Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-15 (நிறைவு)

15

அதுல்யா ….

அளவிட முடியாத ப்ரேமையுடன் தன்னை அழைப்பது விஸ்வாதான் என்ற உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களில் தெரிந்த பரிதவிப்பில் உள்ளம் உடைந்தாள், தோள்களில் ஆதரவாகப் படிந்திருந்த அவன் கரங்களில் தன் முகத்தைப் பதித்துக் கேவிக் கேவி அழ, அவள் அழுகிற வரையில் அழட்டுமென்று மௌனம் காத்தான் விஸ்வா.

அவன் பரந்த மார்பில் முகம் புதைத்து ஆதரவு தேட அவள் உள்ளம் துடித்த அந்த நொடியில்…

ஆமாம்..! இவனுக்கெப்படி நாம் இங்கிருப்பது தெரிந்தது? கூடவே மாமா, மாமான்னு தோளில் ஒட்டிக் கொண்டிருந்தாளே அந்தப் பைங்கிளி, அவள் எங்கே?

சட்டென்று  அழுகையை நிறுத்தி, அவன் கரங்களை உதறித் தள்ளினாள்..

“நான் இங்க இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது.. ? ஒருவேளை எனக்குத்தான் ஏதாவது ஆயிடுச்சோன்னு பாத்துட்டுப் போகலாம்னு வந்தீங்களா? எனக்கொண்ணும் ஆகலை. ஆகவும் ஆகாது. நீங்க மொதல்ல இங்கிருந்து கெளம்புங்க.” – வெடித்தாள்… வெகுண்டாள்.

செய்வதறியாது பரிதவித்த விஸ்வாவுக்கு உதவியாக வந்தாள் விஜயசந்திரிகா.

“அதுல்! .நான்தான் விஸ்வாவுக்கு விஷயத்தை சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்தானே! உனக்கு சப்போர்ட்டிவா இருக்குமேன்னுதான் வரச் சொன்னேன்”

பட்டென்று இரு கைகளையும் குவித்து, “இத்தனை நாள் நீங்க செஞ்ச எல்லா உதவிகளுக்கும் மொத்தமா என்னோட நன்றிகளை தெரிவிச்சுக்கறேன். இனிமே உங்க உதவி எனக்குத் தேவையில்லை. உங்க வளமான எதிர்காலத்துக்கு வேண்டிய வேலைகளைப் போய்ப் பாருங்க” என்றவள் விஸ்வாவுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பிக் கொண்டாள்.

ஆபரேஷன் தியேட்டரிலிருந்து   பதட்டத்துடன் வெளியே வந்த ஒரு நர்ஸ் “நித்யா பேஷண்டுக்கு அட்டெண்டர் யாரு?”  என்று கேட்க அதுல்யா ஓடிப் போய் “நான்தான் சிஸ்டர். எங்க அக்கா எப்படி இருக்காங்க? பயப்படற மாதிரி ஒண்ணுமில்லையே!” என்று  பதறினாள். 

“மண்டையில நல்லா அடிபட்டிருக்கறதால ஆபரேஷன் பண்ணனும். டாக்டரே உங்களைக் கூப்ட்டுப் பேசுவார். அதுக்கு முன்னாடி உங்க அக்காவுக்கு நிறைய இரத்தம் லாஸாகி இருக்கறதால இரத்தம் தர வேண்டி இருக்கு. டோனருக்கு இன்ஃபார்ம் பண்ணி இருக்கோம். அவர் வர நேரமாகும் போல இருக்கு. உங்கள்ல யாருக்காவது அவங்க ப்ளட் க்ரூப்  இருக்கா?

“அச்சச்சோ..! அவளோடது ரேர் க்ரூப்பாச்சே!” 

“ஆமாம்! ஹெச் ஹெச் க்ரூப். இதை பாம்பே க்ரூப்னு சொல்வாங்க. இவங்களுக்கு வேறெந்த மாதிரி இரத்தமும் தர முடியாது. இந்த இரத்தவகை உள்ளவங்களோட நாங்க எப்பவுமே தொடர்பில் இருப்போம். ஆனா இன்னைக்குன்னு பாத்தா யருமே கிடைக்க மாட்டேங்கறாங்க. மும்பையில இருந்து ஒருத்தர் வரேன்னிருக்காரு. ஆனா அது வரைக்கும் ஆபேரேஷனை நிறுத்தி வைக்க முடியாதே” கைகளைப் பிசைந்தாள் நர்ஸ்.

இவர்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வா உடனே யார், யாருக்கோ ஃபோன் செய்ய, அடுத்த அரை மணியில், ஒரு நடுத்தர மனிதர் வந்து சேர்ந்தார். அவருடையதும் இதே பாம்பே க்ரூப் இரத்த வகைதானாம். அவர் இரத்தம் தர, ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து, போஸ்ட் ஆபரேடிவ் ஐ சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டாள் நித்யா. 

டாக்டர் வெளியே வந்ததும் அதுல்யா நன்றி சொல்ல, “இந்த நன்றியை உங்க அக்காவுக்கு இரத்தம் கொடுத்தவருக்குத்தான் சொல்லணும், இல்லேன்னா அவங்க உயிரைக் காப்பாத்தியிருக்க முடியாது” 

டோனருக்கு இரு கரங்களைக் கூப்பி நன்றி சொன்னவள், மேம்போக்காக ஒரு நன்றியை விஸ்வாவுக்கு இயந்திரத்தனமாக சொன்னதோடு சரி. அதற்குப் பிறகு அவனிருக்கும் பக்கம் கூட முகத்தைத் திருப்பவில்லை அதுல்யா.




ஆபரேஷன் ஆரம்பிப்பதற்குள்ளாகவே வந்துவிட்டிருந்த சரண்யாவும் அப்பாவும். விஷயம் தெரிந்து இடிந்து போக,  அப்பாவைத் தேற்றுவதற்குள்ளாக துவண்டு போய் விட்டாள் அதுல்யா. அதுவரை இளங்கோவுக்கு விஷயம் தெரிவிக்கப்படவில்லை என்று அறிந்து கொண்ட சரண்யா இளங்கோவுக்கும் தகவல் தர, பதறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள் இளங்கோவும் அவன் தாயும். நித்யாவுக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்து இனி அவளுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்து கொஞ்சம் ஆசுவாசப்பட்ட இளங்கோவுக்கு விஸ்வா அங்கிருப்பதைப் பார்த்து ஒரே ஆச்சர்யம். ப்ளட் டோனரை ஏற்பாடு செய்ததும் விஸ்வாதான் என்று தெரிய வர, ஒரு தேவதா விசுவாசமே விஸ்வா மீது தோன்றிவிட்டது இளங்கோவுக்கு.

நட்சத்திர டென்னிஸ் ப்ளேயர்களான அதுல்யாவும், விஸ்வாவும் இருப்பது தெரிந்து, அவர்களைப் பார்க்க அங்கே கூட்டம் சேர ஆரம்பித்தது. அதை எல்லாம் உணரும் நிலையில் அதுல்யா இல்லை. ஆனால் பொதுநலன் கருதியும், அதுல்யாவின் பாராமுகம் இதயத்தைக் குத்தி ரணமாக்கியதாலும் நொந்து போனவனாகக் கிளம்பி விட்டான் விஸ்வா.

கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திலிருந்து மீண்ட நித்யாவுக்கு நடந்ததெல்லாம் நினைவில் ரீவைண்டாக… உடம்பெல்லாம் பதறியது. “ஐயயோ, என்னோட பணம்! நான் சேத்து வெச்ச மொத்த பணமும் போச்சே! என்னை மோசம் செஞ்ச அந்தப் பாவி நல்லா இருப்பானா!”  பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டே படுக்கையிலிருந்து எழ முயற்சிக்க, நித்யாவுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் இருந்த இளங்கோவும் அவன் தாயும் பதறிப் போய் அவளைத் திரும்பவும் படுக்கையில் கிடத்தினர். 

இளங்கோ கலைந்து போயிருந்த அவள் கேசத்தைக் காதோரம் ஒதுக்கி, “இப்போ நீ இருக்கிற நிலமையில இப்படி உணர்ச்சி வசப்படக்கூடாது நித்துமா” என்றான் அளப்பரிய காதலுடன். இளங்கோவின் பார்வையில் வெளிப்பட்ட அதீதப் பரிவில் பாகாய்க் கரைந்து போனாள். “இத்தனை நாள் தன் சுயநலத்திலும், ஆணவத்திலும் இத்தனை அருமையான கணவனின் அன்பை உதாசீனப்படுத்தி நாட்களை வீணடித்து விட்டேனே” தன்னிரக்கத்தில் தொண்டை அடைத்தது.

“நான் எங்கே இருக்கேன்? நீங்க எப்படி இங்க வந்தீங்க?” மண்டையில் வலி சுளீரென இழுக்க,, ஈனஸ்வரத்தில் கேட்டாள் நித்யா. 

இளங்கோ பதில் சொல்லுமுன்,  ஆஃபீஸ் செல்லும் வழியில், காலையுணவைக் கொடுத்து விட்டு நித்யாவையும் பார்த்துப் போக வந்த அதுல்யா நித்யா சுயவுணர்வுக்கு மீண்டு விட்டதையறிந்து மகிழ்ந்து போனவளாக, “ஒரு வாரமா கண்ணுக்குக் கண்ணா உன்னைப் பாத்துக்கறதே அத்தையும், இளங்கோ மாமாவும்தான். இந்த வயசுலயும் ராப்பூராத் தூக்கம் முழிச்சு அத்தை உன்னை எப்படிக் கவனிக்கறாங்க தெரியுமா?”

“என்ன அதுல்யா, நித்யா எங்க வீட்டுப் பொண்ணு, நாந்தானே கவனிக்கணும்? பாவம் உங்கம்மா! நித்யாக்கு இப்படி ஆனது தெரிஞ்சதும் ரொம்பவே உடைஞ்சு போயிட்டாங்க. உடம்பு முடியாதவங்க வேற! வீட்டையும், பைரவியையும் அவங்கதானே பாத்துக்கறாங்க? சரண்யாவும் படிக்கிற பொண்ணு! பாரு… எத்தனை அருமையா சமைச்சு எங்களுக்குக் குடுத்தனுப்பறாங்க? இதுக்கு மேல அவங்களால வேறென்ன செய்ய முடியும்?” தனக்காகவும், தன்னுடைய அம்மாவுக்காகவும் பரிந்து பேசும் மாமியாரை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் விழிகளில் நீர்த்திரையிட்டது.

‘இவங்களைத்தானே ராட்சசி, பணப் பிசாசு, மண்டையப் போட்டுட்டாங்களான்னு கல் நெஞ்சத்தோடு கேட்டே?’ மனசாட்சி குத்திக் கிழித்தது. 

சமாளித்துக் கொண்டவள் “ஏன்? எனக்கென்னாச்சு?” என்று கேட்டாள். 

“அதை நீதான் சொல்லணும். அன்னைக்கு வீட்டை விட்டுப் போன நீ ரொம்ப நேரமா வீட்டுக்கு வரல. நடுரோட்ல வண்டில அடிபட்டு நீ கெடக்கறதா என்னோட ஃப்ரெண்ட் மூலமாத் தகவல் கெடச்சு, பதறியடிச்சுகிட்டு வந்து உன்னை ஆஸ்பத்திரியில சேத்தேன். ஆமா நீ யார்கிட்டயும் சொல்லாம எங்கே போனே? எங்க எல்லார் மனசுலயும் இதே கேள்விதான் ஓடிகிட்டிருக்கு. ஆமாதானே மாமா?” இளங்கோவையும் துணைக்கழைத்தாள்.

தங்கையின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கூனிக் குறுகிப் போயிருந்தது நித்யாவின் உள்ளமும், உடலும்!

‘பணம். பணம்! இந்த மூன்றெழுத்துப் போதைக்கு அடிமையாகித்தானே அன்பு, பாசம், காதல், உறவு என்ற மூன்றெழுத்துகளுக்கான மகத்துவத்தைப் புரிந்து கொள்ளாத அறிவிலியாகிப் போனேன். புகுந்த வீட்டைப் பற்றி ஒன்றுக்குப் பத்தாகப் பெற்றவர்களிடம் சொல்லி மாமியாரையும், கணவனையும் வில்லத்தனமாகச் சித்தரித்தேனே… இப்போது அந்தப் பணத்தையும் இழந்து கையாலாகாதவளாகப் படுக்கையில் கிடக்கிறேனே!’ கண்ணீர் பெருகித் தலையணையை நனைக்க, நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் ஆதியோடந்தமாகச் சொல்லி முடித்தாள்.

அதுல்யாவுக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தப் பண விஷயத்தால் தானே காலை எழுந்தது முதல் தூங்கப் போகும்வரை வீட்டில் அம்மாவுக்கும் நித்யாவுக்கும் பஞ்சாயத்து நடக்கும். மற்றவர்களின் நிம்மதியைப் பறித்து ரணகளப்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேல் இவளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பப் பணம் தேவைப்படுகிறதென்றுதானே அந்த விஸ்வாவிடம் கையேந்த வேண்டியதாகிப் போனது? அவன் பார்வையையும், பேச்சையும் காதலென்று நினைத்து இப்போது நெஞ்சம் புண்ணாகிக் கிடப்பது யாரால்? எல்லாம் இவளால்தானே? இப்போது தன் வாழ்நாள் லட்சியத்தைத் துறந்து, தான் எடுத்திருக்கும் முடிவுக்கும் இவள்தானே காரணம்? நித்யாவின் மேல் கோபம் குமுறிக் கொண்டு வர நித்யா நோயாளி என்பதை மறந்து “ஐயோ அக்கா! இப்படியா முட்டாள்தனமா இருப்பே! லட்சக்கணக்கில் பணத்தைப் பறி குடுத்ததுமில்லாம இப்படி ஆஸ்பத்திரியில கெடக்கறியே! எங்க யார்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே? இப்படி எல்லாத்தையும் பாழாக்கிட்டியே!” கண்களில் நீர் திரள ஆவேசமாகக் கத்தினாள்.




“அதுல்யா, என்ன இது, இத்தனை கடுமையாப் பேசற? அவளே மறுபிறவி எடுத்த மாதிரி இப்போதான் கண்ணு முழிச்சுப் பாத்திருக்கா. பணமா பெரிசு? அவ உயிர் பொழச்சு வந்தா போதும்னு நான் வேண்டாத தெய்வமில்ல!” இளங்கோ அழுகுரலில் சொல்ல,

“ஆமாம் அதுல்யா, நித்யா எங்க வீட்டு மகாலக்ஷ்மி, அவ மறுபடி எங்க வீட்ல வலது காலை எடுத்து வெச்சு எம்மகனோட குடியும் குடித்தனமுமா இருக்கணும்னு நான் எங்க குலதெய்வத்துக்குப் பணம் முடிஞ்சு வெச்சிருக்கேன். நித்யாவை ஒண்ணும் சொல்லாதம்மா..” வேண்டிக் கேட்டுக் கொண்டது அந்தத் தாயுள்ளம்.

“தெய்வமே..என்ன இது! இப்படி ஒரு தூய அன்பையும், காதலையும் நான் எப்படி அறிந்து கொள்ளாமல் கண்மூடியிருந்தேன். இனி ஒரு நொடியும் இந்த அன்பையும் காதலையும் இழக்க மாட்டேன். இது சத்தியம்.” மனம் திருந்திய நித்யா கணவனிடமும், மாமியாரிடமும் மன்னிப்பை வேண்டினாள். ஆனால் அவள் மனம் மாறுவதற்கு கொடுத்த விலைதான் ரொம்பவே அதிகம்.

தன்னிலை மறந்து அக்காவிடம் கோபமாகப் பேசியதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஆஃபீஸ்  கிளம்பினாள் அதுல்யா. வாடிப் போன ரோஜாவாக அவளைப் பார்க்க மனதை என்னவோ செய்தது இளங்கோவிற்கு. 

நித்யாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள் சியாமளாவும், மிருதுளாவும். விஸ்வா, அதுல்யாவுக்கிடையே பூத்த காதலையும், அது எப்படி மலராமல் மொட்டாகவே இருக்கிறது என்பதையும், வீட்டில் காதலென்றாலே எதிர்க்கும் பெரியண்ணாவின் எதேச்சாதிகாரத்தையும் இளங்கோவிடம்  சொன்னதோடு அதுல்யாவின் அம்மாவிடம் இது பற்றித் தான் பேசியதையும், அதற்கு அவர்கள் ஆமோதிப்பாக எதையும் சொல்லவில்லை என்பதையும் சொல்லி வருந்தினாள் சியாமளா. 

அதுல்யா, விஸ்வாவை எப்படியாவது வாழ்க்கை என்னும் விளையாட்டு மைதானத்தில் எப்போதும் இணையராக விளையாட வைக்க வேண்டுமென்று இளங்கோவின் உதவியையும் கேட்டிருந்தனர். நித்யா கண்விழிக்கத்தான் காத்திருந்தான் இளங்கோ.

இதோ கண்விழித்து விட்டாள் அவன் கண்மணி. இனி அடுத்த வேலை அதுல்யாவின் காதலை நிறைவேற்றுவதுதான். அதுல்யாவாவது தன்னுடைய மச்சினி. ஆனால் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உதவியதோடு, நித்யாவின் உயிரைக் காப்பாற்ற தக்க சமயத்தில் டோனரை ஏற்பாடு செய்து கொடுத்த விஸ்வாவின் உயர்ந்த உள்ளத்துக்கு எப்படிப் பிரதியுபகாரம் செய்யப் போகிறோம் என்ற தவிப்பில் இருந்தவனுக்கு, இந்த வாய்ப்பை நழுவ விட விருப்பமில்லை.

முதலில் மாமியாரிடம் பேசிச் சம்மதம் வாங்கிய பிறகு அதுல்யாவிடம் பேசலாம் என்று வீட்டுக்குப் போனவனுக்குக் காத்திருந்தது பெரிய பேரதிர்ச்சி.

பின்னே? ஹாலில் விஸ்வாவின் சின்ன அண்ணா, பெரியண்ணா, சியாமளா, எல்லோரும் அமர்ந்திருக்க அவர்கள் முன்னேயிருந்த டீப்பாயில் தேங்காய், பழம் வெற்றிலை, பாக்கு, பூ, ஸ்வீட் இத்யாதியுடன் ஒரு பெரிய தாம்பாளம் வீற்றிருந்தது.

விஸ்வாவின் பெரியண்ணா லக்ஷ்மியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 

இதோ பாருங்கம்மா. நானும் உங்களைப் போலத்தான் ரொம்பக் கட்டுப்பெட்டியா, காதலை மூர்க்கத்தனமா எதிர்த்துகிட்டிருந்தேன். என் பேச்சை என் தம்பிகள் மீறக்கூடாது, எப்பவும் மூணு பேரும் ஒரே வீட்ல, ஒண்ணாதான் இருக்கணுன்னு ஒரு கட்டுப்பாட்டை விதிச்சிருந்தேன். அது எந்தளவுக்கு என் தம்பிகளோட எதிர்காலத்தைப் பாதிச்சிருக்குன்னு தெரியாமலே இருந்தேன். என்னோட பெரிய தம்பிக்கு ப்ரமோஷனோட கிடைச்ச ட்ரான்ஸ்ஃபரை  வேண்டாம்னு உதறித் தள்ளற அளவுக்கு அவன் என் மேல மரியாதை வெச்சிருக்கான். மனசு கோணாம நடக்கிற விஸ்வாவுக்கு தன்னோட மனசுல உள்ளத தைரியமா எங்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அவனும் எங்கிட்ட பணிவா நடந்துகிட்டிருக்கான். இப்பிடி அவங்கள அடக்கி ஆள்றதுல என்னோட ஈகோ வேணா பெருமைப்பட்டுக்கலாம். ஆனா அவங்களோட சந்தோஷமும், நிம்மதியும் பறிபோயிடும்னு நான் இப்போதான் புரிஞ்சிகிட்டேன். இதை எனக்குப் புரிய வெச்சது என்னோட தம்பி மனைவி சியாமளாதான். விஸ்வா அவளுக்குப் பெறாத பிள்ளை. நீங்க தைரியமா உங்க மகள் அதுல்யாவை என் தம்பிக்குக் கல்யாணம் செய்து தரலாம். அவங்க வளமான வாழ்க்கைக்கு நான் உத்தரவாதம் தர்றேன். நீங்க பொண்ணைப் பெத்தவங்க.நல்லா யோசிச்சு ஒரு சாதகமான முடிவை சொல்லுங்க.” 

அவர் பேசி நிறுத்தியதும் லக்ஷ்மி “நீங்க சொல்றபடி பாத்தா அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறாங்களா?” என்று கேட்டாள். 

இடைப்புகுந்த இளங்கோ “காதல்னா கெட்ட வார்த்தை இல்லை அத்தை! ஒத்த அலைவரிசை உள்ளவங்களுக்கிடையே உள்ள ஒரு ஈர்ப்பு, அன்பு, அக்கறையுணர்வு. அவங்களுக்கிடையில் உள்ள பரஸ்பரப் புரிதல் – இதுதான் காதல். இதை ஏன் நீங்க தப்பாப் பாக்கறீங்க. இது வரைக்கும் அதுல்யாவோ, விஸ்வாவோ ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறதா சொல்லிக்கிட்டதே இல்லை. ரெண்டு பேரும் டென்னிஸ் வீரர்கள். சேர்ந்து விளையாடி பல வெற்றிகளைக் கண்டவங்க. வாழ்க்கையிலும் அவங்க இணைஞ்சா அது அவங்க எதிர்காலத்துக்கு நல்லதுதானே. யோசிச்சுப் பாருங்க அத்தை” என்று தன் பங்குக்குச் சில கருத்துகளை முன்வைக்க, அதுல்யாவின் அப்பாவும் ஆமோதிப்பாகத் தலையாட்ட, லக்ஷ்மியின் சம்மதத்துடன் தாம்பாளம் கை மாறியது.

“என்னங்க… எனக்கு எந்த வேலையுமே இல்லாம பண்ணிட்டீங்களே” இளங்கோ ஆதங்கத்துடன் சொல்ல “எனக்கு வேற வழியே தெரியல தம்பி. விஸ்வா, அதுல்யா ரெண்டு பேருமே மனசு வெறுத்து இனிமே டென்னிஸ் போட்டிகள்ல கலந்துக்கப் போறதில்லைனு  விஜயசந்திரிகா கிட்ட சொல்லியிருக்காங்க. ரெண்டு பேருக்கும் விம்பிள்டன் போட்டியில கலந்துக்கறதுதான் வாழ்நாள் லட்சியமே. அதைப் பாதியில கலைக்க விடலாமா? போதாக்குறைக்கு அதுல்யா எங்கயோ வெளியூருக்கு டென்னிஸ் கோச் வேலைக்குப் போறதா ப்ளான் பண்ணிகிட்டிருக்கறதா கேள்விப்பட்டேன். அதான் பெரியமாமாகிட்ட உண்மையை எல்லாம் சொல்லி இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றாள் சியாமளா.

எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிந்ததே என்று இளங்கோ சந்தோஷப்பட்டான்.

விஸ்வாவிடம் கடைசியாக ஒரு முறை பேசி விட்டு உன் முடிவைச் சொல் என்று விஜயசந்திரிகா கட்டாயப் படுத்த …வேண்டா வெறுப்பாக ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு வந்தாள். அதே போல் விஸ்வாவைப் கட்டாயப்படுத்தி அழைத்து வந்த மிருதுளாதான் அதுல்யாவின் கண்களில் முதலில் பட்டாள்.  கோபத்துடன் திரும்பிப் போக எத்தனித்தவளின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு போன மிருதுளா..

முகத்தில் ஒரு வாரத் தாடியுடன் சோகமே உருவாய் அமர்ந்திருந்த விஸ்வாவின் கரங்களுடன் இணைத்து…

“எங்கே ரெண்டு பேரும் இப்ப பழம் விட்டுக்கோங்க..” என்று சிரித்தாள்.

“சே… என்ன இது விளையாட்டு” வெறுப்புடன் அதுல்யா கைகளை உதறினாள்.

“விளையாட்டு தான் அதுல்யா‌! ரெண்டு பேரும் காதலை சொல்லாம மூடி, மூடி வெச்சுகிட்டீங்க! சொல்லாத காதல் செல்லாதும்மா! விஸ்வா மாமாவை  காதலிக்கற மாதிரி நான் விளையாடினேன், அவ்வளவுதான். எங்கே ரெண்டு பேரும் இப்பவாவது ஐ லவ் யூ ன்னு சொல்லிக்குங்க பாக்கலாம்” என்று கலாய்த்தாள். 

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் தடுமாறிய அதுல்யா விஸ்வாவைப் பார்க்க…அவன் பார்வையே அவன் மனதைப் பிரதிபலித்தது.

மறைவிலிருந்து வெளிப்பட்ட விஜயசந்திரிகா இரண்டு பேரிடமும் டென்னிஸ் ராக்கெட், பந்தைக் கொடுத்து‌‌ “ரெண்டு பேரும் போய் ஒரு ஃப்ரண்ட்லி… ஸாரி… லவ்லி கேம் விளையாடுங்க” என்று துரத்த..

இரண்டு பேரும் விளையாட ஆரம்பிக்க… பின்னணியில் “பறக்கும்! பந்து பறக்கும்! அது பறந்தோடி வரும் தூது!” என்ற பாடலை மொபைலில் ஒலிக்க விட்டாள் மிருதுளா.

(சுபம்)




What’s your Reaction?
+1
9
+1
5
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!