Entertainment Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம் -2

(2)

வீட்டு படியிறங்கிய பின்தான் பர்சை உள்ளே மேஜையில் விட்டு வந்தது கடைசி நேரத்தில் நினைவு வந்தது .இப்போது உள்ளே திரும்ப போனால் , “, பொம்பளை புள்ளைக்கு அப்படியென்ன மறதி ” என அம்மா சரஸ்வதி கத்துவாள் .ம்ஹூம் வேண்டாம் ..பேக்கினுள் கிடக்கும் சில்லறைகளை வைத்து இன்று ஒருநாள் சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு ,” அம்மா போயிட்டு வர்றேன் ” உள்ளே சரஸ்வதிக்கு குரல் கொடுத்துவிட்டு வெளியே ஓடினாள் .

காம்பவுண்ட் கேட் கதவை திறந்து வெளியேறுகையில் கண்கள் தானாகவே மாடியை ஏறிட்டு நோக்கியது .அதோ அந்த மாடி சன்னலில் சிறு சலனம் தெரிவது போல் இல்லை …? ஒருவேளை அங்கேயிருந்து அவன் பார்த்துக்கொண்டிருக்கிறானோ? சன்னலையே உறுத்தபடி நடக்க தொடங்கினாள் முகிலினி .

அவள் தந்தை தமிழ்செல்வன் மிகவும் கண்டிப்பானவர் .இது போல் அந்நிய ஆடவர்களையெல்லாம் வீடு வரை அனுமதிப்பவரில்லை. அப்படிப்பட்டவர் அன்று வந்து அந்த “சாரை” நம் வீட்டின் மாடி அறையில் சில நாட்கள் தங்க சொல்லியிருக்கிறேன் என கூறியபோது , சரஸ்வதியோடு சேர்ந்து முகிலினியின் கண்களும் விரிந்தன .

பதில் கூறாது தன்னை பார்த்த மனைவியிடம் ” ஒரு பிரச்சினையும் வராது சரசு ” என்றார் தமிழ்செல்வன் .
அந்த சிறு விளக்கத்திற்கே திருப்தியாகி தலையசைத்துக்கொண்டாள் சரஸ்வதி .அவளைப்பொறுத்தவரை கணவன் செய்வது சொல்வது எல்லாம் சரிதான் .சரஸ்வதியின் அந்த எண்ணத்திற்கு மறுப்பு கூற முடியாத வகையில்தான் தமிழ்செல்வனின் செய்கைகளும்  இருக்கும் .

ஒரு பார்வையிலேயே தன் மனம் உணர்த்தின அன்னையையும் ,
ஒரு வார்த்தையிலேயே அதற்கு தைரியமளித்த தந்தையையும் நினைத்தபடி பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள் முகிலினி .

” குட்மார்னிங் …” என உற்சாகமாக அவளை வரவேற்றாள் வைஷ்ணவி .
” அடிப்பாவி இன்னைக்கு லீவ் , வரமாட்டேன்னு சொன்னியேடி , முதல் ஆளாய் பஸ்ஸில் இருக்கிறாய் ” தோழியிடம் விசாரித்தாள் முகிலினி .
” ஆமான்டி லீவ் போடலாம்னுதான் நினைத்தேன் .அம்மா உடனே இன்னைக்கு சமையலை என் தலையில் கட்டிவிட்டு ஆபீஸ் போகிற ஐடியாவில் இருந்தாங்க .முக்கியமான கிளாஸ் இருக்குன்னு ஓடி வந்துட்டேன் ” பெருமையாக சொன்னாள் .

வைஷ்ணவியின் அம்மா வேலைக்கு செல்பவர்.

” ஏய் ஏன்டி இப்படி பண்ற ? அம்மா பாவம்ல …தினமும் ஆபிசுக்கும் வீட்டுக்குமா அல்லாடிக்கிட்டு இருக்காங்க .நீ ஒருநாள் வீட்டிலிருந்து அவுங்களுக்கு உதவி பண்ணலாம்ல …” தோழியை கடிந்தாள் முகிலினி .




” பண்ணலாம்டி அம்மா பாவம்தான் .ஆனா பாரு எனக்கு இப்பெல்லாம் ஒரு விதமான அலர்ஜி வருது .அடுப்பு பக்கத்துல போனா ஒரு மாதிரி உடம்பெல்லாம தடிப்பு தடிப்பா வந்திடுது .அதோட ரொம்ப மூச்சு வேற வாங்குதா …இதோ பாரு இப்ப கூட லேசாக மூச்சு வாங்குது ” என்றவள் நெஞ்சில் கைவைத்து வேண்டுமென்றே மூச்சை இழுத்து காட்ட , பட்டென அவள் கையில் ஒன்று வைத்தாள் முகிலினி .

” கழுதை !வேலை பார்க்க பயந்துக்கிட்டு எப்படியெல்லாம் நடிக்கிற …” என்றாள் .தொடர்ந்து அவள் காதுகளை பற்றி வலிக்கும்படி திருகியவள் ” உனக்கெல்லாம் சமைச்சு கொட்ட அம்மா இருக்கிற தைரியம். நல்லா வக்கனையா மதியத்திற்கு டிபன் கட்டி எடுத்துட்டு வந்திருப்பியே ?” என கேட்டாள் .

“, ஐயையோ , “கைகளை உதறினாள் வைஷ்ணவி .” அந்த தயிர் பச்சடியை தனியா சின்ன டப்பால அம்மா எடுத்து வைத்திருந்தாங்க .அதை எடுக்க மறந்துட்டேனே .சை இந்த அம்மா வேற அதை அப்பவே பேக்ல வச்சிருக்கலாமே .இப்போ பச்சடி இல்லாமல் பிரியாணி எப்படிடி சாப்பிடுறது ” மிகப்பெரிய கவலையில் ஆழ்ந்தாள் வைஷ்ணவி .
” உன்னை திருத்தவே முடியாது .” தலையில் கை வைத்துக்கொண்டாள் முகிலினி .கல்லூரிக்குள் நுழைகையில் எதிரில் வந்த அனிதா மேம் இவர்கள் காலை வணக்கம் சொல்லும் முன் தானே முந்திக்கொண்டு சொல்கிறாள் ” குட்மார்னிங் …” பளிச்சென சிரிக்கிறாள்.

அவள் அப்படித்தான் .போன வருடம்தான் தன் கல்லூரி படிப்பை முடித்தாள் .இந்த வருடம் பேராசிரியை .இன்னமும் தனது கல்லூரி பருவத்திலிருந்து வெளிவர முடியாமல் அங்குமிங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் .

” என்னப்பா …பயிர், பச்சையெல்லாம் நம்ம காலேஜிற்கு வருது போல …? ” இவர்களை பார்த்து மெலிதாக கண் சிமிட்டுகிறாள் .இன்னதென இவர்கள் உணரும் முன் இவர்களை நடந்து கடந்து விடுகிறாள் .

தோழிகள் இருவருடனும் நடந்து வந்து கொண்டிருந்த மேலும் சில பெண்கள் “என்னப்பா , என்ன மேம் என்ன சொல்றாங்க ? ” என கேட்க , ” “யாருக்குடி தெரியுது  ? இன்று கிளாஸ் எடுக்க வரும்போது மேடமையே கேட்போம். ” என்றாள் முகிலினி . வகுப்பறையில் சென்று அமர்ந்தார்கள் .

” ஏய் முதல் பீரியட்டே அந்த கழுத்தறுப்புதான்டி …பேசாமல் கேண்டீன் போயிடலாமா …? ” வைஷ்ணவி இப்போதுதான் நினைவு வந்து பரபரத்தாள் .

” ஏய் அட்டன்டென்ஸ் இருக்கு .மூடிக்கிட்டு அடக்கமா உட்காரு …” என்று பதிலளித்த முகிலினியின் மனதினுள் நேற்று சந்தித்த அந்த யானையின்  நினைவு வந்தது .கூடவே அந்த ஹீரோவின் நினைவுகளும் .

” வைஷு …நீ நேற்று சொன்னியே ஒரு ஹீரோவுக்கான வர்ணனை , அது அப்படியே ஒரு யானைக்கு பொருந்துதுப்பா. நேற்று கூட எங்கள் தெருவில் பார்த்தேனே .” என அவளிடம் வம்பிழுக்க ….

” என்னது என் ஹீரோவை அவ்வளவு கறுப்புன்னா சொல்ல வர்ற …” வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாரானாள் அவள் .

” ஏன்டி கறுப்புன்னா அசிங்கமா ? கறுப்பான ஹீரோக்கள் கிடையாதா ? நீ நம்ம சூப்பர்ஸ்டாரை மறந்துட்டு பேசுற .அவரை விட ஒரு பெரிய ஹீரோ யாருடி இருக்காங்க ..?” சண்டைக்குள் நுழைந்தது பக்கத்தில் உட்கார்ந்திருந்த நளினி .

” என்னது சூப்பர்ஸ்டாரா …? ஏய் நளினி உன் வயசென்னடி …நாங்கெல்லாம் அஜித் , விஜய்யையே ….அங்க்கிள்ஸ்னு ஒதுக்கிட்டோம் .நீ அதை விட முந்தின தலைமுறைக்கு போயிட்டிருக்க …” இதை சொன்னவள் நளினி அருகிலிருந்த சசிகலா .

” ஏய் நான் உங்ககிட்ட பேசுனேனாடி , நீங்க ஏன்டி சம்மன் இல்லாமல் ஆஜராகுறீங்க .என் ஹீரோவை எந்த சினிமா ஹீரோவோடயும் ஒப்பிட முடியாது .அவன் ஒரு தனிப்பிறவி ….” வைஷ்ணவி கனவுகளில் ஆழ்ந்து விட , நளினியும் , சசிகலாவும் அவளை கேலி செய்ய தொடங்கினர் .

நேக்காக அவர்கள் மூவரையும் ஒதுக்கி விட்டு , வசதியாக தன் முதல் நாள் வீட்டு சம்பவத்திற்குள்  மூழ்க தொடங்கினாள் முகிலினி .

எனக்கு தெரிந்தவர் …என்று அந்த புதியவனை  அறிமுகப்படுத்திய தந்தை , என் மனைவி , மகளென இவர்களுக்கான அறிமுகத்தை சுருக்கமாக முடித்துக்கொண்டார் .
தொடர்ந்து அவர்களிருவரும் தந்தையின் அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டார்கள் .

” ஏம்மா அப்பா அக்காவை மறந்துட்டாரே …போன் பண்ணா வந்திடுவாளே  அக்கா …பண்ணவா ? ” அப்பாவின் அறிமுக விதம் பிடிக்காமல் அம்மாவிடம் முணுமுணுத்தாள் முகிலினி .

முகிலினியின் அக்கா தமிழினி திருமணம் முடிந்தது , உள்ளூரில்தான் இருக்கிறாள் .நினைத்தால் அம்மா வீடு வந்துவிடுவாள் .

முகிலினியை அறிமுகப்படுத்திய போது ,அவனிடம் லேசான இமையசைப்பு கூட இல்லை , அறிந்ததற்கான அறிகுறியாக .மாடி ரூமிற்குள் சென்று முடங்கியவன் அங்கிருப்பதற்கான தடயங்களும் ஏதுமில்லை .

” அப்பாடி ஒரு வழியா பாதி கிணறு தாண்டியாச்சு .வாடி வயிற்றில் எதையாவது தட்டிட்டு வருவோம் …” என்ற வைஷ்ணவியின் குரலை கேட்டதும் விழித்துக்கொண்டாள் முகிலினி .” ம் ” என்றபடி எழுந்து அவளுடன் நடந்தாள் .

” ஏன்டி இந்த பிரியாணிக்கு வெங்காய பச்சடி இல்லாமல் சாப்பிட்டால் நல்லாருக்கும் ….? ” என நளினியிடம் சந்தேகம் கேட்டபடி நடந்தாள் வைஷ்ணவி .

அனைவரும் வழியில் வந்து கொண்டிருந்த அனிதா மேடமை பிடித்து கொண்டு , பயிர் பச்சை பற்றி விசாரித்த போது , மர்ம புன்னகை ஒன்றுடன் தோளை குலுக்கிக்கொண்டு சென்றாள் அவள் .

” என்னடி இவுங்க இப்படி ஒண்ணும் சொல்லாமல் போறாங்க ….? ” என்ற நளினிக்கு …




” போகட்டும்டி அது ஏதோ கனவிலே போகுது ….” என்று பதில் சொன்னாள் வைஷ்ணவி .

வெங்காயபச்சடி இல்லாத பிரியாணிக்காக புலம்பிய வைஷ்ணவி , முகிலினியின் தக்காளி சாதத்தையும் , நளினியின் தயிர்சாதத்தையும் சிறிது சேர்த்து விழுங்கிவிட்டு ” ஏன்டி நளினி எப்படி உங்க அம்மா இந்த தயிர்சாதத்துக்கு ஒரு வடை கூட இல்லாமல் வெறும் ஊறுகாய் மட்டும் தர்றாங்க .நாளைக்கெல்லாம் பருப்பு வடை கேட்டு வாங்கிட்டு வந்திடு .அது ரொம்ப நல்லா இருக்கும் “, என்று ஐடியா வழங்கி கொண்டிருந்தாள் .

அன்று காலை அம்மா சூடாக சுட்டுக்கொண்டிருந்த  உளுந்துவடைகளுக்காக  ஆவலுடன் காத்திருந்தாள் முகிலினி .என்ன பலகாரம் செய்தாலும் வீட்டில் அதனை முதலில் சாப்பிடுவது அவளாகத்தான் இருக்கும் .அப்படி ஒரு எழுதப்படாத சட்டத்தை அவளாகவே வீட்டில் உருவாக்கி வைத்திருந்தாள் .

அன்றும் அம்மா சரஸ்வதி முதலில் சுட்டு வைத்த நான்கு வகைகளில் இரண்டை கைகள் சுடச்சுட எடுத்து தட்டில் வைத்து , தோதாக சட்னியையும் அருகே வைத்துவிட்டு , தண்ணீர் டம்ளருடன் டிவி முன் அமரும் யோசனையோடு தண்ணீரை டம்ளரில் பிடித்துக்கொண்டு திரும்பி பார்த்தாள் .

வடை தட்டை காணவில்லை .வீட்டிற்குள் காக்கா வர வாய்ப்பில்லையே என யோசித்தபடி பார்த்தால் , அவள் தந்தை இவள் எடுத்து வைத்த இரண்டு வடையோடு மீதமிருந்த இரண்டு வடையையும் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார்.

” அப்பா ..அது எனக்காக நான் எடுத்து வைத்திருக்கிறேன் ” தந்தையிடம் சலுகையாக சிணுங்கினாள் மகள்.

” இதோ அடுத்தது அம்மா எடுத்து விடுவாள் .நீ அதில் எடுத்து கொள்ளம்மா ” இன்னும் கொஞ்சம் சட்னியை ஊற்றியபடி தட்டுடன் நகர்ந்தார் .

எண்ணெய் பலகாரமென்று அப்பா சாப்பிடமாட்டாரே .இன்று என்ன புதிதாக மொத்தமாக நான்கு வடைகள் .அதிலும் தனக்கென சொல்லிய பிறகும் …திரும்பி பார்த்தாள் முகிலினி .அடுத்த வடைகள் இன்னும் எண்ணெய்க்குள்தான் இருந்தன .தட்டிற்கு வந்தபாடில்லை .

வடை வாசம் மூக்கை துளைக்க அப்பாவின் தட்டிலிருந்தே ஒன்றை எடுத்து தின்றுவிட வேண்டியதுதான் என்ற முடிவோடு ஹாலுக்கு சென்றாள் .அங்கே ஹாலில் இரண்டு வடைகள் முழுவதும் சாப்பிடப்பட்டு ,மூன்றாவது வடை அரைகுறையாக கடித்து வைக்கப்பட்டிருக்க , அப்பாவின் குரல் முன் வராந்தாவிலிருந்து வந்து கொண்டிருந்தது .

உள்ளே சிக்னல் கிடைக்காததால் வெளியே சென்று போனில் பேசுகிறார் என ஊகித்தவள் , ” அப்பா உங்க வடையை நான் எடுத்துக்கிட்டேன் “என அறிவித்துவிட்டு மீதமிருந்த ஒரு வடையை பிய்த்து தட்டில் மீதமிருந்த சட்னியை தொட்டு சாப்பிட தொடங்கினாள் .

பின்னால் ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் திடுக்கிட்டாள் .கையிலும் , வாயிலும் வைத்திருக்கும் வடையை என்ன செய்வது .துப்பவா , விழுங்கவா …என புரியாமல் திருதிருவென முழித்தாள் .இடது கையில் ஏதோ பைலுடன் வந்த அந்த புது மாடி வரவின் அரைகுறையாக மடக்கி வைத்திருந்த வலது கை சட்னி தடங்கள் , வடை சாப்பிட்டது அப்பா அல்ல .அவன்தான் என்பதனை முகிலினிக்கு உணர்த்தியது .

அப்பாதான் வடை சாப்பிட மாட்டாரே ? இதை நான் ஏன் முன்பே யோசிக்கவில்லை .மானசீகமாக தன்தலையில் பலமுறை கொட்டிக்கொண்டாள் முகிலினி .திணறலில் புரையேறிக்கொள்ள இருமத்தொடங்கினாள் .கையிலிருந்த பைலை கீழே வைத்துவிட்டு , அவள் தலையில் தட்டியவன் தண்ணீர் எடுத்து கொடுத்தான் .

” மெல்ல …மெல்ல …பார்த்து …” என்றான் .” அந்த வடை சாப்பிட்டது நான்தான் ,” வேண்டுமென்றே அவளுக்கு அந்த தகவல் கொடுத்தான் .தொடர்ந்து அவன் ” மிஸ் ….”, என்று அவள் பெயருக்காக இழுக்க , அவனை கோபமாக முறைத்தாள் முகிலினி .

எங்கள் வீட்டிற்குள் சட்டமாக வந்து உட்கார்ந்து கொண்டு வடை சாப்பிடுவதுமில்லாமல் இவனுக்கு நான் பெயர் வேறு சொல்ல வேண்டுமா ? என்று தோன்ற ” சம்பந்தமில்லாமல் அடுத்தவர்  வீட்டிற்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டு வடை சாப்பிடுபவர்களுக்கெல்லாம் பெயர் சொல்லுவேனென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் ? ” புரையேறிய எரிச்சலோடு அவன் சாப்பிட்டு வைத்திருந்த எச்சிலை தான் சாப்பிட்டுவிட்டோமே என்ற உறுத்தலும் சேர்ந்து கொள்ள சூடாக அவனிடம் பேசிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள் .

சிறிது நேரம் அசைவற்று நின்றிருந்தான் அவன் .” சார் இருக்கிறதா ….? ” என வெளியிலிருந்து தமிழ்செல்வனின் குரல் கேட்க , ” இதோ…..” என்றபடி அந்த பைலுடன் வெளியே விரைந்தான் .

வைஷ்ணவியின் பருப்புவடை விவரணையில் காலையில் தன் வீட்டில் நடந்த வடை சம்பவம் நினைவு வர , சாப்பிட்டு முடித்துவிட்டு அதே யோசனையுடன் நடந்தாள் முகிலினி .

இதுபோல் வெளி ஆட்களை வீட்டிற்குள் அழைத்து வரவே மாட்டார் அவள் தந்தை .வீட்டில் இருவரும் பெண்குழந்தைகள் என்பதும் அதற்கு ஒரு காரணம் .இப்போதோ அழைத்து வந்ததுமின்றி , மாடியிலேயே தங்க வைத்ததுமின்றி , நடுவீட்டில் அமர்த்தி உபச்சாரம் வேறு ….அப்படி எந்த நாட்டு ராஜா இவன் ? கல்லூரி விட்டு வீடு வரும் வரை இதே யோசனைதான் முகிலினிக்கு .

காம்பவுண்ட் கேட்டை திறக்கும் போது , நேற்று அவனை சந்தித்த ஞாபகம் ….தானே வந்தது .வீட்டின் முன் ஒரு பைக் நின்றிருந்தது .அந்த…. அவனுடையது போல ..செகன்ட் ஹான்ட் பைக் போல தெரிந்தது .மாடியை ஏறிட்டு விடாமல் கஷ்டப்பட்டு தலையை குனிந்தபடி வாசலை மிதித்தாள் .

” சித்தி வந்தாச்சு …” கூவலுடன் வந்து அவள் காலை கட்டிக்கொண்டாள் அபரணா .அவள் அக்கா தமிழினியின் குழந்தை .

” ஹேய் , அப்பு குட்டி எப்படா வந்த …? “, ஆசையாக குழந்தையை தூக்கிக்கொண்டாள் முகிலினி .உள்ளே தமிழினி சோபாவை காற்றாடிக்கு கீழ் இழுத்து போட்டுக்கொண்டு , காலை தூக்கி டீபாய் மேல் வைத்து ஆட்டியபடி
ஒரு தட்டு நிறைய காராபூந்தியும் , மற்றொன்றில் லட்டுகளையும் வைத்து தின்றுகொண்டே டிவியில் மூழ்கியிருந்தாள் .

” அக்கா எப்போ வந்த …” சகோதரியை விசாரித்தாள் முகிலினி .




” ம்…இப்போதான் …” டிவியிலிருந்து கண்களை அகற்றுவதாயில்லை அவள் .இந்த சீரியல்களை எப்படித்தான் அவள் பார்க்கிறாளோ என்றிருந்தது முகிலினிக்கு .

” தமிழ் குடிக்க சரியா இருக்கும் .உடனே குடிச்சுடு …” காபியை பெரிய மகள் கையில் கொடுத்த சரஸ்வதி ” முகி உனக்கும் தரட்டுமா …? ” என்றாள் இளைய மகளிடம் .

” இல்லைம்மா நான் ப்ரெஷ்ஷாயிட்டு வர்றேன் …” என எழுந்தாள் முகிலினி .
” அப்புக்குட்டி வாடா உனக்கு அம்மம்மா பால் தர்றேன் ” என அபர்ணாவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள் சரஸ்வதி .

காபியை ஒரு உறிஞ்சலும் , காராபூந்தி ஒரு கைபிடியுமாக டிவிக்குள்ளேயே போய் விட்ட சகோதரியை ஆச்சரியமாய் பார்த்தபடி அறையினுள் சென்றாள் முகிலினி .

கல்லூரியில் படித்து முடிக்கும் வரை வகுப்பில் முன்னணி மாணவி தமிழினி .கல்லூரியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு வென்று விடுவாள்.படபடவென சுறுசுறுப்பாக அணைத்து காரியங்களும் செய்வாள் .முகிலினியை விட தமிழினிதான் சுறுசுறுப்பு என சரஸ்வதி இப்போதும் கூறுவாள் .

அப்படிப்பட்ட தமிழினி திருமணம் முடிந்ததும் அடியோடு மாறிவிட்டாள் .சமையலும் , கணவனும் , குழந்தையும் , டிவியும் , நொறுக்குதீனியும் என அவள் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது .நான்கு வருடங்களில் ஒரு பெண் எப்படி இப்படி மாற முடியும் என முகிலினிக்கு ஒரே வியப்பாக இருக்கும் .

அதுவும் அவ்வளவு பரபரவென திரிந்துவிட்டு ….எப்படி இப்படி ஒரு உப்பு சப்பற்ற வாழ்க்கை வாழுகிறாளோ …? .ஒருவேளை நானும் இப்படித்தான் மாறி விடுவேனோ ? இப்படி நினைத்து விட்டு இல்லையென தலையை குலுக்கிக்கொண்டாள் முகிலினி .

இதுபோல் டிவி சீரியலே கதியென்று கிடக்கும் அக்காவினுடயதைப் போன்ற ரசனையற்ற வாழ்வு வாழ என்னால் ஒரு போதும் முடியாது என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் .

தனது வாழ்க்கை  பக்கங்களில் முக்கியமான அத்தியாயம் ஒன்று கிணற்றுதவளை என்று தான் எண்ணிக்கொண்டிருக்கும் தன் சகோதரியாலேயே எழுதப்பட போகிறது என அறியாமல் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் முகிலினி .




What’s your Reaction?
+1
24
+1
16
+1
4
+1
1
+1
1
+1
0
+1
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!