Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-16

16

மானசி அனாவசியமாக அவனுடன் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. சுருக்கமாக “காதம்பரி” என்றாள்.

“ம்… அவளுக்கென்ன?” புருவம் சுருக்கி வெகு சாதாரணமாக கேட்டவனை கோபமாக பார்த்தாள்.

” நேற்று காலை காதம்பரியை கோவிலில் சந்தித்தேன்”

” ஆமாம் அவள் நம் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அதற்கென்ன?”

“இன்னமும் அவர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறீர்களா?”

” அவளுடனான தொடர்பை நான் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. இனியும் விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை” அவன் உறுதியாக பேச மானசி தொண்டையை செருமிக் கொண்டாள்.

” ஒருவருக்கு அவருடைய முதல் காதலை மறப்பது என்பது கடினமான விஷயம்தான்.ஆனாலும்…” அவள் இழுக்க, சொல்லி முடி என்பது போல் புருவங்களில் சுருக்கத்துடன் அவளை பார்த்திருந்தான்.

“இ…இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.நீங்கள் அந்த காதம்பரியையும், வந்து…தொடர்பில்   வைத்துக்கொண்டு என்னை மணமுடித்தீர்களானால் அ…அது சரியாக வராது. அதனால் நம் திருமணத்தை நிறுத்தி விடலாம்”

 சொல்லி முடிக்கும் முன் அவள் கன்னம் பளார் என தீ சுட்டது போல் எரிந்தது. கன்னத்தை தடவிப் பார்த்தாள் அடித்தானா?

“முட்டாள், இந்த கட்டுப்பெட்டி தனத்தை தாண்டி உன்னை வெளியூர் அனுப்பி,இந்த பரந்த உலகை புரிய வைக்க முயற்சித்ததெல்லாம்  வீண்தான். உன்னுடைய ஆதி புத்தி மாறவே இல்லை. நீ திருந்தவே மாட்டாய். உன்னோடு குடும்பம் நடத்துவது எனக்கு மிகவும் கடினம்தான் உன் விருப்பம் போலவே நம் திருமணத்தை நிறுத்தி விடலாம்”

மானசியே மனதில் நினைத்ததுதான். ஆனால் அதையே சிவ நடராஜன் வாயிலிருந்து கேட்டபோது அவள் உடம்பே ஒருவித அதிர்வில் ஆடியது.

முடிவை சொல்லிவிட்டவன் வேகமாக அறை வாசலை நோக்கி போக, தன்னை அறியாமல் அவன் பின்னே ஓடினாள். அறைக் கதவை திறந்தவன் நின்று திரும்பி பதை பதைப்போடு முன்னால் நின்றவளை பார்த்தான். சட்டென அவளை இழுத்து இறுக்கி மூச்சு முட்ட அணைத்தான்.

“மூளை என்று உனக்கு ஒன்று இருக்குமானால் அது கொஞ்சமேனும் வேலை செய்யுமானால் உன்னுடைய வார்த்தைகளை நீயே யோசி” சொல்லிவிட்டு அவளை உதறிவிட்டுப் போய் விட்டான்.

எதை யோசிக்க சொல்கிறான்? என்ன யோசிக்க? ஆத்திரத்தில் அடித்து விட்டு திருமணத்தை நிறுத்தி விடுவதாக சொல்லிப் போனவன், பிறகு அப்படி உயிரை உறிவது போல் அணைப்பானேன்?என்னுடைய எந்த வார்த்தைகளை யோசிக்க சொல்கிறான்? அன்று முழுவதும் மானசி சிந்தனையிலேயே படுக்கையில் கிடந்தாள்.

போன் ஒலிக்க அவன்தான் என ஆவலுடன் எடுத்தவள் புதிய நம்பரில் சோர்ந்து ஆன் செய்து காதில் வைத்தாள்.




“ஏய் மானசி நான் காதம்பரி. இன்று மாலை என் வீட்டில் ஒரு சின்ன பார்ட்டி இருக்கிறது. நம் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வருகிறார்கள். நீயும் கண்டிப்பாக வரவேண்டும். நான் உனக்கு லொகேஷன் அனுப்புகிறேன். 6:00 மணிக்கு வந்து விடு” இவளது பதிலை எதிர்பார்க்காமலேயே போனை வைத்து விட்டாள்.

 இவள் கூப்பிட்டதும் நான் குடுகுடுவென்று போய் நிற்க  வேண்டுமா? முதலில் கோபத்தில் கொதித்தவள் பிறகு சிவ நடராஜனின் பேச்சை மனதிற்குள் கொண்டு வந்து மெல்ல மெல்ல மனதை சாந்தப்படுத்தி யோசிக்க தொடங்கினாள்.

 எங்கேயோ எதையோ நான் தவற விடுகிறேனா? இந்த காதம்பரியிடம் கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே!

 அதன் பிறகு தாமதிக்காமல் மானசி காதம்பரியின் வீட்டிற்கு கிளம்பி விட்டாள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறிய பங்களா போன்ற அமைப்பில் இருந்தது காதம்பரியின் வீடு.

 வீட்டிற்கு முன் போலீஸ் வாகனத்தை .பார்த்த மானசியின் புருவங்கள் முடிச்சிட்டு கொண்டன.இங்கே என்ன பிரச்சனை? வீட்டிற்குள் நுழைந்த போதோ ஆங்காங்கே காவல்துறை சீருடைகள் தென்பட மானசிக்கு கொஞ்சம் பயம் வந்தது. ஏன் இப்படி ஒரே போலீஸ் கும்பலாக இருக்கிறது?

“உள்ளே வா மானசி. ஏன் இங்கேயே நிற்கிறாய்?” காதம்பரியின் குரலுக்கு திரும்பியவள் திகைத்தாள்.

 முழு காவல்துறை காக்கி உடையில் நின்றிருந்தாள் காதம்பரி.

எஸ்.பி  என அவளுடைய பதவியை சொன்னது அவள் சீருடை தோள்பட்டை.மானசி அவளை ஆச்சரியமாக பார்த்தாள்.

“விருதுநகருக்கு மாற்றலாகி ஒரு வாரம் ஆயிடுச்சு. முன்பு நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தப்ப அப்பா இங்கே டிஐஜியா இருந்தார். இப்போ நான் இங்கே வந்திருக்கிறேன். நான் படித்த ஊரிலேயே… அதுவும் சிவாவோட ஊரில் கொஞ்ச நாட்கள்  வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்.இங்கே நம்ம ப்ரெண்ட்ஸிடமெல்லாம் என் பதவியோடு அறிமுகம் ஆகும் ஆசை.அதற்காகத்தான் இந்த பார்ட்டி” கலகலவென்று பேசியபடி அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துப் போனாள்.

“சைத்து ஒரு முக்கியமான ஆளை உங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணனும். கொஞ்சம் வெளியே வாங்க” போனில் யாரிடமோ பேச வீட்டிற்குள் இருந்து அந்த காவல்துறை அதிகாரி வெளியே வந்தார்.

 உயரமாக கம்பீரமாக முறுக்கு மீசையுடன் இருந்த அவரை “சைதன்யன். என்னுடைய கணவர்” என்று அறிமுகம் செய்தாள் காதம்பரி.

மானசி விழித்தாள்.காதம்பரி திருமணம் செய்து கொண்டாளா…? இந்த பெரிய போலீஸ் அதிகாரி அவள் கணவரா?

“சைத்து இவள் யார் தெரியுமா? என்னுடைய சிவாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறவள்” காதம்பரி சொல்ல…அந்த என் சிவாவில் மானசி அதிர, சைதன்யனோ எந்த பாதிப்பும் இன்றி “வாழ்த்துக்கள்மா” என்று மானசிக்கு கையை நீட்டினார்.

அவர் கைப்பற்றி குலுக்கியவள்,உள்ளே வந்து கொண்டிருந்த வெற்றிவேலனையும் சிவஜோதியையும் பார்த்து ஆச்சரியமானாள்.

“அண்ணா நீங்கள் எங்கே இங்கே?”

” காதம்பரி எனக்கும்தான் அழைப்பு அனுப்பி இருந்தாள்”

“ஓ… எல்லா பிரண்ட்ஸ்சையும் அழைத்திருப்பதாக சொன்னார்கள்” என்றவளின் பார்வை சிவஜோதி மேல் படிய, அவள் முறைத்தாள்.

” நான் காதம்பரியின் ப்ரண்ட் இல்லை என்று சொல்லிக் காட்டுகிறாயா? ஆமாம்தான், நான் உங்கள் எல்லோருடனும் நம்ம ஊர் ஸ்கூலில் படிக்கவில்லைதான். ஆனால் இப்போது வெற்றியின் மனைவியாக இந்த பார்ட்டிக்கு வந்திருக்கிறேன். வாங்க வெற்றி” அவன் கை பிடித்து இழுத்துப் போனாள்.

இருவரும் இப்படி ஒன்றாக செல்வதை நிறைவாக பார்த்த மானசியின் மனதில் ஒரு விரக்தியும் தோன்றியது. சிவா ஆசைப்பட்டது போல் அவன் அக்கா கணவனுடன் இணைந்து விட்டாள். இனி இவர்கள் திருமணத்திற்கு அவசியம்தான் ஏது? நெஞ்சம் கனக்க விழித்து நின்றாள்.

அப்போது அங்கே வந்த சிவ நடராஜன் இவளை கண்டு கொள்ளாமல் தாண்டிக் கொண்டு உள்ளே போனான்.




What’s your Reaction?
+1
41
+1
18
+1
1
+1
1
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!