Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-10

10

நிலவொளியில் மஞ்சள் காடு தகதகத்துக் கொண்டிருந்தது.

அங்கே என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்கத் தாங்கள் வருவதற்குள் அங்கே இரண்டு மரணங்கள் நிகழ்ந்துவிட்டதை எண்ணி வியந்தவாறே ஆறாம் கட்டினைச் சுற்றி நடந்தான் ஹரி.

எத்தனை அழகான இடம்! இங்கா ஆவி இருக்கிறது? அல்லது தெய்வமா? தெய்வம் எல்லா இடத்திலும் இருக்குமே, இங்கே என்ன தனியாக?  அதுவும் அடக்கி வைத்து… தெய்வத்தை அடக்க முடியுமா? அதற்குப் பலியிடல் வேறு…

ஆவியோ, அம்மனோ… வெகுநாட்களாக இங்கே ஏதும் குழப்பமில்லை. திடீரென்று என்ன… யாரைக் கேட்டால் தெரியும்?

சரியாக அந்த நேரத்தில் அறைக்குள் நுழைந்தான் முத்துவேல்.

“வாங்க தலைவரே” என்று வரவேற்றான் ஹரி.

“என்ன… என்னைப் போய்த் தலைவர்ங்கறீங்க? எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமேயில்லீங்க. நான் ஓட்டுக் கூடப் போடறதில்லீங்க” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முத்துவேல்.

“நான் என் நண்பர்கள் எல்லாரையும் அப்படித்தான் கூப்பிடுறது… அதோட நீ நம்ம தலைவர் ரஜினி மாதிரி ஒரு சாயல்ல இருக்கியா… அதான்!”

முத்துவேலின் முகம் ஆனந்தத்தில் மலர்வதும் வெட்கத்தில் சுருங்குவதையும் பார்க்க ஹரிக்குச் சிரிப்பாக வந்தது.

“அம்மா இல்லீங்களா?” என்று கேட்டான் முத்துவேல், சற்றுச் சமாளித்துக் கொண்டு.

“கோயிலுக்குப் போயிருக்கா. நானும் கொஞ்ச நேரத்தில் போகணும். முத்துவேல், இந்த ஆறாம் கட்டில் இதுவரை யார் இருந்தாங்க?”

முத்துவேல் விழித்தான். “யாருமில்லீங்களே! இந்த ஆறாங்கட்டைப் பூட்டி மந்திரக்கட்டுப் போட்டுட்டாங்க” என்றான்.

“யார்?”

“இன்னாங்க?”

“அப்படிப் பூட்டி மந்திரக்கட்டுப் போட்டது யாருன்னு கேட்டேன்?”

“அ… அது…” முத்துவேல் தடுமாறினான். “கேரள நம்பூதிரிங்க…”

“புரியாத மாதிரிப் பேசினா என்ன அர்த்தம்? அவங்களை வரச் சொன்னது யாரு? இந்தக் கட்டைப் பூட்டிச் சாவியை வெச்சுக்கிட்டது யாரு? சொல்லுங்க தலைவரே!”

முத்துவேல் ஒருமுறை கண்ணை மூடித் திறந்தான். “அது யாரோ? எனக்கு எப்படித் தெரியுமுங்க… அரச குடும்பத்துச் சொந்தக்காரங்களா இருக்கும்.”

“சரி. இந்தச் சமையற்காரன் எவ்வளவு நாளா இங்கே இருக்கான்? தெரியாதுன்னு சொல்லிடாத. நீதான் அவனை இங்கே வேலைக்குப் போட்டேன்னு சொல்லிட்டான்.”

முத்துவேலுக்குக் கோபமா, அதிர்ச்சியா? அவன் முகத்திலிருந்து ஒன்றும் தெரியவில்லை.

“ஆமாங்க, நீங்க எல்லோரும் அரண்மனைக்குத் தங்க வரீங்கன்னு சொன்னாரு. அதான் ஏற்பாடு பண்னினேன்.”

“அப்போ ஒரு வாரமா தான் அவன் இருக்கானா? யோசிச்சுப் பேசு முத்துவேல்!”

“சரி, என்மேல் சந்தேகம் வந்துருச்சி உங்களுக்கு. ஐயா, செந்தாமரை பத்து வருசமா இங்கே அரமணைக்கு வெளிய காவலிருக்கான். இங்கே விருந்தாளிங்க வரப் போறாங்கன்னதும் அவனையே சமையலுக்கு ஏற்பாடு பண்ணினேன்.”

“நாங்க வருவோம்னு யார் சொன்னது?”

“ஆதித்யா சார். ஒரு வருசமாகவே இங்கே வரதும் போறதுமா இருக்காரே.”

“அவங்க கம்பெனி இந்தப் பங்களா வாங்கினதிலிருந்தா?”

“பங்களா வாங்கிப் பத்து வருசம் ஆச்சுது. அப்புறம் கொஞ்சம் கட்டுமானம் நடந்தது. முடிஞ்சு கிருப்ரேசம் – அதான் பால் காச்சு மாதிரி – நடந்தப்போ… அந்த எஞ்சினியரை அம்மன் காவு வாங்கிட்டா! அப்புறம் யாரும் வரலை. இப்போதான் சார் வர ஆரம்பிச்சிருக்காரு. நீங்கள்ளாமும் வந்திருக்கீங்க… எவ்வளவு நாள் இருக்கீங்களோ… அவ்வளவு நாள் எங்களுக்கு வேலை.”

அவன் குரலில் கேலி ஜாலங்களை ஹரி கவனிக்காமலில்லை.

“இவ்வளவு நாளா அம்மனுக்குப் படையல் யார் போட்டது?”

“யாரும் இல்லீங்க. ஆதி சார் வர ஆரம்பிச்சதிலிருந்து செந்தாமரையைப் போடச் சொன்னேன். அம்மன் கோபம் தணிக்கணும் இல்லீங்களா?”

“அம்மனுக்கு என்ன கோபம்?”

“அம்மனோட உக்கிரத்தை அடக்கி இங்கே வெச்சிருக்காங்க. அவ தவத்தைக் கலைச்சா அவளுக்குக் கோபம் வராதா? அதான் காவு வாங்கிட்டா.”

“காவு வாங்கினா அது தெய்வமா தலைவரே?”

“உங்க பட்டணத்துக்காரவுக கேலியை உங்களோட வெச்சுக்குங்க. குத்தம் பண்ணினா அம்மா அடிக்க மாட்டாங்களா?”

“இப்போ இங்கே என்ன குத்தம் நடந்து போச்சு?”

“அதென்னமோ! ஆனா நடந்திருக்கு. அதனால்தான் எங்காயி ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா! இல்லாட்டா என்னதான் ஆறாங்கட்டைத் திறந்தாலும் அம்மன் தன் கோபத்தை வேற விதத்தில் காட்டுவாளே தவிர இப்படி உயிரை வாங்க மாட்டா!” 

முத்துவேலை ஹரி குறுகுறுவென்று பார்த்தான். அதைக் கவனித்தானோ என்னவோ, முத்துவேல் அடுத்துச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“பொளுது சாயுதுங்களே! உங்க கூட வந்தவங்க இன்னும் வரலைய்ங்களா? இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மன் வேட்டைக்குப் போவாளே! அப்போ யாரும் வெளியே உலாவுறது நல்லதில்லைங்க! அவுகளை உடனே போய்ப் பாருங்க!”

ஹரிக்குள் ஏதோ பிரளயம் நிகழ்ந்தது. 

இவன் போட்டுப் பார்க்கச் சொன்னானோ, உண்மையைச் சொன்னானோ, இதை அலட்சியம் செய்ய முடியாது. ஹரிணி. என் ‘ணி’. என் ஏஞ்சலிக் டெவில். என் எல்ஃபின் எக்ஸ்டஸி.

முத்துவேலிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே ஓடினான் ஹரி.




*****

செல்ஃபோன் தரும் ஓரளவு வெளிச்சத்தை நம்பாமல் ஹரி ஆன் செய்திருந்த டார்ச் பேரளவு வெளிச்சத்தை அள்ளி வீசியது. ஹரிணியைக் கத்தி அழைத்து ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணவில்லை அவன், மௌனமாக, ஆனால் கவனமாகத் தேடிக் கொண்டு போனான். மஞ்சள்காட்டின் ஒவ்வொரு மில்லிமீட்டரையும் அவன் தேர்ந்த பார்வை அலசியது.

“தப் தப் தப் தப்…” ஒழுங்கற்ற வேகமான காலடிகள். யாரோ ஓடிவருகிறார்கள்.

நினைத்து முடிப்பதற்குள் ஹரியின்மீது ஒரு பெரிய உருவம் மோதியது. “ஹே… ஹேய்… யார் நீ? நில்லு! ஏய்…” என்று ஹரி அவனை அழைப்பதற்குள் அவன் கண்ணைவிட்டு மறைந்துவிட்டான்.

இப்போது இவனைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. ஹரிணி முக்கியம். இவன் எங்கே போய்விடப் போகிறான்? எங்கோ பார்த்திருக்கிறேன் இவனை… அடடே! இவன் அந்த டைரக்டரின் அஸிஸ்டண்ட்… பாண்டி.

திடீரென்று மரங்களற்ற வெளிப் பகுதிக்கு வந்துவிட்டான் என்பதை உணர்ந்தான் ஹரி. பாறைகள் அடுக்கி, சிறு குன்றுபோலக் காட்சியளித்தது. ஒருவேளை அருவிக்குப் போகும் வழியோ?

“காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” தூக்கிவாரிப் போட்டது ஹரிக்கு.

குன்றின்மேல் ஆஜானுபாகு உருவம். அவன் பிடியில் சிக்கிக் கொண்டு ஒரு  பெண், அருகே இன்னொருவர்.

ஹரி குன்றின்மீது தாவி ஏறினான். அதற்குள் அந்தப் பெண் பிடியை உதறியது. கராத்தே வெட்டாகக் கால் சுழன்றது. நிலைதடுமாறிக் கீழே விழுந்தான் ஆஜானுபாகு.

“நினைச்சேன், இப்படி ஆளை அடிக்கற ஜான்சிராணி என் ‘ணி’யாத்தான் இருக்கணும்னு” என்றான் ஹரி, அவள் அருகே நெருங்கியதும்.

அவள் அலட்சியமாகத் தலையை ஆட்டிக் கூந்தலை உதறினாள். “வந்துட்டியா? எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டம்? எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியாதா?” என்றாள்.

“கோயிலுக்குப் போயிட்டு அப்படியே இங்கே தங்கியிருக்கற பெண்களோடு பேசிட்டு வரேன்னு சொன்ன? இங்கே என்ன பண்ணிட்டிருக்க?” என்று கேட்டான் ஹரி.

“நாங்க எல்லோரும் சேர்ந்துதான் கோயில்லேர்ந்து திரும்பிட்டிருந்தோம். அப்போ யாரோ காப்பாத்துங்கன்னு கத்தற சத்தம் கேட்டது. நான் உடனே என்னன்னு பார்க்கக் கிளம்பினேன். மத்தவங்களும் என் கூட வரேன்னாங்க. அப்போ ஒரு பொண்ணு வந்து ‘நான் இவங்களைக் கூட்டிட்டு அரண்மனைக்குப் போறேன். நீ கத்தறது யாருன்னு பாரு’ன்னு சொல்லிச்சு. அவங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுதான் போல. உடனே நான் குரலை ஃபாலோ பண்ணி இங்கே வந்து பார்த்தா…” என்று நிறுத்தினாள் ஹரிணி.

“வனமோகினி” என்றார் சந்தானபாண்டியன். அவர்தான் ஹரிணிக்கு அருகில் நின்றுகொண்டிருந்தவர்..

“என்ன சொல்றீங்க சார்?” என்று வியப்புடன் கேட்டான் ஹரி.

“வனமோகினி. இந்தக் காட்டில் இருக்கு. சில நேரம் சின்னப் பொண்ணா இருக்கு. சில நேரம் கன்னிப் பொண்ணா மாறிடும். வனமங்கைன்னு மத்தவங்க சொல்றாங்க. எனக்கு அவ மோகினிதான்! அவளைப் பிடிச்சுட்டு வரத்தான் நான் மணியை அனுப்பினேன்…”

“எதுக்குப் பிடிச்சுட்டு வரணும்?” சந்தானபாண்டியனைக் குறுகுறுவென்று பார்த்தான் ஹரி. 

சந்தானபாண்டியன் தைரியமாக அந்தப் பார்வையைச் சந்தித்தார். “இங்கே நடக்கற மர்மங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நிச்சயமா ஏதோ சம்பந்தம் இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிக்கத்தான்…”

“வனமோகினி கிடைச்சாளா?”

“சாயந்திரம்தான் கிடைச்சிருப்பா போலிருக்கு. இடத்தைக் கண்டுபிடிச்சதும் மணி வந்து என்னைக் கூட்டிட்டுப் போனான்…”

என்ன சொல்கிறார் இவர்? இன்று காலையில் இறந்துவிட்ட மணி சாயந்திரம் எப்படி இவரை அழைத்திருக்க முடியும்? ஏதாவது தப்பாகப் புரிந்துகொண்டிருக்கிறாரா அல்லது அது மணியின்…

ஒரு விநாடி அந்தத் துப்பறியும் சிங்கத்திற்கே உடல் நடுங்கியது.

“இப்படியே பேசிட்டு நின்னா? கீழே விழுந்தவன் யாருன்னு பார்க்க வேண்டாமா?” என்று கேட்டாள் ஹரிணி, வெகு இயல்பான குரலில். வாவ் என்று நினைத்துக் கொண்டான் ஹரி, அவள் தைரியத்தை மெச்சி. இந்தக் குட்டிச்சாத்தானைப் பார்த்துப் பேய்தான் பயப்படும் என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.

மூவரும் கவனமாகக் குன்றிலிருந்து இறங்கினார்கள். கீழே விழுந்தவன் அப்படியே கிடந்தான்.

“கால் முறிஞ்சிருக்குமோ? இல்லை தலையில் அடிபட்டு… மயக்கமாகி…” சற்றுக் கவலை தெரிந்தது ஹரிணியின் குரலில்.

“பார்க்கலாம். கவலைப்படாதே” என்றான் ஹரி மெல்லிய குரலில்.

அந்த ஆளின் அருகில் நெருங்கியபோது, அந்த வெளியைச் சுற்றியிருந்த காட்டுப் பகுதியில் ஏதோ வெளிச்சம் தோன்றியது. டார்ச் ஒளியல்ல, எலக்ட்ரிக் ஒளியாகவும் தோன்றவில்லை. நிலவொளி போல இயற்கை ஒளியாகத் தோன்றியது, ஆனால் ஒரே இடத்தில் நில்லாமல் ஒளிவட்டம் நகர்ந்துகொண்டே வந்தது. அவர்கள் இருக்குமிடத்தை நெருங்கியது.




மூவருக்கும் ஒரே எண்ணம் தோன்றியது.

இங்கே ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது. இப்போது என்னவோ நடக்கப் போகிறது.

யாரோ நடந்து வரும் மெல்லிய காலடியோசை. அத்துடன் கலீர், கலீரென்று பாதசரச் சப்தம்.

யார் வருவது? அந்த வனமோகினியாய் இருக்குமோ?

மரக்கிளைகள் அகன்று ஒரு வடிவம் அந்த வெளியில் பிரசன்னமானது.

சுரீரென்று மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ந்தார்கள்.

பெண் வடிவம்தான். ஆனால் உருவம் தெரியவில்லை. வெள்ளை ஒளியாலேயே செய்த உருவம் போலத் தோன்றியது. ஒளிக் கையில் ஒளித் திரிசூலம் மின்னியது. கிரீடம் ஆபரணங்கள் ஆயுதம் எல்லாம் தணலாகத் தெரிந்தது.

“அம்மா, தாயே!” என்று முணுமுணுத்தார் சந்தானபாண்டியன். காண்கின்ற காட்சியை ஜீரணிக்க முடியாமல் திகைத்து நின்றார்கள் ஹரியும் ஹரிணியும்.

அந்தப் “பெண்” – ஒளி – அவர்களை நெருங்கியது. அவர்கள் அருகில் வந்து ஒருவிநாடி நின்றது. புன்னகைத்ததுபோல் தோன்றியது. உடனே நகர்ந்து கடந்து சென்றுவிட்டது. இருள் மறுபடி சூழ்ந்தது.

கீழே இறங்கும்போது அணைத்திருந்த டார்ச்சை மறுபடி உயிர்ப்பித்தான் ஹரி. அந்த வெளிச்சத்தில் சந்தானபாண்டியன் கண்களை மூடிக் கைகூப்பித் துதித்துக் கொண்டிருந்தது புலனானது.

“நாம் பார்த்தது என்ன? ஆவியா? இதுதான் வனமோகினியா?” என்று கேட்டாள் ஹரிணி.

“மண்ணாங்கட்டி! தெய்வத்தைக் கண்ணால் பார்த்தும் புரியலையே உங்களுக்கு! அது அம்மன்மா, அம்மன்! சரியான நாஸ்திகர்கள் கிட்ட வந்து சிக்கிக்கிட்டேன்” என்றார் சந்தானபாண்டியன் கோபமாக.

ஹரியும் ஹரிணியும் புன்னகைத்தார்கள். திடீரென்று ஹரிணி உறைந்தாள். தரையை நோக்கிக் கைகாட்டினாள்.

ஆம், அந்த ஆஜானுபாகு ரத்தவெள்ளத்தில் கிடந்தான். அது கீழே விழுந்து அடிபட்ட காயமல்ல. வயிற்றில் முத்தலைச் சூலத்தின் குறி தெளிவாக விழுந்திருந்தது. அதிலிருந்து ரத்தம் குமிழிவிட்டுக் கொண்டிருந்தது.

“ஆத்தா! இனி நான் தப்புச் செய்யவே மாட்டேன்! காளி பயங்கரி! என்னை மன்னிச்சியே ஆத்தா!” என்று அலறினார் சந்தானபாண்டியன்.

அந்த உடலிலிருந்து மேலெழும்பிய ஹரியின் பார்வை சந்தானபாண்டியன்மீது சந்தேகத்தோடு விழுந்து நிலைத்தது.




What’s your Reaction?
+1
11
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!