காதல் சகுனி

காதல் சகுனி-5

5

கோடிங்கில் திடீரென்று வந்துவிட்ட எரர் ஒன்றினை சரி செய்வதற்காக போராடிக் கொண்டிருந்தனர் கிருஷ்ணதுளசி ,பிரியா ,ரஞ்சனி மற்றும் அவர்கள் டீம் மெம்பர்களான முரளி ,தனுஷ்.நேரம் இரவு பத்து மணியை தாண்டிக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரங்களுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய கோடிங். இப்படி இழுக்கிறது.

 ஐந்து பேரும் தலையை பிய்த்துக் கொள்ளாத குறை, நாளை அவர்கள் டீம் லீடர் நீலவண்ணனுக்கு பதில் சொல்ல முடியாது. “எனக்கு ஒரு யோசனை…” கிருஷ்ணதுளசி ஆரம்பித்தபோது அவள் அறைக் கதவு  தட்டப்பட்டது.

” என்ன குப்பையாக இருந்தாலும் கொட்டு துளசி. எதையும் விடாமல் பொறுக்கிக் கொள்ள வேண்டிய நிலைமையில் நாம் இருக்கிறோம்” விரக்தியாய் பேசினான் தனுஷ்.

குரூப் டிஸ்கசனில் இருந்த அவர்கள் அனைவரையும் வெயிட் பண்ண சொல்லிவிட்டு போய் கதவை திறந்தாள். வெளியே உதட்டு நுனியில் தொங்கிய சிகரெட்டுடன் நின்று கொண்டிருந்தான் அஸ்வத்.

“தீப்பெட்டி கிடைக்குமா?” சாதாரணமாக கேட்டவனை கொலை பார்வை பார்த்தாள்.

“ஒரே டென்சன் கிருஷ்ணா,டிஷ்கசன் போய்க் கொண்டிருக்கிறது, மூளை வேலை செய்ய மாட்டேன்கிறது. ஒரு சிகரெட் பிடித்தால் கொஞ்சம் ரிலாக்ஸாவேன். என்னுடைய லைட்டரை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை. தீப்பெட்டி கொடேன்”

“யோவ் அறிவில்லை…” அவன் முகத்திற்கு நேராக கையை நீட்டி வைதாள். “ராத்திரி பத்து மணிக்கு மேல ஒரு பொண்ணு மட்டும் இருக்கிற ரூம் கதவை தட்டி தீப்பெட்டி கேட்கிறியே, நீ எல்லாம் மனிதனா? வேறு ஏதாவது ஜந்துவா?”

அஸ்வத் வாயிலிருந்த சிகரட்டை கையில் எடுத்துக் கொண்டான். “மனிதன்தானே சிகரெட் பிடிப்பான்! அப்போது நான் மனிதன்தான். சரி போய் தீப்பெட்டி கொண்டு வா” அதிகாரம் தொனித்த குரலில் ஆங்காரமானாள்.  

“எவ்வளவு தைரியம்? உன்னை எல்லாம்…”இரு கைகளையும் அவன் கழுத்தை நோக்கி கொண்டு போனாள்.




 தன்னை நெருங்கிய கைகளை பார்த்துக் கொண்டிருந்தவன் திடுமென வியந்தான். “அட இந்த நெயில் பாலிஷ் கலர் அழகாக இருக்கிறது கிருஷ்ணா! இதனை நீ எங்கு வாங்கினாய்?” 

அவன் கழுத்தை நெரிக்க கொண்டு போன கைகளால் தன் தலையில் அடித்துக் கொள்ள தோன்றியது கிருஷ்ணதுளசிக்கு. யாருய்யா நீ! என்னய்யா இப்படி இருக்க? மனம் வெறுத்து கேட்க வாய் திறந்த போது, அவள் லேப்டாப் சத்தமிட்டது.

” துளசி எங்கே போயிட்ட?” முரளி கத்தினான்.

லேசாக எட்டி அறைக்குள் பார்த்த அஸ்வத் “உனக்கும் மீட்டிங்கா? இந்த நேரம் வரையா? இப்படியா நேரம் காலம் இல்லாமல் வேலை வாங்குகிறார்கள்? என்ன கம்பெனி உன்னுடையது” என்றான்.

“நாளை என் பாசிடம் சொல்கிறேன், இப்போது தயவு செய்து கிளம்பு”

“கிருஷ்ணா தீப்பெட்டி கேட்டேனே! ப்ளீஸ்பா ஒரு பப் இழுத்தால்தான் எனக்கு மூளையே வேலை செய்யும்” அஸ்வத் அசையாமல் நிற்க கிருஷ்ணதுளசி தலையில் அடித்துக் கொண்டு அடுப்படிக்கு போய் தீப்பெட்டியை எடுத்து வந்து அவன் மேல் எறிந்துவிட்டு கதவை அடித்து பூட்டினாள்.

” ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்ணா” கதவுக்கு மறுபக்கம் அவன் குரல் தேய்ந்து கேட்டது.

“யாருடி அது? ஜென்ட்ஸ் வாய்ஸ் மாதிரி இருந்தது” ரஞ்சனி நோண்ட “அதை விடுடி பிறகு சொல்கிறேன். எனக்கு ஒரு ஐடியா இந்த கோடிங்கை அப்படியே தலைகீழாக திருப்பி போட்டு பார்க்கலாமே..” கிருஷ்ணதுளசி சொல்ல, மற்றவர்கள் அதனை ஆமோதித்து வேகமாக டைப் செய்ய ஆரம்பித்தனர்.

 பத்து நிமிடங்களில் எரர் நீங்கி சரியாக எல்லோருமாக ஒரே நேரத்தில் ஹோய் என்று கை உயர்த்தி கத்தி தங்கள் வெற்றியை கொண்டாடிவிட்டு லேப்டாப்பை ஷட்டவுன் செய்தனர்.

 கொதித்து கிடந்த மூளையை சமனப்படுத்த அந்நேரத்திற்கு மேல் குளித்துவிட்டு படுக்கையில் சரிந்த கிருஷ்ணதுளசிக்கு கண்கள் சொருகியது.மூடிய அவள் இமைகளுக்குள் வந்து நின்று தீப்பெட்டி கேட்டான் அஸ்வத்.

 அடப்பாவி உனக்கு சிகரெட் பிடிக்க தீப்பெட்டி கொடுத்து விட்டேனே! அரைகுறை உறக்கத்தில் தனக்குள் புலம்பியபடியே தூங்கிப் போனாள் கிருஷ்ணதுளசி.

மறுநாள் காலை அஸ்வத் கீழே இறங்கி வந்த போது சுஜாதா இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அவனை முறைத்தபடி நின்றிருந்தார்.

“அன்றைக்கு ஏதோ பார்ட்டி அது இதுன்னு தண்ணியடித்ததை சமாளித்தாய், இன்று சிகரெட் பிடித்தால்தான் உனக்கு மூளையே வேலை செய்யுமா?” கண்களை உருட்டி அதட்டினார்.

 அவருக்கு பின்னால்  தூசியே இல்லாத சோபா கவர் எடுத்து உதறி விரித்துக்கொண்டிருந்தாள் கிருஷ்ணதுளசி.

போட்டுக் கொடுத்துட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நிற்பதைப்பார் அவளை முறைப்படி “என்ன டார்லிங் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்?” கொஞ்சலாய் கேட்டுக்கொண்டு சுஜாதாவின் இடுப்பை அணைக்க முயல, பட்டென்று அவனை தள்ளினார். “தள்ளி நில்லுடா! உன்கிட்ட நிறைய பேசணும்”

“ஆஹா சனியன் வண்டியில ஏறிடுச்சு, இனிமே பொட்டு வச்சு பூ வைக்காம விடாதே”, வடிவேலு பாணியில் அவன் பேச 

கிருஷ்ணதுளசி திகைப்புடன் சுஜாதாவை பார்த்தாள் அவள் நினைத்தாற் போன்றே அவர் முகம் மலர்ந்து இருந்தது.

 சுஜாதாவிற்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் வடிவேலு. ஆக இவனுக்கு ஆன்ட்டியை பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது. அவரை சமாதானப்படுத்த எப்படியெல்லாம் யோசிக்கிறான்!




“நீயே என்னை தள்ளி போகச் சொன்னால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள் சுஜா டார்லிங்? நான் எங்கே போவேன்? தஞ்சம் என்று உன்னை தேடி வந்தவறை தள்ளி விட்டு விடாதே டார்லிங்” நடிகர் திலகத்தை காப்பியடித்து அஸ்வத் வசனம் பேச சுஜாதா பட்டென்று சிரித்து விட்டார்.

” போக்கிரிப்பயல்” செல்லமாக அவன் தலையில் கொட்டினார்.

“கிருஷ்ணாவிடம் போய் ஏன்டா தீப்பெட்டி கேட்டாய்?” 

“இதென்ன கேள்வி டார்லிங்? எனக்கு தேவை இருந்தது. இந்தாடா என்று பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டுவாள்னு நினைத்தேன், அவள் என்னவென்றால் என்னை குற்றவாளி கூண்டில் ஏற்றி அரை மணி நேரமாக குறுக்கு விசாரணை செய்கிறாள்”

” என்னது பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுப்பேனா? எவ்வளவு தைரியம் இப்படி நினைக்க…?

“ஐயோ தீப்பெட்டி மட்டும்தானே கேட்டேன் கிருஷ்ணா? நீ வைத்திருந்த பீரையும் சேர்த்து கேட்டது போல் அல்லவா கோபப்படுகிறாய்?” பயந்தாற் போல் கைகளை உயர்த்தினான் அஸ்வத்.

” ஆன்ட்டி உங்க ரிலேஷனை ஒழுங்காக பேச சொல்லுங்கள். யாரிடம் என்ன பேசுகிறாரென்று தெரியாமல் உளறுகிறார்”

“ஆமாம் அச்சு நீ கிருஷ்ணாவை பற்றி அப்படியெல்லாம் நினைக்காதே! அவள் இந்த மாதிரி எந்த பழக்கமும் இல்லாத சுத்தமான பெண்” சுஜாதா நற்சான்றிதழ் வழங்க “அப்படியா?” என்று தாடையை தேய்த்தபடி அவளை விழிகளால் மேலும் கீழும் அளந்தான்.

“நம்ப முடியவில்லையே, இந்த காலத்தில் சிகரெட் பிடிக்காத பீர் அடிக்காத பெண்கள் இந்த சிட்டியில் எங்கே இருக்கிறார்கள்?”

” நான் அப்படிப்பட்ட பெண்ணில்லை. ஆன்ட்டி இனிமேல் இந்த கண்ணோட்டத்தோடு என்னுடன் பழக வேண்டாம் என்று சொல்லி வையுங்கள் “

“அதை நீ நேரடியாக என்னிடமே சொல்லலாமே கிருஷ்ணா” சொன்னபடி புன்னகையோடு அவளுக்கு எதிரே வந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு அவளை குறுகுறுவென பார்த்தான்.

 இது… இந்த பார்வை… அந்த படத்தின் ஹீரோ செய்தது.அஸ்வத்தின் ஒவ்வொரு செயலும் கிருஷ்ணதுளசியினுள் எரிந்து கொண்டிருந்த கோபத்தை விசிறி விட்டது.

” எந்நேரமும் நிழல் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை”

“புரியவில்லை, விளக்கம் தேவை” என்றான் அஸ்வத் அமர்த்தலாக.




What’s your Reaction?
+1
36
+1
21
+1
1
+1
5
+1
1
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!