Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-14

14

இறுக்கமான முகத்துடன் அருகில் அமர்ந்து வந்த அஸ்வத்தை பயத்துடன் பார்த்தான் நிரஞ்சன்.  

“அஸ்வ.. அண்ணா…” இரண்டு மூன்று முறை அழைத்தும் அஸ்வத் திரும்பாமல் போக, இடது கையால் அவன் கைப்பற்றி அழைத்தான். “அண்ணா”

“என்னையா கூப்பிட்டாய்?” 

“ஆமாம். வந்து… இப்போது நாம் அங்கே போகத்தான் வேண்டுமா?”

“அதற்குத்தான் லொகேஷன் அனுப்பியிருக்கிறாள்…”

 நிரஞ்சனின் முகம் கலவரமானது. “எனக்கு திருமணம் நடக்கப்போகிறது. நீங்கள் அவசியம் வர வேண்டும் சார்” என்று அவனுக்கு லொகேஷன் அனுப்பி இருந்தாள் கிருஷ்ணதுளசி.

 போகலாம் வா என்று கையோடு இழுத்துக் கொண்டு வந்திருக்கிறான் அஸ்வத்.

“எம்.டி என்ற ஃபார்மாலிட்டிக்காக எனக்கு சொல்லி இருக்கிறாள் அண்ணா.உடனே எப்படி போய் நிற்பது?”

 “பார்மாலிட்டிக்கு சொல்பவள் லொகேஷனெல்லாம் அனுப்புவாளா?”

 நிரஞ்சனுக்கும் அந்த சந்தேகம் இருந்தது. அவன் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு ஸ்டாப்பின் திருமணத்திற்கு அவன் வந்து நிற்பான் என்று எப்படி எதிர்பார்க்கிறாள், என்றுதான் நினைத்தான். ஆனாலும் இதோ அடித்து பிடித்து அவள் ஊரை நோக்கி போய்க் கொண்டிருக்கிறான்.

“அண்ணா நீங்களும் துளசியும் லவ் பண்ணுகிறீர்களா?” திணறி கேட்டான்.

” ஏய் என்னடா அண்ணா அண்ணான்னு… யாரையோ கூப்பிடுவது போல் தெரிகிறது. எப்போதும் போல் அஸ்வத்னே கூப்பிடு”

” இல்லைண்ணா நீங்கள் 

பெரியவராம் மரியாதையாக அண்ணா என்றுதான் கூப்பிட வேண்டுமாம் துளசி சொல்லியிருக்கிறாள்”

 அஸ்வத்தின் முகத்தில் ஒரு முறுவல் மலர்ந்தது.       

“அட..டா உன்னையும் வைத்து செய்கிறாள் போலவே…” காரின் பின் சீட்டிலிருந்த சுஜாதா சிரித்தார். 

ம்க்கும்  சித்தி பெயரில் கம்பெனி. 

சி.இ.ஓ அஸ்வத்.உன்னை விட கிருஷ்ணா ரொம்ப நன்றாக ஒர்க் பண்ணுகிறாளே என்று இரண்டு பேரும் என்னை மறைமுகமாக மிரட்டும் போது, என் இடத்தை தக்க வைத்துக் கொள்ள அவளுக்கும் தலையாட்டத்தானே வேண்டியிருக்கிறது.அத்தோடு என் சிந்துஜா வேறு இருக்கிறாள்.இந்த துளசி உதவி செய்யாவிட்டால் என் காதலும் டமால் போலல்லவா தெரிகிறது…தனக்குள் பேசிக் கொண்டான் நிரஞ்சன். 

“அங்கே போனதும் எதற்கும் கிருஷ்ணா உன்னை காதலிக்கிறாளா என்று உறுதிப்படுத்திக் கொள் அச்சு” சுஜாதா சொல்ல நிரஞ்சனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

” அண்ணா… அஸ்வத்… அண்ணா துளசி உன்னை காதலிக்கவில்லையா?”

“ம்…எனக்கு சரியாக தெரியவில்லை” அஸ்வத் சொல்ல நிரஞ்சன் “ஐயோ” என்று கத்தினான்.

” அண்ணா துளசியின் ஊர் சரியான பட்டிக்காடு. அவள் சொந்தக்காரங்க எல்லாம் கடா மீசையும் அரிவாளுமாக திரிபவர்கள். உங்களை காதலிக்காத பெண்ணின் திருமணத்தை நிறுத்த வந்திருக்கிறோம் என்று தெரிந்தால் அங்கேயே நம்மை வெட்டி புதைத்து விடுவார்கள். எதுவானாலும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் அண்ணா.ப்ளீஸ்…”

“இந்த இடத்தில் தான் நீ எனக்கு ஹெல்ப் பண்ண போகிறாய் தம்பி, கிருஷ்ணாவின் காதலை தெரிந்து கொண்டு நீ தான் என்னிடம் வந்து சொல்ல வேண்டும்”

 நிரஞ்சனின் கண் முன் அரிவாளை சுழட்டியபடி ஒரு முரட்டு உருவம் நெருங்கியது. “நான் இல்லை அண்ணா, சித்தியை அனுப்புங்கள்”

“டேய் சித்தியையும் என்னையும் உள்ளேயே விட மாட்டார்கள்டா. அவளுடைய கம்பெனி பாஸ் என்ற முறையில் உன்னால் மட்டும்தான் உள்ளே போக முடியும்.நீதான் போகப் போகிறாய்”

பலிக்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக் குட்டி மனோபாவத்துடன் நடுங்கிய கரங்களுடன் கார் ஓட்டினான் நிரஞ்சன்.  

————–




அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே சுஜாதாவின் வீட்டின் முன் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய டிரைவர்,பக்கத்தில் அவர்களை விசாரித்தான். 

“அவர்கள் கிளம்பி அரை மணி நேரம் ஆயிற்றாம்” காருக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடம் தகவல் சொன்னான்.

 “டைரக்டர் சார் அரை மணி நேரத்தில் உங்களை நெருங்கி விடுவேன்” என்று விட்டு காரை விரட்ட டிரைவருக்கு உத்தரவிட்டாள். அவள் அஸ்வத்தாமனின் காதல் சகுனி திரைப்படத்தின் ஹீரோயின் மோனிஷா.

————

“என்ன துளசி இது அநியாயம்? அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று உன்னை இங்கே வரவழைத்து இப்படி திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்களே? இது எப்படி சாத்தியம்?”

கிருஷ்ணதுளசி கண்ணாடி முன் நின்று தனது காதோர கூந்தலை சரி செய்து கொண்டிருந்தாள். “எனக்குத்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பே என்னுடைய முறை மாப்பிள்ளையுடன் திருமணம் பேசி வைத்து விட்டார்களே, அதனால் இது உடனே சாத்தியமாயிற்று” என்றாள் நிதானமாக.

“என்ன உனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதா?”

“ஆமாம்! அந்த முறை மாமனுக்கு பயந்துதான் சென்னையில் வேலை தேடிக் கொண்டு நான் அங்கே ஓடி வந்தது. மூன்று வருடங்கள் வேலை, பிறகு திருமணம் என்ற கண்டிசனுடன்தான் என்னை வீட்டில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்”

“பிறகு இப்போது ஏன் திடீரென்று திருமணம் செய்கின்றனர்?”

” ஏனென்றால் என்னுடைய காதல் விவகாரம் இவர்களுக்கு தெரிந்து விட்டது. யாரோ ஒரு புண்ணியவான் போட்டுக் கொடுத்து விட்டார் அதனால் இந்த அதிரடி திருமணம்.

” என்ன நீ காதலித்தாயா?”  இருவரும் வாயை பிளந்தனர். 

“ஏன் நான் காதலிக்க கூடாதா?”

“யாரை?”

“ம்…உங்கள் ஃபேவரைட் டைரக்டர் காதல் சகுனி அஸ்வத்தாமனை” சொல்லிவிட்டு கிருஷ்ணதுளசி தோளில் துண்டை எடுத்து போட்டுக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.

“என்னடி இவள் உளறுகிறாள்?” தோழிகள் இருவரும் தலையை பிய்த்துக் கொண்டனர்.

————–

“ஏய் செண்பகம் உன் மகள் கூட யார் இருக்கிறார்கள்? கவனித்தாயா?” மாடசாமி மீசையை முறுக்கியபடி கேட்டார்..

” டவுன்ல இருந்து அவள் பிரெண்ட்ஸ் வந்து இருக்காங்கல்லங்க, அவங்க கூடத் தான் ரூமுக்குள்ள பேசிக்கிட்டு இருக்கிறா”

” என்ன செய்றா? யார் கூட பேசுறான்னு  அவள் மேலே முழு கவனம் வச்சுட்டே இரு, நீ ரொம்ப சொன்னன்னுதான் அவள் ஆபீஸில் வேலை செய்றவுகளுக்கு மட்டும் கல்யாண தகவல் கொடுக்க சம்மதிச்சேன். அங்கே அவ வீடெடுத்து தங்கி இருந்தாளே, அங்கருந்து யாரும் இங்கே வந்துடக் கூடாது. ஞாபகத்தில் வச்சுக்கோ…” அசரீரியாய் முழங்கிவிட்டு “இந்த வேலனை எங்கேடா?” கேட்டபடி நடந்தார் மாடசாமி.




“எனணண்ணா இன்னமும் பெயர் சொல்லி கூப்பிடுகிறீர்கள்? நேற்று வரை அவன் என் மகன், இன்றிலிருந்து உங்கள் மருமகன். மாப்பிள்ளையை மரியாதையாக கூப்பிட வேண்டுமில்லையா?” என்றபடி வந்தாள் நவநீதம் மாடசாமியின் தங்கை.

” சரி… சரி பொண்ணு கழுத்துல தாலி ஏறட்டும் மரியாதை தானா வரும். உன் மகன மாப்பிள்ளை பொறுப்போடு இன்னைக்காவது ஒரு இடத்தில் இருக்கச் சொல்லு”

“தென்னந்தோப்புல லோடு ஏறுதுணா, அத ஒரு பார்வ பாத்துட்டு வரேன்னுட்டு போனான். இப்ப வந்துடுவான்”

————–

குண்டும் குழியமாக தூக்கி தூக்கி போட்ட ரோடு நல்லதம்பியின் முகத்தை சுளிக்க வைத்தது. “எவ்வளவு மோசமான ரோடு, இதையெல்லாம் தாண்டி இப்போது கண்டிப்பாக உன் குலதெய்வம் கோவிலுக்கு போய்த்தான் ஆகனுமா?” காஞ்சனாவிடம் எரிச்சல் பட்டார்.

” நம்ம அஸ்வத்துக்காகத்தாங்க வேண்டுதல் வைத்திருக்கிறேன். இந்த வேண்டுதலை முடித்து விட்டால் நிச்சயம் அஸ்வத் நம்மிடம் திரும்ப வந்து விடுவான்”

“அஸ்வத் மட்டும் அல்ல, உன் தங்கை சுஜாதாவும் வரவேண்டும். அதற்கும் சேர்த்து வேண்டிக் கொள்”

 உங்கள் தொழிலுக்கு இவர்கள் இருவரின் கையெழுத்தும் வேண்டியிருக்கிறது,அதற்காகத்தான் நீங்கள் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். எல்லாவற்றையும் 

மாலையம்மன் நல்லபடியாக நடத்திக் கொடுப்பாள் என்ற நம்பிக்கையோடு தான் இதில் இறங்கி இருக்கிறேன், மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் காஞ்சனா.

————

“நிரஞ் நீ இறங்கி போய் கிருஷ்ணாவைப் பார்த்து பேசிவிட்டு வா, காரை இந்த மரத்திற்கு பின்னால் மறைவாக நிறுத்திவிடு”

 “அண்ணா  என்னை உள்ளே விடுவார்களா?” குரல் நடுங்க கேட்டான் நிரஞ்சன்.

” அவள் கம்பெனி முதலாளி என்று சொல். திருமணத்திற்கு வந்திருப்பதாக சொல். உள்ளே விடுவார்கள்”

” அட என்னடா இப்படி பயப்படுகிறாய்? உன் இடத்தில் நான் இருந்தால் இந்நேரம் உள்ளே போய் கிருஷ்ணாவை தூக்கிக் கொண்டே வந்திருப்பேன்” சுஜாதா சொல்ல, வயதுக்கேற்ற பேச்சா பேசுகிறாய் சரியான வில்லி நீ,என்று அவரை முறைத்துக் கொண்டே கீழிறங்கி கோவிலை நோக்கி நடக்கத் துவங்கினான் நிரஞ்சன்.

————

“டிரைவர் அண்ணா அந்த தோப்பில் ஆட்கள் தெரிகிறார்கள். அங்கே விசாரியுங்கள்” மோனிஷா சொல்ல டிரைவர் காரை நிறுத்தி இறங்கி போனார்.

 தோப்பிற்குள் வேலையாட்களுக்கு ஏதோ வேலை சொன்னபடி முதுகு காட்டி நின்றிருந்தவனை பார்த்ததும் மோனிஷா காரிலிருந்து இறங்கினாள். “ஹலோ சார் எனக்கு ஒரு அட்ரஸ் வேண்டுமே”

 திரும்பியவன் மோனிஷாவை பார்த்ததும் கண்கள் தெறித்து விடுகிறார் போல் விழித்தான். “நீ…நீ…நீங்கள்”

” நான் மோனிஷா சார். இங்கே மாலையம்மன் கோவிலில் ஒரு திருமணத்திற்கு வந்தேன்.உங்கள் பெயர் என்ன சார்?”

“என் பெயர் வேலன். நீங்கள் 

காதல் சகுனி…”

” அதே தான் சார். அந்தப் பட ஹீரோயின்தான்” மோனிஷா சொல்ல வேலன் பிரமிப்பில் விழுந்தான்.

“சார் நீங்கள் ரொம்பவும் ஹேன்ட்ஸம்மாக இருக்கிறீர்கள். உங்களால் எனக்கு ஒரு உதவியாக வேண்டுமே” இனிமையான குரலில் மிழற்றினாள் மோனிஷா.




What’s your Reaction?
+1
40
+1
19
+1
2
+1
3
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!