Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-15

 15


கோயமுத்தூர்.


கேரள போலீஸார் ஒப்படைத்து விட்டுச் சென்ற முத்துவும் பாண்டியனும் ஸ்பெஷல் ஆபீஸர் வர்மாவின் கிடுக்குப் பிடி விசாரணையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

“எதுக்காக டாக்டரை கடத்தினீங்க?… ஒழுங்கா சொல்லிடுங்க!… இல்ல… நாங்க எங்களோட கடுமையான ட்ரீட்மெண்ட்டைக் காட்ட வேண்டியிருக்கும்”

வாயின் இடது ஓரத்தில் வடிந்த ரத்தத்தைத் துடைத்தபடியே அவரை எரித்து விடுவது போல் பார்த்தான் முத்து.

“சொல்லுடா” வர்மா தன் உள்ளங்கையால் அவன் நெற்றியை தாக்க, தடுமாறிப் பின்புறம் விழுந்து, எழுந்து தரையில் உட்கார்ந்தபடியே முறைத்தான்.

”என்னடா முறைக்கறே?… ராஸ்கல் கண்ணுமுழி ரெண்டையும் தோண்டி எடுத்துடுவேன்” என்று அவனைப் பார்த்து உருமியவர், 

பாண்டியன் பக்கம் திரும்பி,  “அய்யா… நீங்களாவது சொல்றீங்களா?” கெஞ்சுவது போல் நடித்துக் கேட்டார்.

“தெரியாது” ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விட்டு எங்கோ பார்த்தான் அவன்.

“பளார்” காதோரம் விழுந்த பேயறை அவன் காதுக்குள் தேனீக்களின் கூட்டத்தை உருவாக்கியது.

உட்கார்ந்திருந்த முத்து எழுந்து நின்றான்.  “சார்… நீங்க எங்க ரெண்டு பேரையும் தலைகீழா கசாப்புக்கடையில ஆட்டைக் கட்டித் தோலுரிக்குற மாதிரி உரிச்சாலும் எங்க கிட்டேயிருந்து எந்தவித உருப்படியான தகவலும் உங்களுக்குக் கிடைக்காது!… ஏன்ன.. உண்மையிலேயே எங்களுக்கு எதுவும் தெரியாது!” என்றான் வாயிலிருந்து எச்சில் தெறிக்க,

“அப்படியா ராசா?…. உங்ககிட்ட இருந்து விஷயத்தை எப்படிக் கறக்கிறதுன்னு விபரம் எனக்கும் நல்லா தெரியும்” என்றவர் திரும்பி, “நமச்சிவாயம்” என்று யாரையோ அழைத்தார்.

 அந்த நமச்சிவாயம்,  “யெஸ் சார்” என்றபடி வந்து நின்றான்.


“நமச்சிவாயம்!… இவனுக… இப்படிக் கேட்டா சொல்ல மாட்டானுங்க!… ஈவினிங் எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட் ஏற்பாடு பண்ணு” என்று ஆணை பிறப்பித்தார்.

முத்துவும், பாண்டியனும் அடிவயிற்றில்  “ஜில்” வாங்கினர்.

மாலை நேரம் நெருங்க நெருங்க… அவர்களையும் அறியாமல் அவர்களுக்குள் பய நோய் தோன்ற ஆரம்பித்தது.  ஆறரை மணி வாக்கில் அவர்கள் இருவரும் வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வர்மாவும் வேறு சிலரும் இருந்தனர்.

 சலூனில் இருப்பது போன்ற ஒரு சுழலும் நாற்காலியில் முதலில் முத்து அமர்த்தப்பட்டான்.  அவன் தலையில் ஒயர்கள் இணைக்கப்பட்ட ஒரு மகுடம் சூட்டப்பட்டது.

ஐந்தாவது நிமிடத்தில் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு வினோதமாய் அலறினான்.   பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் வியர்த்தான்.

ஆனால் இரவு வரை நீட்டித்த அந்த எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மென்ட்டின் இறுதியில் வர்மா சேகரித்த தகவல் ஒன்றே ஒன்றுதான்.  அது,  ”இந்த பாண்டியனுக்கும்… முத்துவுக்கும் புத்தாவைத் தெரியாது!… டாக்டரை கடத்திக் கொண்டு போய் திருச்சூர் ரோட்டில் உள்ள பழைய வீட்டில் சேர்ப்பது மட்டுமே அவர்களுக்கு இடப்பட்ட பணி…. அதற்கான தொகை அஞ்சு லட்சம்”

வர்மா குழம்பினார். “யார் அந்த புத்தா?… யார் அந்த புத்தா?”

*****

.
அதே நேரம், 

புத்தாவின் கூடாரத்தில் புத்தா கத்திக் கொண்டிருந்தான்.  “கேவலம்!… மகா கேவலம்!… இந்த புத்தாவின் சரித்திரத்தில் சறுக்கலாம்?…. புத்தாவுக்கு தோல்வியா?… கவுத்துட்டிங்களேடா” கிட்டத்தட்ட நடிகர் ரகுவரனை ஞாபகப்படுத்தும் வகையில் இருந்த அந்த புத்தா மேஜை மேல் ஓங்கி குத்தினான்.

 “பாஸ்… போலீஸ்ல சிக்கின அந்த ரெண்டு பேருமே வெளி ஆளுங்கதான்!… அவனுகளை…. என்னதான் அடிச்சாலும்… உதைச்சாலும் அவனுக்களால் நம்மைப் பற்றி எந்த இன்பர்மேஷன் சொல்ல முடியாது!” புத்தாவின் வலது கரம் போன்றவன் சொன்னான்.

“அட முட்டாள்… நான் அவனுக போலீஸில் மாட்டிக்கிட்டானுகளே… என்கிற பயத்துல சொன்னேன்னு நினைச்சியா?… இல்லவே இல்லை… டாக்டரை கடத்தி மும்பைக்கு பேக் பண்ணி அனுப்புறேன்னு மும்பை முசாரப் கிட்ட அட்வான்ஸ் வாங்கித் தொலைச்சிட்டேனே!… பாய் போனிலேயே காரித் துப்புறான்!..”




சில விநாடிகள் அமைதி காத்த புத்தா, “சொல்லுங்கடா… எப்படி… எப்படி நடந்துச்சு… இந்தத் தோல்வி?… யாரு… யாரு குறுக்கால வந்தது?” கேட்க,

 “புத்தா… பத்திரிகையாளுக மூணு பேர் எப்படியோ மோப்பம் பிடிச்சு வந்துட்டானுங்க புத்தா!…” என்றான் ரைட் ஹேண்ட்.

“அதான்… அதான்… உள்ளூர் ரவுடிக கிட்டேயெல்லாம்  இந்த மாதிரிப் பெரிய வேலைகளைக் கொடுக்கக்கூடாது என்பது!… இவனுகெல்லாம் மார்க்கெட்டுல தண்டல் வசூல் பண்றதுக்கும்,  மாரியம்மன் திருவிழாக் கூட்டத்தில் பொண்ணுங்களோட செயினை அறுப்பதற்கும்தான் லாயக்கு!”

“இல்ல புத்தா… அவனுக ஏற்கனவே ரெண்டு மூணு வேலைகளை நமக்காக சக்ஸஸ்ஃபுல்லா செஞ்சிருக்கானுக அதை நம்பித்தான் குடுத்தேன்!”

“எதுக்கும் அவனுக வெளியே வந்ததும் ஃபாலோ பண்ணி நம்ம இடத்துக்கு எப்படியாவது இழுத்துட்டு வந்துடுங்க!… அவனுங்களை நான் ஸ்பெஷலா விசாரிக்கணும்!… இடையில் காசு வாங்கிட்டு குறுக்கு உழவு ஓட்டிட்டானுங்களான்னு கண்டுபிடிக்கணும்” என்றான் புத்தா.

****

போலீஸ் ஸ்டேஷன்.

லாக்கப்புக்கு வெளியே கையெடுத்து கும்பிட்டபடி நின்று கொண்டிருந்தனர் பாண்டியனும் முத்துவும்.

“இங்க பாருங்கப்பா…. நீங்க பேசினதை வெச்சு உங்களுக்கும் புத்தாங்கற அந்த ஆளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லேன்னு நான் நம்பறேன்!… அந்த நம்பிக்கைலதான் இப்ப வெளிய விடறேன்!.. இதுதான் கடைசி தடவை இன்னொரு தடவை இது மாதிரி  “போன் வந்தது கடத்தச் சொன்னாங்க!.. பணம் தந்தாங்க!… அதனால கடத்தினோம்” அப்படினுட்டு யாரையாவது கடத்தினீங்க?… மவனே… குளோஸ் ஆகாத நிறைய கேசுக பெண்டிங் இருக்கு!…  அதுல ஏதோ ஒண்ணுல உங்களைக் குற்றவாளியாக்கி… வெளியவே வர முடியாதபடிக்கு உள்ளார தூக்கிப் போட்டு விடுவேன்” லத்தியால் உள்ளங்கையில் தட்டியபடியே சொன்னார் வர்மா.

“சார்… சாமி சத்தியமா இனிமேல் அந்த மாதிரி வேலைக்கே போகமாட்டோம் சார்!”

“போங்கடா போங்கடா…. உங்களுக்கெல்லாம் சத்தியமங்கறது சத்யா பீடி குடிக்கிற மாதிரின்னு எனக்கு நல்லாத் தெரியும்!… போங்க” 

குனிந்தபடி மிகவும் பவ்யமாக வெளியேறினர் அவர்கள் இருவரும்.

அவர்கள் சென்றதும், “த்ரி நாட் எயிட்!…  ரெண்டு பேர் காண்ஸ்டபிள்சை இவனுக பின்னாடியே போய் வாட்ச் பண்ணச் சொல்லுங்க!… ஏன்னா… நிச்சயமா அந்த புத்தாவோட ஆளுங்க இவனுங்களை மறுபடியும் காண்டாக்ட் பண்ணுவாங்க!… ஸோ… ஏதாவது வித்தியாசமா நடந்தா உடனே எனக்குத் தகவல் கொடுங்க!” வர்மா ஆணை பிறப்பித்தார்.




அவர்களை ஃபாலோ  பண்ண  இரண்டு பேர்  தயாராகி, உடனே வெளியேறினர்.


ஸ்டேனைனை விட்டு வெளியே வந்த முத்துவும் பாண்டியனும், சிறிது தூரம் நடந்து அரோமா பேக்கரிக்குள் நுழைந்து  “இரண்டு ஸ்ட்ராங் டீ” ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தனர்.

 அவர்கள் டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கும் போது  இரண்டு புதிய ஆட்கள் உள்ளே நுழைந்தனர்.  அவர்கள் புத்தாவின் ஆட்கள்.

 அதே நேரம், பேக்கரிக்கு வெளியே நின்றபடி உள்ளே இருந்த பாண்டியனையும் முத்துவையும் நோட்டமிட்டு கொண்டிருந்தனர் இரண்டு மப்டி போலீஸ்காரர்கள். நான்கு ஜோடிக் கண்கள் தங்களை தொடர்வதை உணராத அவர்கள் இருவரும் வெளியே வந்து பெட்டிக்கடைக்குச் சென்று  “இரண்டு கோல்டு ஃபில்டர்” வாங்கிப்  பத்த வைத்த போது தான் அது  நடந்தது.

 அவர்களைத் தொடர்ந்து பேக்கரிக்கு வெளியே வந்த புத்தாவின் ஆட்கள் இருவரும், சற்றுத் தள்ளி  நின்று கொண்டிருந்த சிவப்பு நிற மாருதி ஆம்னியைப் பார்த்து சமிக்ஞை தர, அது ஸ்டார்ட் ஆக்கி,  நேராக அந்தப் பெட்டிக்கடையை நோக்கி வந்தது.  நெருங்கி வந்ததும், முத்துவையும் பாண்டியனையும் திறந்திருந்த வேனின் கதவுக்குள்  “மடார்”ரென்று இழுத்துப் போட்டுக் கொண்டு வினாடியில் பறந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சம்பவம் நடந்த போதிலும் மப்டி போலீசார் தங்கள் பணியை செவ்வனே செய்யும் விதமாய் வேனின் நம்பரை மனதிற்குள் பாடம் செய்து கொண்டு வாக்கிடாக்கி மூலம் முத்துவையும், பாண்டியனையும் யாரோ கடத்திச் சென்று விட்ட செய்தியையும், அந்த வண்டி நெம்பரையும்  ஸ்பெஷல் ஆபீஸர் வர்மாவுக்குக் கூறினர்.




What’s your Reaction?
+1
8
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!