Serial Stories ஊரெங்கும் பூ வாசனை

ஊரெங்கும் பூ வாசனை-12

(12)

   சரியாய் ஐந்து மணியிருக்கும். விடிந்தும் விடியாத பொழுது.

   நமச்சிவாயத்தின் அலைபேசி அழைத்தது. இரவு வெகு நேரம் உறங்காமல் மகனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் தாமதமாகத்தான் உறக்கம் வந்தது. விடிகாலை உறக்கம் விழகளைத் திறக்கவிடாமல் செய்தது.

   சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவர் இந்நேரத்துக்கு அழைப்பு வருவதை உணர்ந்ததும் திடுக்கிட்டார். இந்நேரத்திற்கு யார் அழைக்கிறார்கள்?

   எடுத்துப் பார்த்தவர் ஊரிலிருந்து அப்பா என்று தெரிந்ததும் ஒரு விதமான நடுக்கம் உடலில் ஓட எழுந்து உட்கார்ந்தார்.

   ‘இந்நேரத்திற்கு அப்பா எதற்கு ஃபோன் செய்கிறார்? அம்மா ஆறுமாதமாக படுத்தப் படுக்கையாக கிடக்கிறாள். ஏதாவது ஆகிவிட்டதா?’

நடுக்கம் உடலிலிருந்த இதயத்திற்குள் ஊடுறுவுவதைப் போலிருந்தது,

    “சொல்லுங்கப்பா”

    “இன்னும் எந்திரிக்கலையாப்பா”

    “ராத்திரி லேட்டாத்தான் தூங்கினேன். அதான்….சொல்லுங்கப்பா. இந்நேரத்துக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க? என்ன விஷயம்?”

    “அம்மாதான்…”

    “அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு?’

    “எது வேணா ஆகலாம். ரொம்ப மோசமாப் போயிட்டு நேத்துலயிருந்து. நீ புறப்பட்டு வந்துடுறியா?”




    “அப்பா…”

    “அவ உயிரோட இருக்கும் போதே வந்து அவ கண்ணு முன்னாடி பொண்டாட்டி புள்ளையோட நின்னின்னா…அவ கண்குளிரப் பார்த்துட்டுப் போய் சேருவா.”

   “அப்படியெல்லாம் சொல்லாதிங்கப்பா. அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது.”

    “நீ வர்றவரைக்கும் ஒண்ணும் ஆகாம இருந்தா போதும்னுதான் நான் வேண்டிக்கிறேன். அப்பறம் என்ன வேணா ஆயிட்டுப் போவது. விதி விட்ட வழி. வர்றியாப்பா?”

    “சரிப்பா…”

  அப்பா ஃபோனை வைத்துவிட்டார்.

  ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பித்தவராக அமர்ந்திருந்தார்.

  ஆறுமாதமாக அம்மா அப்படித்தான் இருக்கிறார். யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால்…அப்பா இப்படி உடனே பறப்பட்டு வா என்று சொன்னதில்லை. வரவா என்று இவர் கேட்டாலும் அவ அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் போவ மாட்டா. பாச்காரி. நீ உன் வேலையைப் பாரு. நானும் ஆச்சியும் இருக்கற வரைக்கும் ஒண்ணும் பயமில்லை என்பார்.

   ஆச்சி என்பது வீட்டு வேலைக்காரி. அவள்தான் அம்மாவை உடன் பிறந்த சகோதரியாய், பெற்ற தாயாய் பார்த்துக் கொள்கிறாள்.

   எத்தனை வயதானாலும் அம்மா என்றால் சகலமும் ஆடுகிறது. கம்பீரமான ஆண் என்ற கர்வமே அடிப்பட்டுப் போய்விடுகிறது.

   படுக்கையை விட்டு இறங்கியவர் மௌரியனின் அறையை நோக்கி சென்றார்.

   இரவு வெகு நேரம் வரை அவனுடைய அறையிலேயே அவரும் ஜானகியும் இரவு விளக்கைப் போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர்

மௌனமாகப் பார்ப்பதும் பிறகு மகனைப் பார்ப்பதுமாக சோபாவில் அமர்ந்திருந்தனர்.

   பிறகு ஜானகி மகனுக்கருகிலேயே படுத்துக் கொள்ள இவர் தன் அறைக்கு வந்து படுத்தார்.

   அறையை நெருங்கும் போது மௌரியன் சோபாவில் அமர்ந்தபடி அலைப் பேசியைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

   ஜானகி இன்னும் உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. வெகுநேரம் வரை மகனுக்காக காவல் காத்த கண்கள் இப்பொழுது கண் அசந்துவிட்டிருந்தன.

   உள்ளே வந்தவர் மகனருகே வந்தார்

   அவரை நிமிர்ந்துப் பார்த்த மௌரியன்” குட் மார்னிங்ப்பா” என்றான்.

   குரலில் தெளிவிருப்பதை உணர்ந்தார்.

   ஆழ்ந்த உறக்கமும் அம்மாவின் அருகாமையும் அவனுக்குள் மன அழுத்தத்தை குறைத்திருக்க வேண்டும்.

     “குட்மார்னிங் மௌரி” என்று அன்போடு அவனுடைய கேசத்தை தடவினார்.

   அவன் தலை குனிந்துக் கொண்டான்.

   நேற்று நண்பர்களால் கொண்டு வந்து கிடத்தப்பட்டது ஞாபகம் வந்திருக்கலாம். அதனால் உண்டான கூச்சமுமாக இருக்கலாம்.

   அவனை மேலும் கூச்சப்படவிடாமலிருக்க…சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து மனைவியிடம் சென்றார்.




     “ஜானகி…ஜானகி…” என தட்டி எழுப்பினார்.

   ஏனோ பதறி எழுந்தாள் ஜானகி.

மகனைப் பற்றியே நினைத்துக் கொண்டு அரை குறையாய் உறங்கியதாலோ என்னவோ ஆழ்மனம் பதற எழுந்துவிட்டாள்.

    “என்னங்க…என்ன…?” என பதறியவள் எதிரே சோபாவில் அமர்ந்திருந்த மகனைப் பார்த்ததும்தான் நிம்மதி மூச்சுவிட்டாள்.

   மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற நிம்மதி வந்ததும் “தூங்கினிங்களா?” என கணவனுக்காக அக்கறைப் பட்டாள்.

     “ம்…” என்றவர் அருகே அமர்ந்தார்.

     “ஜானகி அப்பா ஃபோன் பண்ணினார்”

     “என்னவாம்?” என்றபடியே அவிழ்ந்து சரிந்திருந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டாள்.

     “அம்மாவுக்கு ரொம்ப உடம்பு மோசமாயிட்டாம். நம்மை உடனே கிளம்பி வரச் சொல்றார். அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு பயப்படறார்.”

   ஜானகி மகனைப் பார்த்தாள்.

     ‘இவனுக்கும் இப்பொழுது ஒருமாற்றம் தேவை. பாட்டி என்றால் இவனுக்கு உயிர். பாட்டிக்கும் அப்படியே. ஊருக்கு அழைத்து சென்றால் பாட்டியின் அருகாமை இவனுடைய தோல்விக்கு ஒரு மருந்தாக இருக்கும்’

    “அப்படியா?  அப்படின்னா உடனே கிளம்புங்க…” என்று எழுந்தாள்.

   “என்னம்மா…?” என்று அவர்களை நோக்கினான்.

  அலைபேசியில் கவனமாக இருந்ததில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அவன் சரியாக கவனிக்காதது தெரிந்தது.

    “பாட்டிக்கு…ரொம்ப உடம்பு சரியல்லையாம். ஏதாவது ஆயிடும்னு தாத்தா பயப்படறார். நம்மை உடனே கிளம்பி வரச் சொல்றார்.”

    “அப்படியா…கிளம்புங்கப்பா. எனக்கு உடனே பாட்டியை பார்க்கனும்” அவனும் எழுந்தான்.

  அடுத்து ஒரு மணி நேரத்தில் காரை இயக்கினார் நமச்சிவாயம்.




   கார் திருநாங்கூரை நோக்கி கிளம்பியது.

   மௌரியனுக்கு பாட்டியின் மீது பாசம்தான். ஆனால்…இப்பொழுது அவனுக்கு பாட்டியைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற துடிப்பெல்லாம் இல்லை. மாறாக அவனுக்குள் வேறொரு துடிப்பு இயங்கிக் கொண்டிருந்தது.

   இப்போதைக்கு அவனுக்கும் தனக்குள் உருவாகிக் கொண்டிருந்த திட்டத்திற்கு நிறைய யோசனைத் தேவைப்பட்டது. அவற்றையெல்லாம் நிதானமாக திட்டமிட வேண்டும். அதற்கெல்லாம் இந்த கிராமப் பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும் . அமைதியாக திட்டம் போட வசதியாக இருக்கும். மற்றபடி அவன் மனதில் தாத்தாவோ பாட்டியோ இல்லை.

   காரில் செல்லும் போது கூட அவன் தந்தையின் அருகில் அமர்ந்திருந்தாலும் அவனுடைய மனதிற்குள் நிமிடத்திற்கு நிமிடம் சாரல் தோன்றி தோன்றி அவனுக்குள் சதித் திட்டம் உருவாகக் காரணமாகிக் கொண்டிருந்தாள்.

    ஆனால்…அவனுடைய மனதில் ஓடும் எண்ணங்களின் வக்கிரங்கள் தெரியாமல் அருகில் அமர்ந்திருந்த மகனை பாவமாகப் பார்த்தாள் ஜானகி.

    ‘என் புள்ளை எவ்வளவு அழகு? அவ பேரு என்ன சொன்னான் கோகுல்..? சாரலோ தூறலோ? சாரல் பேரா அது? பேசாமல் இடி புயல் சுனாமி என வைத்துக் கொண்டிருக்கலாம்.

   பைத்தியக்காரி என் புள்ளைக்கு என்ன குறைச்சல்? ராஜாவாட்டம் இருக்கிறான். இவனை காதலிக்க முடியாதாமா? அப்படி என்ன பெரிய பேரழகி. லூசு. என் புள்ளையின் மனசை இத்தனை வேதனைப்பட வைத்துவிட்டாளே! என்னைக்காவது அவள் என் கண்லபடட்டும் நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்கறேன். ஏன்டி என் புள்ளைக்கு என்னடி குறைச்சல்னு? பாவி நல்லாவே இருக்க மாட்டா. அவளுக்கு கிடைக்கிற புருஷன் ரவுடியாத்தான் இருப்பான். மாமியாக்காரி நல்லா கொடுமைப்படுத்தறவளா கிடைப்பா.’

   மனதில் அந்த பெண்ணிற்கு ஏகத்திற்கும் சாபம் விட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி. பொங்கி பொங்கிக் கொண்டு வந்தது பொருமல்.

அவளுடைய சிந்தனைகள் இப்படி ஓடிக்கொண்டிருக்க அவனுடைய மனதில் வெறித்தனம் பெருகிக் கொண்டிருந்தது.

   சாரல்!

   துரோகி!

   நட்பு என்று சொல்லி நல்ல ஒரு காதலை நாசூக்காக கழட்டிவிட்டவள். சுயநலக்காரி. சந்தர்ப்பவாதி!

   சிரித்து சிரித்து பேசி மயக்கி பின் என் மனதை சின்னா பின்னமாக்கி சிதிலமாக்கிவிட்டவள்.

   என்னோடு காதல் தொடர்ந்தால் அவளுடைய அழகு பிரபலமாக முடியாது என நினைத்து சினிமா வாய்ப்பிற்காக சினிமாக்காரனை காதலிக்க முடிவெடுத்தவள்.

   மனம் முழுவதும் அவளுக்குள் காதல் இருந்ததை நான் அறிவேன். கண்கள் பேசிய காதலையெல்லாம் அறிவேன். அத்தனையையும் வெறும் நட்பு என் சாதிக்கிறாள்.

   மாட்டேன். அவளை சும்மா விட மாட்டேன். என்னை என்ன நினைத்துவிட்டாள்?

   எனக்கு கிடைக்காத அந்த அழகு யாருக்கும் கிடைக்க கூடாது.

   என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? அவளை என்ன செய்யலாம்?

   அவளை விடக் கூடாது. தீர்த்துக் கட்ட வேண்டும்.

   எவனோ ஒருவன் தன்னை காதலித்து ஏமாற்றியவளை ப்ளாட்பாரத்திலிருந்து வந்துக் கொண்டிருந்த ரயிலில் தள்ளி கொன்றானே. அதைப் போல் நைசாக பேசி அழைத்து சென்று தண்டவாளத்தில் தள்ளிவிடலாமா?




    எவனோ ஒருவன் தன் காதலியை கண்டந்துண்டமாக வெட்டி ஃப்ரிஜில் வைத்தானாமே! அதைப் போல் அவளை கண்டந்துண்டமாக வெட்டிடலாமா?

  எவனோ ஒருவன் தன் காதலியை காட்டுப் பக்கம் அழைத்து சென்று பெட்ரோலை ஊற்றிக் கொன்றானாமே அதைப் போல் …அதைப் போல் அவளைக் கொன்றால் என்ன?

   நினைக்க நினைக்க அவனுக்குள் வெறித்தனம் மூண்டது.

   உடம்பு முழுவதும் நரம்பு மண்டலம் முறுக்கிக் கொண்டது. கண்கள் சிவப்பேறி ரத்த களரியானது.

   கை முஷ்டி இறுகி கார் கண்ணாடியை ஓங்கி அடித்து உடைக்கலாமா என்றுத் தோன்றியது.

   அவனுக்குள் உண்டாகும் மாற்றங்களை ஜானகி கவனித்தாள்.

   திடீரென அவனுக்கு வேர்த்துக் கொட்டுவதும் அவனுடைய கைகள் மெல்ல நடுங்குவதும் அவளுக்குள் திகைப்பை உண்டுப்பண்ணியது.

     “என்னப்பா ஆச்சு?’” மெல்ல அவனுடைய கையைப் பற்றினாள்.

     “ஒண்ணுமில்லை” என்று சமாளித்தான்.

   தாயின் ஸ்பரிசம் தன் திட்டங்களைத் தவிடுப் பொடியாக்கிவிடும் என நினைத்தவனாய் அவளுடைய கையிலிருந்து தன் கையை நாசூக்காக நகர்த்திக் கொண்டான்.

    “தண்ணிக் குடிக்கிறியா? கேட்டவள் அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.

   வாங்கி மடக் மடக்கென குடித்துவிட்டு அம்மாவிடம் கொடுத்துவிட்டு சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

   கண்ணுக்குள் மறுபடியும் சாரல் வந்து சிரித்தாள்.

   அவனுக்குள் குமறிக் கொண்டிருந்த கொலை வெறி உச்சத்திற்குப் போனது.

   திருநாங்கூர் கிராமம் அமைதியான அழகான இயற்கை அன்னையின் இதமான சிரிப்பில் இருந்தது,

   ஊருக்குள் நுழைந்த போது இதுவரை சுவாசித்தறியாத காற்று ஏதேதோ மணத்துடன் நாசியைத் தழுவி நெஞ்சை நிறைத்தது.

   சின்ன சின்னதாய் நிறைய கோவில்கள் கடந்து சென்றன. பெரிய பெரிய மண் குதிரைகள் உடைந்து கிடந்தன.

    குதிரை மேல் கருப்பண்ணன் சாமி அரிவாளோடு காருக்கு பின்னாடி ஓடி வருவதைப் போல் இருந்தது.

   அந்தக் காட்சி நிமிடத்தில் அந்த குதிரையில் தானே அமர்ந்திருப்பதைப் போலவும் அரிவாளோடு சாரலை வெட்டி வீழ்த்த ஓடிடுவதைப் போலவும் மனதில் பிம்பம் தோன்றியது.

    சின்ன வயதில் தாத்தா வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வந்தபோது விளையாட்டு மும்மரத்தில் அந்த மண் சிலைக்கருகில் வந்துவிட்டதும் அண்ணாந்துப் பார்த்து விட்டு அந்த சிலையின் பயங்கரத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடியதும் தொடர்ந்து ஜூரமும் காய்ச்சலும் வந்துப் படுத்ததும் முனி  அடித்துவிட்டது என தாத்தாவும் பாட்டியும் பூசாரியைக் கொண்டு வந்து மந்திரித்ததும், அந்த மந்திரவாதியின் தோற்றமும் அவன் அடித்த உடுக்கையும் பமுறுத்தியதில் மேலும் பத்து நாட்கள் ஜூரத்தில் கிடந்ததும் ஞாபத்தில் வரும்போதெல்லாம் அவனுக்குள் சிரிப்பை வரவழைக்கும். இப்பொழுது சிரிப்பிற்கு பதில் அந்த சிலை அவனுக்குள் சீற்றத்தையும் சினத்தையும் உண்டுப் பண்ணியது.

    மதகுக்கரையை கடக்கும் போது சலசலத்து ஓடிய ஆறு அவனுக்குள் ஆனந்த சிலிர்ப்பை உண்டுப் பண்ணவில்லை.

    அங்கே தண்ணீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவனுடைய பால்ய பருவத்தையும் ஞாபகப்படுத்தவில்லை.

    ஆலமரத்தின் விழுதுகளைப் பற்றிப் பாய்ந்து குதித்து நீராடிய ஆறு அவனை இப்பொழுது அழைக்கவில்லை.

   மீன் பிடித்து விளையாடிய நாட்கள் மீண்டும் அவனுக்குள் பரவசத்தை தூண்டவில்லை.

   தோற்றுப் போன காதல் தோற்றுவித்திருந்த மாற்று எண்ணங்கள் மனதை வேற்றுப் பாதையில் அவனை செலுத்திக் கொண்டிருந்தன.

    பிரமாண்டமான பழைய கால அரண்மனை போன்ற வீட்டின் முன்னே கார் நின்றது.

   வேலைக்காரர் பெரிய கேட்டைத் திறந்துவிட மைதானம் போன்ற தளத்தில் கார் நுழைந்தது.

   பயறும் உளுந்தும் வேர்கடலையும் என வெயிலுக்கு விரித்து போட்ட வித விதமான கம்பளங்களைப் போல் காட்சியளித்தன. ரத்த நிற மிளகாய் விரிப்பு மூக்கில் நெடியை உண்டாக்கியது.

   உள்ளிருந்து ஓடிவந்தாள் அந்த கிழவி.

     “வாங்க..வாங்க…”என வாய்நிறைய சிரிப்புடன் அழைத்தாள்.

     “என் ராசா…பாத்து எம்புட்டு நாளாச்சு?” என வாலிப பிள்ளை என்பதைக் கூடப் பாராமல் வாஞ்சையுடன் மௌரியனை அவள் அணைக்க முற்பட தாத்தா வீட்டில் சின்ன வயதிலிருந்து அவனுக்கு கதை சொல்லி உணவு ஊட்டும் உற்ற தோழியான ஆச்சி… ஆச்சி என அவன் சுற்றி வந்த அந்த கிழவியின் அணைப்பிலிருந்து எரிச்சலாக விலகினான் மௌரியன்.

   ஏனோ…அன்பு பாசமெல்லாம் இப்பொழுது அவனுக்கு எரிச்சலையூட்டுகிறது.

   கானல் நீராகிவிட்ட தன் காதலுக்கு முன் எந்த அன்பும் பிரியமும், வாஞ்சையும் அவனுக்கு நஞ்சாக இருந்தது.




    வேலைக்காரர்கள் இவர்களுடைய பொருட்களை காரிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து உள்ளே வைத்தனர்.

    சத்தம் கேட்டு வெளியே வந்த தாத்தாவைப் பார்த்தான் மௌரியன்.

    அவருடைய கம்பீரம் தளர்ந்திருந்தது.

    பாட்டி போய்விடுவாள் என்ற வேதனை அவருடைய முகத்தில் தெரிந்தது.

      “வாப்பா… வாம்மா” என மகனையும் மருமகளையும் வரவேற்றவர் பேரனை கண் கலங்க அணைத்துக் கொண்டார்.

      “வா…வந்து பாட்டியைப் பாரு” என அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

   அவருக்குப் பின்னால் நமச்சிவாயமும், ஜானகியும் சென்றனர்.

    பாட்டியின் அறைக்குள் நுழைந்ததுமே ஏதோ மருத்துவமனைக்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வு உண்டானது.

   பாட்டி படுத்த படுக்கையாகக் கிடந்தாள்.

   நாரும் தோலுமாய் தேகம் மாறியிருந்தது.

   குச்சி குச்சியான கைகள் தோலால் மூடிய எலும்பாக இருந்தன.

   நமச்சிவாயம் அம்மாவின் அருகே சென்று “அம்மா…” என தொட்டார்.

   அவருடைய குரல் உடைந்துப் போயிருந்தது.

   பாட்டி மெல்ல கண்களைத் திறப்பதைப் பார்த்தான் மௌரியன்.

   மகனை ஒருநிமிடம் பார்த்த பாட்டி மௌரியனை நோக்கி வழிகளைத் திருப்பினாள்.

   கண்கள் மின்னின. பேசின.

ஜானகி மௌரியனை இழுத்து மாமியாரிடம் நிறித்தினாள்.

   பாட்டி அவனுடைய கையை மெல்ல பற்றினாள்.

   தடுமாற்றமாய் தன் முகத்தருகே கொண்டு சென்று மென்மையாக முத்தமிட்டாள்.

   அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.




What’s your Reaction?
+1
16
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!