Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-12

12

 


கமிஷனரைச் சந்திக்கச் சென்ற டாக்டரின் பி.ஏ.வாசுகி அரைமணி நேரக் காத்திருப்பிற்கு பின்னரே அனுமதிக்கப்பட்டார். கமிஷனர் அறைக்குள் அவள் நுழையும் போது யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்த கமிஷனர் கை ஜாடையில் அவளை அமரச் சொல்ல, அமர்ந்தாள்.

போனை வைத்தவர்,  “ம்ம்ம்… சொல்லுங்கம்மா” என்றார்.


“நான் என்ன சார் சொல்றது?… நீங்கதான் சொல்லணும்!… டாக்டர் கடத்தப்பட்டு முப்பத்தியாறு மணி நேரத்துக்கும் மேலாச்சு!… இதுவரைக்கும் அவர் எந்த திசையில் இருக்கிறார்ன்னு கூட உங்களால் டிரேஸ் பண்ண முடியல!… ஐ யாம் வெரி மச் ரிக்ரெட் டு சே திஸ்… உங்க டிபார்ட்மெண்ட்டுக்கு இன்னும் கொஞ்சம் வேகம் வேணும் சார்!… இப்ப இருக்கற வேகம் பத்தலை சார்” சற்றுக் கோபமாகவே பேசினாள் வாசுகி.

“நோ!… டோன்ட் ஸே லைக் தட்!.. வீ நோ அவர் லிமிட்!.. எங்க சைடுல நாங்க என்னென்ன ஸ்டெப்ஸ் எடுக்கணுமோ அதை எடுத்துட்டுத்தான் இருக்கோம்!… நாங்க  என்னென்ன செஞ்சிட்டிருக்கோம்!ன்னு கம்ப்ளீட்டா வெளியே சொல்ல மாட்டோம்!… சொல்லவும் கூடாது!… அதை உங்க ஞாபகத்துல வெச்சிட்டுப் பேசுங்க மேடம்!…”

 “சார்… டோண்ட் மிஸ்டேக் மி!… இதுவரைக்கும் பத்திரிகைகாரங்களுக்கு நியூஸ் தெரியாது!… சப்போஸ் லீக் ஆயிட்டா… டாக்டர் கடத்தல் விவகாரத்தை ஆளாளுக்குக் கிழிக்க ஆரம்பிச்சிடுவாங்க!… அப்புறம் அரசு தூதர்… கடத்தல்காரர்கள் கோரிக்கைகள்ன்னு பிரச்சினை நீண்டிடுமோ?ன்னு பயமா இருக்கு சார்” என்றாள் வாசுகி.

“அனாவசியமா கண்டதையெல்லாம் கற்பனை பண்ணாதீங்க மேடம்!… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டாக்டரை மீட்டுடலாம்!… போதுமா?” கமிஷனர் கடுப்பாகச் சொல்ல,

“ஓ.கே. சார்!… தேங்க் யூ சார்” சொல்லி விட்டுக் கிளம்பினாள் வாசுகி.

                                                                            ****


பாலக்காட்டை அடைந்த  “தினப்புயல்” எடிட்டரின் பியட் கார், டிரான்ஸ்போர்ட் பஸ் நிலையம் செல்லும் சாலையின் முகப்பில் சற்று ஸ்லோவாகி, இடது புறமாய் ஒதுங்கி நின்றது.

ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த டிராபிக் கான்ஸ்டபிளை, எடிட்டர் தனக்கு தெரிந்த அரைகுறை மலையாளத்தில் விளிக்க, அவர்களை நெருங்கி வந்த டிராபிக் கான்ஸ்டபிள், “எந்தா?” கேட்டார்.

 “சாரே… நேற்றைக்கு ராவுல பந்தரெண்டு சமயம் போல் ஈ ரோட்டில் ஒந்து ரெட் கிராஸ் வேன் கிராஸ் செஞ்சோ?… அது நிங்கள் கண்டோ?”

எடிட்டரின் மலையாளத்தில் வியந்த விஜயசந்திரன் வாசுவை பார்த்துக் கண்ணடிக்க, வாசு மெலிதாய்ப் புன்னகைத்தான்.




“ஹோ… நான் இன்ன கால தன்னே டூட்டிக்கு வன்நூ… இவிட நைட் டூட்டி… நம்மள்ண்ட மாதவனல்லோ?”


“நங்கள் ஆ மாதவனைக் கண்டு கொறைச்சு சோதிக்கணும்!.. இப்ப ஆயாள் எவிட இருக்குன்னூ?”

“இப்போழ் சமயம் எந்தா?” என்றபடி தன் வாட்சைப் பார்த்த டிராபிக் கான்ஸ்டபிள். “நிங்கள் ஈ ரோட்டில் நேராய்ட்டு போனால் அவிட டிராபிக் கண்ட்ரோல் ரூமுண்டு… ஆயாள் அவிட உண்டு”

“தேங்க்ஸ்” சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி, டிராபிக் கண்ட்ரோல் ரூமிற்கு வந்தவர்களுக்கு அந்த மாதவனைக் கண்டுபிடிப்பதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை.


“சாரே… ஒந்து ஸ்மால் என்கொயரி…” பவ்யமாக ஆரம்பித்தார் எடிட்டர்.

“நீங்க யாரு?… எங்கிருந்து வர்றீங்க?… அதைச் சொல்லுங்க முதல்ல” சுத்தத் தமிழில் பேசினார் மாதவன்.

“அப்பாடா” வென்றிருந்தது எடிட்டருக்கு.


“சார் தமிழனா?”  எடிட்டர் சிரிப்புடன் கேட்க,

“இல்லை இந்தியன்” என்று பதில் வந்தது அந்த மாதவனிடமிருந்து.

நொந்து போன எடிட்டர் விசாரணையைத் துவக்கினார்.  “சார்… நான் “தினப்புயல்” பத்திரிக்கையின் எடிட்டர்!… நேத்திக்கு நைட் ஒரு பனிரெண்டு மணி வாக்கில்…. ரெட் கிராஸ் சொஸைட்டி பேர் மற்றும் சிம்பலோடு ஒரு வெள்ளை  நிற வேன்… பாலக்காடு வரை வந்ததற்கு ஆதாரம் இருக்கு!… பட்… அதற்கு மேலே எந்த திசையில் போச்சுன்னு தெரியலை!… நைட் டைம் அதனால டிராபிக் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்திருக்கும்!… ஸோ… உங்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பிருக்கு!… அதான் உங்ககிட்ட விசாரிக்கலாம்… ன்னு”

“ஏன் சார்?… அந்த வேன்ல என்ன?” மாதவன் கேட்க,

 “வந்து… அதுல ஒருத்தர் கடத்தப்பட்டிருக்கார் சார்!… அவர் ஒரு வி.ஐ.பி. இப்போதைக்கு இது போதும்!… இதுக்கு மேல கேட்காதீங்க ப்ளீஸ்” என்றார் எடிட்டர்.

அவர்கள் மூவரையும் மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு,  “எனக்கு தெரிந்து எந்த ரெட் கிராஸ் வேனும் இந்த ரோட்ல போகலை!… ஒரு வேளை நான் டீ சாப்பிடப் போயிருக்கும் போது கடந்து போய் இருக்கலாம்!… எனிவே மறுபடி அந்த மாதிரி வேன் ஏதாவது என் கண்ணுல பட்டால் நிறுத்தி விசாரிக்கிறேன்!…. நீங்க வேணா உங்க மொபைல் நம்பரை கொடுத்துட்டுப் போங்க!… அவசியம் நான் காண்டாக்ட் பண்றேன்” என்றார் மாதவன்..

அவரிடம் தினப்புயல் பத்திரிகை ஆபீஸின் நம்பரைக் கொடுத்து விட்டு நகர்ந்தனர்.

“எடிட்டர் சார்… எங்கேயாவது நிறுத்தி…. ஒரு டீ சாப்பிட்டு விட்டுப் போவேமே” வாசு கேட்டான்.

“ஓ.கே… அடுத்து வர்ற டீக்கடைல நிறுத்திடுவோம்”

“அன்பு தேநீர் விடுதி” போர்டுக்கு கீழே தனது ஃபியட்டை நிறுத்தினார் எடிட்டர்.

 உள்ளே நுழைந்து, “மூணு ஸ்ட்ராங் டீ” ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தனர்.

விஜயசந்திரன் வாட்சைப் பார்த்தான் மணி 2:15. டீக்கடை தொலைக்காட்சியில்  செய்திகள் ஓடிக் கொண்டிருக்க, யாருமே அதைக் கண்டு கொள்ளவேயில்லை.


“பாலக்காட்டிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் அனகொண்டா சைஸ் பாம்பொன்று சாலையைக் கடந்து சென்றது.  அதன் காரணமாய் அந்தச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது” 




செய்தி வாசிப்பாளினி தன் காது தொங்கட்டானை ஆட்டிக் கொண்டே அந்தச் செய்திய வாசித்தாள்.  கடையிலிருந்த அனைவரும் அனிச்சையாக தலையைத் திருப்பி அந்தச் செய்தியைப் பார்த்தனர்.

நிதானமாய் நெளிந்தபடி நடு ரோட்டில் படுத்து கிடந்த அந்த ராட்சத சைஸ் பாம்பையும், வரிசையாக நின்று விட்டிருந்த வாகனங்களையும் வீடியோ தெளிவாக படமெடுத்து காட்டியது.

ஒரு முறை போதாதென்று மீண்டும் மீண்டும் அந்த போக்குவரத்து நெரிசல் காட்சியையே காமிராக்காரன் காட்டிக் கொண்டிருந்தான்.

அப்போது, “யுரேகா… யுரேகா.” என்று கத்தியபடி எழுந்து அந்த காட்சிகளைத் தன் மொபைலில் படப் பிடித்தான் விஜயசந்திரன்.

எடிட்டர், வாசு உட்பட டீக்கடையில் இருந்த அனைவரும் அவனைத் திரும்பி பார்க்க வெட்கமாகச் சிரித்து விட்டு, “வாசு சார்…. இப்ப டிவில காண்பிச்ச காட்சிகளை தெளிவாய்ப் பார்த்தீங்களா?…” விஜயசந்திரன் கேட்க,

“ம்… பார்த்தேன்” என்றான் வாசு.

“அந்த டிராபுக் நெரிசல்ல… முதல் லைன்ல ஒரு வெள்ளை நிற வேன் நின்னுட்டிருந்ததே அதைக் கவனிச்சீங்களா?… அந்த வேன்தான் டாக்டரைக் கடத்திட்டுப் போகும் வேன்!… அது திருச்சூர் ரோட்லதான் போயிருக்கு… கன்ஃபர்ம்டு” என்றான் விஜயசந்திரன்.

“எதை வெச்சு அந்த வேன்தான்னு சொல்றே?… அதுல ரெட் கிராஸ் சொஸைட்டின்னு பேரெல்லாம் எதுவும் இல்லையே!…” எடிட்டர் கேட்டார்.

“ஒத்துக்கறேன் சார்!… நான் வாளையார்ல அந்த வேனைப் பார்த்தப்ப… அதோட நான்கு பக்கமும் ரெட் கிராஸ் சொஸைட்டி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது!… அதை விட முக்கியமா… முன்புறக் கண்ணாடில பாபா முத்திரை காட்டுற ரஜினி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது… அதுக்குக் கீழே “பாபா”ன்னு எழுதறதுக்கு பதிலா “டாடா”ன்னு எழுதியிருந்தது!…  ஆக்சுவலா…. யாரோ விடலைப் பசங்க அதிலிருந்த அந்த “ப”ங்கற எழுத்தை “ட”ன்னு படிக்கற மாதிரி சொறிஞ்சு வெச்சிருக்காங்க!… அவசரமா படிச்சா “டாடா”ன்னுதான் தெரியும்… அப்ப நான் டாக்டர் கிட்டே ஆட்டோகிராப் வாங்கற அவசரத்தில் இருந்ததினால… அதுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கலை!… ஆனா அதுதான் இப்ப நமக்கு க்ளூவா மாறி உதவி செய்யப் போகுது” என்ற விஜயசந்திரன் சற்று முன் தான் எடுத்த அந்த தொலைக்காட்சிப் படாங்களைக் காட்டினான்.

போக்குவரத்து நெரிசலில், நின்றிருந்த ஒரு வெள்ளை நிற வேனில் “டாடா” என்று முத்திரை காட்டிக் கொண்டிருந்தார் ரஜினி.

“பட…பட”வென்று கை தட்டினார் எடிட்டர்.  “வாசு… இந்தப் பையனை பேசாம சி.பி.ஐ.லே சேர்த்து விட்டுடலாம்ப்பா”

“ஸோ… நாம இப்ப திருச்சூர் போறோம்…” என்றான் வாசு.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஃபியட் கார் திருச்சூர் நோக்கிப் பயணித்தது.




What’s your Reaction?
+1
6
+1
6
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!