 

“ஏஞ்சல்! உங்க மலையில் நடக்கும் மரணங்களை யார் செய்யறாங்கன்னு எனக்குத் தெரியல. ஆனா ஒண்ணு, நீ சொன்ன ஆளு நிச்சயமா இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கான். அவனை நாம முதலில் தேடிக் கண்டுபிடிப்போம். அவனைப் பேச வைப்போம்.  நீ காட்டுல தேடு. நான் ஊர்ப்பக்கம் வரானான்னு பார்க்கறேன். ஜாக்கிரதை” என்றான்.

அவனுக்கு என்ன தெரியும், தேடத் தேவையின்றி அன்று இரவே கடம்பன் அவன் இடத்துக்கே வருவான் என்று? அப்படி வருபவன் எதையும் சொல்ல மாட்டான், சொல்லும் நிலையிலும் இருக்க மாட்டான் என்று?

“கடம்பா! நான் ஆசப்பட்ட பொண்ணை அந்த டாக்டர் தான் ஸகொன்னுருக்கணும். அதை எப்படியாவது நிரூபிச்சுக் காட்டறேன். நீ அந்த நஞ்சன் பயலோட இன்னைக்கு ராத்திரி டாக்டர் வீட்டுக்கிட்ட வந்துரு. டாக்டரைக் கையும் களவுமா பிடிச்சுக் கொடுக்கறேன்” என்றான் விக்ரம்.

அந்த வார்த்தையிலும் உள்ளே போன போதையிலும் சமாதானமானவனாக கடம்பன் தலையாட்டிவிட்டு எழுந்து தள்ளாடியவாறே வெளியே போனான்.

விக்ரம் கைபேசியை எடுத்தான்.

“அப்பா! இன்னைக்கு ராத்திரி முழுத் தேனடை ஒண்ணு அகப்படப் போகுது. நாளைக்கு விடிகாலையிலேயே சயிண்டிஸ்டைத் தயாராகிடச் சொல்லுங்க. ஆமாமா, கொம்புத் தேன் தான்! தேனெடுத்ததும் நீங்க சொன்னபடியே தேனடையை என்ன செய்யணுமோ செஞ்சுடறோம்!”

-தொடர்வாள்




What’s your Reaction?
+1
7
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!