Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-12

12 

 

“அத்தை மாமாவிற்கு கஞ்சி பிறகு ஆற்றிக் கொள்ளுங்கள், அடுப்பை வீட்டு நகர்ந்தீர்களானால் என் பிள்ளைக்கு பூரி சுட்டு விடுவேன்”சுலேகா வந்து நின்றாள்.

” உங்கள் பிள்ளைக்கு எட்டு முப்பது தானே ஸ்கூல் வேன் வரும்? என் பிள்ளைக்கு எட்டு இருபத்தியைந்துக்கு பஸ் வந்துவிடும். அதனால் நான் முதலில் அவனுக்கு நூடுல்ஸ் செய்து விடுகிறேன்” கனகா கையில் கரண்டியை எடுத்துக் கொண்டாள்.

“அம்மா எனக்கு நூடுல்ஸ் வேண்டாம். ஃப்ரைட் ரைஸ் செய்யுங்க” ஆதவ் குரல் கொடுக்க கனகா பற்களை கடித்தாள்.

“டேய் ஒன்பது மணிக்கு நான் கோர்ட்டில் இருக்க வேண்டும். நூடுல்ஸ் தான் செய்ய முடியும்.பிரைட் ரைஸ் நாளைக்கு செய்து தருகிறேன்”

“அஞ்சு சித்தின்னா கேட்டதை உடனே செய்து தருவாங்க” நறுக்கென தாயிடம் கொட்டு வாங்கினான் சிறுவன்.

“என்னம்மா வளர்ற பிள்ளை கேட்டதை செய்து கொடேன்” சப்போர்ட்டுக்கு வந்த மாமியாரை முறைத்தாள் கனகா.

“பேரன் மேல் அவ்வளவு அக்கறை இருந்தால் நீங்களே செய்து கொடுங்களேன். நீங்கள்

வீட்டில்தானே இருக்கிறீர்கள்! நாங்கள் வெளியே போய் சம்பாதிக்கிறோம் தெரியும் தானே?”

“வீட்டில் இருந்தால் சும்மா இருக்கிறோம் என்று நினைப்பா உனக்கு? ஒரு நாள் முழுக்க வீட்டில் இருந்து செய்து பார்”

“பெரிய வீட்டு வேலை!எதையோ ஊற்றி கிண்டி எடுத்து வைத்து விட்டு, ஏதோ மலையை புரட்டிய மாதிரி சவால் விட்டு உள்ளே போய் உட்கார்ந்து கொள்கிறார்கள்” சுலேகா ஸ்டோர் ரூமை ஜாடையாய் பார்த்து பேசினாள்.

“ஈஸியா செய்கிற வேலைதானே சுலேகா? நீ தான் இன்று காலை சமையலை செய்து வைத்து விட்டுப் போயேன்.

“ஒன்பதரைக்கு நான் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டும். உங்களுக்கு சமைத்துக் கொட்டிக் கொண்டிருக்க என்னால் முடியாது”

“ஒன்பதுக்கும் ஒன்பதரைக்கும் வெளியே போகும் வேலை இருப்பவர்கள் காலையில் எட்டு மணிக்கு இறங்கி வந்தால் எப்படி?” கேட்ட சுகுணாவினுள் ஐந்து மணிக்கே குளித்து முடித்து அடுப்பு முன் வந்து நிற்கும் அஞ்சனா நினைவிற்கு வந்தாள்.

“நைட் நாங்க தூங்க எவ்வளவு நேரம் ஆகுது தெரியுமா? தினம் காலையில் சீக்கிரம் எழச் சொல்கிறீர்களே?”




“ஏன் பத்து மணிக்கு எல்லோரும் ரூமுக்குள் போய் விடுகிறீர்கள்தானே? அப்போது தூங்கினால் காலை ஐந்து மணிக்கு எழுந்து கொள்வதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது?”

சுலேகாவும், கனகாவும் மாமியாரை கொலை வெறியாக பார்த்தனர். சுலேகா திருமண முடிந்து வந்த புதிதில் சமையல் பொறுப்பு சுகுணாவிடம்தான் இருந்தது. அதுவே தனக்குரிய பதவி என்பது போல் அடுப்படியை மூத்த மருமகளுக்கு விட்டுக்கொடுக்க சுகுணா தயாராக இல்லை. அடுப்படிக்குள் நுழைய சுலேகாவும் தயாராகவில்லை.

அதனால் குடும்பம் சுமுகமாகவே செல்ல ,கனகா திருமணம் முடிந்து வந்த போது சிறு சிறு உடல் உபாதைகள் தலைகாட்ட துவங்கினாலும் சுகுணா தன் அடுப்படி பதவியை விடாமல் பிடித்துக் கொண்டுதான் இருந்தாள். சமையல் வேலைகளற்ற சொகுசிற்கு பழகிப்போன கனகாவும் தன் போக்கில் தன் வேலைகளை மட்டும் பார்த்து வந்தாள். கடந்த இரண்டு வருடங்களாக சுகுணாவின் உடல்நிலை சிறிது சிறிதாக மோசமாக எந்த மருமகளும் சமைக்க தயாரில்லை என்பதை உணர்ந்த சுகுணா சமையல் வேலைக்கு ஆட்கள் வைத்தாள்.

இவர்கள் வீட்டின் உணவு தேவைக்கு எந்த சமையல்காரியும் நிலைக்காமல் போக ,எல்லோரும் திணறியபடி இருந்த போதுதான் சமையல் கலை படித்த அஞ்சனாவின் ஜாதகம் வந்தது.தன் இடத்தில் இருந்து வீட்டை பொறுப்பாக பார்த்துக் கொள்வாள் என்ற சுகுணாவின் பேச்சு எல்லோருக்குமே ஏற்புடையதாக இருக்க, பெண் விஷயத்தில் சத்யநாதனும் முழு சம்மதம் சொல்ல ஆஹா என்று அஞ்சனாவை வீட்டிற்கு அழைத்து வந்து சமையலறைகுள்ளும் தள்ளிவிட்டனர்.

சுகுணாவை பொருத்தவரை முன்பு அவள் செய்த வேலைகள் தான் இப்போது அஞ்சனா செய்வதில் பாரம் எதுவும் இருக்காது என்று எண்ணினாள் .ஆனால் அதிகரித்துக் கொண்டே போன குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் கூடிக் கொண்டே போன அவர்களது உணவு தேவைகளையும் சுகுணா கணக்கில் கொள்ள மறந்து போனாள்.

அடுப்படிக்குள்ளே எட்டிப் பார்த்த கலியபெருமாள் “என் கஞ்சியை கொடு” என்று கைநீட்டி கிண்ணத்தை வாங்கிக் கொண்டு தனது ஆபீஸ் அறைக்குள் போய் அமர்ந்து கொண்டார். தடித் தடியான சட்டப் புத்தகங்களுக்கு இடையே கஞ்சிப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு ஸ்பூனால் சாப்பிட துவங்கினார்.இப்படி அலுவலக அறைக்குள் உட்கார்ந்து உடவுண்ணுவது அவருக்கு பிடிக்காது.அங்கு குடியிருக்கும் சரஸ்வதி தேவியை அவமதிப்பது போலாகும் என்பார்

இன்றோ வீட்டின் மற்ற இடங்கள் கிடந்த கிடப்பிற்கு வேறெங்கும் அமர்ந்து சாப்பிட முடியுமென அவருக்கு தோன்றவில்லை. தன்னை அறியாமலேயே மனம் அஞ்சனாவிடம் போய் நின்றது.நான்கு மாதங்களாக அவள் ஒரே ஒரு பெண் செய்த வேலைகளை இந்த மூன்று பெண்களுக்கும் சேர்ந்து செய்ய முடியவில்லை.

 நான்கு ஸ்பூன்களுக்கு மேல் கஞ்சி உள்ளே இறங்க மறுத்தது. உப்போ உரைப்போ இன்றி நீரை கலந்து வைத்தது போல் சப்பென்றிருந்தது கஞ்சி.

கஞ்சிப் பாத்திரத்தை வைக்க போன போது ஸ்டோர் ரூமுக்குள் எட்டிப் பார்க்க ,அங்கே கிடந்த மர ஸ்டூலில் அமர்ந்தபடி பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா. கலியபெருமாளை நிமிர்ந்து பார்த்த அவள் விழிகள் வெறுமை சுமந்திருந்தன. அடுப்படிக்குள் நடந்து கொண்டிருந்த கலாட்டாக்கள் அவள் காதிலும் விழத்தான் செய்தது் ஆனாலும் சலனமின்றி புத்தகத்திற்குள் ஆழ்ந்திருந்தாள்.

“எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது, பூரி ஆயில், இரண்டே இரண்டு இட்லி மட்டும் ஊற்றிக் கொடுங்கள்” சத்தம் போட்டு கேட்டுக் கொண்டிருந்தவள் சாஹித்யா.

சுலேகாவோ, கனகாவோ அவள் பேச்சை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கனகா ஒரு படி மேலே போய் “அதோ மாவு இருக்கிறது பார். உனக்கு தேவையான இட்லியை நீயே ஊற்றிக் கொள்” என்க சாஹித்யா திகைத்து நின்றாள்.

“இரண்டு இட்லி ஊற்றி வைக்க உங்களால் முடியாதா?” சுகுணா பேத்திக்காக வேலையில் இறங்கினாள்.

ஒன்பது மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக கூச்சல் குறைந்து வீடு அமைதியடைய தொடங்கியது. பிள்ளைகள் பெரியவர்கள் எல்லோரும் அவரவர் கடமை தேடி போய்விட்டிருக்க சத்தியநாதன் மெல்ல அடுப்படிக்குள் நுழைந்தான்.

அஞ்சனா புத்தகத்திற்குள் இருந்து தலையை கொஞ்சமும் நிமிர்த்தவில்லை. அடுப்பில் தோசை கல்லை வைத்து அவன் தோசை ஊற்றிக் கொள்ளும் சத்தம் கேட்டது. செய்யட்டும், இந்த வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு அடுப்படியில் நின்றால் மானக்கேடு, உன்னிலிருந்து ஆண்களும் சமைக்கும் சம உரிமை பரவட்டும்…மனதிற்குள் நினைத்தபடி புத்தக பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தவளின் முன் தோசை தட்டு நீட்டப்பட்டது.

“உனக்குத்தான் சாப்பிடு” அவனை வியப்பாய் பார்த்தாள்.

“என்னை நான் பார்த்துக் கொள்வேன் .நீங்கள் சாப்பிடுங்கள்”

“இதோ எனக்கும் இருக்கிறது. இப்போது நீ கிச்சனுக்குள் போவது உன் திட்டங்களுக்கு சரியாக இருக்காது”

அஞ்சனாவிற்கு திக்கென்றது. எனது எந்த திட்டத்தை உணர்ந்து கொண்டான் இவன்?




“நீயில்லாமல்  இங்குள்ளோர்க்கு

ஒருவேளை உணவை கூட தாங்களாக சமைத்து உண்ணத் தெரியாது என்பதனை உணர்த்துவது தானே உனது திட்டம்?” அவள் கண்களை கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

“எனது அவசியத்தையும், தூய்மையையும் உணர்த்துவதுதான் திட்டம்” அஞ்சனா நிதானமாக தோசைகளை உண்ண துவங்கினாள்.

“எனக்கென்று எதையும் உணர்த்த தேவையில்லை.நம் வீட்டினரும் மெல்ல மாறி விடுவார்கள்.இப்படியெல்லாம் தினமும் போராட அவர்கள் யாராலும் முடியாது.நாம்…சாஹித்யா விசயம் பேசலாம் அஞ்சு”

“சாஹித்யா விஷயத்தில் கோகுல் எங்கிருந்து உள்ளே நுழைந்தார்?”

” உன்னிடம் பேசத்தான் பெருமாள் கோவிலுக்கு வந்தேன். அங்கே கோகுலை பார்த்ததும் கொஞ்சம் ஷாக். பிறகு யோசித்தால் எதேச்சையான சந்திப்பை பற்றிய கவலை வேண்டாம் என்று தோன்றியது”

“எதேச்சையா ? கோகுலுக்கு போன் போட்டு கோவிலுக்கு வரச் சொன்னதே நான்தான். இனி என்ன செய்வதாக உத்தேசம்?” சொன்னவளை கண்கொட்டாமல் பார்த்தவன், “சரி அப்படியே இருக்கட்டும். உன் உறவினர், உங்களுக்குள் பேச ஆயிரம் இருக்கலாம். அது எனக்கு தேவையில்லாதது. சாஹித்யாவுடன் உனக்கு என்ன பிரச்சனை?’

” அதுதான் சொன்னார்களே…அவள் மீது எனக்கு பொறாமை.நீங்களே கூட இது போல் சொன்னதாகவே நினைவு.உங்களுக்குத் தெரியுமே அவள் உடைகளை நான் வாங்கி போட்டுக் கொள்வேன்தானே?”

சத்யநாதன் பெருமூச்சுடன் எழுந்தான் “கோபமாக இருக்கிறாய் அஞ்சு. அது நியாயமும் கூட ,ஓரிரு நாட்கள் போகட்டும் நாம் பேசலாம்”

சத்யநாதன் கிளம்பிச் செல்லவும் அஞ்சனா அவசரமாக கிளம்பி வெளியே சென்றாள்.

அதன் பிறகு வீட்டு சுத்தம் பாத்திரம் கழுவ என்று வந்த வேலைக்காரி வீடு இருந்த இருப்பை பார்த்து அலறினாள்,அன்றே சிலம்பு ஏந்திய கண்ணகியாக கலியப்பெருமாளிடம் நீதி கேட்டு நின்றாள்.




What’s your Reaction?
+1
54
+1
38
+1
2
+1
13
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!