காதல் சகுனி

காதல் சகுனி-4

4

“ஆபீஸ்ல ஒர்க் பண்றது போதாதுன்னு வீட்லயும் ஒர்க் கொடுத்து சாகடிக்கிறார்கள்” பிரியாவும் ரஞ்சனியும் புலம்ப கிருஷ்ணதுளசிக்கும் அதே எண்ணம்தான். 

முன்பு ஒர்க் ப்ரம் ஹோம் என்ற பெயரில் 24 மணி நேரமும் வேலை வாங்கிய கம்பெனிகள் இப்போது அதே பழக்கத்திற்கு அலுவலக வேலை போக வீட்டிலும் வேலை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். 

இதனை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர் ஊழியர்கள். 

“இரவு பதினோரு மணி வரை வேலை செய்துவிட்டு சாப்பிடக் கூட தோன்றாமல் அப்படியே தூங்கி விட்டேன்” ரஞ்சனி சொல்ல பிரியா “நானும்,லேப்டாப் ஸ்கிரீனை பார்த்து பார்த்து பசியே இல்லை” என்றாள்.

 கிருஷ்ணதுளசிக்கு முதல் நாள் இரவு தான் உண்ட உணவு ருசி நினைவு வந்தது ” துளசி நேற்று நீ சாப்பிட்டாயா?”  பிரியா அவள் தோளில் தட்ட,

” ஆங்… ஏன்டி சமைக்கிற ஆண்கள் எல்லாம் நல்லவர்களா?” என்றாள். தோழிகள் அவளை வினோதமாக பார்த்தனர்.

 ” என்னடி சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாய்?” 

“அதில்லடி, இப்படி நாம் வேலை செய்துவிட்டு டயர்டாக இருக்கும்போது யாராவது நமக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தேன்”

“ஓ உன்னுடைய லவ்வர் அப்படி சமைத்துக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிக் கொண்டாயா?”

“யாரடி லவ்வர்? அப்படியெல்லாம் எனக்கு கிடையாது” கிருஷ்ணதுளசிக்கு ஏனோ படபடப்பாக வந்தது.

“சரிடி லவ்வர் இல்லை, கணவன்”

“இல்லை… இல்லை கணவரெல்லாம் இல்லை” பதட்டமாக மறுத்தாள்.

“ஐயோ கடவுளே! இவளுக்கு என்ன ஆயிற்று?” பிரியா நெற்றியை பிடிக்க ரஞ்சனி “அம்மா துளசி தாயே! உன்னை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்.படத்தில் கூட காதலர்கள் லிப் கிஸ் கொடுப்பதை ஒத்துக் கொள்ள முடியாதவள் நீ. நீ யாரையாவது காதலிப்பாய் என்று நாங்கள் நினைக்கவே மாட்டோம்”

“அது தானடி நான் கணவன் என்றேன். அதற்கும் குதிக்கிறாள்”

“எதையாவது உளறாதீர்கள். எனக்கு யாரும் காதலனோ… கணவனோ… கிடையாது”

“ஓ துளசி மேடத்திற்கு அவ்வையார் ஆகும்  எண்ணமா?”

“ஏய் கல்யாணம் வேண்டாமென்றா சொன்னேன்?” இருவர் தலையிலும் தலா ஒரு கொட்டு வைத்தாள்.

“இவ்வளவு நேரமாக நீ பிதற்றிக் கொண்டிருந்ததற்கு நாங்கள் வேறு என்ன அர்த்தம் எடுத்துக் கொள்ளட்டும்?”

“இதோ பாருங்கடி நான் சொல்ல வருவதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். காதலுக்கு நான் எதிரி இல்லை. கல்யாணத்திற்கு விரோதி இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது என்றுதான் சொல்கிறேன். கண்ணியமாய் காதலித்து சுற்றம் சூழ நிம்மதியாய் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

“அடப் போடி மிளகுத்தூள் தூவாத ஆப்பாயில் மாதிரி சப்பென்று இருக்கிறது உன்னோட காதல்” ரஞ்சனி சொல்ல மற்றவர்கள் இருவருக்குமே சிரிப்பு வந்தது.

சிரித்துக் கொண்டிருந்தவர்களை முறைத்தபடி கடந்து போனான் நிரஞ்சன்.




“அட பாருடா நைட் முழுவதும் வேலை வாங்கிவிட்டு இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருந்தால் முறைப்பதை பார். என்ன விடுங்கடி இன்னைக்கு அந்த ஹெச் பிக்கு இருக்கு” இறுக்கி பிடித்தவர்களை உதறுவது போல் பாவனை செய்த ரஞ்சனி, தோழிகள் இருவரும் அவளையே பார்த்தபடி இருக்க…

” ஓ என்னை பிடித்து நிறுத்தலையா நீங்க ?சரி விடு வேலையை பார்க்கலாம். காலையிலேயே அந்த பிரஷர் காரனோடு நமக்கு என்ன வம்பு!” ஒழுங்காய் வீட்டுப்பாடம் செய்யும் பள்ளி குழந்தையாய் மாறி கீபோர்டை தட்ட துவங்கினாள்.

மற்ற இருவரும் வேலைகளுக்குள் நுழைய அலுவலகத்தில் கீபோர்ட் தட்டும் ஓசை தவிர வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு பிறகு லஞ்ச் டைம் தான் அனைவருமே ஸ்கிரீனை விட்டு பார்வையை நகரத்தினர் .

கும் என்ற வாசத்துடன் தட்டில் விழுந்த பிரியாணியை வெறுப்பாய் பார்த்தாள் பிரியா. “என்னடி சாப்பாடு இது? எப்போதும் இதையே எப்படி தின்பது?”

” ஏன் மூன்று மாதங்களுக்கு முன்னால் இந்த ஆபீஸில் சேர்ந்த புதிதில் பிரியாணி என்று அள்ளி அள்ளி விழுங்கினாயே! மறந்து போனாயா?”

” பிரியாணி என்பது எல்லோருக்கும் விருப்பமான உணவுதான்டி, அதற்காக அதையே தினமும் போட்டால்…”

 “ம்.. அமிர்தம் இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும்தான். ஆனால் தினமும் சாப்பிட கொடுத்தால் அதுவும் சலிக்கத்தானே செய்யும்?” என்ற கிருஷ்ணதுளசி தயிர் சாதத்தை தனது தட்டில் எடுத்துக் கொண்டிருந்தாள்.

” என்னமோடி மாடு மாதிரி இவர்களுக்கு வேலை செய்வதற்காக இதுபோல நல்ல நல்ல உணவுகளை எல்லாம் நமக்கு இலவசம் என்று பழக்கப்படுத்தி விடுகின்றனர். மூன்றே மாதத்தில் அந்த உணவுகளின் சுவை நமக்கு வெறுத்து விடுகிறது. அதோடு இப்படி வகையாக சாப்பிட்டு உட்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலை பார்ப்பதில் உடம்பும் வைத்து விடுகிறது” பெருமூச்சுடன் குனிந்து சற்று உப்பலாக இருந்த தனது உடலை பார்த்துக் கொண்டாள் பிரியா.

“எனக்கும் ஐந்து மாதத்தில் நான்கு கிலோ கூடிவிட்டதடி. இதோ இவளை பார்த்தாயா, விபரமாக வெறும் தயிர் சாதத்துடன் முடித்து விடுகிறாள். நம்மை போல் அள்ளி அடைப்பதில்லை” ரஞ்சனி கொஞ்சம் பொறாமையுடன் கிருஷ்ணதுளசியை பார்த்தாள்.

“ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறோம். அதற்கு ஏற்ற சாப்பாடு தானே சாப்பிட வேண்டும். அதனால் தான் நான் எப்போதும் இப்படி சிம்பிளாகவே சாப்பிட்டுக் கொள்வேன்”

“ப்ச், வெளியே பார்க்க இந்த ஐடி கம்பெனிகள் எல்லாம் பகட்டாக தெரிகிறது.உள்ளே வந்த பிறகுதான் இதற்குள் இருக்கும் ஓட்டைகளை உணர முடிகிறது. வெளியே இரவா பகலா என்று கூட உணர முடியாத அளவில் இது என்னடி வேலை?”

ரஞ்சனி ரொம்பவே புலம்பினாள் என்றாலும் அவளுக்கு சலிப்பாகிப்போன பிரியாணியை தாண்டி சப்பென்ற தயிர் சாதத்திற்கு மாற அவளால் முடியவில்லை. அவள் தட்டில் பிரியாணியும் பாஸ்தாவும் தான் இருந்தது.

“எப்படித்தான் வாயை கட்டுறியோ” கிருஷ்ணதுளசியை பார்த்து பெருமூச்சு விட்டபடி பாஸ்தாவை வாய்க்குள் திணித்தாள்.

இங்கே இப்படி சிம்பிளாக சாப்பிட்டு விடுவதால் தான் இரவு வீட்டில் அப்படி பசித்து விடுகிறதோ, அதனால் தான் அந்த ரொட்டியையும் சிக்கனையும் அவ்வளவு சாப்பிட்டேனோ, கிருஷ்ணதுளசியின் யோசனை முதல் நாள் இரவு உணவு உண்ணலுக்கு போனது.

அப்படி அள்ளி அள்ளி சாப்பிட்டதால் தானே அவன் என்னிடம் காண்டக்ட் சர்டிபிகேட் கேட்டான், போடா நீயும் உன்னுடைய டிபனும் என்று தட்டை தள்ளியிருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பானே.

நினைவுகள் எங்கோ போக தயிர் சாதத்தின் மாதுளை முத்து அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது. செருமியபடி தண்ணீரை குடித்தாள். “என்ன ஒரு பார்வை தெரியுமா! ஹீரோயின் அவனைக் கடந்து போகும்போது நேருக்கு நேராக அவளைப் பார்த்து கண்களை சிமிட்டுவான் பார்! அந்த சீனுக்காகவே இன்னமும் இரண்டு தடவை படம் பார்க்கலாம்”

ரஞ்சனியும் பிரியாவும் பேசிய பேச்சு காதில் விழ அவர்களை முறைத்தாள். “ஏண்டி உங்க ரெண்டு பேருக்கும் எப்போதும் அந்த சினிமா ஞாபகம் தானா? அந்த ஹீரோவை இமிடேட் பண்ணி எத்தனை பேர் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறார்களோ எந்த அளவு இளைய சமூகத்தை அந்த படம் கெடுக்கிறது தெரியுமா?” என்றாள்.

“அந்த படத்தோட சீன்கள் தாண்டி இப்போ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்.ரீல்ஸ்,ஷார்ட்ஸ் எல்லாமே அந்த பட சீன்ஸ்தான். ம்…நீ அப்படி இமிடெட் பண்ணுகிற யாரை பார்த்தாய்?”

“அது…பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் ,அப்புறம் நம் ஹெச் பி கூட ஒரு ஜாடையில் அந்த ஹீரோவை கொண்டு வருவது போல் எனக்கு தோன்றுகிறது”

“அட அப்படியா, நம்ம ஹை பிரசர் அந்த படத்தை பார்த்திருக்குமா ?அதை பார்த்த பிறகும் இவ்வளவு பிரஷரை மூஞ்சியில் காட்டிக் கொண்டா இருக்கும்?”

“அதானே இது போன்ற படங்கள் எல்லாம் ஸ்ட்ரெஸ் பஸ்டர். அந்தப் படம் பார்த்து இரண்டு நாட்கள் வரை மைன்ட் ரொம்ப ரிலாக்ஸாக இருந்தது தெரியுமா?”




“சும்மா எதையாவது சொல்லாதீங்கடி. இதெல்லாம் உங்கள் மனதில் நீங்களே  உருவகித்துக் கொள்வதுதான்”

“ஏய் நீ படமே பார்க்காதவள். நீ பேசாதே”

பேசியபடியே சாப்பிட்டு முடித்து வேலைக்கு திரும்பினர்.

அன்று மாலை கிருஷ்ணதுளசி வீட்டிற்கு திரும்பி வந்த போது அவள் ரொம்பவே வெறுத்த அந்தப் படத்தின் பாடல் ஒன்று உச்ச ஸ்தானியில் வீட்டிற்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது..

டிவியில் ஏதாவது கேம் ஷோ அல்லது டாக் ஷோதான் ஆன்ட்டி பார்ப்பது. அதையும் மிகவும் கம்மியான சத்தத்தில்தானே வைப்பார்கள், ஆச்சரியப்பட்டபடி ஜன்னல் வழியே பார்க்க ,படத்தின் பாடலை டிவியில் ஓட விட்டுக்கொண்டு முன்னால் நின்று அந்த ஹீரோவை போலவே அபிநயத்து ஆடிக்கொண்டிருந்தான் அஸ்வத்.

 பொறுக்கிப் பயல் முணுமுணத்தாள் கிருஷ்ணதுளசி.




What’s your Reaction?
+1
37
+1
25
+1
1
+1
4
+1
1
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!