பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்!-1

1

“நேஷனல் டென்னிஸ் டோர்னமெண்ட் – ஃபைனல்” என்ற பெரிய பேனர் வெயிலில் பளபளத்தது.

“இந்தியாவில் கிரிக்கெட் எத்தனை பெயர் பெற்றிருந்தாலும், ஐ பி எல் கூட்டத்தைக் குவித்தாலும், டென்னிஸுக்கு இன்னமும் மதிப்பு இருக்கிறது” என்றாள் விஜய சந்திரிகா. அவள் தமிழ்நாட்டு அணியின் கேப்டன்.

“எல்லா விளையாட்டும் இப்போது இந்தியர்களால் ஊக்கப்படுத்தப்படுகின்றது, விஜய். இது விளையாட்டின் பொற்காலம் என்றே சொல்லலாம்” என்றாள் அதுல்யா.

“நீ ஸிங்கிள்ஸ் ஜெயிச்சுட்டேன்னா, கண்டிப்பா நம் டீமுக்கு இது பொற்காலம்தான்!”

“நான் மட்டும் ஜெயிச்சா போதுமா? வாட் அபவுட் மென்ஸ் ஸிங்கிள்ஸ்? அதுதானே எப்போதுமே நம்ம டீமோட வீக் பாயிண்ட்” என்று சிரித்தாள் அதுல்யா.

“நீ வேற! இந்த முறை ஸிங்கிள்ஸ்க்குப் புதிதா ஒரு ப்ளேயர் வந்திருக்கார். அவர் கண்டிப்பா ஜெயிச்சிருவார்னு சொல்றார் கோச்!”

“கோச் நம்ம எல்லாரைப் பற்றியும் அப்படித்தான் சொல்வார்! போகட்டும், யாராம் அந்தப் புதுமுகம்?”

“யாரோ! விஸ்வநாதன்னு பேரு! நம்ம சஜன் குமார் திடீர்னு வர மாட்டேன்னு சொல்லிட்டார் இல்ல, அப்போ கோச் கண்டெடுத்த ரத்தினம் (அவர் பாஷையில்!). இன்னும் விளையாடிப் பார்க்கல, ஆனா ஆளைப் பார்த்தேன்! சின்ன வயசு அஜித் மாதிரி ஸ்மார்ட்டா, ராக்ஸ்டாரா இருக்காரு!”

“ராக்ஸ்டாரா இல்லையாங்கறது, ராக்கெட்டைப் பிடிச்சு ஆடும்போதுதான் தெரியும்!”

*****

“கங்கிராஜுலேஷன்ஸ் அதுல்யா!” முகமெல்லாம் பல்லாக வாழ்த்தினாள் விஜய சந்திரிகா. “என்ன பியூட்டிஃபுல் டெக்ஸ்ட் புக் வின்! மென்ஸ் ஸிங்கிள்ஸும் நாம ஜெயிச்சாச்சு! இனி ஒரு மேட்ச் வின் பண்ணிட்டா, நமக்குத்தான் கப்!” 

ஆனால் சிறிதுநேரத்திலேயே விஜய சந்திரிகாவின் முகமும், அருகே நின்றிருந்த கோச்சின் முகமும் வெளுத்துச் சுருங்கிவிட்டது. ஆம், ஆண்கள் இரட்டையர் ஆட்டம், பெண்கள் இரட்டையர் ஆட்டம் இரண்டுமே தமிழ்நாடு அணி தோற்றுப் போனது.

“மிக்ஸட்ல நீங்க நல்லா விளையாடிடுவீங்க, ஆனா மென் டீமிலிருந்து சங்கரனோ, அருணோ யார் விளையாடினாலும் மேட்ச் தோற்றுத்தான் போகும்” என்றார் கோச் வருத்தமாய். “சஜன் உங்களோடு நல்லா ஒத்துப்போவார்… விஸ்வநாதன் புதுசு” என்றார் யோசனையாய்.

“சார்! விஸ்வநாதன் ஆடட்டுமே!” என்று கூவினாள் விஜய சந்திரிகா. “அப்பதான் நமக்கு வின் பண்ண ஸ்லிம் சான்ஸ் கிடைக்கும். இன்னொரு ஐடியா சொல்லவா?”

கோச் விழித்தார். 

“மிக்ஸட்ல அதுல்யாவை ஆடச் சொல்வோம். கண்டிப்பா அவங்க ரெண்டுபேரும் தூள் கிளப்பிடுவாங்க” என்று ஆர்வமாய்ச் சொன்னாள் விஜய சந்திரிகா.

“ஆனா, அப்போ நீங்க ஒரு கேம்கூட விளையாட முடியாதே!”

“தட்ஸ் ஓகே. டீம் ஜெயிச்சா போதும்.”

ஜெயித்தது.




******

“விஸ்வநாதன், அதுல்யா! நீங்க ரெண்டுபேரும்தான் இந்த டோர்ணமெண்ட் ஸ்டார்ஸ்! ஏன், இந்தியா முழுவதற்கும் நீங்கதான் ஸ்டார்ஸ்! இன்னும் எத்தனையோ உயரம் எட்ட வேண்டியவங்க! என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்றார் கோச்.

இருவரும் முகத்தில் பெருமிதம் பொங்க, புன்னகையுடன் தலையசைத்து வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்கள்.

“நேஷனல் ப்ளேயர்ஸ் ஆகிட்டீங்க! இனிமே இண்டர்னேஷனல் டோர்னமெண்ட்டில் உங்களை எதிர்பார்க்கலாமா?” என்று ஒரு நாளிதழ் நிருபர் கேட்டார்.

“விம்பிள்டன் தான் என் லட்சியம்” என்றான் விஸ்வநாதன் கண்கள் பளிச்சிட.

“நீங்க, மிஸ் அதுல்யா?”

டென்னிஸ் உடையில் வெள்ளிப் பட்டாம்பூச்சிபோல் தெரிந்த அதுல்யா அழகாகப் புன்னகைத்தாள். “அதேதான்” என்றாள் சுருக்கமாக.

“நீங்க ஏன் சார் சினிமாக்களில் நடிக்கக் கூடாது?” என்றார் மீடியா நிருபர் ஒருவர் மைக்கை நீட்டி.

“நடிக்கலாமே! வாய்ப்பு வந்தா தாராளமா நடிக்கலாம்!” என்றான் விஸ்வநாதன்.

“அதுல்யா?”

“இல்லை, என் கவனம் டென்னிஸின்மீது மட்டுமே! என்னால் பாரதம் பெருமை பெற்றது என்ற பெயர் வரும்வரை எனக்கு வேறு விஷயங்களில் கவனம் கிடையாது!”

“வீட்டில் நடிக்க அலவ் பண்ண மாட்டாங்கன்னு சொல்லிட்டுப் போங்களேன்! எதுக்கு இத்தனை ஸீன்?” என்று மெல்லிய குரலில் சொல்லிச் சிரித்தான் விஸ்வநாதன்.

“ஹௌ டேர் யூ! என் குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எங்களைக் கஷ்டப்பட்டு மட்டுமில்லை, வீரமாகவும் சுதந்திரமாகவும் என் அம்மா வளர்த்திருக்காங்க! நான் எந்தத் துறையில் செல்ல விரும்புகிறேன் என்பதெல்லாம் முழுக்க முழுக்க என்னுடைய டெஸிஷன்! ஷட் அப் யுவர் டர்ட்டி மவுத்!” என்று கடித்த பற்களுக்கிடையில் பொரிந்தாள் அதுல்யா.

விஸ்வநாதன் முகம் சிவந்தது. “சாரி, ஜஸ்ட் அ ஜோக்” என்று சொல்லி விலகிப் போனான்.

*****

ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது? அவன் ஏதோ உண்மையைச் சொல்லிவிட்டதைப் போல, நான் அதை அவசர அவசரமாக மறுப்பதைப் போல…

நான் சொன்னது உண்மைதானே? அதற்கு ஏன் பதட்டம்?

என் வீட்டில் எனக்கு எந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது? எனக்குப் பிடித்த படிப்பு, நான் தேர்ந்தெடுக்கும் உடைகள், நான் விரும்பும் டென்னிஸ், நான் விருப்பப்பட்டுச் சேர்ந்த வேலை…

என்ன… வீடு திரும்பப் சற்று நேரமாகிவிட்டால் அம்மா பதறிவிடுவார்கள். என்னோடு சிறு வயதிலிருந்து பயிற்சி, போட்டிகள், இண்டர்வ்யூ எல்லாவற்றிற்கும் துணைக்கு வருவார்கள். இது என்ன யாருமே செய்யாததா?

“ஆஃபீஸ் பார்ட்டிக்கு அம்மாவை அழைச்சுக்கிட்டு வந்திருப்பது உலகத்திலேயே நீங்க மட்டும்தான், அதுல்!” 

சக அலுவலன் ஜாஃபர். நல்ல நிறமாக, வாட்டசாட்டமாக இருப்பான். அவனைக் கண்டு அம்மா பதறிய பதட்டம்! எப்போது ஆபீஸிலிருந்து கால் வந்தாலும் “யாரு, அவனா?”




இதையெல்லாம் நம்பிக்கை இல்லாமல் செய்வது என்று எடுத்துக் கொள்ள முடியுமா? பாவம், மழலைப் பருவத்திலிருந்து எங்களுக்கெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்தும்கூட, ஒரு சமயம் தவறிவிட்டாளே! அந்த வலி அவளை விடவில்லை. அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்ற பயம் அவளை வாட்டுகிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்? அவள்! ஓடுகாலி! வீட்டையும் குடும்பத்தையும் மறந்து ஓடிப்போன இராட்சஸி! என்ன முகத்தை வைத்துக் கொண்டு திரும்பி வந்தாள்? இப்போது இவளையும் இவள் குழந்தையையும் நாங்கள் காப்பாற்ற வேண்டுமா?

என் அம்மாவின் ஒவ்வொரு நாளையும் நரகமாக்கிய அவளை என்ன செய்யலாம்? ஒவ்வொரு விநாடியும் போலீஸ் கண்காணிக்கும் குற்றவாளிகள் போல் என்னையும் சரண்யாவையும் ஆக்கிய அவளை என்ன செய்யலாம்?

******

“விச்சு! கங்கிராட்ஸ் டா! நேஷனல் சாம்பியன் ஆகிட்டே! இனிமே சர்வதேசப் போட்டிகள்! சினிமாவில் வேறு நடிக்கப் போறியாமே?” என்றார் அவர்கள் அணியைச் சேர்ந்த சங்கரன்.

“போங்க சார் நீங்க வேற! சினிமாவில் நடிப்பியான்னு கேட்டாங்க, நான் அதுக்கென்னன்னேன்! அதுக்குள்ள என்னை ஷூட்டிங்குக்கே அனுப்பிட்டீங்க?” என்று சிரித்தான் விஸ்வநாதன். 

“நல்ல ஹேண்ட்ஸம்மா இருக்க, பிரபலமாகவும் ஆகிட்ட! தோனி நடிக்க வரலியா? அதுமாதிரி கட்டாயும் உனக்கும் வாய்ப்புகள் வரும்!” என்று ஊக்கம் கொடுத்தார் சங்கரன்.

“சும்மா சொல்லிவெச்சேன், அவ்வளவுதான் சார். உண்மையில் எனக்கு நடிக்கல்லாம் ஆர்வம் கிடையாது. விம்பிள்டன் தான் என் ஒரே லட்சியம்!”

“நிஜமாகவா? இல்லை, லவ்வர் நடிக்க அலவ் பண்ண மாட்டாளா?” என்று சிரித்தவாறே அருகில் வந்தான் அருண்.

“போய்யா! இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கல!”

“ஆரம்பியேன்! ஜோடி போட்டு விளையாடினீங்கள்ள? வாழ்விலும் ஜோடி போடுங்க! நல்ல அம்சமாத்தான் இருக்கும்!”

“யாரைச் சொல்ற?”

“ஹை! தெரியாத மாதிரி கேளு! நம்ம அதுல்யாவைத்தான் சொல்றேன்” என்றான் அருண்.

“அது முரட்டுப் பெண்ணா இல்லை இருக்கு!”

“அப்போ உனக்கு அபிப்ராயம் இருக்கு!”

“பேத்தாதீங்க! யாரோடையாவது சேர்ந்து விளையாடினா, உடனே லவ் பண்ணிடனுமா?”

“ஏன், பண்ணக் கூடாதா? ஆத்தில் கோச்சுப்பாளா?” என்று குரலை மாற்றிக் கொண்டு அருண் கேலியாகக் கேட்க, பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்து வைத்தான் விஸ்வநாதன்.

*****




ஆத்தில் கோச்சுப்பாளா?

என் வீட்டைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?

எங்களுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த என் பெரிய அண்ணாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?

அண்ணனுக்கு அடங்கி, இன்றுவரை தன் சம்பாத்தியத்தை ஒரு பைசாகூடத் தனக்கென்று எடுத்துக் கொள்ளாமல் அண்ணனிடம் ஒப்படைக்கும் சின்ன அண்ணாவைப் பற்றி என்ன தெரியும்?

இந்த வீட்டின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு, இன்றுவரை நிலைப்படியைத் தாண்டி வெளியே வராமல் தவ வாழ்வு நடத்தும் அண்ணியைப் பற்றி என்ன தெரியும்?

இவர்களுடைய தியாகங்கள் தானே என்னுடைய வெற்றிகள்? இவர்களைச் சில விஷயங்களில் நான் அனுசரித்துப் போகிறேன், இதில் என்ன தப்பு?

சரி, டென்னிஸில் என் ஆர்வத்தைத் தெரிவித்தபோது, பெரிய அண்ணா “ஏன், குட்டை ஸ்கர்ட் போட்ட குட்டிகளைப் பார்க்கணுமா?” என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டார்தான். அதற்காக எத்தனை வருத்தப்பட்டார்! அப்பாவுக்குச் சமானம், என்னிடம் மன்னிப்புக் கேட்டாரே!

அவருடைய மனோநிலையை, பயத்தை, நான் புரிந்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது எத்தனை சந்தோஷப்பட்டார்! என்னைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டார். 

என்னோடு எத்தனை ட்ரெயினிங் செண்டர்கள் ஏறி இறங்கியிருப்பார்? எத்தனை ராக்கெட்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்?

“தம்பி! நண்பர்கள் கிட்ட கவனமா இருடா! நம்மைத் தீய வழியில் செலுத்தறவங்க அவங்கதான்! ஆனா, அவங்கதான் உங்களுக்கு முக்கியமா தெரிவாங்க! நல்லது சொல்லித் திருத்தற குடும்பம் கொடுமைக்காரங்களா தெரியும்! ஆண்கள், பெண்கள் எல்லோரும் வர பொது இடங்களுக்கு நீ போகவேண்டியிருக்கும்! ஏன், பெண்களோடு பேசிப் பழக வேண்டிய நிர்ப்பந்தமும் வரும்! அப்பல்லாம் இந்த அண்ணனை, அவன் பட்ட கஷ்டத்தை, ஒவ்வொரு நாளும் கூனிக் குறுகி நிற்கற அவமானத்தை நினைச்சுப் பார்த்துக்கடா! 

“நீ பார்க்கக் கம்பீரமா இருக்கே! கை நிறையச் சம்பாதிக்கறே! இப்போ ப்ராபல்யமும் வரப் போகுது! உனக்குத் தூண்டில் விடணும்னு பலர் நினைப்பாங்க! இடங்கொடுத்துடாதேடா!”

கண்ணீர்மல்க அவர் பேசியது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. அப்படி என்ன கேட்டுவிட்டார் என்னை? கண்ணியமான நடத்தை, அவருக்குக் கீழ்ப்படிதல் – அவ்வளவுதானே! இதைக்கூட வாழ்வில் பெரிய இடியைச் சந்தித்து நடைப்பிணமாக வாழ்ந்துவரும் அந்த நல்லவருக்குத் தரவில்லையென்றால், நான் என்ன மனிதன்?

என் வீட்டைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? 

இதைத்தானே என்னிடம் சொன்னாள் அதுல்யாவும்! அவளுடைய வெற்றிக்குக்குப் பின்னாலும் குடும்பத்தினர் இருப்பார்கள், அவர்களுடைய தியாகங்கள் இருக்கும். நான் கேலியாகப் பேசியது தவறுதான்!

*****

“வாழ்த்துகள், அதுல்யா, விஸ்வநாதன்! நீங்க ரெண்டுபேரும் மிக்ஸ்ட் டபிள்ஸ் மேட்ச் ஜெயிச்சதுதான் நம்மை நாட்டுக்கே முதலிடத்தில் வெச்சிருக்கு! உங்க ரெண்டுபேருக்கும் பத்துலட்ச ரூபாய் அவார்ட் சாங்க்‌ஷன் பண்ணியிருக்கேன், சந்தோஷம்தானே!”

பவ்யமாக நன்றி தெரிவித்தார்கள் இருவரும். பேசுவது மாநிலத்தின் முதல்வர் அல்லவா?

“மிக்க நன்றி ஐயா. ஆனால் ஒரு வார்த்தை. இந்த வெற்றிக்குப் பெரும்பங்கு காரணம் அதுல்யாதான்! அவங்க இதுக்கு முன்னாடியே பல சிங்கிள்ஸ் டோர்னமெண்ட்ஸ் ஜெயிச்சிருக்காங்க. அவங்க விளையாட்டை நான் டீவியில் பார்த்திருக்கேன், அவங்க ஸ்டைல் எனக்குத் தெரியும். நான் இப்போதான் நேஷனல் அரினாக்கு வந்திருக்கேன். நான் எப்படி விளையாடுவேன்னே அவங்களுக்குத் தெரியாது! இருந்தாலும் எங்கூட அட்ஜஸ்ட் பண்ணி விளையாடி, மேட்சை வின் பண்ணிக் கொடுத்திருக்காங்க!” என்றான் விஸ்வநாதன்.

தொடர்ந்த முதலமைச்சரின் பாராட்டுகளை நன்றியுடன் ஏற்றுக் கொண்டவாறே, முதன்முறையாக விஸ்வநாதனைப் பார்த்துப் புன்னகைத்தாள் அதுல்யா.




What’s your Reaction?
+1
10
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!