Serial Stories எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-10

10

காலிங் பெல் சத்தத்திற்கு வாசல் கதவை திறந்த சகுந்தலா வெளியே நின்ற சிவ நடராஜனை கண்டதும் அலமலந்து நின்றாள். இவனா? இவனை என்ன செய்வது? உள்ளே வா என்பதா வெளியே போ என்பதா தலை சொறிந்து அவள் யோசித்து நிற்க…

 “நன்றாக இருக்கிறீர்களா அத்தை? வீட்டில் எல்லோரும் சௌக்கியம் தானே?”  கேட்டபடி சுவாதீனமாக வீட்டிற்குள் நுழைந்தான் சிவ நடராஜன்.

“யார் சகுந்தலா? என்ன வேண்டுமாம்? திடீரென்று நேரம் கெட்ட நேரத்தில் நடு வீட்டுக்குள் வந்து நின்றால் எப்படி?” உள்ளறையில் இருந்து வெளியே வந்த மணிவண்ணன் சிவ நடராஜனை நன்கு பார்த்தும் வேண்டுமென்றே  கேட்டார்.

 சகுந்தலா கையை பிசைந்தபடி நிற்க, டேபிள் மேல் இருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து மணிவண்ணனின் கண்களில் தானே மாட்டினான் சிவ நடராஜன். “கண்ணாடியை  போடுங்க மாமா. இது யாரு அது யாருன்னு குழம்பிக்கிட்டு…” என்றவன்…

” பாட்டீ…” என்று ஒரு மாதிரி ராகம்போல் இழுத்துக் கொண்டு பாட்டியின் அறைக்குள் நுழைந்தான்.

இன்னமும் சீரியல்கள் ஆரம்பிக்காத காலை நேரத்தில் பாட்டி ஒரு கறுப்பு வெள்ளை படத்தில் ஆழ்ந்திருக்க “சௌக்கியமா பாட்டி?” என்று எதிரே வந்து நின்றவனை திகைப்பாய் பார்த்தார்.

” நீ…நீயா?”.

” என்ன பாட்டி இங்கே சரியான சாப்பாடு போடறது இல்லையா?இவ்வளவு பலவீனமாகிட்டீங்க. பாவம் பேச்சே நடுங்குது” ஓரமாக கிடந்த குட்டை ஸ்டூலை பாட்டிக்கு எதிராக இழுத்து போட்டுக் கொண்டு தன் நீளக்கால்களை சிரமப்பட்டு மடக்கி அதில் அமர்ந்தான்.

“ஏய் சிவா இங்கே என்னடா செய்கிறாய்?” எதிர்பாரா அதிர்ச்சியில் பாட்டியின் குரல் இன்னமும் திக்கியது.

“அடடா பேசக்கூட சக்தி இல்லாமல் பாட்டி துவண்டு போய் கிடக்கிறார்களே? ஏன் வெற்றி இதையெல்லாம் நீ கவனிப்பது கிடையாதா?” வேகத்துடன் அறைக்குள் நுழைந்த வெற்றிவேலனிடம் கேட்டான்.

” இங்கே உனக்கு என்ன வேலை சிவா? முதலில் நீ வெளியே போ. எதுவானாலும் நாம் வீட்டிற்கு வெளியே பேசிக்கொள்ளலாம்” வெற்றிவேலன் சொல்ல சிவ நடராஜன் தலையை அசைத்து மறுத்தான்.

” நான் என் பாட்டியிடம் பேச வந்திருக்கிறேன் வெற்றி”

“என்ன பாட்டி இவனை நீங்கள்தான் வரச் சொன்னீர்களா?’ வெற்றிவேலன் கோபமாக கேட்க பாட்டி தலையாட்டி மறுத்தார்.

“நான் இல்லை வெற்றி. இவன் ஏதோ உளறுகிறான். டேய் சிவா, நீ வீட்டிற்கு போ,இங்கே ஏன் வந்தாய்?”

“என்ன பாட்டி பிசினஸ் பேச வேண்டும் என்று வரச் சொல்லிவிட்டு… இப்போது இப்படி கட்சி மாறுகிறீர்களே நியாயமா? கொஞ்சம் சுற்றி வளைத்து என்றாலும் நானும் உங்கள் பேரன்தானே பாட்டி? சொந்த பேரனுக்காக என்னை விட்டுக் கொடுத்து விட்டீர்களே?” இரு கைகளாலும் இரு கன்னத்தையும் தாங்கிக் கொண்டு சோகமாக பேசினான்.

“என்னது இவனோடு பிசினஸா?” வெற்றிவேலன்  எகிற பாட்டி “நீ சும்மா இருடா, சிவா என்ன உளறுகிறாய்? என்ன பிசினஸ்?” என்றார்.

” என்ன பாட்டி இப்படி மறந்து விட்டீர்கள்? அந்த ரோஜா எண்ணெய் பிசினஸ் பற்றி பேசினோமே? நம்ம சுந்தரி பெரியம்மா வீட்டு கல்யாணத்துல  நீங்க சொன்னீங்களே?”

” அது சும்மா உன் அப்பா கூட ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். அதையா சொல்கிறாய்?”

” அதேதான் பாட்டி ,அந்த ரோஜா எண்ணையை ஒரு யூனிட் ஆக தொடங்கலாம் என்று நானும் அப்பாவும் முடிவு செய்திருக்கிறோம். அது சம்பந்தமாக உங்களிடம் பேசத்தான் வந்தேன்”

இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அருகில் நின்ற வெற்றிவேலனையும் கைகளை கட்டிக்கொண்டு அறைவாசல் நிலையில் சாய்ந்து நின்ற சகுந்தலாவையும் ஏறிட்டுப் பார்த்த பாட்டி எச்சில் விழுங்கிக் கொண்டார்.

” அதெல்லாம் இப்போது எனக்கு யோசனை இல்லை. பிறகு பேசலாம். நீ போடா” சிவ நடராஜனின் தோளை தொட்டு தள்ளினார்.

“என்னமோ பாட்டி, வீட்டுக்கு வெளியே ஒரு பேச்சு பேசுகிறீர்கள், உள்ளே வேறு பேச்சு பேசுகிறீர்கள் போங்கள்” செல்லமாய் சலித்தபடி எழுந்த சிவ நடராஜன் “வெற்றி இந்த பிசினஸ் பற்றி உன்னோட ஐடியா என்ன?” என்றான்.




டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மணிவண்ணனின் வியாபார மூளை படபடவென திட்டங்களை போடத் தொடங்கியது.

“வெற்றி பக்குவங்களை உன் பாட்டியிடம் கேட்டு நாமே ஆரம்பிக்கலாம்” வெளியிலிருந்து குரல் கொடுத்தார்.

 வேகமாக அவர் எதிரே போய் நின்றான் சிவ நடராஜன். “ரொம்பவும் நல்ல பிசினஸ் மாமா. நானும் வெற்றியும் ஜாயிண்டாக  இதை செய்கிறோமே?”

“அந்த ரோஜா எண்ணெய் பக்குவம் என் மாமியாருக்கு மட்டுமே தெரிந்தது. அதனை வைத்து தொழில் பார்க்க எங்களுக்கு தெரியும். நீ இதில் தலையிட வேண்டாம்” மணிவண்ணன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

“பாவமே ஒரு ஐடியா சொன்னது குத்தமாச்சே…” சோகம் கவிந்த சிவ நடராஜனின் முக கண்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்தன.

 மானசி தன்னை சுருக்கி மறைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் நழுவினாள்.

யாரை கேட்டடா வீட்டிற்குள் வந்தாய் என்று அப்பாவும் அண்ணனும் அவனை அடித்து விரட்டுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அவர்களோ புதிதாக ஒரு தொழில் கிடைத்த சந்தோஷத்தில் அதை உருவாக்கும் விஷயங்களுக்குள் ஆழ்ந்து போயினர்.

இப்படி அவனது வரவு அவ்வளவாக இவர்களை பாதிக்காத அளவிற்கு ஒரு காரணத்தை தயார் செய்து கொண்டுதான் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். எப்பேர்பட்ட எத்தன் இவன்! மானசிக்கு அவனை நினைத்து ஆச்சரியம் வந்தது. பார்த்தாயா எனும் அவன் புருவ உயர்த்தலை காணும் தெம்பின்றி தன்னை மறைத்துக் கொண்டாள்.

“அக்கா உங்க வீட்டிற்கு யார் வந்திருப்பது?” பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரருகே தொற்றிக்கொண்டு நின்றிருந்தனர் ரூபாவும் ஷாலினியும். கண்களில் டன் டன்னாக ஆர்வமும் ஆசையும்.

” ஒழுங்காக  உள்ளே போங்கள்,இல்லாவிட்டால் உங்கள் அம்மாவை…” மானசி விரலாட்டி எச்சரித்து கொண்டிருந்தபோதே ரூபா கையை உயர்த்தி அடக்கினாள்.

” இந்த அக்காவுக்கு அவரை தான் மட்டுமே சைட் அடிக்க வேண்டுமென்ற எண்ணம். வாடி நாம் அவரோட யுட்யூப் வீடியோ பார்க்கலாம்” ஷாலினியின் கையை இழுத்துக் கொண்டு ஓடினாள்.




திகைப்புடன் நின்றவளின் எதிரே வந்தான் சிவ நடராஜன். அவள் எண்ணியது போன்றே எப்படி என புருவங்களை உயர்த்தியவன்…

“அரை டம்ளர் பில்டர் காபி கொடுங்க அத்தை” உரிமையாய் சகுந்தலாவிடம்  கேட்டபோது “ஏய் இங்கே வா” மணிவண்ணனின் குரல் மனைவியை அழைத்தது. அதன் அர்த்தம் காபியெல்லாம் கொடுக்கக் கூடாது  என்பது.

சகுந்தலா சிவ நடராஜனை பார்த்தபடி உள்ளே போக, மானசியின் வாய்ககுள் எதையோ திணித்தான் சிவ நடராஜன்.நெய் மணத்தோடு வாயில் கரைந்த்து இனிப்பு.

” பீனட் கேண்டி, நேற்று புதிதாக தயார் செய்தோமே அந்த ஸ்வீட். ரொம்ப அற்புதமான சுவையில் வந்திருக்கிறது. நெய்யும் இனிப்புமாக நம் வாழ்க்கை தொடங்க இருப்பதை காட்டுகிறது” மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டு கிளம்பி போய் விட்டான்.

 வாய்க்குள் வாசனையாய் தித்தித்து கரைந்த இனிப்பை நெடுநேரம் இதயம் வரை சுவைத்தபடி அமர்ந்திருந்தாள் மானசி.




What’s your Reaction?
+1
42
+1
15
+1
3
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!