Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-6

6

இளங்காலை. சீக்கிரமே குளித்துவிட்டு, பனியில் நனைந்த புதுமலர் போல் ஜொலித்தாள் அதுல்யா. இறைவனை வணங்கிவிட்டு “அம்மா! அம்மா!” என்று உரக்க அழைத்தாள்.

“ஏண்டி, காலங்கார்த்தால கத்தறே! சமையற்கட்டில் இருக்கேனில்லையா? உங்க அக்கா கத்தி விறைக்கறது போதாதா இந்த வீட்டுக்கு?” சலித்துக் கொண்டே வந்தாள் அம்மா.

“ஓஹோ! வாயைத் திறந்தாலே கத்தறேனாமா? அப்போ நீ பேசறதுக்கு என்ன அர்த்தம்?” என்றாள் அப்போதுதான் எழுந்து வந்திருந்த நித்யா.

“காலங்கார்த்தால எங்கூட மல்லுக்கு நிற்காதே. போய்ப் பல்லைத் தேய்” என்று அவளை அனுப்பிவிட்டு “உனக்கு என்னடி வேணும்?” என்று அதுல்யாவை ஏறிட்டாள் அம்மா.

“அம்மா, இங்கே வா. இந்தக் கவரை வாங்கிக்கோ” என்று அவள் காலைத் தொட்டு வணங்கி, ஒரு கவரை அளித்தாள் அதுல்யா.

“என்னது இது?” என்றவாறே பிரித்த அம்மா, உள்ளே இருந்த ‘செக்’கையும் அதில் எழுதியிருந்த தொகையையும் பார்த்துப் பிரமித்தாள்.

“நேற்று விளையாடின மேட்ச்சுக்கான பரிசுத் தொகைம்மா. ராத்திரி கொடுக்க மறந்துட்டேன்” என்றாள் அதுல்யா.

“உங்க அப்பா சம்பளத்தைவிட ஜாஸ்தி” என்றாள் அம்மா, பிரமிப்பு நீங்காமல்.

“அவரும் நீயும் அந்தச் சம்பளத்தை என் ட்ரெயினிங்கில் தைரியமா செலவழிச்சிருக்காட்டா இந்தப் பரிசெல்லாம் ஏதும்மா?” என்றாள் அதுல்யா.

“அதைச் சொல்லுடி! இதை எனக்காகச் செலவழிக்கணும்னு தோணுச்சா? அப்படிச் செலவழிச்சிருந்தா எங்க வீட்டில் நான் மதிப்பா வாழ்ந்திருப்பேன்” என்று பல் தேய்த்துக் கொண்டே குழறலாகச் சொன்னாள் நித்யா.

அவளுக்கும் அவள் வீட்டுக்கும் இடையில் வரதட்சிணைப் பிரச்சனை இல்லை என்று தெரிந்தாலும் அதுல்யா பதிலளிக்கவில்லை. அம்மாவையும் கைகாட்டி நிறுத்திவிட்டாள். சந்தோஷமான நேரத்தில் சண்டை எதற்கு? அந்தச் சந்தோஷம் மீண்டும் வர வேண்டும், தான் விளையாடி ஈட்டும் பணத்தால் குடும்பம் மீண்டும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றுதானே விஸ்வநாதனுடன் சேர்ந்து விளையாட ஒப்புக்கொண்டாள்! 

*****




பொறுமிக் கொண்டே தன் தந்தசுத்தியை முடித்தாள் நித்யா. “கடைக்குட்டி கைக்காரியத்தில் கெட்டி. நடுமத்தவ பணமா கொண்டுவந்து கொட்டறா. அதான் அம்மா என்னை மதிக்க மாட்டேங்கறா! அம்மா-பொண்ணாவே இருக்கட்டுமே, காசு கொண்டுவரலேன்னா இந்தக் காலத்தில் மதிப்புக் கிடையாது!

“ஏன், லவ் பண்ணிக் கட்டிக்கிட்டேனே, அந்த ராஸ்கல் என்னை மதிச்சானா? அப்படி என்ன கேட்டுட்டேன்? எல்லோரும் சொந்த வீடு வாங்கறாங்க, நாமும் லோன் போட்டு வாங்கலாம்னு சொன்னேன். அது அவனுக்குத்தானே மதிப்பு? எக்ஸ்டென்ஷனில் வாங்கினா என்ன கேடு? அவனால ஆபீஸ் வர முடியாதாம்! அம்மாவால பழகின இடத்தைவிட்டு வர முடியாதாம்!

“எனக்கு அது புரியாம இல்லை. அதான் நான் சொன்னேன் – அம்மா இங்கேயே வாடகை வீட்டில் இருக்கட்டும், நாம புதுவீட்டுக்குக் குடித்தனம் போலாம்னு! இது ஒரு தப்பா? இந்தக் காலத்தில் யாருமே தனிக்குடித்தனம் போறதில்லை பாரு?

“சரி, அப்படியே வீடு வாங்கலைன்னா கூட என்ன சொல்லியிருக்கணும்? இப்போ எனக்கு அவ்வளவு பணம் புரட்ட முடியாதுன்னு உண்மையைச் சொல்லியிருக்கணும்! அதை விட்டுட்டு, உன் அம்மா வாடகை வீட்டில்தானே இருக்கா? அங்கேர்ந்து நீ ஏதாவது கொண்டு வந்தியா? கட்டின புடவையோட தானே வந்த? வீடு வாங்கணும்னு சொல்றியே, நீயும் சேர்ந்து வேலை பார்த்துக் கடனை அடைக்கலாம்னு சொல்லத் தோணுதான்னு கேட்கறான்! கேடரிங் ஆரம்பிக்கப் போறானாம், அதுக்கும் நான் பணம் கொடுக்கணுமாம்! நான் கொண்டுபோன சொற்ப நகை, பாத்திரத்தை இவன் சமையல் பிஸினஸ்க்குக் கொடுத்துட்டு நான் தெருவில் நிற்கவா? இதில் நானும் சேர்ந்து வேற உழைக்கணுமாம்!

“நான் ஏன் வேலை பார்க்கணும்? அப்புறம் ஆம்பளைக்கு என்ன வேலை? சமைக்கறதா? அதான் நல்லா செய்வானே! எனக்கு அவன் பண்ற வடநாட்டு சமையல்லாம் தெரியாதுதான்! ஐயோ! என் மாமியார்க்காரி! ஏதோ சமைச்சு போட்டா சாப்பிட்டுப் போகணும்! குறை சொல்லிட்டே இருந்தா? எப்போ பாரு, பணம் பணம்னு பிடுங்கல்! அதான் இங்கே வந்தேன்! இங்கேயும் இடி! எனக்கும் ஒரு அம்மா வாய்ச்சாளே!

“சரி, எனக்குச் செய்ய வேண்டிய சீரைப் பண்ணு, நான் புருஷன் வீட்டுக்கு அதை வாங்கிட்டுப் போனா மதிப்பா இருக்கும்னு சொன்னா, ஒரே பஞ்சப் பாட்டு! மத்த ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணணுமாம்! ஏன், இவங்க இளங்கோவை நான் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சிருந்தா எனக்கும் இவங்க சீர் பண்ணணும்தானே! நியாயமா எனக்குச் சேர வேண்டியதைக் கேட்டா, கோபம் வருது!

“இருக்கட்டும்! கணிசமான ஒரு தொகையை வாங்காம, நான் இங்கேர்ந்து கிளம்ப மாட்டேன்! புருஷன் வீட்டுக்குப் போனா, அதுக்கு அப்புறம் அவங்க என்னை ஒரு வார்த்தை சொல்லக் கூடாது! என் புருஷனால் வாங்க முடியாத வீட்டை நான் வாங்கிக் கொடுத்தா, அப்புறம் ஊருக்குள்ள இருக்கணும், அம்மாகூட இருக்கணும்னெல்லாம் சொல்ல மாட்டான் இல்லையா? பிஸினஸ் அது இதுன்னு சொல்லாம ஒழுங்கா வேலையைப் பார்ப்பான் இல்லையா?”




“என்ன முணுமுணுத்துட்டே பாத்திரத்தைப் போட்டு உருட்டிட்டிருக்க அக்கா?” உள்ளே வந்தாள் சரண்யா. “அங்கே குழந்தை அழுதிட்டிருக்கா. சீக்கிரம் பால் கொண்டுபோ.”

அவளை முறைத்தவாறே பாலை இறக்கி, குழந்தைகளுக்கான அழகிய கப்பைக் கையில் எடுத்தாள் நித்யா.

*****

“என்ன மாமா, வந்ததிலிருந்தே ஏதோ டல்லா இருக்கீங்க?” சியாமளா தன் கணவனைக் கேட்டாள்.

“ஒண்ணுமில்லை. குழந்தைங்க ஸ்கூல்லேர்ந்து வந்தாச்சா?” என்று கேட்டார் சிவநேசன்.

“என்னங்க, உடம்புக்கு என்ன பண்ணுது? குழந்தைங்க உங்களைச் சீக்கிரம் வீட்டில் பார்த்ததும் ‘அப்பா’ன்னு கத்திக்கிட்டுத்தானே உள்ளே வந்தாங்க? நீங்ககூட ரெண்டு வார்த்தை பேசினீங்களே! அப்புறம்தானே பால் குடிச்சுட்டு விளையாடப் போனாங்க?” சியாமளா பதறினாள்.

“ஓ ஆமா… சாரி சியாமளா, ஏதோ ஞாபகம்” என்றார் சிவநேசன்.

“என்ன ஞாபகம் குழந்தைகளே மறந்துபோகிற அளவுக்கு? என்ன பிரச்சனைன்னு சொல்ல மாட்டீங்களா? ப்ளீஸ் சொல்லுங்க” என்று கெஞ்சினாள் சியாமளா.

சிவநேசன் பெருமூச்செறிந்தார். “சியாமி, நம்ம குடும்பத்துல அண்ணன் தான் எல்லாம். அவர் சொன்னபடிதான் நாம எல்லாத்தையுமே நடத்தறது வழக்கம்” என்றார்.

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

“இதுநாள் வரை அண்ணனுடைய உழைப்பும் என்னுடைய உழைப்பும் இந்தக் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டது. இப்போ தம்பி தலையெடுத்துட்டான்…”

“ஆமா. டென்னிஸ் விளையாட்டில் இவ்வளவு பணம் வரும்னு எனக்குத் தெரியாதுங்க! நேற்று ராத்திரி பெரிய மாமாகிட்ட கொடுத்தபோது நான் அசந்து போயிட்டேன். இனிமே நமக்கு நல்ல காலந்தான்!”

சிவநேசன் சோகையாகச் சிரித்தார். “உனக்கு என்ன நல்ல காலம்? நீ காலையில நாலு மணிக்கு எழுந்து, எங்க எல்லாருக்கும் பொங்கிப் போட்டு, வெளியே அனுப்பி, வீட்டுவேலை எல்லாம் பார்த்து, நாங்க திரும்பி வந்ததும் எங்களைக் கவனிச்சுக்கிட்டு, ராத்திரி பதினோரு மணிக்குத் தூங்கற. தம்பி நிறையச் சம்பாதிக்கறதால இது ஏதாவது மாறப் போகுதா?”

சியாமளா மௌனமானாள்.




“என் ஆபீஸ் டி நகர்ல இருக்கு. இங்கே குரோம்பேட்டையிலிருந்து போய்வரது எவ்வளவு கஷ்டமா இருக்கு! இன்றைக்குக்கூடத் தலைவலி தாங்க முடியல, அதான் மத்தியானம் லீவு போட்டுட்டு வந்துட்டேன்!”

சியாமளா பதறினாள். “ஏன் மாமா எங்கிட்ட முதலிலேயே சொல்லல? டீயோடு ஒரு டோலோ 650 கொடுத்திருப்பேனே! இப்போ கொண்டுவரவா? அமிர்தாஞ்சன் தேய்க்கவா?” என்றாள்.

“இன்றைக்கு ஒருநாள் இதெல்லாம் பண்ணலாம், நாளைக்கு மறுபடி இதேதானே!” என்றார் சிவநேசன்.

“சரி, அதுக்கு என்ன பண்றது?”

“நாம மாம்பலத்திலேயோ, அசோக் நகரிலேயோ சின்ன ஃப்ளாட் ஒண்ணு பார்த்துக்கிட்டா என்ன?”

“என்னது? மாம்பலத்தில் இன்னிக்கு வீடு விலை தெரியாதா உங்களுக்கு? நம்மளால மிஞ்சிப் போன ரெண்டு பெட்ரூம் ஃப்ளாட், அதுவும் கீக்கிடமா வாங்க முடியும்…”

“இருந்தா என்ன? வெளியில தெருவெல்லாம் கலகலன்னு இருக்கும்! உனக்கு மெயிண்டெயின் பண்றதும் ஈஸி! அயோத்யா மண்டபம் பக்கத்தில் இருக்கு! நாம நடந்தே போயிடலாம்!”

கணவன் இதைப் பற்றிப் பலமுறை யோசித்த பின்னால்தான் தன்னிடம் பேசுகிறார் என்று உணர்ந்தாள் சியாமளா.

“அந்த ஃப்ளாட்டில் பெரிய மாமா எங்கே இருப்பாங்க? தம்பி எங்கே இருப்பான்? இனிமே தம்பிக்குக் கல்யாணம் ஆகிடும். அவனுக்குத் தனி ரூம் வேண்டாமா? மாமாவோட கடை இங்கல்ல இருக்கு? இந்த வீடு தள்ளி இருந்தாலும் பெரிசா இருக்கு! நாம எல்லாரும் சௌகரியமா இருக்கோம். ஃப்ளாட்டுக்குப் பெரிய மாமா ஒத்துக்கணுமே!”

“அவருக்கு வேண்டான்னா, அவர் இங்கேயே இருக்கட்டுமே! தம்பியும் இங்கேயே இருக்கலாம். நாம மாம்பலமோ அசோக் நகரோ போகலாமே!”

சியாமளா திகைத்தாள். “தனிக் குடித்தனமா?”

“ஏன், அது என்ன கொலைக் குத்தமா? நான் ஒண்ணும் என் அண்ணன் கிட்டப் பணம் கேட்கப் போறதில்ல! என் தம்பி கைநிறையக் கொண்டுவரானே, அதையும் கேட்கப் போறதில்ல! அப்படியே அவங்க ஏதாவது உதவி செஞ்சாலும், வட்டியோட திருப்பிக் கொடுத்திடுவேன்! பேங்க்ல லோன் போட முடியுமே! எத்தனை நாள் இப்படியே கஷ்டப்படறது, சியாமி?”

சியாமளா சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள். பிறகு “பெரிய மாமா சம்மதிக்க மாட்டார்” என்றாள்.

“சம்மதிக்க வைக்க வேண்டியதுதான்! நீ கஷ்டப்படறது எனக்குத் தாங்கலை சியாமி! நீ பாட்டுக்கு டீ பி அது இதுன்னு வரவழைச்சுக்கிட்டா? அவர்கிட்ட நான் பேசிப் பார்க்கறேன்! நாம ஒண்ணும் அவரை அனாதையா நிறுத்தலியே! மாதாமாதம் சம்பளத்திலிருந்து அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருவோம். தம்பியும் இங்கேயே இருக்கான்! அப்புறம் என்ன?”

“நான் சொல்றதைக் கேளுங்க! நீங்க செய்யற மாதிரி உங்க தம்பியும் செஞ்சா? அப்புறம் பெரிய மாமா தனியா இருக்கறதா?”

“ஏன் தனியா இருக்கணும்? எங்க ரெண்டு வீட்டிலும் மாறிமாறி இருக்க வேண்டியதுதான்! தம்பிக்கு வர பொண்ணு இங்கே இருக்கல்லாம் சம்மதிப்பான்னு எனக்குத் தோணல! அதை இப்பவே செய்துட்டா, உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது!”

“என்ன புரியாம பேசறீங்க! பெரிய மாமா மனநிலை தெரியாதா உங்களுக்கு? அவங்க முறைப்பொண்ணு அவங்களை வேண்டான்னு சொல்லி அவமானப்படுத்தினதில் அவங்க எவ்வளவு மனசு உடைஞ்சிட்டாங்க! அவங்களைத் தனியா விடலாமா?”

“இன்னும் இந்தக் கதையை எத்தனைநாள் சொல்லப் போறே?”

“இல்லைங்க, உங்களுக்குத் தெரியாத ஒரு கதையையும் சொல்றேன்… சில வருஷங்களுக்கு முன்னாடி, பெரிய மாமா நிலையைப் பார்த்து வருத்தப்பட்டு, என் ஒண்ணுவிட்ட அக்கா ஒருத்தியைக் கட்டிவைக்கணும் என்ற எண்ணத்தில், அவங்க மனத்தைத் தெரிஞ்சுக்க அவங்ககிட்டப் பேசினேன். அப்போ அவங்க தான் கல்யாணத்தை வெறுத்துட்டதுக்கான காரணங்களைச் சொல்லி,  இதை யாருக்கும் சொல்ல வேண்டான்னு சொன்னாங்க, இருந்தாலும் இப்போ எனக்கு வேற வழி தெரியல…”

“என்ன புதுசா புதிர் போடற?”

“ஆமாங்க. அவங்க முறைப்பொண்ணு சம்பவத்திற்குப் பிறகு, பெரிய மாமாவை ஒரு பொண்ணு காதலிக்கறதா சொல்லி இருக்கா. எவ்வளவோ வைராக்கியமா இருந்த அவர் மனதைக் கரைச்சிருக்கா. முடிவில் அவரும் விரும்பிருக்காரு. வீட்டில் சொல்லாம, வீட்டில் இருந்த நகை பணம் எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.

“சினிமால வர மாதிரி நடந்திடுச்சு! ஆனா இங்கே ஏமாற்றினது பெண்! அவர் கொண்டுவந்ததை எல்லாம் எடுத்துக்கிட்டு அவரை விட்டுட்டுப் போயிட்டா! உன்னைப் போய் எவ கட்டிப்பான்னு கேவலமா ஒரு கடுதாசி வேற எழுதி வெச்சிருக்கா.

“இந்த இரண்டாவது ஏமாற்றம், பெரிய ஏமாற்றம்! பெரிய மாமா தற்கொலைக்கே முயற்சி பண்ணி, ஊர்க்காரர் ஒருத்தரால காப்பாத்தப்பட்டிருக்காரு! இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியாம பார்த்துக்கிட்டாங்க! ஆனா அதிர்ச்சில அத்தை உடல்நிலை மோசமானது! அந்தக் கவலையிலேயே உயிரை விட்டாங்க அத்தை!

“ஆனா பெரிய மாமா அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தாங்க. உங்க எல்லாரையும் வளர்த்தாங்க. வாழ்க்கையிலும் முன்னுக்கு வந்தாங்க. ஆனா அவருக்குள்ள இருந்த தாழ்வு மனப்பான்மை, மனநோயா மாறி அவரை அரிச்சுக்கிட்டிருக்கு. அதுக்கு ஒரே மருந்து என்ன தெரியுமா மாமா? நாம யாரும் அவரை வெறுக்கலை, தனியா விடணும்னு நினைக்கலைங்கறதுதான்! நாம தனியா போயிட்டா, அந்த வருத்தத்தை அவரால தாங்க முடியும்னு நினைக்கறீங்களா?”




நீளமாகப் பேசி நிறுத்தினாள் சியாமளா.

“நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன். காலையில் சீக்கிரம் எழுந்து ஓடணுமே!” என்று சொல்லி, ஏக்கப் பெருமூச்சுடன் எழுந்து போனார் சிவநேசன்.

சியாமளாவுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. “மாமாவே இப்படி நினைக்கறாங்களே! தம்பி இந்தக் காலத்துப் பிள்ளை. கல்யாணம் ஆகிட்டா அது என்ன சொல்லுமோ? ஆமா, யாரோ ஒரு பொண்ணு அவனோட விளையாடினதா சொன்னானே! வாய் ஓயாம அவளைப் பற்றிப் பேச்சு! ஏதாவது அபிப்ராயம் இருக்குமோ? அவ பேரென்ன சொன்னான்? அமலாவா? அர்ச்சனாவா? இல்லை, வேற ஏதோ பேரு!”

என்ன பெயரென்று மறுநாள் சியாமளாவுக்குத் தெரிந்து போனது, “என் பெயர் அதுல்யா!” என்று சொல்லிக் கொண்டு அவள் வீட்டு வாயிலில் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும்.




What’s your Reaction?
+1
8
+1
7
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!