Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-15 (நிறைவு)

15

“வணக்கம் சார். நான் நிரஞ்சன். உங்கள் மகள் கிருஷ்ணதுளசியோட கம்பெனி எம்.டி. அவங்களைப் பார்த்து வாழ்த்து சொல்ல வேண்டும். எங்கே இருக்கிறார்கள்?”

மீசையை முறுக்கியபடி ஏற இறங்க நிரஞ்சனைப் பார்த்த மாடசாமி “அதோ அந்த கோவிலுக்கு பின்னாடி சின்ன மண்டபம் இருக்கு. அங்க இருக்கிறா. போய் பார்த்து பேசிட்டு சட்டுனு வாங்க. கல்யாணம் முடிகிற வரைக்கும் இருந்து சாப்புட்டுத்தான் போகணும்”நிரஞ்சன் மண்டபத்தை நோக்கி நடந்தான்.

” என்னடி ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறாய்? அஸ்வத்தாமனை நீ காதலிக்கிறாயா?”

” நான் இல்லை. அவர் தான் என்னை காதலிக்கிறார்”

 நிரஞ்சன் இந்த பேச்சில் திக்கித்து வெளியே நின்றான்.

 “அவரா? அவரை நீ எப்போது பார்த்தாய்? எப்படி உன்னை அவர் பார்த்தார்? எப்படி காதலித்தார்?”

பிரியாவும் ரஞ்சனியும் மாறி மாறி கேள்விகளால் துளைத்தனர்.

“நான்கு மாதங்களாக சுஜாதா ஆன்ட்டியின் வீட்டில் நான் தங்கியிருக்கும் அறைக்கு 

எதிரேதான் அவரும் தங்கி இருக்கிறார்”

 “அடிப்பாவி எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னாயா?அவரிடம் ஒரு ஆட்டோகிராபாவது வாங்கியிருப்போமே! ஏன்டி உண்மையிலேயே அவர் உன்னை காதலிக்கிறாரா?”




” அப்படித்தான் நினைக்கிறேன். இதோ என் கல்யாண விஷயத்தை கூட அவருக்கு தெரியப்படுத்தி 

விட்டுத்தான் வந்தேன். அநேகமாக இந்நேரத்திற்கு அவர் இங்கே செவல்பட்டிக்குள்தான் இருக்க வேண்டும்”

” ஏய் எனக்கு புரியவில்லை. அவர்தான் உன்னை காதலிக்கிறார்… உனக்கு உன் முறை மாமாவோடு திருமணம் நடக்கப்போகிறது. உனக்கு முன்பே உன் மாமாவை பிடிக்காது… இதில் எங்கேயோ எதுவோ மிஸ்ஸாகிறதே” பிரியா மண்டையை சொறிந்த போது…

” இந்த துளசியும் அந்த அஸ்வத்தாமனை காதலிப்பதாக நினைத்துப் பாருங்கள். எல்லாம் சரியாக வரும்” என்றபடி உள்ளே வந்தான் நிரஞ்சன்.

 அடித்து பிடித்த எழுந்தனர் இரு பெண்களும். “சார்  நீங்க எப்படி …?”

“நானும் கல்யாணத்திற்குதான்மா வந்தேன்”

” உங்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தாளா? என்னடியிது உனக்கு பிடிக்காத திருமணத்திற்கு எல்லோருக்கும் அழைப்பு கொடுப்பாயா?”

 “இவர் இல்லாமல் என் கல்யாணம் எப்படியடி நடக்கும்?”

 “இவர் எதற்கு முக்கியம்?”

” ஏனென்றால் என்னுடைய அண்ணன்தான் கல்யாண மாப்பிள்ளை.இந்த முறைமாமன் திருமணத்தை நிறுத்த போவது நான்தான். பிறகு நான் முக்கியம் இல்லையா?”நிரஞ்சன் சொல்ல…

” காட் இட்” கத்தினாள் ரஞ்சனி. “நம்ம எம்.டி சாரோட அண்ணன் அஸ்வத்தாமன். அஸ்வத்தாமனும் கிருஷ்ணதுளசியும் லவ் பண்ணுகிறார்கள்.லவ்வுக்கு நம்ம சார் ஹெல்ப் பண்ணுகிறார். கரெக்டா சார்?”

” அடடா அறிவாளிம்மா நீ…” நிரஞ்சன் சலிப்பாய் பேச, “என்ன சலிப்பு சார்? இப்போது துளசி கல்யாணத்தை எப்படி முடிக்க போகிறீர்கள்?” அதட்டலாய் கேட்டாள் பிரியா.

“அதை ஏன்டி இவரிடம் கேட்கிறாய்? இவர் பாவம் அப்பாவி. பிளான் எல்லாம் டைரக்டர் சார் தான்” கண்கள் சிமிட்டினாள் 

கிருஷ்ணதுளசி.

——–

“ஏங்க கோவில்ல ஏதோ கல்யாணம் போல,வாங்களேன் நாமளும் நாலு அட்சதையை மணமக்கள் தலையில் தூவி விட்டு வருவோம். நம்முடைய பிள்ளைகளின் கல்யாணமும் நன்றாக நடக்க வேண்டுமல்லவா?” காஞ்சனா சொல்ல நல்லதம்பியும் தலையசைத்து உடன் நடந்தார்.

————

“என்ன பெரிய திட்டம்? அப்பா அம்மா இல்லாமல் ஒரு கல்யாணமா ?”நிரஞ்சன் முகத்தை சுளித்தான்.

” அதானே துளசி நீ கூட அடிக்கடி சொல்வாய்தானே? சொந்த பந்தங்கள் எல்லோர் முன்னிலையில்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று…” பிரியா நினைவுபடுத்த,கிருஷ்ணதுளசியின் முகம் வாடியது.

” ஆமாம் அதுதான் என் ஆசை…” குறைந்த குரலில் சொன்னவளின் விழிகள் அறைக்கு வெளிப்பக்கம் பார்த்ததும் வியப்பில் விரிந்தது. “இதோ என் ஆசைதான் நிறைவேற போகிறதே” உற்சாகமாக கத்தினாள்.

“உங்கள் அம்மாவும் அப்பாவும், அதோ பாருங்கள் கல்யாணத்திற்கு வந்து விட்டார்கள்”

 நிரஞ்சன் திரும்பிப் பார்த்து அதிர்ந்தான்.”அய்யய்யோ இந்த அஸ்வத் என்ன பிளான்தான் போடுறான் தெரியலையே” என்றபடி கிருஷ்ணதுளசியை பார்க்க அவள் தோள்களை குலுக்கினாள்.




” எனக்கும் தெரியாது, வெயிட் பண்ணி பார்க்கத்தான் வேண்டும்” 

அப்போது “அம்மா, அப்பா,  மாமா” என்று கத்தியபடி ஒருவன் மண்டபத்திற்குள் ஓடி வந்தான்.

” ஏய் ஏன்டா கத்துற?உன் அண்ணனை எங்கேடா?” நவநீதம் கேட்க,”அண்ணன் ஓடிப்போயிடுச்சு” என்றான் அவன்.

” என்னடா உளர்ற?”

” அண்ணனோட போன உங்ககிட்ட காட்ட சொல்லுச்சு”

 மாடசாமி வேகமாக வந்து போனை பிடுங்கி பார்த்தார். அதில் ஒரு வீடியோ ஓடியது.வேலன் தென்னந்தோப்பு பின்னணியில் நின்றிருந்தான். கை கூப்பினான். “சொந்தக்காரங்க எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. ஏன்னா இதைவிட  மிக சிறப்பான வாழ்க்க எனக்கு கிடச்சிருக்கு. நான் கனவிலும் நினைச்சு பார்த்திராத ஒரு பொண்ணு  என்ன காதலிக்கிறா, நான் அவளோட போறேன். இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க. என்னை யாரும் தேட வேண்டாம்”

மாடசாமி போனை தூக்கி எறிய அது சுக்கல் சுக்கலாக சிதறியது.

” எனக்கு ஒன்றும் தெரியாதுண்ணா நவநீதம்  பதற அந்த இடமே கலவர பூமியானது.

“கொஞ்சம் எல்லோரும் அமைதியாக இருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள்” கையில் மைக்கை வைத்துக் கொண்டு கத்தினான் நிரஞ்சன்.

” நான் கிருஷ்ணதுளசியின் கம்பெனி முதலாளி. துளசி மிகவும் நல்ல பெண். அவளுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாது. என்னுடைய அண்ணனுக்கு அவர்களை திருமணம் முடித்து வைக்க கேட்டுக் கொள்கிறேன்”

அவ்வளவு நேரமாக ஒரு மூலையில் அமர்ந்து நடந்த கலாட்டாக்களை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நல்லதம்பி மேடையில் நிரஞ்சனை பார்க்கவும் “என்ன?” என்று வீறு கொண்டு எழுந்து மேடைக்கு வந்தார்.

 அவரின் கைப்பற்றி அழுத்தியவன் “அப்பா, அண்ணன் சித்தி கையெழுத்து இல்லாமல் உங்களால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாதுதானே? பேசாமல் இருங்கள். நமக்கு காரியம் முக்கியம். வீரியம் அல்ல”

” அதெப்படிடா நம் கம்பெனியில் வேலை பார்ப்பவளுடன் என் மகனுக்கு திருமணமா?”எகிறினார் நல்லதம்பி.

“பெரிய மனிதனாக இல்லாமல் சின்னத்தனமாக கிருஷ்ணதுளசியை பற்றி அவள் அப்பா அம்மாவிடம் தவறாகச் சொல்லி அவள் திடீர் திருமணத்தை  ஏற்பாடு செய்தவர் தானே நீங்கள்? இப்போது என்ன நடந்தாலும் பொறுத்துதான் போக வேண்டும்.ஒழுங்காக இருந்தால் மகனின் திருமணத்தை பார்க்கலாம். இல்லையென்றால் கையை காலை கட்டி ரோட்டில் உருட்டி விடுவோம்” சொன்னது சுஜாதா.

 நல்ல தம்பி பயத்துடன் அவளை பார்த்தார். “என்ன அத்தான் பார்க்கிறீர்கள்? இவ்வளவு நாட்களாக என்னுடைய பங்கு சொத்துக்களையும் சேர்த்து அனுபவித்து வந்தீர்கள் தானே? அன்று நானும் என் கணவரும் பிள்ளைகளும் ஒதுங்கி விட்டோம். இப்போது என் அச்சுவின் வாழ்க்கையிலேயே விளையாடுகிறீர்கள். இதனை நான் அனுமதிக்க மாட்டேன். அச்சுவிற்கு கிருஷ்ணாதான்.ஒழுங்காக இந்த திருமணத்தை முடித்து வையுங்கள்” நல்லதம்பி தலை குனிந்து அமர்ந்து விட்டார்.

ஜீபூம்பா பூதம் போல் திடீரென்று மேடையில் தோன்றி விட்டான் அஸ்வத்தாமன். மணமகள் அறையிலிருந்து குடுகுடுவென்று ஓடி வந்து மணமேடையில் அமர்ந்து கொண்டாள் கிருஷ்ணதுளசி.




அருகில் அமர்ந்தவனை திரும்பிப் பார்க்க அஸ்வத்தாமன் அவள் ஆசைப்பட்டது போல், மீசையையும் தாடியையும் தலைமுடியையும்  அளவாக ட்ரிம் செய்து பட்டு வேட்டி சட்டையில் அழகாக இருந்தான். கிருஷ்ணதுளசியை பார்த்ததும் வசீகரமாக கண் சிமிட்டினான்

பாவி! இப்படி கண்சிமிட்டியே என்னை கவுத்துட்டான், நினைத்தபடி தலை குனிந்து கொண்டாள் கிருஷ்ணதுளசி.

மாடசாமி திருமணத்திற்கு சம்மதிக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருந்த போதே அஸ்வத்தாமன் கிருஷ்ணதுளசியின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்.

————

மலர் தூவப்பட்ட படுக்கையில் அஸ்வத்தாமன் காத்திருக்க கிருஷ்ணதுளசி வெளியே அனைவருடனும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

“காதல்னாலே ஆகாது, பிடிக்காதுன்னு என்னமா சீன் போட்ட?அந்த காதல் படத்தையே எப்படி ஓட்டுன? இப்போ அந்த டைரக்டரையே காதல் பண்ணி கல்யாணம் பண்ணிட்டியேடி”

“காதல் பிடிக்காதுன்னு நான் எப்போடி சொன்னேன். நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நான் என்ன செய்ய முடியும்? நீங்க ஆச்சரியப்பட வேண்டியது என்னை பார்த்து இல்ல, இவ்வளவு பிளான் போட்டாரே அந்த சகுனியை பார்த்து…”

“அவர்தான் காதல் சகுனியாச்சே! பிளான் போட மாட்டாரா என்ன?”

“காதலிலும் சகுனி வேலை முக்கியம்னு இப்ப புரியுதா?” சுஜாதா கேட்க கிருஷ்ணதுளசி ஆமோதித்து தலையசைத்தாள்.

“என் விஷயம் வீட்ல எப்ப பேச போறீங்க அண்ணி?” நிரஞ்சன் பவ்யமாக கேட்க “இரண்டு வருடம் போகட்டும்” அலட்சியமாக கையை அசைத்துவிட்டு எழுந்தாள். 

———-

அறைக்குள் அஸ்வத் போனில் பேசிக் கொண்டிருந்தான். “சரி சரி உன் வேலை முடிந்தது. அவனை வழியில் எங்காவது கழட்டி விட்டு விட்டு உன் வீடு போய் சேர், உனக்கு பணம் அக்கவுண்டில் வந்துவிடும்”

“யாரிடம் பேசுகிறீர்கள்?”

“மோனிஷா… என் தேவதை” கண்சிமிட்டினான்.

“உங்கள் பட ஹீரோயின் தானே? அவளைப் பற்றி இப்போது என்ன பேச்சு?” கிருஷ்ணதுளசி முறைக்க,

” ஏய் கிருஷ்ணா அவள் இல்லாமல் நம் திருமணமே நடந்திருக்காது. அந்த வேலனை திசை திருப்பி கூட்டிப் போனதே அவள்தான்”

“அவளா? ஆனால் அவள் ஏன் இதை செய்ய வேண்டும்?”

“ஏனென்றால் அவள் ஹீரோயின். நான் டைரக்டர்.என் டைரக்சன்படி நடந்தால் அவளுக்கு பணம். அவ்வளவுதான்”

“அவ்வளவுதானே….வேறு ஒன்றும் இல்லையே?”

“உன்னையெல்லாம் கல்யாணம் செய்துகொண்டு நான் வேறு எதற்காவது ஆசைப்பட முடியுமா? அவ்வளவுதான் தாயே!பார் கிருஷ்ணா நான் நல்ல மூடில் இருக்கிறேன்.மூடை கெடுக்காதே, இங்கே வா” அவள் கைப்பற்றி அருகே இழுத்துக் கொண்டான்.

அஸ்வத்தாமனின் கன்னங்கள் துடித்தன. இதழ்கள் குவிந்தன. கண்களில் காதல் வழிந்தது.குவிந்த இதழ்கள் கிருஷ்ணதுளசியின் முகத்தை நெருங்கியதும் மிக லேசாக விரிந்து கொள்ள, அவள் முகத்தில் தயக்கமும்,தடுமாற்றமும் அவற்றை மீறிய ஆர்வமும் தெரிந்தது. இரு உதடுகளும் ஒன்றை ஒன்று நெருங்கி கவ்விக் கொண்டன. எலியை கவ்வும் பூனையின் வேகத்துடன் இருந்தது அந்த இதழணைவு.

கிருஷ்ணதுளசிக்கு இப்போது இந்த முத்தத்தை… காதலை…காதல் சகுனியை மிகவும் பிடித்துப் போனது.

-நிறைவு-

        




                                                                              

What’s your Reaction?
+1
43
+1
15
+1
2
+1
2
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!