ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-16

16

கடத்தல் களேபரங்கள் ஓய்ந்து அன்றுதான் வீடு திரும்பியிருந்தார் டாக்டர் கிருபாகரன்.

“வாசுகி ஐ ஃபீல் மச் டயர்டு டுடே!… ஐ வான்ட் டு டேக் எ லாங் ரெஸ்ட்!… ஸோ…  நான் மாடிக்கு போறேன்!… நீ வேணும்னா கிளம்பு” அவர் முகத்தில் களைப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

வாசுகி அவரிடம் பி.ஏ.வாக சேர்ந்து எட்டு வருஷம் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை ஒரு முறை கூட அவர் முகம் இவ்வளவு களைப்பாய் இருந்து அவள் பார்த்ததே இல்லை.  இன்று கண்டதில் ஆச்சரியப்பட்டாள்.  கூடவே அச்சமும் கொண்டாள்.

“ஓ.கே… டாக்டர் நீங்க ரெஸ்ட் எடுங்க!… நான் கிளம்பறேன்”

டாக்டர் மாடிப்படிகளில் ஏற, அவள் வெளியே சென்று தனது ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்தாள்.

மாடியிலிருந்த தனது பிரத்யேக படுக்கையறையில்.. தனது பிரத்தியேக மெத்தையில்… ஆயாசமாகப் படுத்து,  ஆழமாய் மூச்சை இழுத்து, நிதானமாக வெளியிட்டார்.  மனம் மற்றும்  உடலுக்கு இதமாக இருந்தது.  டென்ஷன்கள் கரைந்து போய் மூளை ஒரு நிலைப்பாட்டிற்கு  வந்தது. இனம் புரியாதவொரு நிம்மதி தெரிந்தது.

ஆனால் அந்த நிம்மதிக்கு அல்பாயுசு என்பது அவருக்கு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தான்.  தெரிந்தது.

 

நெஞ்சுக்குள் “சுரீர்”ரென்று ஆரம்பித்த அந்தச் சின்ன வலி,  மேலும் மேலும் வலுப் பெற்று அசுர வலியானது.

முதுகுப் பகுதியில் பாரம் ஏற்றியது போன்ற அழுத்தம் உண்டாக கை கால்கள் தளர்ந்தன.  ஏ.சி.யின் குளிரை தோற்கடித்து விட்டு, உடலெங்கும் வியர்வை ஆறாய்ப் பெருகி ஓட ஆரம்பித்தது.  

டாக்டர் கிருபாகரனின் நடுங்கும் கரம் கட்டிலுக்கு அருகில் இருந்த கப்போர்ட்டைத் சிரமப்பட்டு திறந்து அந்த மாத்திரை குப்பியை தேடி எடுத்தது. . விதிக்கு ஜெயம் ஊர்ஜிதம் ஆகிவிட்டதாலோ என்னவோ… அந்த மாத்திரை குப்பியும் அப்போது காலியாய் இருந்தது.

டாக்டரின் கலங்கிய கண்கள் தூரத்தில் இருந்த கண்ணாடி பீரோவை பரிதாபமாய் பார்த்தன.  உள்ளே மாத்திரைகள் நிரம்பிய மற்றொரு குப்பி அங்கிருந்தே இவரை பார்த்து ஏளனமாய்ச் சிரித்தது.  “என்னால் எழுந்து போய் அதை எடுத்து வர முடியுமா?… அதுவரை நான் தாங்குவேனா?” அவருக்கே சந்தேகம் வந்தது. ஆனாலும் முயற்சித்தார்.

நெஞ்சின் மையப் பகுதியில் இருந்து கிளம்பிய ஒரு பெரிய விக்கல் தொண்டையைத் தாண்டி, வாய் வழியை வெளியேறும் போது, கூடவே இரத்தத்தையும் சேர்த்து வாரிக் கொண்டு வந்தது.

தரையெங்கும் ரத்தச் சகதியாக, அதன் மேல் குப்புற  விழுந்து சில வினாடித் துடிப்பிற்குப் பின், அமைதியாய் இறந்து போனார் டாக்டர் கிருபாகரன்.

******

பேக்கரியிலிருந்து வெளியேறிய முத்துவையும், பாண்டியனையும் தூக்கி வந்த புத்தாவின் ஆட்கள் அவர்களிருவரையும் புத்தாவின் எதிரில் நிறுத்தினர்.

அவர்களை மேலிருந்து கீழ் வரை பார்த்த புத்தா, “தூத்தேறி… இந்த மொக்கை மூஞ்சிகளை நம்பியா டாக்டரை கடத்தற அவ்வளவு பெரிய வேலையைக் கொடுத்தீங்க?… ஏண்டா.. மொசப் புடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தாலே தெரியும்டா!.. இவனுங்களை பார்த்தாலே தெரியலையா?… இவனுக அதுக்கு ஆக மாட்டானுகன்னு?” புத்தா விழிகளைப் பெரிதாக்கி கொண்டு கத்த,

பலி கொடுக்க இழுத்து வரப்பட்ட ஆட்டுக் குட்டிகளாய் நின்று கொண்டிருந்தனர் பாண்டியனும் முத்துவும்.

“புத்தா அதான் சொன்னேனே?… “இவனுங்க ஏற்கனவே நமக்கு ஒண்ணு ரெண்டு காரியங்களை சக்சஸ்ஃபுல்லா முடிச்சு கொடுத்தாங்க!”ன்னு… அதனாலதான்…” புத்தாவின் வலது கரம் போன்றவன் சமாளிப்பாய்ப் பேச,

 “தூத்தேறி…. பதில் பேசாதே!.. மும்பை பாய் கிட்ட இந்த பதிலைச் சொன்னா… போன் வழியாகவே ஷூட் பண்ணிடுவான்!”

திடீரென்று வெளியே வாகனச் சத்தங்கள் கேட்க, சட்டென்று எல்லோரும் அமைதி காத்தனர்.




ஒலிபெருக்கியில் கமிஷனர் குரல் ஒலித்தது.  “புத்தா நீ இருக்கிற பில்டிங்கை எங்க போலீஸ் படை சுத்தி வளைச்சாச்சு!… தப்பிக்க எந்த முயற்சியும் பண்ணாம உடனே சரணடைந்து விடு… அதுதான் உனக்கு நல்லது”

அதைக் கேட்டதும், விழிகள் சிவப்பேறி… கன்னங்கள் துடிக்க, “தூத்தேறி…. நம்ம இடத்தை எப்படிக் கண்டுபிடிச்சாங்க இந்த போலீஸ் நாய்க?”

புத்தா தன் வலது கரத்தை பார்த்து கேட்க.   “ஐயோ எனக்கு தெரியாது புத்தா!..” பதறினான்.

புத்தாவின் பார்வை பாண்டியன் மற்றும் முத்துவின் மேல் பாய,  “சத்தியமா எங்களுக்கு தெரியாதுங்க!… நாங்க காட்டிக் கொடுக்கலைங்க” என்று ஒரே குரலில் அவர்கள் சொல்லி முடிக்கும் முன், புத்தாவின்  பிஸ்டல் அவர்கள் நெற்றியில் புல்லட் பொட்டு வைக்க,  “அம்மா”வைக் கூப்பிட்டுக் கொண்டே அமரர் ஆனார்கள் பாண்டியனும், முத்துவும்.

கட்டிடத்தின்  உள்ளே துப்பாக்கி சத்தம் கேட்டதும்,  வெளியே இருந்த போலீஸ் படை உஷாரானது.

சூழ்நிலையின் இறுக்கத்தைப் புரிந்து கொண்ட புத்தா, ஜன்னலருகே வெளியே எட்டிப் பார்த்தான்.  நூற்றுக்கும் மேலான போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் நின்றிருக்க,

மேவாயைச் சொறிந்தபடி யோசித்தான்.

யோசனையின் முடிவில், “மை பாய்ஸ்… நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கங்க!… இப்பயிருக்கற சூழ்நிலைல… நாம தப்பிக்க முயற்சி பண்ணினா… நிச்சயம் நம்ம எல்லோருடைய உயிரும் பறி போயிடும்!… அப்படியே நாம தப்பிச்சு வெளியே போயிட்டாலும்…. மும்பை பாய்… நாம எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுப் போட்டுடுவான்!… பேசாம போலீஸ்ல சரண்டர் ஆயிட்டா… சில வருஷங்களை ஜெயிலில் கழிக்க வேண்டி வரும்!… அப்புறம் வெளிய வந்திடலாம்!… அதனால எல்லோரும் உங்க கைல இருக்கற துப்பாக்கிகளைக் கீழே போட்டுட்டு என் பின்னாடி வாங்க” என்று சொல்லி விட்டு கதவருகே சென்றான்.

பத்து நிமிடம் மயான அமைதிக்கு பின் அந்தக் கதவு திறக்கப்பட, போலீஸார் அலர்ட் ஆயினர். ஆனால், அவர்களை குழப்பும் விதமாய் திறந்த கதவின் வழியே புத்தாவும் அவனது ஆட்களும் இரு கைகளையும் மேலே தூக்கியபடி வெளியே வந்தனர். 

****

டாக்டர் கிருபாகரனின் வீடு.

டாக்டருக்காக காபியை தயாராக வைத்துக் கொண்டு, அவரது மொபைல் அழைப்பிற்காக கீழ் ஹாலில் காத்திருந்தான் வேலைக்காரன்.  “என்னது?… எப்பவும் காலைல ஆறரை மணிக்கு என்னை மொபைல்ல கூப்பிட்டு காபி கொண்டா”ன்னு சொல்லுவார்!… இன்னிக்கு ஏழேகால் ஆகியும் கூப்பிடலையே… ஏன்?”

நேரம் ஓடிக் கொண்டேயிருக்க, காபியும் ஆறிக் கொண்டேயிருக்க, “பேசாம நாமே மேலே போய் காபியைக் குடுக்கலாமா?… ஐயோ வேண்டாம் சாமி!.. இதுக்கு முன்னாடி ஒரு தடவை அவர் கூப்பிடாம நானா போய் எக்கச்சக்கமா வாங்கிக் கட்டிக்கிட்டேன்!… அதனால கீழேயே வெய்ட் பண்ணுவோம்”

மெல்லத் தலையைத் தூக்கி மேலே மாடியறையைப் பார்த்தான் வேலைக்காரன்.   “என்னது மாடி ரூம்ல லைட் கூட எரியலை!… ஒருவேளை நல்லா தூங்குறாரோ?” செய்வதறியாது தவிப்பாய் நின்று கொண்டிருந்த வேலைக்காரனுக்குக் கை கொடுப்பது போல் வாசிகி வந்தாள்.




அவள் வந்ததும் வராததுமாய் வேலைக்காரன் ஓடிப் போய் படபடப்பாய் சொன்னான்.

 “அப்படியா?… டாக்டர் இன்னும் எந்திரிக்கலையா?” யோசித்தாள். வாட்ச்சைப் பார்த்தாள் மணி எட்டு நாற்பத்திஐந்து!.. அவளுக்குள் கலவரம் தோன்ற ஆரம்பித்தது.

திடீரென்று ஏதோ முடிவு செய்தவளாய் “மள…மள”வென்று மாடிப்படிகளில் ஏறி டாக்டரின் அறையை நெருங்கி ஜன்னலை நன்றாகத் திறந்து உள்ளே பார்த்தாள்.  டாக்டர் தரையில் குப்புறக் கிடப்பதையும், அவரைச் சுற்றி ரத்தம் குளம் கட்டியிருப்பதையும் அரைகுறை வெளிச்சத்தில் பார்த்து விட்டு அலறினாள்.

 அவளது அலறல் கேட்டு கீழேயிருந்த வேலைக்காரன் பாய்ந்து மேலே சென்று அவனும் எட்டிப் பார்த்தான்.

பார்த்த மாத்திரத்தில் அப்படியே உறைந்து போய் நின்றான்.

அவனை உசுப்பி சுயநினைவுக்கு வரச் செய்த வாசுகி, தன் மொபைலைக் கையிலெடுத்து வரிசையாய் கால் செய்தாள்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் அந்த இடத்தை பரபரப்பு ஆக்கிரமித்தது.  ஹாஸ்பிடலிலிருந்து நாலைந்து டாக்டர்களும், சில நர்ஸுகளும் விரைந்து வந்தனர்.  அவர்களுக்குப் பின்னாலேயே போலீஸ் கமிஷனரும்,  வேறு சில காவல் அதிகாரிகளும் வந்து சேர, அந்த அறையின் கதவு உடைக்கப்பட்டது.


கிருபாகரனின் உடல் ரத்தச் சகதியிலிருந்து மீட்கப்பட்டு ஸ்ட்ரக்சரில் வெளியே கொண்டு வரப்பட்டு ஹாலில் கிடத்தப்பட்டது. 

டாக்டர்கள் உடனடியாக அவராஇச் சோதித்து விட்டு, “அவர் இறந்து விட்டார்” என்று உறுதியளித்த பின் போஸ்ட்மார்ட்டத்திற்காக அவரது மருத்துவமனை வேனிலேயே அவர் உடல் அனுப்பப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் டாக்டரின் அறையை சல்லடை போட ஆரம்பித்தனர்.

“மிஸ்டர் வர்மா… எனக்கென்னமோ டாக்டரோட சாவு இயற்கை மரணம்ன்னுதான் தோணுது” கமிஷனர் சொல்ல.,

“யெஸ் சார்… யூ ஆர் கரெக்ட்!… எனக்கும் அப்படித்தான் படுது” என்றார் வர்மா.

“எனிவே வீ வில் டு அவர் டூட்டி!.. எதுக்கும் வீட்டை நல்லா தரோவா செக் பண்ணிட்டு… விசாரிக்க வேண்டியவர்களையும் விசாரிச்சு வைப்போம்!” என்றார் கமிஷனர்.

கீழ் ஹாலில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மாடிப்படியில் இறங்கி வரும் கமிஷனரையும் வர்மாவையும் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

“சார் டாக்டர் கொலை செய்யப்பட்டிருக்கிறாரா?… இல்லை இது தற்கொலையா சார்?”

“இதன் பின்னணியில் அரசியல் இருக்கா சார்?”

“காவல்துறைக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா சார்?”

கமிஷனர் டென்ஷனானார்.

“இங்க பாருங்க!.. டாக்டரோட பாடி இப்பதான் போஸ்ட்மார்ட்டத்திற்கு போயிருக்கு!… பி.எம். ரிப்போர்ட் வந்த பிறகுதான் எங்களால எதுவும் சொல்ல முடியும்!.. ப்ளீஸ்… எங்களை தொந்தரவு செய்யாதீங்க” கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வந்த கமிஷனரும் வர்மாவும் ஜீப்பில் ஏறி, ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தனர்.




What’s your Reaction?
+1
3
+1
6
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!