Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-3

 03

“என்னங்க, ஒரே அந்தகாரமா இருக்கு. வழியில ஒருத்தர் இப்ப போகாதீங்கனு சொன்னார். அதைக் கேட்டிருக்கலாமோ?” பயத்துடன் கேட்டாள் மீனா.

“பயப்படாதீங்க மா. பக்கத்தில சுனையிருக்கு. இப்ப வந்திடறேன்” என்று போன டிரைவர் ஆளையேக் காணோம்.

ஆளரவமற்ற அந்தப் பாதையில் இருட்டில் நிற்பது சந்தானபாண்டியனுக்கும் கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது.

“மணி எங்கே போனான்? இரு ஃபோன் போட்டு கேட்போம்” அவர் கைபேசியை எடுக்க…

தூரத்தில் இரண்டு வெளிச்ச புள்ளிகள் தெரிந்தது. சற்று நேரத்தில் ஒரு கார் அவர்களருகில் வந்து நின்றது.

“இந்தக் காரில் ஏறுங்க சார்.”

பவ்யமாகக் கதவைத் திறந்தான் அந்த டிரைவர்..

“இல்லை, வந்து, மணி…” ஏதோ சொல்ல வந்தவரிடம் “இல்லை சார். மணி காரை ரிப்பேர் பண்ணி எடுத்திட்டு வருவார். அதுவரைக்கும் நீங்க அம்மாவோட இருட்டில நிக்க வேண்டாம்” என்றான் பணிவுடன்.

*****

அன்று சுரேந்தர் கொஞ்சம் ஆடிப் போயிருந்தார்.

ராம் வீடியோகால் லைனில் வந்தான்.

சுரேந்தர் சிந்தனையோடு அவனை ஏறிட்டார்.

“என்ன ஆதி? ஆரம்பமே சரியில்லையே!”

“நோ! அங்கிள். இந்த ஆதி எல்லாத்தையும் சரி பண்ணுவான். மணிக்கு என்ன ஆச்சுன்னு எதுவும் எஸ்பிக்குத் தெரியாது. தெரியவும் கூடாது. அவங்க இரண்டுபேரும் பத்துநாள் எந்த வித பிரச்சினையுமில்லாம அங்க இருந்திட்டு வரணும்.”

“ஓகே. குட் லக்.”

*****

அந்த அதிகாலையில் பாளையங்கோட்டைச் சிறைக்குள் நுழையத் தயாராக இருந்தது அந்த காய்கறி வேன். காவலர்கள் வேனையும் டிரைவர் – கிளீனரையும் சோதனையிட்டு உள்ளே அனுப்ப, பத்ரி வேனில் ஏறுவதற்குத் தயாராக இருந்தான்.

“தலை! இந்த வேனில் காய்கறி மூட்டையோட உன்னையும் கட்டி அனுப்புறேன். திருநெல்வேலியில இறங்கிடு. அதுக்கப்புறம் உன் பாடு” வார்டன் கிசுகிசுக்க…

வேனில் ஏறினான் பத்ரி.

திட்டமிட்டபடி வெளியேறிய வேன் வேகமாக திருநெல்வேலி நோக்கிச் சென்றது.

*****

மஞ்சள் காடு அரண்மனை மற்றும் அதைச் சுற்றியிருப்பவர்களுக்கு மளிகை சப்ளை செய்ய கீழிருந்து முத்துவேல் வேனெடுத்து வருவான். அன்றும் அடிவாரத்திலிருந்து வேனைக் கிளப்ப எதிரே நின்று மறித்தான் கஜா.

“பத்துபேர் இருக்காங்க. அரண்மனைல ஷூட்டிங் போகணும் பா. கொஞ்சம் அவசரம், ஏத்திட்டு போறியா? தலைக்கு ஐம்பது ரூபா கொடுத்திடறேன்.”

முத்துவேல் தலையை ஆட்ட, துணைநடிகர்கள் வேனில் ஏறினார்கள்.

“அண்ணே! பாண்டியைக் காணோம். ஒன்பது பேர்தான் இருக்கோம். டைரக்டர் தெரிஞ்சா கத்துவார்.”

“இவனோட பெரிய சள்ளையா இருக்கே.எங்கே தண்ணி போட்டு கவுந்து கிடக்கறானோ..ஏன் யா மாரி அவனை சேர்க்காதே னா கேட்குறியா! இப்ப எங்க தேடறது?”

கஜா புலம்ப, ஒரு காலை விந்தியபடி தலையில் கட்டிய முண்டாசோடு ஓடி வந்தான் அவன்.

“யோவ் நேரமாச்சு. கிளம்பவா?” முத்துவேல் அவசரப்படுத்த, வந்தவனை யாரென்றும் பாராமல் வேனில் ஏற்றிவிட்டான் கஜா.




*****

“உண்மையிலேயே இந்த அரண்மனையும் அதை சுற்றி இருக்கிற இடமும் ரொம்ப அழகாத் தானிருக்கு” – மீனா.

இளங்காலைப் பனி சன்னல் கண்ணாடியில் முத்து கோர்த்திருக்க பச்சைபசேலென்ற செடிகள் தலையசைத்துக் கொண்டிருந்தன.

கையில் தேநீர்க் கோப்பையோடு அதை ரசித்துக் கொண்டிருந்தார் சந்தானபாண்டியன்.

“மீனா! வர்றியா ஒரு வாக் போய்ட்டு வரலாம்?”

மீனா தலையசைக்க அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

“என்னங்க! இந்தப்பக்கம் பாருங்க… கோவில் மாதிரி இருக்கு.”

அவள் காட்டிய திசையில் அந்தக் கோவில் பாழடைந்து கிடந்தது.

காட்டுக் கொடிகள் கோபுரமெங்கும் படர்ந்து கிடக்க சுற்றிலும் மஞ்சள்நிறப் பூக்கள்.

கம்பிக்கிராதிக்குள் வீற்றிருந்தாள் அம்மன்.

“என்ன வாத்ஸல்யம்? சாந்தஸ்வரூபியா தெரியறாளே! ஏன் யாரும் பராமரிக்காம இப்படி விட்டிருக்காங்க?”

“அவங்க தலையெழுத்து அப்படி. என்ன செய்ய?” என்று சிரித்தபடி வந்தாள் அவள். மஞ்சள் நிறத் தாவணியும் சிவப்பு கலரில் பாவாடை ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். கையில் வைத்திருந்த மலர்மாலையிலிருந்து சுகந்தம் வீசியது.

“இது என்ன அம்மன்மா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் மீனா.

“ரணபத்ரகாளியம்மன். சாந்தஸ்வரூபி தான். தப்பு செஞ்சா தலையெடுக்கத் தயங்க மாட்டாள்.”

அவள் ஆலயத்தினுள் சென்று அம்மனுக்கு மாலையணிவித்து கற்பூரம் காட்டினாள்.

கண்ணை மூடி நின்ற மீனாவிடம் குங்குமத்தைக் கொடுத்தவள் மின்னலென அங்கிருந்து மறைந்தாள்.

“என்னம்மா! உன் பேரென்ன?” மீனாவின் குரல் அந்த மலையெங்கும் எதிரொலித்தது.

‘என்னங்க இந்தப் பொண்ணு, மாயமா மறைஞ்சிட்டாளே!”

‘மலைப்பகுதியிலேயே இருக்கிறவங்க இந்தப் பாதையில் சரளமா ஏறி இறங்குவாங்க. நமக்கு தான் மூச்சு வாங்கும்.”

“அதுவும் சரிதான்.”

ஆனா அந்தப் பொண்ணு முகத்தில அப்படியொரு தேஜஸ். பேரைக் கேட்காம போயிட்டேனே!”

“பத்துநாள் இங்கேதான் இருக்கப்போறோம். மறுபடியும் ஒருநாள் பார்க்காமலா இருக்கப் போறோம்? நீ இன்னும் பழசையே நினைச்சிட்டிருக்க.”

“பின்ன என்னங்க, தவமா தவமிருந்து ஒரு பிள்ளையைப் பெத்தோம். அவனுக்கப்புறம் மூணு வருஷம் கழிச்சு தங்க விக்ரகமாட்டம் பிறந்தவளைத் தக்க வச்சுக்க முடியலையே. அவ இருந்திருந்தா இந்தப் பொண்ணு வயசு தான் இருக்கும். எனக்கு அந்த கொடுப்பினை இல்லாம போச்சே.”

“விடு மீனா. பெத்து வளர்த்தா தான் நம்ம பெண்ணா? அவ வயசில இருக்கிற எல்லாப் பொண் குழந்தைகளும் நமக்குப் பெண் தான். நீ தானே சொல்லுவ கடவுள் காரண காரியமில்லாம எதுவும் செய்யமாட்டார்னு. அப்புறமென்ன கவலை? வா ரூமுக்குப் போய்ப் பிள்ளைக்குக் கால் பண்ணுவோம்.”




சந்தானப் பாண்டியன் ஆறுதல் சொல்ல… அதே நேரத்தில் அவர் மொபைல் அடித்தது.

“அப்பா!! ஹவ் ஆர் யூ? ஹவ் ஈஸ் தி ட்ரிப்? எஞ்சாய் பண்ணீங்களா?”

மகனின் குரலைக் கேட்டதும் ஸர்வமும் மறந்து போனது மீனாவுக்கு.

“இங்கே ஃபோனைக் கொடுங்க” என்றவள் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து இங்கு வந்த வரை நடந்த கதையை மகனிடம் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பாண்டியனுக்கு வியப்பாய் இருந்தது. அதெப்படி இந்தப் பெண்களுக்கு கதை சொல்ல மட்டும் அலுப்பதேயில்லை. ஒருவேளை இந்தக் குணம்தான் இவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறதோ?

அவர்களிருவரும் மெல்ல நடந்து அரண்மனைக்கு வரவும் அங்கிருந்து அலறலாய் ஒரு சத்தம் கேட்கவும் சரியாயிருந்தது.

******

“ஏய் இங்கே பாரு..ஏகப்பட்ட மஞ்சப்பூ”

கோதை கத்தினாள்.

“யெஸ், யூ காட் இட். இதுக்காகத்தான் நாம இத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருக்கோம்”

கிருபாசங்கர் நிறுத்தி நிதானமாகச் சொல்ல மற்றவர்கள் வியப்போடு பார்த்தார்கள்.

“இதோ பாருங்க. நாம பாட்டனி எடுத்தது மரம் செடி கொடிகளை நேசித்ததாலதான். வெறும் படிப்புக்காக இல்லை. இஷ்டப்பட்டு படிக்கிற படிப்பு நம்ம அறிவையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தணும்.”

“கேப்டன், இதெல்லாம் மலையேறும் முன்னே சொல்லியாச்சு. இப்ப வாட் நெக்ஸ்ட்?”

“இந்த மலையோட ஸ்பெஷாலிட்டியே இந்த மஞ்சள் பூக்கள் தான். இதுவரை இது என்ன பூவுனு யாருக்கும் தெரியல. ஈவன் இது என்ன ஃபேமிலி, இதோட பொடானிகல் நேம் எதுவும் தெரியாது. ஆனா இதில ஏதோ ஒரு சூட்சமம் இருக்கு. அதை நாம் கண்டுபிடிக்கணும்.”

“டன் பாஸ். இப்பவே இந்த வேலையில் இறங்கிடுவோம்.”

பட்டப்படிப்பை முடித்த அந்த மாணவர்கள் எதிர்கால கனவுகளை கண்களில் ஏந்தி மஞ்சள் காட்டு மர்மத்தை கண்டுபிடிக்கத் தயாரானார்கள்.

கிருபாசங்கர், கோதை, ஜான், வசந்த்,தீ பா என்ற ஐவர் குழு மலர்களைப் பறித்து அதன் அல்லிவட்டம் புல்லிவட்டத்தை ஆராய்ந்து கொண்டிருக்க, தூரத்தில் மெலிதாய் ஒரு ஓலம் கேட்டது. பின் படிப்படியாய் அது அதிகரித்து பெரும் கூவலாக…

அவர்களுக்குப் பயம் வந்தது.

தீபா விழிகளை உருட்டி “என்னடா சத்தம் இது?” எனக் கேட்க…

அதற்குள் ஒரு சிறு பாறை அவர்களை நோக்கி உருண்டு வந்தது.

சட்டென நகர்ந்து கிருபாசங்கர் அவர்களை பக்கவாட்டு மரத்தடிக்கு நகர்த்தினான்.

“மலைப்பகுதியில எப்பவும் எச்சரிக்கையா இருக்கணும். இந்தக் காடுகளில்தான் நம்ம உயிர்காத்து இருக்கு. காட்டையும் கானுயிர்களையும் நாம தொந்தரவு பண்ணாத வரைக்கும் அதுவும் நம்மை ஒண்ணும் பண்ணாது. பயப்படாம நடங்க.”

அவர்கள் சேகரித்த பூ மற்றும் செடிகளோடு அங்கிருந்து கிளம்ப மீண்டும் அந்தக் கூக்குரலோடு ஏழெட்டு குரல் சேர்ந்ததுபோல் பெரிதாகக் கேட்டது.




“என்னப்பா இது சத்தம்? காட்டில பேய் இருக்குமா?” – தீபா பயந்து போயிருந்தாள்.

“சே, சே. அதெல்லாமிருக்காது. நரியாயிருக்கலாம்.”

“நரியா?”

“புலி ஓநாய் கூட இருக்கலாம்.”

“இந்த விளையாட்டெல்லாம் வேணாம். நான் ஊருக்கே திரும்பப் போறேன்.”

“ப்ளீஸ் ப்ரெண்ட்ஸ்! இந்த சத்தத்துக்கெல்லாம் நாம பயப்பட வேண்டியதில்லை. முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்த மலையில் ஒரு தீவிபத்து நடந்தது. அந்தக்  தீவிபத்துக்கப்புறம் தான் கொத்துக் கொத்தா மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கற இந்த அபூர்வமான தாவரங்கள் வளர ஆரம்பிச்சதாம். இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் அதுபோன்ற தாவரங்கள் கிடையாது! அந்தச் செடிகளால் நன்மையா, இல்லை அவை விஷச் செடிகளா? இதைப் பற்றி ரிஸர்ச் பண்ணி ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட் சப்மிட் பண்ணினா, நமக்கு எக்ஸ்ட்ரா க்ரெடிட்ஸ் கிடைக்கும். கை நிறையச் சம்பளத்தோட கவர்மெண்ட் இன்ஸ்டிட்ட்யூட்ல ரிஸர்ச் ஸ்காலரா அப்பாயிண்ட்மெண்ட்டும் கிடைக்கும். நாம் அஞ்சுபேருக்கும் கடமை இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணமும் இருக்கு. நாம இப்ப ஜெயிக்கிறதில தான் நம்ம வாழ்க்கை இருக்கு. இந்த சத்தத்துக்கெல்லாம் பயந்தா கதைக்காகாது. நாம அஞ்சுபேரும் சேர்ந்து நின்னா எதையும் ஜெயிக்கலாம். இதைப் புரிஞ்சுகிட்டா என்னோட கைகோருங்க. இல்லைனா…. எந்தப் பிரச்சினையுமில்லை. நான் என் வழியில போய்க்கிறேன்.”

இம்முறை கிருபாசங்கர் தீர்மானமாக சொல்ல…

“ஸாரி கிருபா நாங்க உன்னோட இருக்கோம்” என்றாள் தீபா.

“திரும்பவும் சொல்றேன். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்காம எந்த வெற்றியும் கிடைக்காது. தீபா, கோதை உங்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம் தான். இப்பவும் நீங்க விலகிக்கலாம்.”

“கிருபா! என்ன பேச்சு இது? எங்களுக்குக் கஷ்டம் தான் ஆனா சாதிக்கணுங்ற எண்ணம் எங்களுக்கிருக்கு. அப்பப்ப கொஞ்சம் விளையாட்டா பேசினா சீரியஸா எடுத்துக்கிறதா?’

“அப்ப சரி. எதுவும் பேசாம என் கூட வாங்க”

மற்றவர்கள் அவனை மௌனமாகப் பின் தொடர்ந்தார்கள்.

அவர்களறியாமல் ஒரு உருவம் அவர்களைப் பின் தொடர்ந்தது.




What’s your Reaction?
+1
8
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!