Serial Stories ஊரெங்கும் பூ வாசனை

ஊரெங்கும் பூ வாசனை-6

(6)

    மஞ்சளழகி சுப்பைய்யாவை ஒரு கணம் அதிர்ச்சியாகப் பார்த்தாலும் அந்த அதிர்ச்சி நிமிடத்தில் அலட்சியமாகப் போனது.

    அக்கம் பக்கம் எதிரொலிக்க ஆர்ப்பாட்டமாக சிரித்தாள்.

      “ஏன்யா…உனக்கு இப்படி ஒரு ஆசை? உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா? தங்கமும் வைரமும் கொட்டிக் கொடுத்து உனக்கு பொண்ணு கொடுக்க சீமான்கள் இருக்கும்போது கேவலம் ரெண்டு அதிரசமும், நாலு கெட்டி உருண்டையும் கொடுத்த என்னைப் போய் கட்டிக்கறேன்னு சொல்றியே?” மறுபடியும் சிரித்தாள்.

     “இந்த அதிரசம் மாதிரி நீ ரொம்ப இனிப்பானவ. இந்த கெட்டி உருண்டை மாதிரி நீ ரொம்ப கெட்டியானவ. வைராக்கியமானவ. அதான் உன்னை ரொம்ப பிடிச்சிட்டு”

     “நல்ல வேளை நான் முறுக்கு சுடலை. சுட்டிருந்தா நீ முறுக்கு மாதிரியே ரொம்ப முறுக்கானவன்னு சொல்லியிருப்பே…களத்து மேட்டுல நீ சதா பொஸ்தகம் படிச்சிக்கிட்டிருக்கும் போதே நெனைச்சேன் நீ இப்படியெல்லாம் உவமையா பேசுவேன்னு. போய்யா…முதல்ல இங்கிருந்து சும்மா எதையாவது பேசிக்கிட்டு.. கட்டிக்கிறாராம்….”

   அலட்சியமாக அவள் அவனை விரட்டுவதிலேயே குறியாக இருக்கவே அவன் அவளை பாவமாகப் பார்த்தான்.

    “ஏன்…மஞ்சளு நான் உன்னைக் கட்டிக்க கூடாதா?”

    “எப்படி எப்படிய்யா கட்டிக்க முடியும்? வேணுமானா வச்சிக்க முடியும்”

    “ச்சீ… என்ன அசிங்கமா பேசறே?”

    “அசிங்கமா பேசறேனா? உன் பரம்பரையோட அந்தஸ்தே அதானய்யா. அப்படித்தானய்யா காலம் காலமா நினைச்சீங்க. உங்க முப்பாட்டன், பாட்டன், உங்கப்பா இவங்களெல்லாம் இந்த ஊர்ல யார் யரையெல்லாம் வப்பாட்டியா வச்சிருந்தாங்கன்னு நான் சொல்லித் தெரியனும்னு அவசியம் இல்லை உனக்கு. என்னை மாதிரி ஏழையையெல்லாம் உங்க வீட்டு மருமகளாக்க முடியுமா?”

    “இதப்பார்…என் பாட்டன் அப்பன் மாதிரி நான் இல்லை. உன்னை தாலிக்கட்டி பொண்டாட்டியா வச்சு வாழத்தான் ஆசைப்படறேன்.”

    “அப்படியா…அப்ப ஒண்ணு செய். நாளைக்கே உன் அப்பாரை என் வீடு ஏறி வந்து பொண்ணு கேட்க சொல்லு. எட்டுப்பட்டிக்கும் பத்திரிக்கை வச்சு ஏழைக்காத்த அம்மன் கோவில்ல பந்தப் போட்டு கல்யாணத்தை நடத்த சொல்லு. போ…போயி உன் அப்பாரையும் ஆத்தாளையும் பொண்ணு பார்க்க வர சொல்லு. நானும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு சின்னாளம்பட்டுக் கட்டிக்கிட்டு தயாரா நிக்கறேன். இப்ப நீ கௌம்பு. நான் போயி கொழம்பு வைக்கனும்” என்று கூறிவிட்டு குடிசைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.




    அவள் தன் மாளிகையின் கதவை சாத்திக் கொண்டதும் மனம் சோர்ந்தவனாய் கீழிறங்கினான் சுப்பையா.

    பின் தொடர்ந்த மஞ்சள் நிலவு அவனை பின் தொடரும் மஞ்சளழகியின் நினைவுகளையே ஞாபகப்படுத்தியது.

    பேச்சியம்மன் கோவிலை கடக்கும்போது வேப்பமர பூக்கள் நிலவொளியில் பொன்னாய் மின்னின.

    அரவம் கேட்ட நாய்கள் அவன் நினைத்த மாதிரியே குரைத்தன.

    அவள் தந்த கெட்டி உருண்டையைப் பற்றி சொன்னது ஞாபகம் வந்ததும் அவள் கோபித்துக் கொண்டு தட்டோடு பிடுங்கிக் கொண்டதும் தனிமையில் சிரிக்கும் நிலவைப் போலவே அவனையும் சிரிக்க வைத்தது.

    பெரிய இடத்து வம்பு வேண்டாம் என நாய்கள் கூட சிலநிமிடங்கள் குரைத்துவிட்டு வாலை கால்களுக்கிடைய இடுக்கிக் கொண்டு சிதிலமடைந்த பேச்சியம்மன் கோவில் சுவர்களுக்கிடையே ஓடி ஒளிந்தன.

    அவளுடைய அழகை நினைத்துக் கொண்டே அந்த நிலவொளியில் நடப்பது இனிமையாகயிருந்தது. அவளுடைய வடிவை அளந்தபடியே நடப்பது பறப்பதைப் போலிருந்தது.

    தழுவிக் கொண்டே வரும் காற்று விடாமல் அவள் அணைத்துக் கொண்டேயிருப்பதைப் போலிருந்தது.

    வேப்பம்பூ வாசனை அவன் அனுபவித்தறியாத  அவளுடைய மேனி வாசனையோ என்று நினைக்க வைத்தது.

   அப்படியே அந்த பேச்சியம்மனின் சிதலமான மேடையில் நாய்களோடு நாயாய் மல்லாந்துப் படுத்து காற்றில் உதிரும் வேப்பம்பூக்களை முகத்தில் வாங்கிக் கொண்டு அவற்றை அவளுடைய முத்தங்களாக கற்பனை செய்தபடி கிடக்க வேண்டும் போலிருந்தது.

    இரவும், நிலவும் இணையாக வளர்ந்துக் கொண்டே அவனுக்குள் மோக சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. நிலாக்காயும் சிந்தனைகளோடு…

    கால்கள்தான் வீடு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

    மனம் பின்னோக்கி அவளுடைய குடிசையையே மீன் சட்டியை சுற்றிக் கொண்டிருந்த அவள் வீட்டுப் பூனையாய் சுற்றிக் கொண்டிருந்தது.

   தன் வீடிருக்கும் தெருவிற்கு வந்துவிட்டோம் என்பதை ஏழைக்காத்த அம்மன் கோவிலின் கோவில் மணிச்சத்தம் நினைவிற்கு கொண்டு வந்தது.

    கோவிலைத் தாண்டும்போதே உள்ளே கற்பூர ஆரத்தி தெரிந்தது.

நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டவன் காதில் மஞ்சளழகியின் குரல் ஒலித்தது.

     ‘எட்டுப்பட்டிக்கும் பத்திரிக்கை வச்சு ஏழைக்காத்த அம்மன் கோவில்ல பந்த போட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க’

    ‘அது என்ன அவ்வளவு சிரமமா? மஞ்சளு…நீ சொன்னாலும்

சொல்லாட்டியும் இந்த ஏழைக்காத்த அம்மன் கோவில்ல நம்ம கல்யாணம் நடக்கப் போவுதுதான். எட்டுப் பட்டியும் வந்து எலைப் போட்டு சாப்பிடப் போவதுதான்.’

   உறுதியைப் போல் வார்த்தைகள் உள்ளுக்குள் இறுகின. பெருகி வழியும் வயல் வரப்பின் வாய்காலாய் மனம் காதலால் வழிய பிரமாண்டமான தன் வீட்டு கேட்டைத் திறந்தான்.

    வராண்டாவிலேயே அமர்ந்திருந்தார் அப்பா பொக்கிஷம். பொக்கிஷப் பெட்டியை திறந்து வைத்ததைப் போல் தேகம் சிரித்தது.

   திறந்திருந்த மார்பில் மலைப் பாம்பைப் போல் புரண்டுக் கொண்டிருந்தது தடித்த தங்க சங்கிலி. பாம்பு பல்லை நீட்டியதைப் போல் புலிநகம் கூர்மைக் காட்டியது. கணக்கு நோட்டை திருப்பிக் கொண்டிருந்த கையில் கங்கணம் கணத்திருந்தது. விரல்களின் பெரும்பகுதியை முத்து பவளம் வைரம் என வகை வகையாய் மறைத்து மின்னிக் கொண்டிருந்தது.

   கடந்து போக நினைத்தவனை அவருடைய கர்ஜனைக் குரல் தடுத்தது.

    “களத்து மேட்டுலயிருந்து எப்பவோ கிளம்பிட்டேன்னு குண்டுமணி சொன்னான். இப்பத்தான் வர்றே?” கொக்கியாய் கேள்வி அவனை இழுத்து நிறத்தியது.

    “கடைத் தெருவுல கொஞ்சம் வேலை இருந்தது அதான்…”

    “புண்ணாக்கு வாங்கப் போன மாரி முத்து கடைத் தெருவுல உன்னைப் பார்க்கலைன்னு சொன்னான்?” கொக்கி இறுக்கி இழுத்தது.

     “ஏதாவது ஒரு கடையில இருந்திருப்பேன். இவன் புண்ணாக்கு வாங்க போனான்னா நான் புண்ணாக்கு கடையிலயே இருக்கனுமா?” எரிச்சலாக சொன்ன சுப்பைய்யா உள்ளே போக முற்பட்டான்.




    “அப்படி உட்காரு ஒங்கிட்டப் பேசனும்”

    “காபி குடிச்சுட்டு வர்றேன்” தப்பிக்கப் பார்த்தான்.

    “காபி தானா திண்ணைக்கு வரும் ஒக்காரு”

   உட்கார்ந்தான். சொன்னதைப் போலவே காபி திண்ணைக்கு வந்தது. அம்மா வந்து இருவரக்கும் தந்துவிட்டப் போனாள்.

     “அடிக்கடி அந்த மஞ்சளு வூட்டுப் பக்கம் போறியாமில்ல?”

   திடுக்கென்றது.

     “களத்து மேட்டையொட்டி அவ வூடு இருக்கறதால தண்ணி கிண்ணி குடிக்கப் போயிருப்பேன். அதுக்கென்ன?” அவனுக்கு கடுப்பாக இருந்தது.

     “தண்ணி குடிக்கறதோட நிறுத்திக்க. தண்ணிக் கொடத்தை தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆட ஆரம்பிச்சுடாதே”

     “என்ன பேசறிங்கன்னு எனக்குப் புரியலை?”

     “அவளை வச்சிருக்கியான்னு கேட்டேன்”

    “அப்பா…”அதிர்ச்சியாய் குனிந்திருந்த தலையை நிமர்த்தினான்.

  இவன் தலை நிமிரவும் அவர் தலைகுனிந்தார். அது கேட்ட கேள்வியினால் உண்டான அவமானத்தினாலோ, அருவறுப்பினாலோ அல்ல. அடுத்த கணக்கை சரிப்பார்க்க மட்டுமே.

    “தப்பொண்ணும் இல்லை. இப்படி அங்கங்க எவளையாவது வச்சிக்கறது நம்ம பரம்பரைக்கு ஒண்ணும் புதுசு இல்லை. தவக்களை தண்ணியிலேயும் இருக்கும், தரையிலேயும் இருக்கும். ஆம்பளையும் அப்படித்தான். பொண்ணு பார்த்து சாதகம் பார்த்து நாள் கிழமைப் பார்த்து சீரு செனத்தி பேசி ஒரு கல்யாணத்தை முடிக்கறது ரெண்டொரு நாள்ல நடந்துடாது. அது வரைக்கும் ஆம்பளைப் புத்தியை அடைக்காத்து வச்சிக்க முடியாது. ஆத்திர அவசரத்துக்கு இப்படி ஒதுங்கறது தப்பு இல்ல. தேவையும் கூட….வப்பாட்டியா இருக்க ஒத்துக்கிட்டவளால ஒண்ணும் பிரச்சனை

இல்லை. காலை சுத்தின பாம்பா தலைவரை ஏறி படமெடுத்தாள்ன்னா…பாதிப்பு நமக்குத்தான். ஏன்னா…அந்த மஞ்சளு ரொம்ப துணிச்சக்காரின்னு சொல்றானுங்க. மாந்தோப்புல எவனோ பார்த்து சிரிச்சான்னு பல்லைத் தட்டிக் கையில கொடுத்துப்புட்டாளாம். காசு பணம் கொடுத்து கிழக்கு ரங்கன்கிட்ட குத்து சண்டைக் கத்துக்கறதுக்கு நாலுபடி நெல்லைக் கொடுத்துட்டு இவக்கிட்ட கத்துக்கலாம்னு வெளையாட்டா அவளைப் பத்தி பேசிக்கிட்டாலும் அது நெசந்தான்னு சொல்றாங்க. ஆம்பளைக் கணக்கா ஏறி அடிச்சுபுடுவாளாமில்லே? உனக்குத் தெரியாததா? நீதான் அவ வூட்டுக்கு தண்ணிக் குடிக்கப் போறியே. எதுக்கு சொல்றேன்னா…உன்னை காலை கையை முறிச்சப் போட்டு கட்டுடா தாலியன்னு சொல்லிடப் போறா…ஜாக்கிரதை.”

   ஆரம்பத்தில் அப்பாவின் வார்த்தைகள் எரிச்சலையும் ஆத்திரத்தையும் உண்டாக்கினாலும் அவருடைய கடைசி வார்த்தைகள் அவனுக்குள் நீர்விழ்ச்சியின் குபீர் பாய்ச்சலாய் அவனுக்குள் சிரிப்பை உண்டாக்கியது.

    ‘கையை காலை முறிச்சுப் போட்டு கட்டுடா தாலியன்னு சொல்லிடப் போறா’

;  அப்படி சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவளுடன் கை கால் இல்லாமல் வாழ்ந்தாலும் சுகம்தானே’

    “என்னடா சிரிக்கிறே…”

    “ஒண்ணுமில்லை”

    “சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.” அப்பா மிரட்டினார். அந்த மிரட்டல் அவனுக்குள் பயத்தை ஏற்படத்துவதற்குப் பதில் பரவசத்தையே ஏற்படுத்தியது.




What’s your Reaction?
+1
18
+1
7
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!