Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-7

 7

புதிய இடத்தில் தனியாகப் படுக்க வேண்டாமென ஸ்வேதாவையும் ஆதியையும் கட்டிலில் படுக்கச் சொல்லி விட்டுத் திவானில் படுத்திருந்த காயத்ரி, கண்ணிமைக்கும் நேரத்தில் பார்வையில் இருந்து மறைந்து விட்ட வனமங்கையைப் பற்றி நினைத்துக் கொண்டே மெல்ல மெல்ல தூங்கிப் போனாள். விடியலில் வந்த கனவொன்று அவளைத் தூக்கத்திலிருந்தது திடுக்கிட்டு எழுப்பி உட்கார வைத்தது.

கனவில்… காயத்ரி பூஜை செய்து கொண்டிருக்க… 

ஒரு சிறுமி. பட்டுப் பாவாடை சட்டையில் சர்வாலங்காரத்துடன் தண்டையும் ,கொலுசும் ஜல், ஜல் என்று நாதமிசைக்க, காயத்ரியின் பின்பக்கமாக வந்து அவள் கழுத்தில் கைகளை மாலையாக்கிக் கட்டிக் கொண்டாள். புதுவிதமானதொரு சுகந்தம் அவள்மீது வீசியது. காயத்ரியின் காதோரத்தில்… 

“எனக்கு சர்க்கரைப் பொங்கல் செஞ்சு தரேன்னியே… பொங்கல் வெக்க உனக்கு வேணும்கிற ஏற்பாடுகளை நான் செய்ய ஆரம்பிச்சிட்டேனே!” என்று கேட்ட நொடியில் விழிப்பு வந்து விட்டது காயத்ரிக்கு. 

கழுத்தில் படிந்த அந்தப் பிஞ்சுக் கைகளின் ஸ்பரிசத்தையும்,  காதோரம் பேசிய அந்த செப்பு இதழ்களின் குறுகுறுப்பையும்,  அந்த நறுமணத்தையும்  நிஜத்திலும் உணர்ந்தாள் காயத்ரி.  

என் மகன், மருமகளின் வாழ்க்கையைப் பூரணமாக்க ஒரு மழலைச் செல்வத்தை விரைந்து அருளம்மா”

மனதுக்குள் வேண்டிக் கொண்டவள், விடிந்ததும் முதலில் ரணபத்ரகாளி கோயிலுக்குப் போய்  பொங்கல் வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

விடிந்தது… ஆதி, ஸ்வேதா எழுந்ததும் தான் கண்ட கனவையும் பொங்கல் விஷயத்தையும் பற்றி காயத்ரி பிரஸ்தாபிக்க, பொங்கி எழுந்து விட்டான் ஆதி.

“எனக்குத் தலைக்கு மேல வேலை இருக்கு. நீங்க ரெண்டுபேரும் பொங்கல் வைப்பீங்களோ, பாயசம் வைப்பீங்களோ… என்னை ஆள விடுங்க” – கிளம்பியே விட்டான்.

காயத்ரி கண்ட கனவைக் கேட்டதிலிருந்து ஸ்வேதாவுக்குள்ளும் ஒரு குறுகுறுப்பு. “வாங்க அத்தை! நாம் போய் பொங்கல் வைக்க வேணும்கிற சாமான்களை வாங்க ஆளனுப்பலாம்” என்றாள்.

பொங்கல் சாமான்களை வாங்க யாரை அனுப்பலாமென யோசித்துக் கொண்டே இருவரும் வெளியே வர… தேடிப் போன மூலிகை காலில் சுற்றியது போல அரண்மனை வாசலில் வந்து நின்றான் முத்துவேல். அவன் கையில் பெரிய தேனடை. அரண்மனையில் நிறைய வெளியூர்க்காரர்கள் வந்திருப்பதால் யாரேனும் வாங்கக்கூடுமென்ற எதிர்பார்ப்பில் வந்தவனிடம் காயத்ரி ரணபத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் வைப்பது குறித்து விசாரிக்க… 




உற்சாகமானான் முத்துவேல். “பட்டணத்திலேந்து வந்து எங்க குலசாமிக்கு பொங்க வைக்கறேங்கறிங்க. கேக்கவே  எம்புட்டு சந்தோசமா இருக்குது தெரியுங்களா! சித்த இருங்க… இந்த தேனடைய யாருக்காச்சும் வெல பேசிட்டு வந்தர்றேன்.”

“இருப்பா…நீ எங்கேயும் போக வேண்டாம். அத நாங்களே வாங்கிக்கறோம்.”

“ஆகா… உங்களுக்கு பெரிய மனசு தாயி! நீங்க கேட்ட பூஜை சாமான், பொங்கப்பானையோட வெரசா வந்துர்றனுங்க” – பணத்தை வாங்கிக் கொண்டு ஓடியவன் சொன்னது போலவே ஒரு மணி நேரத்தில் வந்து சேர‌… மூவருமாக ரணபத்ரகாளி கோயிலுக்குக் கிளம்பினார்கள்.

கோயிலுக்குச் செல்லும் வழியில்  பளிங்கு போன்ற தண்ணீருடன் சிலுசிலுவென்று மென்னடை பயின்று கொண்டிருந்தது ஓடை ஒன்று. அதைப் பார்த்ததும் ஸ்வேதாவுக்கு ஒரே குஷி. 

சில்லென்ற தண்ணீரைக் கைகளால் முகந்து ஒரு வாய் குடித்தவள் “வாவ்! அத்தை, இந்த தண்ணிய குடிச்சுப் பாருங்களேன்! மூலிகை வாசத்தோட… இளநீர் மாதிரி இனிக்குது!”

மருமகளுடன் குதூகலமாகத் தண்ணீரில் இறங்கி காயத்ரியும் விளையாட…

“ஹேய் ஸ்வேதா! நீங்க எப்ப வந்தீங்க?” – அங்கே வந்து சேர்ந்தார்கள் சந்தனபாண்டியனும் மீனாவும். 

“குட்மார்னிங் அங்கிள். நாங்க ராத்திரியே வந்துட்டோமே, நீங்க இன்னும் ஆதியை மீட் பண்ணலையா?”

“இல்லம்மா… ஆமா என்ன வந்ததும் வராததுமா இங்க வந்துட்டீங்க? ஆதி வழக்கம் போல கடமையே கண்ணானதுன்னு கிளம்பியாச்சாக்கும்?”

“நாங்க இங்க இருக்கற ரணபத்ரகாளியம்மனுக்குப் பொங்கல் வைக்கலாம்னு வந்தோம் அங்கிள். எங்க வந்தாலும் கோயில் பூஜைனு கெளம்பறீங்கன்னு ஆதிக்கு எங்க மேல ரொம்ப கோபம். வேலை இருக்குன்னு கெளம்பிட்டார்.”

“அம்மா, கோயில்ல பொங்க வெச்சிட்டு பொறவு கூட இங்க வந்து தண்ணியில வெளயாடலாம், வாங்க” – முத்துவேல் இடைமறித்தான்.

மீனாவை இவர்களுடன் கோயிலுக்கு அனுப்பி விட்டால் தன்னுடைய விருப்பம் போல  அந்தப் பெண்ணைத் தேடலாமே என்று மின்னலாக ஒரு யோசனை தோன்றியது சந்தான பாண்டியனுக்கு.

“மீனா! நீ இவங்களோட போய் பொங்கல் வெச்சிட்டு பூஜைக்கு ஏற்பாடு பண்ணு. நான் அப்படியே இங்க ஒரு ரவுண்டு அடிச்சிட்டு கோயிலுக்கு வர்றேன்” என்றார்.

பெண்கள் மூவரும் முத்துவேலைத் தொடர, உல்லாசமாய் விசிலடித்தவாறே காட்டுக்குள் தொடர்ந்து நடந்தார். அவர் மனக்கண்ணில் அன்று பார்த்த தேவதையின் சௌந்தர்ய தோற்றம் வெகுவாக இம்சைப்படுத்த… எப்படியும் அவளைக் கண்டுபிடித்தேயாக வேண்டும் என்ற முனைப்போடு வேகவேகமாக நடை போட்டார். 

***** 

கோயிலுக்குப் போய்ச் சேர்ந்ததும்…




“அடுப்பெரிக்க விறகோ ,சுள்ளியோ எடுத்து வரவில்லியே”  காயத்ரி அங்கலாய்க்க…

“ஏனுங்கம்மா இந்தக் காட்டுல சுள்ளிக்குப் பஞ்சமுங்களா… அந்தா பாருங்க, கோயில் வாசலிலயே ஒரு கட்டு சுள்ளீ உங்களுக்குன்னே எடுத்து வெச்சாப்புல…”

“அட… ஆமா! இதென்ன, நம்ம கம்பெனில பேக்கேஜ் கட்ற ப்ளாஸ்டிக் நாடா போல இருக்கே! க்ரீன் ஹோம்ஸ்னு பேரு கூட இருக்கு பாரு ஸ்வேதா!”

“அட, ஆமாம் அத்தை! நேத்து நாம கார்ல ஒரு பொண்ணைக் கூட்டிகிட்டு வந்தமே… வனமங்கை… அவளோட சுள்ளிக் கட்டை கார் மேல எடுத்து வைக்கிறப்ப, சுள்ளி நழுவி கீழே விழுந்துச்சுல்ல… அப்ப உங்க மகன் டிக்கில இருந்த இந்த நாடாவ வெச்சு சுள்ளிக் கட்டைக் கட்டினாரே. நீங்க அந்த பொண்ணோட  பேசற சுவாரஸ்யத்துல இதைக் கவனிக்கல போல. இது அந்த வனமங்கை கொண்டு வந்த சுள்ளிக்கட்டுதான் அத்தை.”

“எப்பிடி அந்தப் பொண்ணோட சுள்ளிக்கட்டு இங்க வந்திருக்கும்? நாம பொங்கல் வைக்கிறதா சொன்னத மனசுல வெச்சுகிட்டு சுள்ளிக்கட்டை இங்க கொண்டு வந்து வெச்சிருப்பாளோ? இத்தனை தூரம் எதுக்கு அவ தூக்கிட்டு வரணும்? இரு, இரு… கனவுல வந்த பொண்ணு கூட பொங்கல் வைக்க ஏற்பாடுகளைப் பண்ணிட்டேன்னு சொன்னாளே! அப்ப கனவுல வந்த பொண்ணும், வனமங்கையும் ஒண்ணா? இல்லையே… வனமங்கை இந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி இருந்தா. கனவுல வந்த பொண்ணு நகை, நட்டோட சர்வாலங்கார பூஷிதையால்ல இருந்தா?”

“அத்தை! ராத்திரி முழுக்க வனமங்கை ஞாபகத்துலயே இருந்திருப்பீங்க, வேறொண்ணுமில்லை…” 

பேசிக்கொண்டே பொங்கல் வைத்து முடிப்பதற்குள் மீனா அங்கிருந்த மலர்களை முத்துவேலின் உதவியால் பறித்துப் பெரிய மாலையாகத் தொடுத்து விட்டிருந்தாள். கண்ணைப் பறிக்கும் பலவகை வண்ணத்தில், நறுமணப் பூக்களால் ஆகிய அந்த மாலையைப் பார்க்கும்போதே பரவசமாக இருந்தது.  மாலையைக் காளிக்கு அணிவித்து விட்டு, “அம்மனுக்கு அலங்காரம் பண்ணியாச்சு, நைவேத்தியம் எல்லாம் எடுத்து வெச்சாச்சு. தீபாராதனை காமிக்கலாம்னா உங்க வீட்டுக்காரை இன்னும் காணோமே மீனா!” என்று கேட்டாள் காயத்ரி.

“பரவால்ல காயத்ரி! அவர் வரப்போ வரட்டும். நீங்க பூஜையை முடிங்க. அவர் வந்தப்புறம் திரும்ப தீபாராதனை காமிச்சுட்டாப் போகுது” என்றாள் மீனா.

“அப்ப சரி. தாயே! என் வேண்டுதல்படி மனசுக்கு நிறைவா உனக்குப் பொங்கல் படைச்சிட்டேன்… என் வம்சம் தழைக்க ஒரு மழலைச் செல்வத்தை என் மருமகளுக்கு மகிழ்ந்தருளணும் அம்மா!” – ஊனுருக வேண்டிக் கொண்டு காயத்ரி தீபாராதனை காட்டி முடிக்கவும்…

“ம்ம்மா…” என்று குரலெழுப்பியபடி செங்காளை அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

ஸ்வேதா இலையோடு பொங்கலை எடுத்துவந்து  தர, செங்காளை பொங்கலை ஆர்வத்துடன் சாப்பிட்டதோடு மூன்று பெண்களையும் கனிவோடு பார்த்து “ம்மா..ம்மா” என்று குரல் கொடுத்தது.

“உங்களைப் பாத்து அவனுக்கு சந்தோசம் தாங்கல போல… பாருங்க அவன் கண்ணுல தண்ணி கரை கட்டி நிக்குது… மொகத்துலயும் ஒரே பூரிப்பு… என்னடா செங்காள, உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவுகளா? இப்பிடி கும்மாளமா இருக்க?” – எதோ சேக்காளியை கிண்டல் செய்வது போல  முத்துவேல் செங்காளையிடம் பேசிக்கொண்டிருந்தான். 

***** 




தேடி வந்த தேவதை கண்ணுக்குத் தட்டுப்படவில்லையே… இன்னும் காட்டுக்குள்ளே போய்த் தேடிப் பார்ப்போமா… வேண்டாம், வேண்டாம்… காட்டுக்குள்ளே வழி தவறி விட்டாலோ, ஏதேனும் வன விலங்குகள் எதிர்ப்பட்டாலோ என்ன செய்வது… மொபைல் சிக்னல் இல்லாத இடம் வேறு…  

பயத்துடன் தான் வந்த வழியைப் பிடித்துக் கொண்டே வேர்த்து விறுவிறுத்தபடி அங்கு வந்து சேர்ந்த சந்தனபாண்டியனைப் பார்த்த செங்காளை “ஹ்ஹூம்” என்று மூர்க்கமாகக் குரல் எழுப்பி மண்ணில் கொம்பைத் தேய்த்தபடி அவரை நோக்கிப் பாய்ந்தது.

“ஐயோ…இதென்ன விபரீதம்..தாயே ரணபத்ர காளி..என் மாங்கல்யத்தைக் காப்பாத்து தாயே..” மீனா கூச்சலிட… 

ஸ்வேதா பயந்து போய் தன் மாமியாரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள…  

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சந்தானபாண்டியன் ஓட… 

முத்துவேலின் உதடுகளில் தவழ்ந்தது ஏளனச் சிரிப்பொன்று…!

***** 

தன்னை ஏன்  இந்த மாடு இப்படித் துரத்துகிறது என்பதை அறியாத சந்தான பாண்டியன் பின்னங்கால் பிடரியில் பட கண்மண் தெரியாமல் ஓடி வந்தவரின் கால் ஒரு பெரிய மரத்தின் பருத்த வேரொன்றில்  மாட்டிக் கொள்ள அப்படியே தலைகுப்புற விழுந்தார்.

“ஏனுங்கோ..இப்பிடி யாரோ தொரத்திகிட்டு வாராப்புல ஒடி வாரீக?”

தலை நிமிர்ந்து பார்த்தவருக்குத் ஒரு மலைசாதி சிறுமியின் கால்களில் தான் விழுந்து கிடக்கிறோம் என்பது புரிந்தது.

திரும்பிப் பார்த்தவர்..தன்னைத் துரத்தி வந்த மாடு காணாமல் போனதைக் கண்டு ஆசுவாசமானார். “ஒரு மலைமாடு… என்னை துரத்திகிட்டு வந்துது… அதான்…”

“ஓஹோ! செங்காளையாத்தான் இருக்கும். அவன் நல்லவங்களை ஒண்ணும் செய்ய மாட்டானே… ம்… ம்…”

அதற்குள் முத்துவேலின் உதவியுடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த மீனா, காயத்ரி, ஸ்வேதா… சந்தானபாண்டியனுக்கு ஏதும் ஆபத்தில்லை என்று தெரிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். 

கரும்பைக் கடித்துக் கொண்டிருந்த சிறுமியைப் பார்த்து “அட… வனமங்கை, நீயா? நீ எங்க இங்க..?”

“ம்ம்ம்ம்ம்ம்… இது நல்லா இருக்கே… என்னோட எடத்துக்கே வந்து இப்பிடி ஒரு கேள்வியா?”

வனமங்கை அங்கிருந்து நகர்ந்தாள்.

‘அடடா… அந்த சுள்ளிக்கட்டு பத்திக் கேக்காம விட்டுட்டோமே” குறைப்பட்டுக் கொண்ட காயத்ரி முத்துவேலுக்கு நன்றி சொல்லி, தேனடைக்கும் அவன் செய்த உதவிக்குமாகக் கூடுதலாகவே பணத்தைக் கொடுத்தாள். 

அகமகிழ்ந்து போனவன் “உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க தாயீ… நான் அரமணைக்கு நாளைக் காலம்பற வாறேன்…” என்றான். அத்துடன் “இந்த அய்யாவ கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கச் சொல்லுங்க… செங்காளை தொரத்தறான்னா… அது சாதாரண விசயமில்ல” என்றான் காயத்ரியின் காதில் கிசுகிசுப்பாக.

“அடக்கடவுளே… இதை எப்படி நான் அவங்ககிட்ட சொல்லுவேன்” என்று காயத்ரி யோசிக்க.. எல்லோருமாக அரண்மனையை அடைந்தார்கள்.

விடிந்ததிலிருந்து தான் நினைத்தது ஒன்றுமே நடக்காததோடு, மாடு துரத்தத் தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த பரிதாபகரமான காட்சியை நினைத்துக் கொதித்துப் போன சந்தான பாண்டியன். இன்று யார் முகத்தில் விழித்தோம் என்று யோசிக்க…

*****

“ஐ ஆம் ஆனந்தன்… கிளாட் டு மீட் யூ அங்கிள்!”  என்று கையை நீட்டியபடி எதிரில் வந்து நின்றான் ஆனந்தன்.

அடப்பாவி! இன்னைக்குக் காலைல உம்மூஞ்சியதானடா மொபைல்ல பாத்தேன். உன்னை ஃபோட்டோவுல பாத்ததுக்கே நிலைமை இத்தனை கலவரமா இருக்கே. நேருல உன்னைப் பாத்திருந்தா… ஐயய்யோ… 

சிந்தனையில் உறைந்தவரை…

“என்னாச்சு அங்கிள்? ஏன் இப்பிடி நெர்வஸ்ஸா இருக்கீங்க?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை தம்பி! வாங்க நாம நம்ம எடத்துக்குப் போகலாம்” என்று சூழ்நிலையைச் சட்டென்று இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள் மீனா. 

***** 

அந்தி மயங்கும் நேரம் சந்தனபாண்டியனின் மகன், மருமகள் ஒரு காரிலிருந்தும், மும்பையிலிருந்து வந்த சரித்திரப் பேராசிரியர் ராமாமிர்தம் மற்றொரு வாடகைக் காரிலிருந்தும் இறங்க, அந்த அரண்மனையின் ஐந்து கட்டுகளிலும் பல வருடங்களுக்குப் பிறகு மனித நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது. 

தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்த ப்ரொஃபசர், “என்ன இது! இந்த அரண்மனைக்கு வந்து தங்கவே மனுஷங்க பயப்படறாங்கன்னு நமக்கு சேதி கிடைச்சுது. அத நம்பி இங்க வந்தா, இங்க இத்தன பேர் வந்திருக்காங்களே… ஒரு வேளை நமக்குத் தெரிஞ்ச உண்மை இவங்களுக்கும் தெரிஞ்சிருக்குமோ?” என்று  கவலைப்பட்டார். “எல்லோரும் தூங்குனப்புறம் இந்த அரண்மனையைச் சுத்திப் பார்த்துடணும். நமக்குக் கிடைச்ச தகவல்கள் உண்மையாயிருக்கற பட்சத்தில், யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு வேலைகளை முடிச்சிட்டுக் கிளம்பிடணும். ஆமா, தனியொருவனா நம்மால இத்தனாம் பெரிய ப்ராஜெக்ட்டை முடிக்க முடியுமா?” என்ற சந்தேகம் முதல் முறையாக அவர் உள்ளத்தில் எழுந்தது. 

***** 

இவரைப் போலவே உறங்காவிழிகளுடன் இருந்த மற்றொருவன் ஆனந்தன். ஆதித்யாவின் புது ப்ராஜெக்ட்டை  தனக்குக் கோடிக்கணக்காகப் பணம் கொடுத்திருக்கும் தக்ஷிண் ரிசார்ட்ஸ்க்கு கை மாற்றப் போகிற குறுக்கு மூளைக்காரன். குற்றங்களைத் தடயமில்லாமல் செய்யும் ஜாலக்காரன். 

நாளைக்காலை எழுந்ததும் வந்த வேலையை ஆரம்பித்து விட வேண்டுமென முடிவு செய்து விளக்கை அணைத்து விட்டு அவன் தூங்க, அந்த அறையிலிருந்த பூநாகம் அவனுடைய ஷூக்குள் சென்று பதுங்கியது.




What’s your Reaction?
+1
8
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!