Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-9

9

 

 

 

“சூடு சரியா இருக்கான்னு பார்த்துட்டு பொறிங்க அக்கா….” அடுப்படிக்குள் நுழையும் போது கேட்ட கண்ணாத்தாளின் குரலுக்கு தனது கன்னச்சூட்டை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் கவிதா..

இப்போது வரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது இதழை அங்கே பதித்திருந்தான் அய்யனார்.. அது இன்னமும் பனி நீர் நடு நெருப்பென கவிதாவின் கன்னங்களில் தகித்துக் கொண்டிருந்தது.. எவ்வளவோ அழுத்தி தேய்த்தும் கன்னத்தில் சூடு போவதாக இல்லை..

குளித்து முடித்து அய்யனாரின் அறைக்குள் வேகமாக கதவை தட்டாமல் நுழைந்த கவிதாவை இடுப்பில் கட்டிய துண்டோடு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவன் கண்சிமிட்டி வரவேற்றான்..

அவனது தோற்றமும், இந்த கண் சிமிட்டலும் கவிதாவை வெட்கத்தில் புரட்டி எடுக்க, திரும்ப வெளியே போய்விடலாமா என்ற யோசனையோடு கதவை பார்த்து அதற்கும் தயங்கினாள்.. ஏனெனில் அவள் அறையை விட்டு வெளியே வரும் போதே அவளை எதிர்பார்த்து காத்திருப்பது போல் அறை வாசலை பார்த்தபடி ஒரு உறவினர் கூட்டம் இருந்தது.. பாட்டி முதல் பேத்தி வரை எல்லா வயது பெண்களும் இருந்த அந்த கூட்டம் முதலிரவு முடிந்து வெளியே வரும் புதுப்பெண்ணை சீண்டும் ஆவலுடன் இருந்தது..
அவர்களின் கூச வைக்கும் பார்வைக்கு பயந்து வேகமாக அய்யனாரின் அறைக்குள் நுழைந்து விட்டவள், பின்னால் அவர்களின் குசுகுசுத்த பேச்சோடு கேட்ட கேலிகளில் முகம் சிவந்து நிமிர்ந்த போது, அய்யனார் இன்னமும் அவள் முகம் சிவக்க வைத்தான்..




அவளருகே நெருங்கி அவள் சாய்ந்து நின்ற அறைக்கதவை தாழிட்டான்.. ஐயோ வெளியே அத்தனை கும்பல் நின்று கொண்டிருக்கும் போது இவன் இப்படி கதவை மூடினானென்றால்.. கவிதா மேலும் சிவந்தாள்..

“இப்போ எதுக்குடி இம்புட்டு வெக்கம்..?” சிவப்பேறிக் கிடந்த அவள் கன்னத்தை வருடியபடி கேட்டான்.

இவன் இப்படி அரை குறையாக நின்று கொண்டு அவளை உரசிக் கொண்டு சீண்டினால் வெட்கம் வராதா..? மேலும் சிவந்தவள் கன்னத்தில் ஆக்ரோசமாக முத்தமிட்டான்..
“என்னமா வெட்கப்படுறடி..” அவனது ரசிப்பின் நீட்சி தொடர்ந்து அவள் முகம் முழுக்க பரவியது..

அத்தோடு அவள் உடல் பரவ ஆரம்பித்து விட்ட அவன் கரங்களில் தளர்ந்து உருகியவள்.. “விடுங்க..” மெலிதாய் புலம்பினாள்.

“ம்ஹூம்..” உறுதியாய் ஒலித்த அவன் குரலில், தொடர்ந்து அவன் செய்கைகளில் அவள் தவித்து நின்றபோது, அவளை காப்பது போல் அந்த அறைக்கதவு தட்டப்பட்டது..
“அத்தான் கதவை திறங்க..”

வெளியே கேட்ட குரலில் இவளுக்கு எரிச்சல் வந்தது.. அது எவள் சொந்தம் கொண்டாடுவது..?

“என்ன விசயம் காமாட்சி..?” குரலை உயர்த்தி கேட்டபடி சாவகாசமாக அவள் கன்னத்தின் வாசனை பிடித்தான்..

“அக்காவை வரச் சொல்லுங்க அத்தான்.. ஒரு விபரம் பேசனும்..” பதில் சொன்ன காமாட்சியின் குரலில் நக்கல் நிறைய இருந்தது..

கவிதாவிற்கு படபடப்பாக வந்தது.. அவசரமாய் அவனை விலக்க முயல, அவன் வலுக்கட்டாயமாக மேலும் அவளுடன் ஒட்டியபடி..
“அவளுக்கு வேலை இருக்குது.. நீ அங்கிட்டு போ..” அதட்டினான்..
“என்ன வேலைங்க மாமோய்..?” இப்போது ஒலித்தது வேறொரு பெண்ணின் குரல்.




இவனென்ன எல்லா பொண்ணுகளுக்கும் மாமா, மச்சான் உறவுதானா.. கவிதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.. எரிச்சல் பொங்கிய அவள் முகத்தை பார்த்தவன்..
“விளையாட்டு புள்ளைங்க கண்ணு.. சும்மா கிண்டலடிக்குதுங்க..” சமாதானமாக பேசினான்.. இவன் எதற்கு இப்போது அவர்களுக்கு பரிந்து கொண்டு வருகிறான்.. கவிதாவின் எரிச்சல் குறையவில்லை..

“தள்ளுங்க நான் கீழே போகனும்..” சற்றே பலமாக அவன் மார்பில் கை வைத்து தள்ள அவன் இம்மியும் அசையாமல் அவள் முகத்தை உறுத்தபடி இருந்தான்..

அந்த அச்சாணி பார்வை அவள் மனதை ஊடுறுவ தவித்து இதழ் கடித்தவளின் இதழ்களை இதழால் பொத்தி எடுத்து விட்டு.. “ம்.. போ..” என விடுவித்தான்..

அந்த அவனின் முத்தத்தில் தடுமாறி நின்றவளை.. “இப்போ போகலைன்னா இழுத்து தூக்கிட்டு போயி..” என கண்களால் கட்டிலை காட்டியவனுக்கு அரண்டு போய் வெளியேறியவள், வெளியே கும்பலாய் நின்றிருந்த பெண்களிடம் மாட்டிக் கொண்டாள்.
அதெப்படி ஒரு பெண்ணால் இப்படி பேச முடியும்.. என காது கூசுமளவு கேலி பேசினர் அவர்கள்.. அழுத்தி காதுகளை மூடியபடி கீழே இறங்கியவளை பின் தொடர்ந்தவர்கள்.. அவள் கண்ணாத்தாள் அருகே போகவும் நல்லபிள்ளையாக ஒதுங்கிக் கொண்டனர்.
கூச்சமும், தவிப்புமாக தன்னருகே வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்த கண்ணாத்தாள், அவள் பின்னே பார்த்து விட்டு..

“என்னம்மா ரொம்ப கிண்டல் பண்ணுறாகளோ..?” என்றாள்..

“ம்.. ரொம்ப..” தாயிடம் புகாரளிக்கும் குழந்தையாய் நின்றாள்..

“எவடி அவ.. கண்டபடி பேசுனது..?” கண்ணாத்தாள் தனது வெங்கல குரலை உயர்த்த குண்டுசி மௌனம் வீட்டினுள் நிரம்பியது.

கொஞ்ச நேரம் முன்பு இந்த வீட்டில் வாழ்ந்த மனிதர்களெல்லாம் எங்கே என்ற சந்தேகம் கவிதாவிற்கு வந்தது..

“இந்த வெங்காயத்தை வெட்டிட்டு, அந்த மசாலாவை அரச்சுடு புள்ள..” கண்ணாத்தாளின் வேலை ஏவலில் கவிதா திருதிருத்தாள்..

ஜாலியாக காலேஜ் போக வர என இருந்தவள் அவள்.. இந்த வீட்டு வேலைகள் அவளுக்கு பழக்கமற்றவை மெல்ல வெங்காயத்தை எடுத்தவள் கைகளிலிருந்து அதனை வாங்கினாள் அன்னம்மா.. சிறு வயதிலேயே கணவனை இழந்து பிள்ளைகளிடம் இல்லாததால் தனக்கென தனியான வாழ்வொன்று இல்லாமல் ஆதரவாக இவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தவள்.. தூரத்து சொந்தம்.. சமையல் வேலைகளை செய்து கொண்டு வீட்டோடு தங்கியிருப்பவள்..




“ஏன் ஆத்தா நேத்து கண்ணாலம் கட்டுன புதுப் பொண்ண இன்னைக்கு கண்ணு கலங்க விடுறியே நாயமா..?” என் நியாயம் கேட்டபடி வெங்காயத்தை தான் உரிக்க ஆரம்பித்தாள்..

கவிதா அவளை நன்றியுடன் பார்த்தாள்..

“ம்.. ம்.. தம்பி இப்போ சாப்பிட வருவானே.. புருசனுக்கு இவ சமச்சு போட வேணாம்..?” மசாலா பொருட்களை அம்மியில் வைத்து இழுத்து அரைக்க ஆரம்பித்தாள் கறிக்குழம்பின் வாசனை மசாலாவிலேயே மணக்க ஆரம்பித்து விட்டது..

“எல்லாம் போடுவா ஆத்தா.. சின்ன பொண்ணுதானே.. கொஞ்சம் கொஞ்சமாய் கத்துட்டு செய்வா..” வெட்டிய வெங்காயத்தை மாவில் கலந்து வடைகளை எண்ணையில் போட ஆரம்பித்தாள் அன்னம்மா..

“ஏனுக்கா உங்க தம்பி பொண்டாட்டிக்கு இப்பவே சப்போர்ட்டாக்கும்..? சரித்தான் இப்போ அவ புருசன் சோறுண்ண வருவானே.. தட்டெடுத்து சாப்பாடாவது போடுவாளா.. அதுக்கும் பழகனுமா..?” குத்தலாய் கண்ணாத்தா கேட்ட கேள்வி கொஞ்சம் மன சோர்வை கொடுத்தாலும், அவன் இப்போது இங்கே வருவானா.. கவிதாவின் மனம் பரபரக்க ஆரம்பித்தது..

“ஏய் என்னத்துக்குடா இந்த குதி குதிக்கிறீக..?” கூடத்தின் ஒரு ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளின் மேல் ஏறிக் குதித்துக் கொண்டிருந்த சிறுவர்களை அதட்டும் அவனது குரலுக்கு மெல்ல அடுப்படியினுள்ளிருந்து எட்டிப் பார்த்தாள்..

மூன்று கட்டு தள்ளி இருந்த கூடத்தில் நின்று வேட்டி நுனியை ஒரு கையால் மடித்து தூக்கி பிடித்தபடி அதட்டிக் கொண்டு இருந்தவன்.. இங்கிருந்து பார்க்க இருளும் வெயிலும் கலந்து ஓர் வித்தியாச சூழலில் கருவறை சாமி போல் தெரிந்தும் தெரியாதோர் மாயத் தோற்றம் காட்டினான். ஏனென்று தெரியாதோர் வித்தியாச உணர்வில் அவனை பார்வையால் விழுங்கியபடி இருந்தாள்..

இவளது பார்வையை உணர்ந்தானோ என்னவோ சட்டென திரும்பிவிட, இவள் அவசரமாக தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்.. ஆனாலும் இவளை கண்டு கொண்டவன்.. மின்னும் விழிகளுடன் இவளை நோக்கி நடந்து வர படபடக்கும் நெஞ்சுடன் அடுப்படி சுவரில் சாய்ந்து நின்றாள்..

அடுப்படியை அவன் நெருங்கி வருகையில்.. “அய்யா..” பின்வாசலில் யாருடைய அழைப்போ..

“என்னடா முனுசாமி..?” அடுப்படிக்குள் நுழையாமல் பின் வாசலுக்கு நடந்துவிட்டான்..
“ஒரு பஞ்சாயத்துங்க நீங்க முடிச்சு தரனும்..” பவ்யமாக கை கட்டி நின்றான் அவன்..
“அக்கா.. தோ வாரேன்..” உள்ளே திரும்பி குரல் கொடுத்தவன் அந்த முனுசாமியுடன் இறங்கி நடக்க தொடங்கினான்..




இதென்ன.. இப்படி பட்டென ஒரு வார்த்தை சொல்லாமல் போய்விட்டானே.. கவிதா அவன் போன பாதையை ஏமாற்றத்துடன் பார்த்து நின்றாள்..

“வெளில வாசலுக்கு போற ஆம்பளைகளுக்கு ஆயிரம் சோளி இருக்கும்.. எப்பவும் வீட்டுக்குள்ளயே இருப்பாகன்னு மனக்கொட்டை கட்டிக கூடாது..” கண்ணாத்தாள் மசாலாவை வழித்து அள்ளியிருந்தாள்..

“சாப்பிடாமல் போறாரேன்னு நினைச்சேன்..” மெல்ல சொன்னாள்..

“அதைல்லாம் அவன் பார்த்துக்கிடுவான்.. அவனுக்கு ஊரெல்லாம் வீடுதான்.. ஊருக்குள் இறங்கி நடந்தா நான் நீன்னு போட்டி போட்டு சாப்பாடு போட ஆள் வருவாக…” அக்கா பேசிய தம்பி பெருமை கவிதாவிற்கு உவப்பாக இல்லை..

இதென்ன பழக்கம் சொந்த வீட்டை விட்டு அடுத்த வீட்டில் சாப்பிடுவது.. பிறகு இங்கே இத்தனை வகைகள் யாருக்காம்..? எண்ணெயில் வெந்த வடையும், ஆவி பறந்த இட்லியும், குக்கரில் சத்தமிடும் கோழிக் குழம்பும் அவளை பார்த்து சிரித்தன..

இதற்கெல்லாம்தான் நாங்கள் இருக்கிறோமே.. என சொல்லாமல் சொன்னபடி விருந்தினர் கூட்டம் இலை போட்டு அடுப்படியை அடைத்து அமர்ந்து கொள்ள, கவிதாவிற்கு எரிச்சல் வநத்து..

இவனென்ன வீட்டை இப்படி வைத்திருக்கிறான்..? சத்திரம் மாதிரி.. வெறுப்போடு வாசல் திண்ணைக்கு வந்தாள்..

“கவிதா..” அழைத்தபடி வந்தாள் உமா..

“இப்படி மாட்டிக்கிட்டியேடி..” கண்கலங்க இவளை பரிதாபப்பட்டாள் அவள்..




What’s your Reaction?
+1
16
+1
20
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!