Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-6

6

“ஒரு மூன்றாம் தர விடலை போல் எந்நேரமும் சினிமா வசனம்! அத்தோடு அந்த கேவலமான படத்தின் ஹீரோவை வேறு காப்பியடித்தாகிறது. இவரை எல்லாம் ஒரு ஆள் கணக்கில் நான் எப்படி சேர்ப்பது ஆன்ட்டி?”

“அச்சு எப்போதும் அப்படித்தான்மா. சிறுவயதிலிருந்தே அவனுக்கு சினிமா என்றால் ரொம்பவும் பிடிக்கும்…” பேசிய சுஜாதாவை கை உயர்த்தி நிறுத்திய அஸ்வத் கிருஷ்ணதுளசியை கூர்ந்தான். “எந்த படத்தைப் பற்றி பேசுகிறாய்?”

“காதல் சகுனியாம், எவனாவது காதலையும் சகுனியையும் இணைத்து பெயர் வைப்பானா? யாரோ ஒரு அறிவு கெட்டவன் இந்த படத்தை எடுத்தான் என்றால் அதனை நிறைய புத்தி கெட்டதுகள் பார்த்து கொண்டாடிக் கொண்டிருக்கிறதுகள்.இப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்தாலே கடுப்பாக இருக்கிறது…”

கொதித்துப் போய் கோபத்தில் கத்திக் கொண்டிருந்த

கிருஷ்ணதுளசியின் தோளில் மென்மையாய் கை வைத்தார் சுஜாதா் “கிருஷ்ணா கொஞ்சம் நான் சொல்வதை கேளுமா”

” ஆன்ட்டி நீங்க சும்மா இருங்க, நீங்க அந்த படத்தை பார்க்கல, பார்த்திருந்தால் அதில் இருக்கிற அச்சு பிச்சுத்தனம் எல்லாம் தெரிந்திருக்கும்.பாருங்க ஆன்ட்டி ஆறு அல்லது ஏழு வயது பையன் ஒருவன், அவனை தங்கள் காதலுக்கு தூது போக ஹீரோவும் ஹீரோயினும் யூஸ் பண்ணுகிறார்களாம். எவ்வளவு மோசமான செயல். இதனை பெரிதாக அந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள். இதை எல்லாம் என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?”

 அஸ்வத் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு பார்வையை கிருஷ்ணதுளசியிடமிருந்து சுஜாதாவிற்கு திருப்பினான். சுஜாதா ஒரு வித அவஸ்தையுடன் தலையை சொறிந்து கொண்டார்.”அதாவது கிருஷ்ணா ஊர் உலகத்தில் நடக்காத எதையும் படமாக எடுப்பதில்லை தெரியுமா?”

கிருஷ்ணதுளசி சுஜாதா அந்த படத்திற்கு ஆதரவாக பேசுவதை இப்போதுதான் உணர்ந்தாள். ” ஆன்ட்டி நீங்க அந்த படத்தை சப்போர்ட் பண்ணுகிறீர்களா? படம் பார்த்து விட்டீர்களா?”

” இல்லைம்மா இனித்தான் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்”

” வேண்டாம் வேண்டாம் பார்க்காதீர்கள், நானே பார்க்க முடியாமல் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.இவ்வளவு மோசமாக படம் எடுத்த அந்த டைரக்டர் மட்டும் என் கையில் கிடைத்தால் சப் சப் என்று கன்னத்தில் நாலு அறையாவது அறைந்து விடுவேன்”

பேசிக் கொண்டிருந்த

கிருஷ்ணதுளசியின் எதிரே வந்து நின்றான் அஸ்வத். “அறைந்து விடு கிருஷ்ணா”

” என்ன?”

” உன் ஆசையை நிறைவேற்றிக் கொள் என்றேன்”

 கிருஷ்ணதுளசி குழப்பத்துடன் அவனைப் பார்க்க ஆமோதிப்பது போல் இரு விழிகளையும் ஒரு முறை அழுந்த மூடி திறந்தான். “நான்தான் கிருஷ்ணா அந்தப் படத்தின் டைரக்டர் அஸ்வத்தாமன். நீ இவ்வளவு ஆவேசமாக தண்டனை கொடுக்க துடித்துக் கொண்டிருக்கும் அந்த அதிர்ஷ்டசாலி நான்தான்.ம்… ஆரம்பி” வாகாக கன்னத்தை சாய்த்து காட்டினான்.




கிருஷ்ணதுளசி அதிர்ந்து நின்று விட்டாள். காதில் விழுந்த வார்த்தைகளை அவளால் நம்ப முடியவில்லை. லேசாக தலை சுற்றுவது போல் இருந்தது. பதட்டத்துடன் சுஜாதாவை திரும்பிப் பார்க்க அவர் தலை அசைத்து ஆமாம் என்றார்.

“இதை ஏன் ஆன்ட்டி என்னிடம் முன்பே சொல்லவில்லை? போங்க ஆன்ட்டி நீங்க என்னை ஏமாத்திட்டீங்க! ஐ ஹேட் யூ!” கம்மல் குரலில் குற்றம் சாட்டியவள் வேகமாக அங்கிருந்து மாடிக்கு ஓடினாள்.கிருஷ்ணா  என்ற அஸ்வத்தின் அழைப்பை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

————

கிருஷ்ணதுளசிக்கு விழிப்பு தட்டி கண் திறந்து பார்த்தபோது அறை இருளில் இருந்தது. போனை எடுத்து மணி பார்க்க இரவு ஒரு மணி காட்டியது. கிருஷ்ணதுளசியால் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை. காரணமே தெரியாமல் லேசாக விசும்பிக் கொண்டு கூட படுக்கையில் கிடந்தவள் எப்படியோ தூங்கிப் போய் இருக்கிறாள்.

 ஆனாலும் முழுதாக தூங்காத மனம் பாதி ராத்திரியில் எழுப்பி விட்டிருக்கிறது, அறைக்கு வெளியே மிக லேசாக ஏதோ குரல் கேட்க, கதவை இம்மலாக திறந்து எதிரே பார்க்க  அறைக்குள் அஸ்வத் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். ஸ்டோரி டிஸ்கஷன் போலும்,

கிருஷ்ணதுளசி கதவை தாழிட்டு கொண்டாள். அஸ்வத்… அஸ்வத்தாமன். அந்த படத்தின் டைரக்டர் பெயர். ஆக மிகவும் மோசமான படம் என்று அவள் கணித்த அந்தப் படத்தின் உருவாக்கம் இவன்தானா? ம்… மிக மோசமான ஒருவனிடம் இருந்து இவ்வளவு மோசமான படம்தானே வந்திருக்க முடியும்? இதில் நான் இந்த அளவு அதிர்ச்சி அடைவதற்கு காரணம் இல்லையே!

 கிருஷ்ணதுளசி பெருமூச்செறிந்தாள். என்னுடைய கோபமோ, ஏமாற்றமோ இதோ எதிர் அறையில் உட்கார்ந்திருக்கும் இவன் மீதல்ல, மிகவும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் ஆன்ட்டி என்னை ஏமாற்றியதால் வந்த விரக்தி இது. தனக்குள் தானே கூறிக்கொண்டாள். யார் எப்படி போனால் உனக்கென்ன கிருஷ்ணா! நீ உன் வேலையை பார்த்துக் கொண்டு சிவனே என்று இரு, அவள் மனசாட்சி சொல்ல கண்களை அழுந்த மூடிக் கொண்டு உறங்க முனைந்தாள்.

மறுநாள் காலை வேகமாக கிளம்பி  சுஜாதாவை சந்திக்காமலேயே வீட்டை விட்டு வெளியேறினாள். அவளது ஸ்கூட்டி சத்தம் கேட்கவும் வேகமாக வாசலுக்கு ஓடி வந்தவரை கண்டு கொள்ளாமல் கிளம்பி போனாள். முகத்தில் கவலையுடன் அவளைப் பார்த்து நின்ற சுஜாதாவின் தோளை ஆறுதலாக தட்டினான் அஸ்வத்.

” விடு டார்லிங் இரண்டு நாட்களில் சரியாகி விடுவாள்”

” இல்லை அச்சு, கிருஷ்ணாவிடம் நான் உன்னை பற்றி சொல்லியிருக்க வேண்டும். அவள் கோபம் நியாயம்தான். தப்பு செய்துவிட்டேன்…”

” சரி சரி பாதரிடம் கூட்டிப் போகிறேன். பாவமன்னிப்பு கேட்டு விடலாம். இதற்கெல்லாம் மூக்கை சிந்தி போடாதே டார்லிங்” அஸ்வத் கிண்டலாக பேசி சுஜாதாவை சமாதானப்படுத்த முயன்றான்.

அலுவலகத்தில் வந்து அமர்ந்ததுமே அஸ்வத்தாமன் என்ற பெயர் காதில் விழ கோபத்துடன் திரும்பிப் பார்த்தாள்.”ஏன்டி சினிமாவை தவிர வேறு எதுவுமே பேச தெரியாதா உங்களுக்கு?”

“என்னடி… ஸ்ட்ரெஸான வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு சின்ன ரிலாக்சேஷன் இது போன்ற பொழுதுபோக்குகள்தானே!”

 தோழிகள் சொன்னதில் உள்ள நியாயத்தில் மௌனமாக தனது சிஸ்டத்திற்கு திரும்பினாள்.

” நேற்று எங்கள் ஏரியா சினிமா தியேட்டரில் காதல் சகுனி படம் எடுத்திருந்தாங்க. திரும்பவும் ரெண்டு பேரும் போயிட்டோமே”

 ரஞ்சனி சொல்ல

கிருஷ்ணதுளசிக்கு மடேர் என்று தனது நெற்றியை முன்னிருந்த சிஸ்டத்தின் மேல் மோதிக் கொள்ளும் வேகம் வந்தது.ஆனால் உடைந்து போக போகும் சிஸ்டத்திற்கு அலுவலுகத்திற்கு  பதில் அவள் அல்லவா சொல்ல வேண்டும்?

பற்களை கடித்து தன்னை அடக்கிக் கொண்டாள் ‘எத்தனை தடவை தாண்டி அதை பார்ப்பீர்கள்?”

“எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். அதை விடு, விஷயம் அது இல்லை. அந்த தியேட்டரில் வேறு ஒன்று நடந்தது. நம்ம ஹெச்.பி தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்தார்”

“சரிதான் உங்களைப் போல அவருக்கும் அந்த படத்து மேல் பைத்தியம் போல, அதனால் வந்திருப்பார்” என்றவள் மனதிற்குள் அந்த பட ஹீரோவின் மேசரிசத்தை நிரஞ்சனின் உடல் மொழியிலும் பார்த்த நினைவு வந்தது.அப்படியா அந்த படம் இவனை பாதித்தது?




“ஏய் அவர் மட்டும் தனியாக வரவில்லைடி.ஒரு பெண்ணை கூட அழைத்துக் கொண்டு வந்திருந்தார்”

அட! இது கிருஷ்ணதுளசிக்குமே ஆச்சரியமான தகவல்தான்.

“அவருடைய பிரண்டாக இருக்கலாமேடி”

“ம்… எந்த பிரெண்ட்ஸ் ஐஸ்கிரீமையும் பாப்கார்னையும் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொள்கிறார்களாம்.  இது லவ் மேட்டர்தான். நாங்கள் போட்டோவே எடுத்து வைத்திருக்கிறோம்”

 பிரியா தனது போனை எடுத்து காட்ட தியேட்டரின் அரை இருளிலும் அது நிரஞ்சன் என்பது தெளிவாக தெரிந்தது.அருகாமையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்

“என்னடி இது? அடுத்தவர்களுடைய பர்சனல். இதை போட்டோ எடுக்கலாமா?”

” இருக்கட்டும்டி இந்த ஹெச்பியை என்றாவது கார்னர் பண்ண நமக்கு உதவும்”

” லவ்வோ பிரண்ட்ஷிப்போ அவங்க பர்சனல். இதில் நாம் எப்படி தலையிட முடியும்? ஒழுங்கா வேலையை பாருங்கள்”

மூவரும் வேலைக்குள் திரும்பியபோது “என்ன செய்கிறீர்கள்?” என்ற கர்ஜிப்போடு அவர்கள் எதிரே வந்து நின்றான் டீம் லீடர் நீலவண்ணன்.

” அலுவலக நேரத்தில் வேலையை பார்க்காமல் கேலியும் கிண்டலுமாக சிரித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எம்.டி உங்களை கடந்து போனதை கூட கவனிக்காமல் இருந்திருக்கிறீர்கள். அவர் என்னை கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். வேறு ஆளை மாற்றி விடவா என்கிறார். இது தேவையா எனக்கு?”அலுவலகத்தில் வேலை செய்யும் அத்தனை பேரும் திரும்பி பார்க்கும் அளவு கத்தினான் நீலவண்ணன்.

“சாரி சார்… சாரி சார்…” எழுந்து நின்று மூன்று பெண்களுமே மன்னிப்பு பலமுறை கேட்ட பிறகே அமைதியானான். “இனி மூச்சு விடுவதற்கு கூட அசைய கூடாது. ஒழுங்காக உட்கார்ந்து வேலையை பாருங்கள்” எச்சரித்து விட்டு போனான்.

” மூச்சு கூட இவங்ககிட்ட பர்மிஷன் கேட்டு விட வேண்டியிருக்கு பார்த்தாயா?”மூவரும் புலம்பியபடி கீபோர்டை தட்ட ஆரம்பித்தனர்.

அன்று முழுவதும் நீலவண்ணன் அவர்கள் இடத்திற்கு அடிக்கடி வந்து காய்ச்சி எடுக்க,நாளின் முடிவில் அவர்களுடைய வேலை ரிப்போர்ட்டை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்தான் நிரஞ்சன்.

” வருகிற கோபத்திற்கு உன்னுடைய யோக்கியதை எனக்கு தெரியும்டான்னு சொல்லிடவா?” ப்ரியா முணுமுணக்க அவள் கைப்பற்றி அழுத்தினாள் கிருஷ்ணதுளசி.

“வீட்டிற்கும் வேலைகள் கொடுக்காமல் ஆபீஸில் மட்டும் கொடுத்தீர்களானால், டயர்ட் ஆகாமல் எங்களால் வேலை செய்ய முடியும் சார்” தைரியமாக

கிருஷ்ணதுளசி பேச நிரஞ்சன் திகைத்தான்.

“ஏய் யாரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா? ஊர் நாட்டில் இருந்து வந்து திரு திருத்துக்கொண்டிருந்தாயே,

உன்னை இந்த அளவுக்கு டிரெய்னிங் கொடுத்து ஒரு பொசிசனில் உட்கார வைத்திருக்கும் நம் எம்.டியை பற்றி இப்படியா பேசுவாய்?” நீலவண்ணன் எகிறினான்.

கிருஷ்ணதுளசி கண்களை இறுக மூடினாள். இந்த நீலவண்ணனுக்கு இதே வேலை, அவள் கிராமத்தில் இருந்து வந்து இங்கே வேலை பார்ப்பதை அடிக்கடி குத்திக் காட்டுவான்.

“இவர்கள் மூவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நம் கம்பெனியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போது எப்படி இருந்தார்கள் என்று நினைவில் இருக்கிறதா ?” நிரஞ்சன் கேட்க அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

பெண்கள் மூவரும் இமை தாழ்த்திக் கொண்டனர்..




What’s your Reaction?
+1
32
+1
18
+1
1
+1
1
+1
3
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!