Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-19

(19)

அந்த மிகப்பெரிய சுறாமீன் வேகமாக அவள் மீது வந்து மோதியது .நீரினுள் இன்னும் ஆழ…
ஆழ….மூழ்கினாள் முகிலினி .சிறு நூலிழை மூச்சுக்காற்றுக்காக நுரையீரல் தவித்தது .

அந்த சுறாமீன் மீண்டும் அவளை நெருங்கியது .இப்போது அவள் தலைமுடியை கொத்தாக பற்றியது .சிரமப்பட்டு குளோரின் எரிச்சலில் விழி திறந்து பார்த்த போது அந்த சுறாமீனின் முகம் காருண்யாவாக மாறியிருந்தது .

ஐய்யோ இவளா ? இவள் இப்போது என்னை விழுங்கப் போகிறாளா ?  என்று பயந்தபடி நினைவிழந்தாள் முகிலினி .

காற்றேயில்லாமல் அடைத்துக் கொண்டிருந்த நுரையீரலினுள் காற்று மெல்ல மெல்ல நுழைந்தது .தொடர்ந்து உடம்பு பலமுறை உலுக்கப்பட சே நிம்மதியாக தூங்க விடாமல் யாரது என அலுத்தபடி கஷ்டப்பட்டு விழிகளை திறந்தால் எதிரே தெரிந்தது வானமும் சிறு கீற்றாய் நிலவும் .

வினாடியில் நடந்தவை அனைத்தும் நினைவு வர அவசரமாக கண்களை அகல விரித்தாள் .” முகில் ” என்ற அவசர அழைப்போடு அவளை இறுக அணைத்திருந்தான் யதுநந்தன் .குளிரில் நடுங்கியபடி இருந்தவளுக்கு அந்த சூடான அணைப்பு இதம் தர வாகாக அவன் கைகளுக்குள் சுருண்டு கொண்டாள் .
” விடுங்க சார்…மேடத்திற்கு  ஒன்றுமில்லை .நீங்கள் வேறு அவர்களை பயமுறுத்தாதீர்கள் ” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள் .

காருண்யா …

முகிலினியை சுற்றியிருந்த யதுநந்தனின் கைகளை பிரித்து விட்டுக்கொண்டிருந்தாள் அவள் .வேறு வழியின்றி கைகளை விலக்கினான் யதுநந்தன் .மனமின்றி கணவனின் பிடியிலிருந்து விலகிய முகிலினி காருண்யாவை வெறித்தாள் .

இவள் …நீரினுள்ளே இவள்தான் என்னை காப்பாற்றியிருக்க வேண்டும் .ஏன் காப்பாற்றினாள் ?ஏன் இப்போது எங்களை பிரிக்கிறாள் ?.

பேச வாய் திறந்த போது பேச்சிற்கு பதில் இருமல் வந்தது .” பார்த்து மேடம் ”  என நெஞ்சை நீவி விட்டாள் காருண்யா .

நீ ஏன் இங்கே வந்தாய் ? எனக் கேட்க வாயை திறந்த போது , அதே கேள்வி யதுநந்தனிடம் இருந்து வந்தது .ஆனால் முகிலினியை நோக்கி .

” நான் சும்மா நீச்சல்குளம் பார்க்கலாமென்று ….” திணறிக்கொண்டு பதிலளிக்க முயன்றாள் முகிலினி .அவள் தொண்டை வேறு சரியாக பேச ஒத்துழைக்கவில்லை .

” என்ன நீச்சல்குளம் பார்க்கும் நேரமா இது ? ” கோபத்துடன் கேட்டான் யதுநந்தன் .கிட்டத்தட்ட சாவின் விளிம்பு வரை போய் வந்தவளை பார்த்து பேசுகின்ற பேச்சா இது ? கண்கள் கரித்து அழுகை வரப்பார்த்தது .அவளை அருகே வைத்துக்கொண்டே இப்படி என்னை அதட்டுகிறானே என்றிருந்தது அவளுக்கு .

” சார் விடுங்க…இரவு விளக்கு ஒளியில் நீச்சல்குளத்தை பார்க்க எண்ணி மேடம் வந்திருக்கலாம் .எப்படியோ கால் தவறி உள்ளே விழுந்திருக்கிறார்கள் ” சமாதானமாக பேசினாள் காருண்யா .
“இந்த இரவில் யாராவது நீச்சல்குளம் பக்கம் வருவார்களா ? இவள் உள்ளே விழுந்த போது நீ பார்த்ததால் உடனே குதித்து காப்பாற்றி விட்டாய் .இல்லாவிட்டால் …” என பேசிக்கொண்டு சென்றவனை மறித்து …




” யாருக்கும் எந்த தொல்லையுமின்றி போய் சேர்ந்திருப்பேன் ” என அவன் வாக்கியத்தை வெறுப்போடு முடித்து வைத்தாள் முகிலினி .ஒரு நிமிடம் மௌனம் நிலவியது அங்கே .

அவள் தோள்களை தொட்டபடி இருந்த யதுநந்தன் தன் கைகளை அவளை சுற்றி தன்னருகே இழுத்தான் .வலிக்கும்படி இருந்தது அந்த பிடி .” என்ன உளறல் இது ? ” உறுமினான் .

” தள்ளுங்க சார் …”, இடை புகுந்தாள் காருண்யா .அவன் கரங்களை தள்ளிவிட்டு தானே முகிலினியை அரவணைத்து எழுப்பினாள் .”வாங்க மேம் .உள்ளே போகலாம் ” என்றாள் .

அவள் கைதாங்கலில் எழுந்த முகிலினி இரண்டு எட்டுக்களில் தடுமாற , காருண்யாவை விலக்கிவிட்டு முகிலினியை கைகளில் தூக்கி கொண்டான் யதுநந்தன் .

” நான் பார்த்துக்கொள்கிறேன் காருண்யா .நீ வீட்டிற்கு போ ” என்றான் .

ஒரு எச்சரிக்கை பார்வையுடன் தலையசைத்து விடை பெற்றாள் அவள்

வேலை பார்ப்பவர்களுக்காக அங்கேயே ஓரமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது .காருண்யா அங்கேதான் தங்கியிருந்தாள்

அவர்கள் அறையினுள் நுழைந்ததும் முகிலினியை சோபாவில் அமர வைத்துவிட்டு ஒரு துண்டு எடுத்து முகிலினியின் தலையை துவட்டி விட  தொடங்கினான் யதுநந்தன் .

“குளத்தினுள் விழுந்த உன்னை தூக்கி கரையில் போட்டு விட்டு காருண்யா எனக்கு போன் போட்டாள் .ஓடி வந்து உன்னை பார்க்கும் வரை என் உயிர் என்னிடம் இல்லை தெரியுமா ? ” என்றபடி முகிலினியின் புடவை தலைப்பை விலக்க முயன்றான் .

அவன் கைகளை பற்றி நிறுத்தினாள் முகிலினி .அத்தோடு ” தொடாதீர்கள் ” என சீறினாள் .

” முகிலினி …ஈர உடையோடு இருக்க வேண்டாமென்றுதான் …மற்றபடி இந்த நிலைமையில் உன்னோடு ரொமான்ஸ் பண்ண இல்லை ” என்றான் வேகத்துடன் .

” எதற்காகவும் தான் …என்னை தொட வேண்டாம் ” கிட்டத்தட்ட கத்தினாள் முகிலினி .

” உனக்கென்ன பைத்தியமா ? இதென்ன முட்டாள் பிடிவாதம் ? வா ..” என்று மீண்டும் அவள் சேலையை தொட முயற்சித்தான் .

” இல்லை வேண்டாம் …” என்றாள் முகிலினி .இந்த முறை கோபத்தில் அவள் குரல் உயரவில்லை .அழுகையில் குறைந்தது .மேலும் சோபாவில் இருந்து எழுந்து போக எண்ணி தடுமாறினாள் .

” ஓ.கே …ஓ.கே …அமைதி …” கைகளை உயர்த்தி அவளை தடுத்தவன் பீரோவை திறந்து அவளது மாற்று உடுப்புகளை எடுத்து அருகே வைத்து விட்டு …” மாற்றிக்கொள் வெளியே இருக்கிறேன் ” என்று போனான் .

அவள் உடை மாற்றியதும் சூடான பாலை கொண்டு வந்து கொடுத்தான் .அதை குடித்து படுக்கையில் விழுந்ததும் தூங்கிப் போனாள் முகிலினி .

யோசனையோடு அவள் முகத்தை பார்த்தபடி நெடு நேரம் அமர்ந்திருந்தான் யதுநந்தன் .

மறுநாள் அவளுடன் பேசும் ஆயத்தங்களுடன் அருகே வந்த யதுநந்தனை பார்க்கவே விரும்பாமல் முகம் திருப்பினாள் முகிலினி .




ஒரு பெருமூச்சுடன் ” இன்று நன்றாக ஓய்வெடுத்துக் கொள். நாம் பிறகு பேசலாம் ” என்றுவிட்டு சென்றான் அவன் .

முன்தின சம்பவம் கேள்விப்பட்டு அவளை பார்க்க வந்தனர் சந்திரவதனாவும் ,சௌம்யாவும் .

“என்னம்மா ..ஏன் …ஏதாவது பிரச்சினையை இழுத்துக் கொள்கிறாய் ?” ஆதரவுடன் கேட்டு அவள் தலை வருடினாள் சந்திரவதனா .

பதில் சொல்ல மாட்டாமல் புன்னகைத்தாள் முகிலினி .

“அம்மா அவள் தலையெழுத்து அப்படி போல. இங்கே வந்து இப்படி படனும்னு இருக்கு ” என்றாள் சௌம்யா .

” சௌமி சும்மா இரு .முகிலினி ஏற்கெனவே பயந்து போய் இருக்கிறாள் .நீ வேறு அவளை பயமுறுத்தாதே ” என்றாள் சந்திரவதனா .

“காலை உணவை அறைக்கே  அனுப்பி வைக்கிறேன்மா .நீ ஓய்வாக படுத்து இரு  ” என்று விட்டு சென்றனர் இருவரும் .

உணவை கொண்டு வந்தாள் முத்தரசி .முகிலினி சாப்பிட வசதியாக படுக்கையிலேயே அவள் முன் ஒரு சிறு பெஞ்சை அமைத்தாள் .தட்டில் பரிமாறி விட்டு ” சாப்பிடுங்கம்மா ” என்றாள் .

” ஏன் முத்தரசி உங்களுக்கு இந்த நல்ல நேரம் , கெட்டநேரம் …சகுனம் …இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா ? “மெல்ல கேட்டாள் .

” ஆமம்மா ரொம்ப நம்பிக்கை உண்டு .பெரியவுங்க சொல்ற எல்லாத்திலயும் உண்மை இருக்குங்கம்மா ” என்றாள் முத்தரசி .

” ஓ…வீட்டிற்கு முதன்முதலில்  மருமகள் வரும்போது அந்த வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு அந்த புது மணமகள் தான் காரணமாக இருப்பாளோ ?” என்றாள் .
முத்தரசி எச்சில் விழுங்கினாள் .சாம்பார் ஊற்றிய அவள் கைகளில் மெலிதான நடுக்கம் .” எ ..என்னங்கம்மா …சொல்றீங்க …?” குரலும் நடுங்க தொடங்கியது .

” அன்று நீங்களும் பொன்னாயியும் பேசினதை கேட்டேன் .சம்பளம் வாங்குகிற வீட்டிலேயே இப்படியா பேசுறது ? கண்டிப்புடன் கேட்டாள் .

” அம்மா எனக்கு ஒண்ணும் தெரியாதுங்கம்மா .அந்த பொன்னாயிதான் …அவள் நம்ம சந்திராம்மாவோடதான் எப்பவும் கிடப்பாள் .சந்திராம்மாவும் அவுங்க மகளுந்தான் இப்படி பேசிட்டிருந்தாங்களாம்.அதைத்தான் அன்னைக்கு சொல்லிக்கிட்டிருந்தாள் .நான் சும்மா கேட்டுட்டு மட்டுந்தான் இருந்தேன் .இதை ஐயாகிட்ட சொல்லிடாதீங்கம்மா .என்னை வீட்டை விட்டே விரட்டிடுவார் ” அழுதபடி சொன்னாள் அவள் .

“சரி விடுங்க .நான் சொல்லவில்லை “, உறுதியளித்தாள் முகிலினி .

சிறிது நேரம் யோசித்நபடி இருந்து விட்டு சௌம்யாவை தேடி சென்றாள் .அவள் சந்திரவதனா அறையிலிருப்பதாக போனில் கூற நல்லதுதான் அங்கே இருவரிடமும் பேசிவிடலாமென எண்ணி அங்கே சென்றாள் .

முகிலினி சந்திரவதனா அறையினுள் நுழையும் போது பொன்னாயி அறையை விட்டு வெளியேறினாள் .இவளைக் கண்டதும் தலையை குனிந்து கொண்டாள் .

பொன்னாயி எப்போதும் சந்திரவதனா அறையில்தான் இருப்பாள் என முத்தரசி கூறியது நினைவு வந்தது .

” என்னம்மா உடம்பு நல்லாயிடுச்சா ? அதற்குள் ஏன் எழுந்தாய் .இன்னும் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கலாமே ” பாசத்துடன் வரவேற்றாள் சந்திரவதனா .

” அம்மா நந்து வருகிற நேரமாயிற்றே .இன்னும் படுத்து இருக்க முடியுமா ? அவனை எதிர்கொண்டு அழைக்க வேண்டாமா ? “, இயல்பாக கேலி செய்தாள் சௌம்யா .

மெல்ல புன்னகைத்தபடி அமர்ந்த முகிலினி சிறிது நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்துவிட்டு விட்டு ” பெரியம்மா எங்கள் அப்பா இறந்த விசயம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? “, மெல்ல கேட்டாள் .

” அப்..அப்பா..இ..இறந்ததா ? …  அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே …? ” தடுமாற்றம் தெரிந்தது சந்திரவதனா குரலில் .

” இல்லை பெரியம்மா …உங்களுக்கு தெரியும் .அது எனக்கு தெரியும் .என்ன தெரியும் ?.அன்று பொன்னாயி பேசினதை நான் கேட்டேன் ” அழுத்தமாக பதில் சொல்லியே ஆக வேண்டுமென்ற பாவனையில் கேட்டாள் முகிலினி .

” பொன்னாயியா …அவள் என்ன சொன்னாள் ? அவளுக்கு என்ன தெரியும் ? “, சந்திரவதனாவின் குரலில் குழப்பம் இருந்தது .

” அம்மா ..நந்து அன்று போன் போட்டதும் நாமிருவரும் பேசிக்கொண்டிருந்தோமே.அதை அவள் கேட்டுவிட்டாளென நினைக்கிறேன் ” யோசனையோடு கூறினாள் சௌம்யா .

” கழுதை கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர்றான்னு பக்கத்திலேயே வச்சிருந்தா என்ன வேலை பார்க்கிறாள் ” பல்லை கடித்தாள் சந்திரவதனா .

” யதுநந்தன் போனில் என்ன சொன்னார் ? ” தன் காரியத்தில் கண்ணாயிருந்தாள் முகிலினி .

” முகிலினி நந்து திடீர்னு காணாமல் போய்விட்டான். எங்கேயிருக்கான்னு யாருக்கும் தெரியவில்லை .அண்ணனும் , அண்ணியும் இறந்த நேரம் வேறு .தொழில் தடுமாறி நின்றது .

நந்து தனது தொழில் சம்பந்தமான முடிவெடுக்கும் உரிமைகளை காருண்யாவிற்கு வழங்கி விட்டு போயிருந்தான் .அதனால் அம்மா , மோகனரங்கம் , காருண்யா மூவரும் சேர்ந்து தொழிலை நடத்திக் கொண்டிருந்தனர் .”

” காருண்யா யார் …? “, இடையிட்டு கேட்டாள் முகிலினி .

” தெரியாதம்மா …நந்து அண்ணனின் மறைவுக்கு பின் தொழிலை கவனிக்க ஆரம்பித்ததும் அவளை வேலையில் சேர்த்தான் .கேட்ட போது தோழி என்று சொன்னான் .

நம் சௌம்யா கூட M.B.A தான் .அவளை தொழிலில் சேர்த்துக் கொள்ளுமாறு நாங்கள் கேட்ட போது கூட மறுத்து விட்டான் “

அதனால்தான் சௌம்யாவிற்கு காருண்யா மேல் சிறிது கசப்பு போல என எண்ணினாள் முகிலினி .

” உங்கள் ஊரில் இருக்கும் போது நந்து  எதற்கோ போலீஸ் ஸ்டேசன் போக வேண்டியதாகி விட்டது போல .அங்கே தெரிந்தவர் கண்ணில் பட்டு அவன் இருக்குமிடம் எங்களுக்கு தெரிந்தது .”

வைஷ்ணவி விசயமாக யதுநந்தன் போலீஸ் ஸ்டேசன் போனது முகிலினிக்கு நினைவு வந்தது .




ஒரு வேளை அன்று வைஷ்ணவிக்கு உதவாமல்  இருந்திருந்தால் யதுந ந்தன் இருக்குமிடம் இவர்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும் .அவனும் தங்களுடன் அங்கேயே இருந்திருப்பானே என ஒரே ஒரு நிமிடம் எண்ணிவிட்டு தன்னையே குட்டிக்கொண்டாள் முகிலினி .

சே ..வைஷ்ணவியின் வாழ்வு என்னாவது ? ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேன் ? தன்னையே நொந்து கொண்டாள் முகிலினி .

“அம்மா மோகனரங்கத்தை உங்கள் வீட்டிற்கு அனுப்பினார் .நந்துவை அழைத்து வர …”

அன்று மோகனரங்கத்தை தனது வீட்டில் சந்தித்ததை நினைவுபடுத்திக் கொண்டாள் முகிலினி .அவரது அலட்சியத்தையும் சேர்த்து …

” அவரிடம் தனது காதலை சொல்லி விட்டிருந்தான் நந்து .அம்மா அதனை மறுத்தார்கள் .வேற்று ஜாதி பெண்ணை மகன் மணப்பதில் அம்மாவிற்கு சம்மதமில்லை .”

இப்போது கூட பாட்டிக்கு என்னை பிடிக்கவில்லையே .வேதனையோடு நினைத்து கொண்டாள் முகிலினி .

“,  அப்போது தொழிலில் சிறிய சரிவு வருவது போல் இருந்தது .நந்து கண் டிப்பாக வர வேண்டியிருந்தது .
எனவே அவன்  இங்கே வந்தான் .எங்கள் அனைவரையும் அழைத்து வைத்து பேசினான் .அவனுக்கு வைத்த குறி உன் தந்தை மேல் பட்டு அவர் இறந்துவிட்டதால் அவன் கண்டிப்பாக உன்னை திருமணம் செய்து கொண்டுதான் ஆவேன் என உறுதியாக கூறினான் .”

எப்படிப்பட்ட கீழான நிலையில் தன் வாழ்க்கை இங்கே உறுதி செய்யப்பட்டுள்ளது .மனமுடைந்தாள் முகிலினி .

” அப்போது எங்களுக்கும் வேறு வழியில்லை .அப்போது அம்மாவும் சம்மதித்தார் .திடீரென ஒரு நாள் எங்கள் திருமணம் முடிந்து விட்டது .நாங்கள் வருகிறோம் என போனில் கூறினான் “

” அப்போது நாங்கள் இருந்த மனநிலையில் எப்படி தன் தந்தை இறக்க காரணமான ஒருவனை ஒரு பெண்ணால் மணக்க முடியும் ? என எண்ணினோம் .அதைத்தான் நானும் சௌமியும் பேசிக்கொண்டிருந்தோம்.அதைத்தான் அந்த பொன்னாயி கழுதை கேட்டு விட்டு எதையோ உளறினாள் போல ” முடித்தாள் சந்திரவதனா .

தன்னுள் வந்து விழுந்த தகவல்களை ஜீரணிக்க முயன்றபடி கண் மூடி இருந்தாள் முகிலினி .

” அப்போது உன்னை நாங்கள் பார்க்கவில்லை முகிலினி .ஆனால் அன்று நந்துவுடன் அப்பாவியாக விழி விரித்தபடி வாசலில் வந்து நின்றாயே .அப்போதே நீ அப்பழுக்கற்றவள் என எங்களுக்கு தெரிந்து விட்டது “, பாசமாக அவள் தலை வருடியபடி சொன்னாள் சௌம்யா .

” ஆமம்மா …” அன்புடன் அவள் கைகளை பிடித்து கொண்டாள் சந்திரவதனா .

” நன்றி …” தலை குனிந்து முணுமுணுத்தாள் முகிலினி .

இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டி உள்ளதோ ? வேதனையுடன் எண்ணியது அவள் உள்ளம் .




What’s your Reaction?
+1
17
+1
11
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!