Serial Stories நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்- 4

4

போர்க்களம் புகு

முப்புறமும் அகழி சூழ்ந்த வானளாவிய கோட்டைக்குள் நுழைந்து அரண்மனைப் பாதையில் புயலென வந்து கொண்டிருந்தது அப்புரவி. அதற்கு முன்னும் பின்னும்  அணி வகுத்த ஐநூறு புரவி வீரர்கள் ஒரே சீராய் லயமாய்த் தங்கள் புரவியைச் செலுத்திக் கொண்டு வர நடுவில் ஆஜானுபாகுவாய் ஆரோகணித்து வந்தான் வெள்ளையங்குமரன், சோழப் படைத் தளபதி, இராஜாதித்தனின் உற்ற நண்பன்.

அரண்மனை வாசலில்  அனைவரும் தங்கள் புரவிகளை நிறுத்திக் கொள்ள தாவிக் குதித்துச் சிங்கமென இறங்கி வந்தான் குமரன்.

“வாருங்கள் தளபதியாரே! பயணம் சுகம் தானே. கங்கம் கண்டபின் கறுப்புத் தங்கமாய் தோல் மின்னுகிறதே! அலைச்சல் அதிகமோ?”

ஆவலோடு கூறியபடி எதிர் கொண்டழைத்தான் இராஜாதித்தன்.

அவனின் ஆலிங்கனத்தில் தாய்க்குள் உறங்கும் சேய்ப்பறவையாய் தன்னை ஒடுக்கிக் கொண்டான் வெள்ளையங்குமரன்.

“சொல் குமரா! சென்ற வேலை முடிந்ததா? நான் கங்கம் சென்றதைக் கேட்க வில்லை. இராட்டிரக்கூடரை வெல்ல படை திரட்டச் சொன்னேனே. அவ்வேலை முடிந்ததா? தந்தை கேட்டால் கங்கம் சென்றதாகவே கூறு.” ஆலிங்கனத்தில் செவிக்குள் இசைத்தான் இளவல்.

குமரனின் அழுத்தப் பிடி அறிவேன் நண்பா! அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றது.

குமரனை கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு அரண்மனைக்குள் நடந்தான் இராஜாதித்தன். காண்பவர் கண்களுக்கு இரை கொண்ட இரு சிங்கங்கள் இறுமாப்புடன் வலம் வருவதைப் போல் இருந்தது.

அவர்களை எதிர்நோக்கி மேல்விதானத்தின் தனிச்சபையில் காத்திருந்தனர் பராந்தகச் சோழரும் அவர்தம் பட்ட மகிஷி கோக்கிழானடிகளும்.

“நம் இராஜாதித்தன் அவன் நண்பனுடன் ஒத்து நடந்து வருவது என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி! சோழத்தின் சோர்விலா அம்புகள் வருவதைக்  கண்டீர்களா அரசே!” கோக்கிழானடிகள் தேவியார் தன் கணவன் பராந்தகச் சோழரிடம் கூற

“ஆம் தேவி! உன் அருந்தவப் புத்திரனாயிற்றே! விட்டுக் கொடுப்பாயா என்ன?”

“அவன் சோழத்தின் புத்திரன். போர்க்களமே கதியென்று புகுந்தாடி நிற்கிறான். அவன் மனத்தைக் கொஞ்சம் சிவத்தொண்டிலும் திருப்பச் செய்ய வேண்டும். இம்மையிலும் மறுமையிலும் துணை நிற்கப் போவது சிவ நாமமே அன்றி சிந்தும் இரத்தமோ சீராய்ப் பெறும் வெற்றியோ அல்ல.”

“அரசனின் வழுவாத செயலில் நாட்டுக்காகப் போரிடுவதும் அடங்கும் தேவி. நாட்டு மக்களைக் காக்காதவன் என்ன அரசன்?”




“நாட்டை மட்டும் பார்த்தால் நம் மனமென்னும் கூட்டை யார் பார்ப்பது? அவன் போர்க்களமும் காணட்டும். பொலிந்த கூரை வேந்தனையும் காணட்டும். கூத்தனுக்கு பொன்னம்பலம் வேய்ந்த வேந்தனல்லவா தாங்கள்? நம் மகனும் சிவச்சேவை செய்ய வேண்டும் அல்லவா?”

“உண்மை தான் தேவி. அரசனுக்கு நாடும் முக்கியம் தம் நலமும் முக்கியம். நாட்டைக் காக்கப் போரென்றால் நம்மைக் காக்க அச்சிவமன்றி பேறு யார் உளர்? இளரத்தம் சூடேறி எங்கே போர் எங்கே போர் என அலைபாய்கிறது. நெறிபடுத்தி பாதை மாற்றுவோம். கலங்காதே தேவி!” பராந்தகர் ஆதரவாகச் சொற்களை உதிர்ப்பதற்கும் குமரனை ஆசனத்தில் அமர வைத்து விட்டு இராஜாதித்தன் தந்தையின் இடப்பக்கம் உள்ள ஆசனத்தைக் கொள்வதற்கும் சரியாக இருந்தது.

“தந்தையே! நம் படைத் தளபதி வந்து விட்டார். இனி இராட்டிரகூடத்துடனான போர் பற்றித் தெளிவான திட்டம் வகுக்கலாம் அல்லவா? எத்தனை காலம் நம் வீரமாதேவி தன் நாட்டுக்காகக் காத்திருப்பாள்? வந்த பெண்ணை வாழ வைக்க வேண்டியதும் அவள் பிறந்த மனையின் பெரும் கடமை அன்றோ? இராட்டிர கூடத்தின் கன்னரத்தேவன் நம்மிடம் தோற்றுச் செல்லத் துடித்துக் கொண்டிருக்கிறானாம். அதற்கேன் நாம் மீன மேஷம் பார்க்க வேண்டும்? களத்தில் இறங்கினால் காணலாம் பெரும் வெற்றி. ஆணை இடுங்கள் தந்தையே! அடுத்து வரும் நாளில் நம் புலிக்கொடியை இராட்டிரகூடத்தில் நிறுவி விட்டு வருகிறேன்.”

குட்டிப்புலி உறுமியது.

“சற்றுப் பொறு இராஜாதித்தா! முதலில் குமரன் போன காரியம் கை கூடியதா எனக் கேட்போம். கூறுங்கள் தளபதியாரே! கங்க நாட்டு மன்னன் எம் ஆருயிர் நண்பன் பிருதிவீபதி நலமோடு இருக்கிறாரா? அவர் மீண்டு அரசாளும் சகுனம் தென்படுகிறதா?”

நண்பனைப் பற்றி விசாரிக்கும் பொழுது சக்கரவர்த்தியின் கண்களில் அளவில்லாச் சோகம் தென்பட்டது. இருக்காதா என்ன? கங்க மன்னர் பிருதிவீபதி பராந்தகருக்கு உற்ற தோழனாயிற்றே.

“நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் நடந்த இராட்டிரகூடப் போரில் இரண்டாம் கிருஷ்ணனுடன் வாணர்களும் அல்லவா எதிரிகளாய் ஆயினர். அதன் பின் நடந்த திருவல்லப் போரில் வாணர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றது இந்த கங்க மன்னன் பிருதிவீபதியினால் அல்லவா? அதற்காகத் தானே நான் வாணக் கோப்பாடி நாட்டையும், செம்பியன் மாவலி வாணராயன் என்ற பட்டத்தையும் பிருதிவீபதிக்கு அளித்தது. அன்றிலிருந்து இன்று வரை அவன் என் ஆருயிர் நண்பனாகத் தானிருக்கிறான். அவனுக்கு உடல் நிலைக் குறைவு எனக் கேள்விப் பட்டதிலிருந்து என் மனம் சரியாக இல்லை. சற்றே நிலைமையை எடுத்துக் கூறும் வெள்ளையங்குமரரே! கங்க நாட்டில் என்ன நிலைமை இப்போது?”

“சோழ வேந்தே! தங்களுக்கு என்றும் ஜெயமுண்டாகட்டும்! நின் கொடை வாழ்க! நின் கொற்றம் வாழ்க! அடியேன் சிறியவன். தங்கள் மகன் போல் நினைத்து உரிமையுடன் உரையாடுங்கள். தங்களின் மேலான ஆறுதலையும், கனிவான விசாரிப்பையும் முறையாக கங்க மன்னனிடம் கொண்டு சேர்த்தேன். அவர் அதை உணர்ந்தாரா என்பது அறிந்திலேன். கங்கம் இப்போது இரண்டாம்  பூதுகன் வசம் செல்ல இருக்கிறது.  அரசர் பிருதிவீபதிக்கு வாரிசு இல்லாததால்  இரண்டாம் பூதுகன் ஆட்சிக்கு வரப் போவதாக அரண்மனைக்குள் ஒற்றறிந்தேன். அவன் இராட்டிர கூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரத் தேவனுக்கு விசுவாசம் கொண்டவன். அவனுக்கு உறவுமுறையும் கூட. அப்படி இருக்க நாம் இப்போது…”

“இராட்டிர கூடத்தை வெல்ல படைபலம் அதிகம் தேவைப்படும் என்கிறாய். அது தானே நண்பா?! கேளுங்கள் தந்தையே! நம் தேசத்தின் ஒவ்வொரு சிற்றூரும் ஆயிரம் கிராமங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கிராமத்திலும் ஓராயிரத்துக்கும் மேல் வீரர்கள் போர்ப்பயிற்சி எடுக்கிறார்கள். அவர்களில் பலர் நம் போர்க்காவல் படையிலும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இன்னும் பயிற்சி கொடுத்து விட்டால் போதும். படை பலம் அமோகமாய் இருக்கும். “

இராஜாதித்தன் உற்சாக மிகுதியில் ஆசனத்தை விட்டு எழுந்து தொடை தட்டிப்  பேசினான்.

“பொறுமைக்கும் உனக்கும் பொருந்தாத் தூரமோ இராஜாதித்தா! ஒரு போர் என்றால் அதற்கான வேகம் மட்டும் போதாது. காலம், நேரம், உதவி, படைபலம், நுண்மை, திட்டம் எல்லாவற்றிற்கும் மேல் கடவுளின் அனுக்கிரகம் இவை அனைத்தும் வேண்டும். நாம் வீரர்கள் தாம். விவேகமற்றவர்கள் அல்ல.”

“அவமானப் பட்டிருப்பது நம் இளவரசி வீரமாதேவி அரசே!” இராஜாதித்தன் கர்ஜித்தான்.

“யார் இல்லையென்றது? நம் பெண் தான். இருப்பதைத் தக்கவைக்கத் தெரியாத குணவானை மாப்பிள்ளையாக அடைந்து விட்டாள். கட்டாயம் உதவி புரியத் தான் வேண்டும். இப்போதைய நிலையில் பிருதிவீபதியின் படைகள் நமக்கு கை கொடுக்குமா? என்ன சொல்கிறாய் வெள்ளையங்குமரா?”

“சந்தேகம் தான் அரசே! வரவிருக்கும் பூதுகன் மதில் மேல் பூனை. நம் பக்கமும் சாயலாம். நமக்கு எதிராகவும் மாறலாம். பொறுத்திருப்பது நல்லதே என்றாலும் இராட்டிரகூடரை அடக்க இளவரசர் சிங்கமென நிற்கும் பொழுது அவருக்குத் தோள் கொடுப்பது தானே உற்ற நண்பனின் தோழமை? நான் இளவரசர் இராஜாதித்தன் பக்கம் தான் அரசே!”

“நட்புக்குள் பகைமை இருப்பதில்லை. நட்பினால் பகைமை பூப்பதில்லை. நட்பு என்னும் சொல் எங்கு பொய்யாய்த் திரிகிறது என்றால் முன்னொன்றும் பின்னொன்றும் பேசித் திரியும் போது தான். இராஜாதித்தா உனக்கு கிடைத்த பொன்னான நண்பன் இந்த வெள்ளையங்குமரன். பிடிமானம் விட்டு விடாதே!” பராந்தகர் இடிஇடியெனச் சிரித்தார்.

பின் கண யோசனையில் அவர் முகம் மாறிற்று.

“தாழைமேட்டில் நம் ஜேஷ்டையின் வேள்வி நன்றாக நடந்து முடிந்ததா? அதைப் பற்றி ஏதேனும் தகவல்கள்?”

“நம் ஓலை சென்று சேர்வதற்குள் அங்கிருந்த போர்ப்படை வீரனே அந்த துரோகியை நையப் புடைத்து நம் கொட்டடிச் சிறைக்கு அனுப்பி விட்டான் அரசே! வந்தவன் வாணன் தான். வேள்வியைச் சிதைக்க இராட்டிர கூடன் அனுப்பி வந்தவன். சுயமாய் புத்தி இல்லாதவன்.”

“நஞ்சுண்டனாய் இருப்பானோ? நஞ்சைக் கலந்தானாமே?”

“நஞ்சுண்டன் அல்ல அவன். நச்சுப் பாம்பு! நம் போர்ப்படை வீரன் சக்கரவாகன். பெரும் துடிப்பு மிக்கவன். சோழத்தின் மீது பெரும் பற்று வைத்திருப்பவன். அவன் தான் பூர்ணாஹுதியில் விழ இருந்த வாணனைத் தடுத்துத் தலைமேல் வைத்துச் சுழற்றிக் கட்டிப் போட்டவன்.” என்றான் குமரன்

“பலே! காவிரித் தண்ணீர் ஒவ்வொரு குடிமகனையும் பெரும் வீரனாகத் தான் மாற்றி இருக்கிறது. சக்கரவாகன்! அவன் வந்தால் அரசவைக்கு வரச் சொல் இராஜாதித்தா! நான் பார்க்க வேண்டும் அந்த துடிப்பு மிக்க வீரனை.”

அதுவரை மௌனமாக ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்த இராஜாதித்தன் வியந்து கூறினான்.

“இருக்கும் இடத்திலிருந்து மொத்த சாம்ராஜ்யத்தையும் ஆளும் தங்களுக்கு சக்கரவர்த்தி என்ற பட்டம் சாலப் பொருந்தும் தந்தையே!”

“ஆம்! ஆம்! குஞ்சர மல்லர் வாழ்க! வீரத் திருமகன் வாழ்க! சோழப்பெருந்தகை சக்கரவர்த்தி பரகேசரி பராந்தகச் சோழர் வாழ்க! வாழ்க!” குமரன் வணங்கினான்.




“போதும்! போதும்! நண்பர்கள் இருவரும் அரசரைப் புகழ்ந்து மனம் குளிர வைத்தது போதும். எல்லாம் உடனே போர் நடக்க வேண்டும் என்ற தந்தையின் கட்டளையைக் கேட்கத் தானே. அவர் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவர். அப்படி யோசித்துத் தான் இராஜாதித்தா! உன்னிடம் ஒன்று சொல்லச் சொன்னார்.” என்றாள் அதுவரை அவர்கள் பேச்சில் தலையிடாது கவனித்துக் கொண்டிருந்த கோக்கிழானடிகள்.

“கூறுங்கள் அன்னையே! தந்தை சொல் தான் வேதமெனக்கு. தாய் சொல்லோ அமுதமெனக்கு. நண்பன் சொல்லோ நல்லதே எனக்கு” இராஜாதித்தன் குறும்பாய் நகைத்தான்.

“ஒன்றுமில்லை மகனே! சற்று காலம் உன் தோள்த்தினவை களைப்பாற விட்டு விட்டு கற்றளி எழுப்பேன் நம் சிவனாருக்கு. நெற்றியில் நீறணிகிறாய். நெஞ்சுக்குள் நெருப்பணிகிறாய். நெற்றிச் சிவம் நெஞ்சிலும் குடியேறினால் உன் உடம்பே ஆலயமாகி விடுமே இராஜாதித்தா! கொல்வது சினம். கொண்டிடு சிவம்.!”

“புரிகிறது அன்னையே. பதுங்கி நிற்கும் புலியைப் பாய விடாது திசை திருப்புகிறீர்கள். சிவம்! என்னுள் கலந்த இறை. இறையும் இரையும் எனதிரு கண்கள். எழுப்புவேன் அன்னையே. உறுதியாய் எழுப்புவேன். இப்போரின் வெற்றிக்குப் பின் உறுதியாய் எழுப்புவேன்!”

சிவன் போக்கு சித்தன் போக்காய் இருக்கும் மைந்தனின் போக்கைக் கண்டு பராந்தகர் ஒரு வேகத்தில் தன் சொற்களை உதிர்த்தார்.

“போர்க்களம் புகு!”

(தொடரும்)




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!