Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-11

11

“வணக்கம் சார்” – ஏதோ ஃபைலில் மூழ்கியிருந்த விஸ்வநாதனைக் குரல் உசுப்பியது. 

அலுவலகத்துக்கு வந்து சிறிது காலம் ஆகிவிட்டதால் வேலை அதிகமாகச் சேர்ந்து போயிருந்தது. மனதுக்குள் எரிச்சல் மண்டினாலும் கோபத்தைக் காட்டாமல் “யெஸ்” என்றான்.

“சார், நான் அசோக். உங்க ஆஃபீஸ்க்கு கேடரிங் சர்வீஸஸ் வேணும்னு அட்வர்டைஸ் பண்ணிருந்தீங்க. அது விஷயமா பார்க்க வந்தேன். நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்துதான் கான்ட்ராக்ட் எடுக்கப் போறோம். எங்க ரெண்டு பேருக்குமே நல்ல அனுபவம் இருக்கு சார். இதான் என் ஃப்ரெண்ட் இளங்கோ” – களையான முகம். டீசண்ட்டான தோற்றம். 

“சந்தோஷம். இதில் என்னைப் பார்க்க என்ன இருக்கு? நீங்க பார்க்க வேண்டியது ஸ்டாஃப் வெல்ஃபேர் மானேஜரை” என்றான் விஸ்வா.

“அவரை ஏற்கெனவே பார்த்துட்டோம் சார். அவரும் எங்க வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் செக் பண்ணி, ஃபுட் சாம்ப்பிள் பார்த்து, எங்க சர்வீஸஸ் நடக்க இருக்கற பிரிமிஸஸையும் விஸிட் பண்ணி, ஓகே பண்ணிட்டார். ஆனா…” என்று இழுத்தான் அசோக்.

“யெஸ்? என்ன ப்ராப்ளம்?”

“டெபாஸிட் தொகை ரொம்ப அதிகமா இருக்கு சார். நாங்க ஏற்கெனவே பிரிமிஸஸ்க்காக நிறையப் பணம் முடக்கியிருக்கோம். இன்னும் தேவையான ஹாட் பேக்ஸ், எலெக்ட்ரிக் வார்மர்ஸ் எல்லாம் வாங்க வேண்டியதிருக்கு. ஓரளவு பாத்திரங்கள் எல்லாம் வாங்கிட்டோம். டெபாஸிட்டும் அதிகமா கேட்டா, கையில் அவ்வளவு கேஷ் இல்லை சார். இந்த நிலையில் கான்ட்ராக்ட் கையைவிட்டுப் போனா நாங்க திணறிடுவோம் சார். என்னை விடுங்க, என் ஃப்ரெண்ட் இளங்கோ ஏழைப்பட்ட குடும்பம் சார். இதைவெச்சு தான் அவன் தன் பெரிய குடும்பத்தை முன்னேற்றணும். நீங்கதான் இதில் டிஸைட் பண்ண முடியும்னு மானேஜர் சொல்றார். அதான்…” கடகடவென்று பேசிக் கொண்டு போன அசோக் நிறுத்தினான்.

விஸ்வாவுக்குக் கோபம் வந்தது. அவனுக்குச் சிபாரிசு எல்லாம் பிடிப்பதே இல்லை. எவ்வித உதவியோ, பின்புலமோ இல்லாமல் முன்னுக்கு வந்தவன் என்பதால் இதுமாதிரிப் பேச்சுகளை அவன் வெறுத்தான். வெடுக்கென்று நான்கு வார்த்தைகள் பேசி அவர்களைக் கண்டித்து அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஃபைலிலிருந்து நிமிர்ந்தவன், இளங்கோவைக் கண்டதும் திடுக்கிட்டான்.

அந்த முகம் வியர்த்துப் போயிருந்தது. அவனுக்கும் இதுபோல் உதவி, சிபாரிசு இவையெல்லாம் கேட்டுப் பழக்கமில்லை என்று புரிந்தது. வெட்கி, சுருங்கித் தெரிந்தான். கண்களில் கண்ணீர்விட்டிருந்ததுபோல் ஒரு சோகம்.




தன்னை மீறி விஸ்வாவுக்குப் பரிதாபமாக இருந்தது. “ஒண்ணு செய்ங்க. இப்போ எனக்கு வேலை நிறைய இருக்கு. இன்றைக்கு சாயந்திரம் ஏழு மணிக்கு என்னை வீட்டில் வந்து பாருங்க. என்னால் முடிஞ்சதைப் பண்றேன்” என்று தன் விஸிட்டிங் கார்டை நீட்டினான்.

அவர்கள் நன்றியுடன் எழுந்து போனார்கள். மீண்டும் ஃபைலில் மூழ்கிய விஸ்வாவுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. 

இளங்கோ! எங்கே கேட்டிருக்கிறேன் இந்தப் பெயரை? மிகச் சமீபமாக? யார் சொன்னார்கள்?

*****

அதுல்யா தவித்துக் கொண்டே இருந்தாள். சரண்யாவிடம் சொல்லிச் சொல்லி வருந்தினாள். “நாம தான்டா இளங்கோ மாமாவையும் அவங்க அம்மாவையும் பற்றித் தப்பா நினைச்சிட்டோம். அவங்க பணத்துக்காக வந்து திட்டினதா நினைச்சது தப்பு! எல்லாம் இவ பண்ணினது! இவ இங்கேர்ந்து நமக்குத் தெரியாம கொண்டுபோனாளே, அந்த நகையை மாமா கேடரிங் தொடங்க முன்பணமா கேட்டிருக்காரு, அதைக் கொடுக்க மாட்டேன்னு சொல்லி, கலாட்டா பண்ணி, இவதான் வீட்டைவிட்டு வந்திருக்கா, அவங்க அனுப்பலை!” என்றாள் மறுபடி மறுபடி. 

சரண்யாவும் வருந்தினாள். “கேடரிங்க்காகக் கேட்டிருந்தா, அப்படி ஒண்ணும் பெரிய தொகையா இருக்காது, நாம மேனேஜ் பண்ணிருக்க முடியும்க்கா. இவதான் பிரச்சனை பண்ணி, அவங்க கேட்டதா நம்மகிட்ட பெரிய தொகையா கேட்கறா! அது மாமாகிட்டப் போய்ச் சேரும்னே எனக்குத் தோணலை!”

“இவ வீடு வாங்கணும்னு நினைச்சிருக்கா சரண். பணத்தை பிஸினஸில் போடறது அவளுக்கு இஷ்டமில்லை!” என்றாள் அதுல்யா.

“இதையெல்லாம் அப்பாகிட்டச் சொல்றது உங்களுக்கு இஷ்டமில்லை, இல்லையா?” புதுக்குரல் கேட்க, திடுக்கிட்டார்கள் இருவரும். 

அம்மா பிரதோஷத்திற்குக் கோயிலுக்குப் போயிருந்தாள். அக்கா குழந்தையை ஸ்கூலிலிருந்து அழைத்துவரப் போய்விட்டாள். எனவே வீட்டில் தனியாகத்தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் உரக்கவே பேசியிருக்கிறோம் என்று உணர்ந்தார்கள்.

“அப்பா ஆஃபீஸுக்குப் போயிடுவாரு. லேட்டாதான் வருவாரு. இவர் கொண்டுவர பித்ஸாத் சம்பளத்தாலா குடும்பம் நடக்குது? அம்மாவோட கெட்டிக்காரத்தனம், நான் விளையாடிக் குவிக்கற பணம் – இதுதானே கொண்டு செல்லுது? அப்போ குடும்ப விவகாரங்களை அவர்கிட்ட எதுக்குப் பேசணும்னு நினைச்சுட்டீங்க! பொண்டாட்டி, மூணு பிள்ளைங்க இருந்து என்ன பிரயோஜனம்? அப்பனை அலேக்கா எல்லாரும் ஒதுக்கிட்டீங்க! ஏதோ இன்றைக்குச் சீக்கிரம் வந்துட்டேன், இதெல்லாம் காதில் விழுந்தது! இதுகூடத் தப்புன்னா சொல்லிடும்மா, நான் வெளியே போயிட்டு லேட்டா வரேன்!”

அப்பா பொரிந்து கொட்டிக் கொண்டுபோக, கைகளைப் பிசைந்துகொண்டு தவித்தாள் அதுல்யா. 

“என்னப்பா நீங்க வேற! அப்படியெல்லாம் நாங்க நினைப்போமாப்பா? இந்தக் கண்றாவியெல்லாம் தெரிஞ்சா நீங்க வருத்தப்படுவீங்களேன்னு…” சரண்யா ஏதோ சமாதானம் சொல்ல ஆரம்பித்தாள்.

அப்பா சோகையாகச் சிரித்தார். “வருத்தப்பட மாட்டேன்மா. ஏன்னா. என் மூத்த பொண்ணு சுபாவம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்! உங்க ரெண்டுபேரைப் பற்றித்தான் எனக்கு ஒண்ணுமே தெரியலை!”

“அப்பா! எங்களைத் தப்பா நினைக்காதீங்க! உங்களை நாங்க அலட்சியம் பண்ணணும்னு சத்தியமா நினைக்கலைப்பா! எங்க மூணுபேரை வளர்க்க நீங்க பட்ட கஷ்டம் எங்களுக்குத் தெரியாதா? சிறுகச் சிறுகச் சேமிச்சு அம்மாவுக்கு நீங்க போட்ட நகைகளை எடுத்துட்டு ஓடினா அக்கா! அதைப் புருஷனுக்காவது கொடுத்தாளான்னா, அதுவும் இல்லை! இங்கே வந்து உட்கார்ந்துக்கிட்டு, எல்லாரையும் வார்த்தைகளாலேயே கொன்னுக்கிட்டு இருக்கா! அவளை எப்படியாவது திரும்ப அவ வீட்டுக்கு அனுப்பணும்னுதான் நாங்க நினைச்சோமே தவிர, உங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு…” அதுல்யா கண்ணில் நீர் கோத்துக் கொண்டது.




“உன் இன்டென்ஷன் சரியா இருக்கலாம், ஆனா உன் செயல் தப்பு, அதுல்யா! கணவனுக்கு இல்லாம, தனக்குன்னு தனியா நகை, சொத்துன்னு இருக்கணும்னு உன் அக்கா நினைச்சது தப்புன்னு சொல்றே! அப்போ குடும்பத்தின் நன்மைக்காக நீங்க யோசிக்கறதானா, குடும்பமா தானே யோசிச்சிருக்கணும்? எல்லாரும் சேர்ந்துதானே முடிவுகளை எடுக்கணும்? நானே இப்ப சம்பாதிக்கறதால, பெரியவங்களைக் கேட்கத் தேவையில்லைன்னு நீகூடவா நினைச்சுட்ட?”

“அப்பா!” அலறினாள் அதுல்யா. “எப்படி உங்களோட பகிர்ந்துக்கறது? அம்மா பாவம், நோயாளி!”

“அப்பன் கையாலாகாதவன்! சொல்லு, அடுத்து அதைத்தானே சொல்ல வந்த?”

அதுல்யாவும் சரண்யாவும் கதறிவிட்டார்கள்.

“இந்தப் படிப்பும் இந்த வேலையும் இந்த விளையாட்டும் இந்தப் பணமும் உங்க உழைப்பும் தியாகமும் தேடிக் கொடுத்ததுப்பா! உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சுத்தான் நானா பிரச்சனைகளை ஸால்வ் பண்ண நினைச்சேன். அதனாலேயே உங்க மனசு கஷ்டப்படுதுன்னு நான் புரிஞ்சுக்கல. மன்னிச்சுடுங்கப்பா!” என்று மாலை மாலையாய் அழுதாள் அதுல்யா.

அப்பாவின் சூடு தணிந்துவிட்டது போலிருந்தது. “இங்கே வாங்க ரெண்டுபேரும்” என்றார். இருவரும் அவரை நெருங்கினார்கள். அவர்களை அணைத்துக் கொண்டு “சரி, விடுங்க. இப்போ அப்பா ஒரு ரகசியம் சொல்றேன்! உங்க மூணுபேருக்காகவும் நான் மூணு டெபாஸிட் கட்டிட்டிருக்கேன். அஞ்சு வருஷம் முன்னாடி, நித்யாவோடது மெச்சூர் ஆச்சு. அவ வீட்டைவிட்டுப் போயிட்டாளே, அதனால் அதை மறுபடி டெபாஸிட் பண்ணிட்டேன். அவ எதிர்பார்க்கிற அளவு இல்லேன்னாலும், அவ கல்யாணச் செலவுகளுக்குப் போதுமானதா இருந்திருக்கும். அது இன்னும் ஆறுமாதத்தில் மெச்சூர் ஆகப் போகுது. அதை அவ கையில் அழுத்தி அவங்க வீட்டுக்கு அனுப்பிடலாம்” என்றார்.

“அப்… பா!” பிரமித்தார்கள் மகள்கள்.

“உங்க அம்மாவுக்கும் இது தெரியும்! எப்போ மெச்சூர் ஆகுதுன்னு தெரியாது போல!” என்று சிரித்தார் அப்பா.

“இப்போ மாமா கேடரிங்?”

“ஆமா. அதுக்கு நாம ஏற்பாடு செய்யணும். அதுல்யா, நீ முயற்சி செய்யலாம். ஆனா, அம்மா-அப்பாகிட்டச் சொல்லிட்டுச் செய்! எந்தச் செயலும் மறைக்காம செய்ய முடிஞ்சா அது தப்பானது இல்லை, அதுதான் நல்லது-கெட்டதுக்கான டெஸ்ட்ன்னு நேரு அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இருக்கு. புத்தகம் படிச்சிருப்பியே?” அப்பா கேட்க, “படிச்சிருக்கேம்ப்பா” என்றாள் அதுல்யா வெட்கத்துடன்.

*****

பாக்கி இருந்த வேலைகளை முடித்துவிட்டு விஸ்வா வீட்டை அடைந்தபோதே மணி ஏழரைக்கு மேலாகிவிட்டது. அங்கே அசோக்கும் இளங்கோவும் காத்திருப்பதைக் கண்டதும் “சாரி, லேட்டாகிடுச்சு. இதோ வந்துட்டேன். காபி சாப்பிடறீங்களா?” என்று கேட்டான்.

“அண்ணி கொடுத்தாங்க” என்றான் அசோக்.

விஸ்வா முகம் கழுவி, வாய்க்குள் காபியைச் சரித்துக் கொண்டு வந்துசேர்ந்தான். “சொல்லுங்க, நான் என்ன உதவ முடியும்?” என்று கேட்டான்.

இளங்கோ ஒரு ஃபைலை நீட்டினான். தான் ஏற்பாடு பண்ணியிருக்கும் முதலீடு எவ்வளவு, அதைத் தான் எவ்வகையில் எல்லாம் செலவு செய்திருக்கிறான் என்பதைத் தெளிவாக விளக்கினான். தன் அம்மா மூலம் தான் சமையல் வேலையில் பழகியதும், அவர்களோடு பல விழாச் சமையலுக்கு உதவிக்காகச் சென்றிருப்பதையும் கேடரிங், ந்யுட்ரிஷன் அண்ட் ஹைஜீன் என்ற தலைப்பில் தான் டிப்ளமா படித்திருப்பதையும் குறிப்பிட்டான்.

இதையெல்லாம் அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஃபைலில் இருந்த ஃபாரங்களைப் பார்த்தான் விஸ்வா. அவை எல்லாமே அவனுடைய கம்பெனியார் இளங்கோவின் கேடரிங் ஏற்பாடுகளை இன்ஸ்பெக்ட் செய்து கொடுத்திருந்த சான்றிதழ்கள். “தேவையான இடம் இருக்கிறது”, “சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது”, “சமையலுக்கான பெரிய பாத்திரங்கள் உள்ளன. பரிமாறும் ஹாட்-பேக் முதலியன வாங்க உறுதியளித்துளார்கள்” போன்றவை.

விஸ்வா யோசித்தான். ஏழ்மையில் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒருவனுக்கு, படிக்காத தன் தாயார் செய்த சமையல் தொழிலைக் கேவலமாக எண்ணாமல் அதைத் தானும் செய்ய விரும்பும் ஒருவனுக்கு, தான் கட்டாயம் உதவ வேண்டும் என்று அவனுக்குத் தோன்றிவிட்டது.

“சரி. உங்க டெபாஸிட்டில் பாதி முதலில் கட்டுங்க. மிச்சம் ஒவ்வொரு வாரமும் உங்களுக்குக் கொடுக்கும் தொகையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கழிச்சுக்கச் சொல்றேன். ஆனா ரெண்டு வருஷ கான்ட்ராக்ட் இது. பாதியில் வெளியே போகக் கூடாது. ஏதேனும் தவறுகள் நடந்தா, கம்பெனி கடுமையா ஆக்‌ஷன் எடுக்கும். பரவாயில்லையா?”

இளங்கோவுக்குக் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. “இது பெரிய உதவி சார். பாதிங்கறது எனக்குப் பெரிய தொகைதான், இருந்தாலும் நான் எப்படியாவது கட்டிடறேன்” என்றான் குரல் தழுதழுக்க.

“அடடே, ஏன் எமோஷனல் ஆகறீங்க? நீங்க வாங்கியிருக்கற சர்ட்டிஃபிகேட்களை வெச்சுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன். உங்க உழைப்பையும் தரத்தையும் எந்தக் காலமும் காம்ப்ரமைஸ் பண்ணிடாதீங்க. அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோங்க” என்றான் விஸ்வா.

“அம்மாவை என்ன, இனிமேல் நித்யா, குழந்தையைக் கூட நீயே பார்த்துக்கலாம்! நீ நல்ல நிலைமைக்கு வந்திடுவ. அவளும் கட்டாயம் வந்திடுவா பாரு!” என்று அசோக் ஆவேசத்தில் சொல்லிவிட்டான்.

“நித்யா?” என்றான் விஸ்வா.

“என் வைஃப் சார்” என்றான் இளங்கோ பெருமூச்சுடன்.

“இந்த டென்னிஸ் எல்லாம் விளையாடறாங்களே, அதுல்யா, அவங்க அக்காதான் அவங்க” என்றான் அசோக்.

அதன்பிறகு அவர்கள் வீட்டு நிலையை இருவரும் மாற்றி மாற்றிச் சொன்னது எதுவும் விஸ்வா காதில் விழவில்லை. ஏற்கெனவே ஓரளவு அவனுக்கு விஷயம் தெரியுமே!

அதுல்யா! என்னிடம் நீ கேட்டு வந்த உதவியை அப்போது செய்ய முடியவில்லை. இப்போது ஆண்டவனாகப் பார்த்து அந்தச் சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறான். நீ என் அண்ணனைக் காப்பாற்றினாய். நான் உன் அக்காவுக்கு உதவியிருக்கிறேன். இதற்கு என்ன பொருள், பெண்ணே? என்ன முடிச்சு போடப்படுகிறது இறைவனால்? ம்ஹும், வெறும் நட்பெனும் முடிச்சுத்தான். நிச்சயமாக மூன்று முடிச்சல்ல! என் அண்ணாவின் விருப்பமே என் விருப்பம்.

நீயும் அப்படித்தானே சொன்னாய், அதுல்யா? உன் பெற்றோரின் விருப்பமே உன் விருப்பம் என்றாயே! எவ்வளவு ஒத்துப்போகிறது நம் குணங்கள்! மனம் நெருங்க முடியாமல் நான் மறுகுவதுபோல நீயும் மறுகுகிறாயா, அல்லது மறந்துவிட்டு அடுத்த மேட்ச்சுக்குப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாயா?

விஸ்வாவின் சுகமும் சோகமுமான சிந்தனை தடைப்பட்டது, ரௌத்திராகாரமாக அவன் முன் வந்து நின்ற பெரிய அண்ணனைக் கண்டதும்.




What’s your Reaction?
+1
7
+1
7
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!