Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-10

10

மொபைல் விடாமல் அடிக்க, பேசலாமா வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் அதுல்யா செயலற்று நின்றாள். வீட்டில் இப்போதிருக்கும் கலவர நிலவரத்தில் அசோக்கிடமிருந்து வரும் தகவல் புதிதாக ஏதேனும் பிரச்னையைத் தராமல் இருக்க வேண்டுமே..! இதயத்தில் லப் டப் சத்தம் படு வேகத்தில் எகிற,.. மொபைலை எடுத்துக் கொண்டு வெளி வராந்தாவுக்கு வந்தாள்.

அதே நேரம், ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜாகி பெரியண்ணாவும், விஸ்வாவும் வீட்டுக்குள் நுழைய,  நெய் வாசமும், ஏலக்காய் மணமுமாய் வீடே கமகமத்தது. 

‘இன்றைக்கென்ன வீட்டில் விசேஷம்? யாருக்கும் பிறந்த நாளோ? இல்லை. சின்னண்ணாவின் திருமண நாள் கூட இல்லையே!’ விஸ்வா யோசித்தான்.

கைகளில் பெரிய பார் சாக்லேட்டுகள் உருகி வழிய முகத்திலும் வாயிலும் சாக்லேட்டை ஈஷிக் கொண்டு மனம் கொள்ளா சந்தோஷத்துடன் தலைகால் புரியாமல்  “பெரிப்பா, விஸ்வா” என்று கூவியபடி ஓடி வந்தார்கள் வினயும், விஷ்ணுவும். எங்கே அவர்கள் பெரியண்ணா மீது வேகமாக மோதி விடுவார்களோ என்ற அச்சத்தில் விஸ்வா “பசங்களா, மெதுவா! பெரிப்பா இப்பதான்… ஆஸ்…” என்று ஆரம்பித்தான்.

அவனைத் தொடர விடாமல் பெரியண்ணாவின் “உஷ்” என்ற ஒற்றைச் சொல் அவனை அடக்கியது.

குழந்தைகளின் குதூகலமும், ஏதோ விசேஷமாக இனிப்புத் தயாராகும் வாசமும் வீட்டுக்கு விருந்தாளிகள் யாரோ வந்திருப்பதை உணர்த்த, தம்பியிடம் வீட்டில் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்பதைக் குறிப்பால் உணர்த்திவிட்டு, வந்திருப்பது யாராக இருக்கும் என்ற யோசனையுடன் உள்ளே சென்றார் பெரியண்ணா.

வீட்டுக்குள் போகப் பிடிக்காமல் வாசலில் இருந்த பன்னீர் மரத்தடியிலேயே நின்றுவிட்டான்  விஸ்வா. பன்னீரின் சுகந்தத்தைச் சுமந்து கொண்டு சில்லென்ற காற்று வீச “ம்ம்ம்..” என்று ஆழமாக மூச்சை இழுத்து அவன் நுரையீரல்களை நிரப்பிக் கொண்டான். சற்று முன்வரை இருந்த இறுக்கமான உணர்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தவன் மனசு பூராவும் அதுல்யாதான் நிறைந்து நின்றாள். 

‘பாவம்! அவளுக்கிருக்கும் ப்ரச்னையில், இப்படி மனிதாபிமானத்தோடு உதவ வந்தாளே. இல்லாவிட்டால் பெரியண்ணா இப்படி மயங்கி விழுந்த விஷயம் தனக்கு உடனடியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!  பெரியண்ணாக்கு டென்ஷனாம்… அதனால்தான் இரத்த அழுத்தம் வெகுவாகக் கூடியிருக்கிறதாம்… டாக்ரடர் சொல்கிறார். இவர் மயக்கம் போட்டு விழுமளவுக்கு என்ன டென்ஷன்?

‘மயக்கம் தெளிந்து, நிதானத்திற்கு வந்த பெரியண்ணா அவளிடம் கொஞ்சம் இதமாகப் பேசியிருக்கலாம். அவர் பேசிய தோரணையில் அவளுடைய மான் விழிகளில் ஒரு மிரட்சி. முகம்கூட ஏதோ சிந்தனையில் அலைபாய்ந்து கொண்டிருந்ததே.’




சுட்டு விரலால் அவள் மோவாயை நிமிர்த்தி, அவள் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்து..

“காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு

வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு

போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே

நாதவடிவானவளே நல்ல உயிரே  கண்ணம்மா….

எதற்கும் கலங்காதே ..உனக்காக நானிருக்கிறேன்” என்று ஆறுதல் சொல்லத் துடித்த தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவன் பட்ட கஷ்டம்! அவனுக்குத்தானே தெரியும். 

பெரியண்ணாவின் எதிரில் அவளோடு சகஜமாகப் பேச முடியவில்லை. அதனாலென்ன? இப்போது ஃபோனில் பேசி விடலாமா? இல்லை நாளைக் காலை எங்காவது நேரில் வரச் சொல்லிப் பேசலாமா?  மனசுக்குள் பட்டி மன்றம் நடத்தியபடியே மரத்தின் மேல் சாய்ந்து கண்ணை மூடி நின்றவனை விழி திறக்க வைத்தது கும்மென்ற மல்லிகையின் மணம்.

எதிரே எழிலுருவாய் மோகனப் புன்னகையோடு நிற்பது யார்? ம்ருதுளாவா? ம்ருதுளாவேதான். அய்யோடா! குட்டியூண்டுப் பெண்ணாய் பாவாடை சட்டையில் பார்த்த ம்ருதுளாவா இவள்? 

சிம்பிளாக அதே சமயம் அவள் சந்தன நிறத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் ஜரிகைப் புள்ளிகளிட்ட கருநீலப் புடவையும் அதற்குப் பொருத்தமான ப்ளவுசும்! ஹை நெக் ப்ள்வுஸ் அவளை இன்னும் உயரமாகக் காட்ட ஒயிலாக விஸ்வாவை நேருக்கு நேராகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

என்னவொரு தீர்க்கமான பார்வை!

வேறொரு சமயமாக, அதாவது அதுல்யாவைச் சந்திப்பதற்கு முன் ம்ருதுளாவைப் பார்த்திருந்தால் விஸ்வா சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்று பாடியிருப்பானோ என்னவோ?  ஹ்ம்ம்… பார்வை என்னவோ ம்ருதுளா மீதிருந்தாலும் சிந்தை முழுக்க அதுல்யாதான் நிறைந்திருந்தாள். ம்ருதுளாவிடம் ஒன்றுமே பேசத் தோன்றாமல் மௌனத்தில் உறைந்திருந்தான்.

“ஹலோ! சின்ன மாமா, என்ன இன்னேரத்துக்கே தூக்கமா இல்ல… உள்ளம் கொள்ளை போகுதே, உன்னைக் கண்ட நாள் முதல்னு ஏதாவது பகல் கனவா?”

கல்லூரி மாணவிக்கேயுரிய உற்சாகத் துள்ளலுடன் ம்ருதுளா பேச, எங்கே பெரியண்ணா காதில் விழுந்துவிடப் போகிறதோ என்ற அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான் விஸ்வா.

“என்னது ஏதோ அம்னீஷியாவிலிருந்து மீண்டு, நான் எங்க இருக்கேன்னு சுத்துமுத்தும் பாப்பாங்களே அந்த மாதிரிப் பாக்கறீங்க? உங்க வீட்டு வாசல்லதான் நிக்கறீங்க சின்ன மாமா. நான் ம்ருதுளா… உங்க ச்யாமளா அண்ணியோட தங்கை” – தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபடி கலகலவெனச் சிரித்தாள் அந்த வாயாடி.

அதுல்யாவைப் பற்றிய சிந்தனைகளில் இருந்து பெரும் ப்ரயத்தனத்துடன் விடுபட்டான். “ஹாய் ம்ருதுளா! உன்னை ஸ்கூல் பொண்ணா இருக்கும்போது பாத்தது. நல்லா வளந்துட்டியே!”




“நீங்க மட்டுமென்னா… ஒல்லிப் பிச்சானா இருந்தீங்க. இப்போ அப்படியே வாட்ட சாட்டமா ஹீரோ மாதிரி…” பேசிக் கொண்டே போனவள், ஓவராப் பேசறோமோ என்ற நினைப்பில் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“ஆமா! அதென்ன சின்ன மாமான்னு கூப்பிடுற? எனக்கு அத்தனை மரியாதையெல்லாம் வேண்டாம். விஸ்வான்னே கூப்பிடு. அதுதான் எனக்குப் பிடிக்கும்.”

விஸ்வா இயல்பாகச் சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் போக, அதற்குள் ம்ருதுளாவின் மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க, காதுகளில் இனிய மணியோசை கேட்க ஆரம்பித்துவிட்டது.

“ஏய்..என்னது? நோ! நீ எதுக்கு இங்கே வந்திருக்கேன்னு தெரியுமில்ல?” அவளுடைய “ஆறாம் அறிவு” சுட்டு விரலை உயர்த்தி மிரட்ட, அவளுடைய இளமை ததும்பும் நெஞ்சமோ “கொஞ்சம் தயவு பண்ணுங்க பாஸ்! இப்படி ஒரு ஹேண்ட்சம்மான முறை மாப்பிள்ளை கண்ணெதிரே! இப்போதைக்கு கொஞ்சமா லுக்காவது விட்டுக்கறேனே” என்று அறிவிடம் கெஞ்சியது.

“என்னவோ பண்ணித் தொலை. ஆனா உன்னோட லட்சியத்துலருந்து ஏதாவது பின் வாங்கினே, மகளே தொலைச்சிடுவேன் தொலைச்சு!”

அடிக்குரலில் கறாராக மிரட்டிய அறிவு கொஞ்சமாக இடம் கொடுக்க, ம்ருதுளாவின் கனவு முழுக்க விஸ்வாதான் விஸ்வரூபமெடுத்திருந்தான்.

தஞ்சை சாஸ்த்ராவில் கோல்ட் மெடலுடன் இஞ்சினீரியரிங் முடித்திருந்த ம்ருதுளா சென்னைக்கு எம்.டெக் படிப்பதற்காக வந்திருக்கிறாள். ஹாஸ்டல் பிடிக்காததால் பேயிங் கெஸ்ட்டாக ஒரு இடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அக்காவையும், அக்கா மகன்களையும் பார்த்துப் போக வந்தாள். பள்ளிப் படிப்பு முதலே ஹாஸ்டல் என்பதால் அடிக்கடி அவள் சென்னைக்கு வந்ததில்லை. அப்படி அவள் ஓரிருமுறை வந்தபோதும் விஸ்வாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. இங்கே படித்து முடித்துவிட்டு அமெரிக்கா போய் பி.ஹெச்.டி முடிக்க வேண்டுமென்பதுதான் அவள் லட்சியம். அதுவரை தன்னுடைய கல்யாணப் பேச்சை எடுக்க கூடாதென்பது அவள் பெற்றோர்களுக்கு அவள் போட்டிருக்கும் கட்டளை. 

‘இப்போதென்னடாவென்றால் நம் மனமே இப்படி அலைபாய்கிறதே! விஸ்வா டென்னிஸ் ப்ளேயர். அவன் எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருப்பான். அவன் மனதில் என்னைப் பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும்?’ என்று நினைத்தபடியே விடியும் நேரத்தில் தூங்கிப் போனாள்.

விஸ்வாவும் கூட மறுநாள் ஆஃபீசில் காத்திருக்கும் வேலைகளும், மாலையில் செல்ல வேண்டிய டென்னிஸ் ப்ராக்டீசும் கண்ணெதிரே வந்து பயமுறுத்த இமைகளை இறுக மூடிக் கொண்டவன் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

ஆனால் விடியும் வரை தூங்காமல் விழித்திருந்தவர்கள் பெரியண்ணாவும், அதுல்யாவும்தான்.

ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவரை, “ஆசீர்வாதம் பண்ணுங்க பெரிய மாமா” என்றபடி அவர் பாதம் பணிந்து நமஸ்கரித்தாள் ம்ருதுளா. 

‘ஓ! ம்ருதுளா! இவளை எப்படி நான் மறந்தேன்? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்திருக்கிறேனே!”

மனது கொஞ்சம் ஆசுவாசமாக, “ஏம்மா, ச்யாமளா! ம்ருதுளா வரப் போறதை ஏன் சொல்லல? ஃபோன் பண்ணியிருக்கலாமே!” என்றார்.

“அவளே சொல்லாம,கொள்ளாம சர்ப்ரைஸ்னு வந்து நின்னா மாமா. நான் உங்க மூணு பேருக்குமே ஃபோன் செஞ்சேன். உங்க பெரிய தம்பி மட்டும் அட்டெண்ட் பண்ணாரு. உங்க ரெண்டு பேரு ஃபோனுமே ஸ்விட்ச்ட் ஆஃப்.” சொல்லிக் கொண்டே கேசரி, உருளைக் கிழங்கு போண்டா தட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள் ச்யாமளா. “உங்கள மாதிரியே ம்ருதுவுக்கும் உருளை போண்டான்னா உயிர்.”

“டேய் விஷ்ணு, எங்கடா உங்க சித்தப்பா? வந்துட்டார்னு சொன்னியே காணோமே?”

“விஸ்வா வெளில இருக்கான். வந்துடுவான். ஆஸ்பத்திரியில் இருந்த போது இரண்டு பேருடைய ஃபோனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்ததை ஆன் செய்ய மறந்து விட்டது.”

“ட்ரை க்ளிசரைட்ஸ், எல்.டி.எல் கொலஸ்ட்ரால் ரெண்டுமே எகிறிக் கிடக்கு. எண்ணை, நெய் பலகாரம் சாப்பிடறதுல கொஞ்சம் கவனம் தேவை” – டாக்டரின் எச்சரிக்கை ஒருபுறம் மிரட்ட, கையிலிருக்கும் தட்டில் நெய் மினுமினுக்க, முந்திரி கண்ணடிச்சுக்  கண்ணா கேசரி திங்க ஆசையான்னு மறுபுறம் கூப்பிட, முடிவில் தட்டு காலி.

சாப்பிட்டுக் கொண்டே ம்ருதுளாவின் படிப்புப் பற்றி விசாரிக்க அவளுடைய அமெரிக்கா டாக்டரேட் கனவு தெரிய வந்தது. 

‘இருக்கட்டுமே… கல்யாணம் செஞ்சுகிட்டுப் படிக்கட்டுமே. படிக்கிறதுக்கு நம்ம வீட்ல யாரும் தடை செய்யப் போறதில்லையே.  பரவால்ல, ம்ருதுளாவும் சென்னைக்கே வந்துட்டதால எப்படியும் அக்காவைப் பாக்க அடிக்கடி வீட்டுக்கு வரத்தான் போறா. விஸ்வாவோட அபிப்ராயம் தெரிஞ்சுகிட்டா, தக்க சமயத்துல சம்மந்திகிட்ட பேசி முடிவெடுத்துடலாம். விஸ்வா மாதிரி ஒரு மருமகன் கிடைக்கிறான்னா அவருக்கு மட்டுமென்ன கசக்கவா போகுது? நல்ல சமயத்துல அந்த ஆண்டவன் நல்ல வழியைக் காமிச்சிருக்கான். ஏனோ தெரியல, அந்த அதுல்யாவைப் பாத்தா ஏதோ மனசுக்குள்ள நிரடுது…’ கேசரி, போண்டா சாப்பிட்ட அசிடிடியையும் மீறி அதுல்யாவின் நினைவு அதிக நெஞ்செரிச்சலைத் தந்தது பெரியண்ணாவுக்கு.




அதுல்யாதான் பாவம், அசோக்கிடமிருந்து வந்த தகவலால் அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அசோக் பேச்சை இளங்கோ தட்ட மாட்டான், கட்டின பெண்டாட்டியைவிட இளங்கோவுக்கு அசோக்தான் உசத்தி  என்று எப்போதோ கணவன் மேலிருந்த கடுப்பில் நித்யா சொல்லியிருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக விவரம் தெரிந்து கொண்டு அசோக்கைப் பார்க்க அதுல்யா போனதே பைரவிக்காகத்தான். இளங்கோவின் மனவோட்டத்தைத் தெரிந்து கொண்டால் பைரவியைச் சாக்காக வைத்து நித்யாவையும், இளங்கோவையும் சேர்த்து வைக்கலாம் என்பது அவள் எண்ணம். அசோக்கும் குழந்தையைப் பார்க்க வேண்டுமென்ற பெரும் ஏக்கத்தில் இளங்கோ இருக்கிறான் என்று சொன்னதும் சற்றே நிம்மதியானாள். ஆனால் கணப்பொழுதில் அந்த நிம்மதி காணாமல் போய்விட்டதே. 

தெருவில், இளங்கோவின் பைக்கில் பைரவி மோதிக் கொண்டதையும், நித்யா தெருவில் வைத்து இளங்கோவைத் தரக்குறைவாகப் பேசியதையும் அதனால் இளங்கோ நித்யாவை அடிக்க கையை ஓங்க வேண்டியதாகி விட்டது என்றும் ஃபோனில் சொன்ன அசோக்கிடம், “என்னதான் இருந்தாலும் கட்டுன பெண்டாட்டிய நாலு பேர் பாக்க அடிக்க கை ஓங்கலாமா?  அதுவும் குழந்தை கண்ணெதிர்க்க? அப்புறம் அந்தக் குழந்தைக்கு அப்பா மேல பாசம் எப்படி வரும்? பயம்தான் வரும். விவரமா சொல்றாளே… அப்பா அம்மாவை அடிக்கக் கை ஓங்கினார்னு! உங்க ஃப்ரெண்ட் படிச்சவர்தானே, இந்த அடிப்படை மானர்ஸ் கூடவா அவருக்கில்ல?” என்று பொரிந்தாள் அதுல்யா.

“கொஞ்சம் பொறுமையா பேசுங்க மேடம். என்னோட ஃப்ரெண்டுக்கு மேனர்ஸ் இருக்கறதாலத்தான் உங்க எதிர்க்க அவன் எதுவும் பேசல. உங்க அக்கா அவனையும் அவங்கம்மாவையும் பிள்ளைதாச்சியா இருக்கற தங்கச்சியையும் எப்படி பேசி… இல்லல்ல… ஏசி இருக்காங்கன்னு உங்க அக்காவையே கேளுங்க. மாசமா இருக்கற தங்கச்சிக்கு சீமந்தம், வளைகாப்பு செய்யணும்னு எங்கிட்ட பணம் கேட்டிருந்தான். இப்போ பாவம், தங்கச்சி புருஷனுக்கு பஸ் ஆக்சிடெண்ட்டாகி காலில் எலும்பு முறிவாம். ஊருக்குப் போறதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்லிட்டுப் போக வந்தவன்தான் வழியில உங்கக்காவைப் பாத்து மனசு உடைஞ்சு போய் அழுகிறான். அவன் மனசுல இன்னும் உங்கக்கா மேல காதல் இருக்கறதாலத்தான் இத்தனை ப்ரச்னைக்குப் பிறகும் டைவர்ஸ் பண்ண யோசிக்கிறான். அது மட்டுமில்லாம பைரவி மேல அவன் உயிரையே வெச்சிருக்கான். அப்பான்னு ஓடிவந்த அந்தக் குழந்தையை அவன் கிட்டப் போகவிடாம தடுத்திருக்காங்க உங்க அக்கா. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? நீங்க உங்கக்கா பக்க நியாயத்தை மட்டும் கேட்டுட்டு எதையும் முடிவு பண்ணாதீங்க. உங்களால முடிஞ்சா இளங்கோவுக்கு ஏதாவது உதவியும் ஆறுதலும் தர முடியுமான்னு பாருங்க.” அசோக்கும் கோபத்தில் படபடத்து விட்டு ஃபோனை வைத்து விட்டான்.

‘என்ன இது, பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிஞ்ச கதையா இருக்கே! அசோக் கிட்ட நாம உதவி கேக்கப் போனா, அவர் இப்படி சொல்றாரே! பாவம் இளங்கோ ரொம்பவே துவண்டுதான் போயிருந்தார். பாசமும் நேசமும் நிறைஞ்ச மனுஷன். அம்மா மேலயும், தங்கச்சி மேலயும் இவ்வளவு பிரியம் வெச்சிருக்கறவரால, காதலிச்சு கட்டிக்கிட்ட மனைவியையும், ஆசையாப் பெத்த பொண்ணையும் மறக்க முடியுமா, இல்ல வெறுக்கத்தான் முடியுமா? கண்ணெல்லாம் கலங்கி வந்து நின்னவரப் பாத்து எம்மனசே தாங்கலையே! நாளைக்கு இதுக்கு ஏதாவது வழி செஞ்சேயாகணும்’ என்று நினைத்தபடி புரண்டு படுத்தவளுக்கு ஏனோ திடீரென்று விஸ்வாவின் பெரியண்ணா தன்னைப் பார்த்தாலே கடுகடுப்பாவதும், தன்னை வெறுப்போடு பார்ப்பதும் நினைவுக்கு வந்தது.

‘சே! என்ன பெரிய மனுஷன் இவர்?  கொஞ்சம்கூட கனிவோ, பரிவோ இல்லாத கல்நெஞ்சக்காரர்! இனிமேல் அவர் மொகத்துலயே முழிக்கக் கூடாது” என்று அவள் முடிவு செய்தபோது விடிந்து விட்டிருந்தது. ஆனால் அந்த முடிவை அவளால் செயலாக்க முடிந்ததா?




What’s your Reaction?
+1
6
+1
7
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!