Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-14

14


“தினப்புயல்” எடிட்டரின் ஃபியட் ஜோல்னாப் பை வாசுவையும், விஜயசந்திரனையும் சுமந்து கொண்டு திருச்சூர் ரோட்டில் நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

“எடிட்டர் சார்… அந்த வேன் திருச்சூர் ரோட்டில் போயிருக்குன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு!… ஆனா அது… திருச்சூர் வரைக்கும் போச்சா இல்ல?… பாதி வழியிலேயே ஏதாவது கட் ரோட்டுல திரும்பிடுச்சான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?”  வாசு சந்தேகத்தை கிளப்ப,

“எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கு!… அதனாலென்ன… திருச்சூருக்கே போவோம்!… போற வழியிலேயே கூட ஏதாச்சும் க்ளூ கிடைக்கும்!… இல்லைன்னா அங்க திருச்சூர் போனதுக்கப்புறம் ஏதாவது க்ளூ கிடைக்கும்!… நம்புவோம்… நம்பிக்கைதானே வாழ்க்கை?”  என்றுமே பாசிடிவ் திங்கிங் தான் எடிட்டருக்கு.


அவருடைய பாசிடிவ் நினைப்புக்கு என்றுமே பலன் உண்டு. இப்போதும் பலன் கிடைத்தது. 

சாலையோரத்தில் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற வேன்.

நடு ரோட்டில் நின்று கொண்டு போகிற வருகிற வாகனங்களையெல்லாம் கைகாட்டி நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தனர்  இருவர்.  அதில் ஒருவன் பாண்டியன், இன்னொருவன் முத்து.

எந்த வண்டிக்காரனுமே அவர்களை சட்டை செய்யவில்லை.

காரை டிரைவ் செய்து கொண்டிருந்த எடிட்டர் உற்சாகத்தில் விசில் அடித்தவாறே காரை ரோட்டின் இடப்புறம் நிறுத்தினார்.

“என்ன சார்… யூரின் போகணுமா?” வாசு கேட்க,

“அக்கட சூடு க்ண்ணா” என்று ரஜினி ஸ்டைலில் அவர் சொல்ல,

 வாசுவும், விஜயசந்திரனும் குனிந்து முன்புறக் கண்ணாடி வழியே பார்த்தனர்.  “சார் இதே வேன்தான் சார்… இதே ஆளுங்க தான் சார்” கத்தினான் விஜய்.

வெளியே செல்ல கதவைத் திறக்கப் போன விஜயசந்திரனைத் தடுத்தார் எடிட்டர்.

“இதப் பாருப்பா விஜய்!… அவனுக உன்னை ஏற்கனவே வாளையார்ல பார்த்திருக்கானுக!…  மறுபடியும் உன்னைப் பார்த்தால் ஒருவேளை அடையாளம் தெரிந்து உஷார் ஆயிடுவானுங்க!… அதனால… நீ உடனே உன்னோட தோற்றத்தை மாற்று” என்றார் எடிட்டர்.

 “எப்படி சார்?…எப்படி திடீர்னு தோற்றத்தை மாற்ற முடியும்?” விழித்தான் விஜயசந்திரன்.

காரின் டாஸ் போர்டை திறந்து ஒரு சின்ன  பேக்கை எடுத்து அவனிடம் கொடுத்து,  “இதைப் போட்டுக்க” என்றார்.

உள்ளே ஒரு தொப்பியும், ஒரு கூலிங் கிளாஸும், ஒரு ஒட்டு தாடியும் இருந்தது.

“எடிட்டர் சார் நீங்க எவரெடி பேட்டரி சார்!… எப்பவுமே தயாராக இருக்கிறீர்கள்” சொல்லிக் கொண்டே அவற்றை அணிய ஆரம்பித்தான் விஜயசந்திரன்.

 மூன்றாவது நிமிடத்தில் விஜயசந்திரன் உருமாறிட, ஃபியட் கார் மெல்ல ஊர்ந்து, அந்த வேன் அருகில் சென்று நின்றது!”




“என்ன சார் பிராப்ளம்?” எடிட்டர் கேட்டார்.

“ஃப்ரெண்ட் வீல் பஞ்சர்” பாண்டி சொன்னான்.

“ஸ்டெப்னி இல்லையா?”

“இருந்தது காலையில் எடுத்து வெளியே வச்சேன்… திரும்பவும் எடுத்து உள்ளே வைக்க மறந்துட்டேன்!… கரெக்டா இப்பப் பார்த்து பஞ்சர் ஆயிடுச்சு!” என்றான் முத்து.

“அடடே… என்ன பண்றது?… எங்க வண்டியோட ஸ்டெப்னி இதுக்கு சூட் ஆகாதே!” என்று எடிட்டர் சொல்ல,

“சார்… ஒரு சின்ன ஹெல்ப் மட்டும் பண்ணுங்க சார் போதும்!… இங்கிருந்து நாலஞ்சு கிலோமீட்டர் தான் எங்க இடம்!… கொஞ்சம் லிப்ட் கொடுத்தீங்கன்னா அங்கே போய் அந்த ஸ்டெப்னியையே எடுத்திட்டு உடனே திரும்பி இங்கேயே வந்துடலாம்”. பாண்டியன் சொன்னான்

யோசித்தபடியே எடிட்டர் வாசுவை பார்க்க,  “ஓகே… சார்!… உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் இங்கேயே இருங்க!… ஒருத்தர் மட்டும் வாங்க!”  என்றான் வாசு.

 “அப்ப முத்து… நீ போய் எடுத்திட்டு வா… நான் இங்கியே இருக்கேன்” என்றான் பாண்டியன்.

 முத்து காரில் ஏறிக் கொள்ள, ஃபியட் பறந்தது.

 காருக்குள் இருந்த விஜயசந்திரனை முத்து ஒரு மாதிரியாகப் பார்க்க அவன் முகத்தை திருப்பி, பார்வையை ஜன்னலுக்கு வெளியே செலுத்தினான்.

கார் பத்தே நிமிடத்தில் டாக்டர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பழங்கால வீட்டை அடைந்தது.  அவசரமாக இறங்கிய முத்து ஸ்டெப்னி வைத்த இடத்தை பார்க்க அங்கு அது இல்லை. 

“அடப்பாவி!…. இந்த தோட்டக்காரன் அதை எடுத்து எங்கோ வெச்சிட்டான் போலிருக்கே!” சொல்லி விட்டு அங்குமிங்கும் தேடினான்.

இதுதான் சமயம் என்று நைசாக அங்கிருந்து நழுவிய வாசு, வீட்டின் பின்புறம் சென்று ஒவ்வொரு ஜன்னலையும் திறக்க முயன்றான். எதையுமே திறக்க முடியவில்லை.

மேலிருந்து கீழிறங்கும் தண்ணீர் பைப்பில் ஏறி வென்டிலேட்டர் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான்.

உள்ளே டாக்டர் படுத்திருந்தார். “ஓ…. இவர்தான் டாக்டர் கிருபாகரனா?… கேள்விப்பட்டிருக்கேன்… பட் இதுவரை பார்த்ததில்லை!” ஏறியது போலவே மெல்ல இறங்கி, நைசாக திரும்பி வந்த வாசு எடிட்டரின் காதில் ரகசியமாய் ஓதினான்.  “சார்… இங்கதான் உள்ளார டாக்டரை அடைச்சு வெச்சிருக்கானுக!

“ஓ.கே. இவனை இங்கியே ஒரே அமுக்கா அமுக்கிட்டு, முதல்ல கேரள போலீசுக்குத் தகவல் சொல்லுவோம்! அப்படியே… அங்க ரோட்ல நிக்கிற வேனையும்… கூட நிற்கும் அவனையும் மடக்கச் சொல்லிடலாம்!” சொல்லியவாறே திரும்பிய எடிட்டர் அங்கே முத்து இல்லாமலிருக்க,  “என்னப்பா…  இங்கிருந்தன் எங்கே ஆளையே காணோம்?… நாம பேசறைத் ஒட்டுக் கேட்டுட்டு.. எஸ்கேப் ஆயிட்டானா?” நாலாப்புறமும் தேடினார்கள்.

சற்றுத் தள்ளி எங்கிருந்தோ ஸ்டெப்னி வீலை உருட்டியபடி வந்து கொண்டிருந்தான் அந்த முத்து.  அவர்கள் அருகில் வந்தவுடன்,  “இந்தத் தோட்டக்காரன் சரியான திருட்டுப் பயலா இருப்பான் போலிருக்கு!.. இங்கிருந்த ஸ்டெப்னி வீலை எடுத்துட்டு போய் அவனோட செட்டுக்குள்ளாற ஒளிச்சு வெச்சிருக்கான்!…”

“ஆமாம் அந்தத் தோட்டக்காரன் எங்கே இப்ப?” எடிட்டர் கேட்க,

”அந்த நாயைக் காணோம் எங்கே போய் தொலைஞ்சதோ தெரியலை!”

“அப்படியா ரொம்ப சந்தோஷம்!… அதுதான் எங்களுக்கும் வேணும்!” என்று எடிட்டர் சொல்ல,

னிமிர்ந்து அடிட்டரின் முகத்தைப் பார்த்து, “நீங்க என்ன சொல்றீங்க?” குழப்பமாய் கேட்டான் முத்து.

“புரியலை?… புரியாது… இப்பப் புரியாது!  புரியவும் கூடாது!”

முத்து முகம் மாறினான்.

“என்னய்யா… பேச்செல்லாம் ஒரு மாதிரியிருக்கு?… யாருய்யா நீங்க?” கேட்டவாறே அவன் எடிட்டரை நெருங்கினான்.

ஆனால், அடுத்த நிமிடமே பின் மண்டையில் கட்டை அடிபட்டு மயக்கமானான்.

அடித்தவன் வாசு.

“வெரி குட் வாசு” என்றார் எடிட்டர்.

சட்டென மூவரும் சுறுசுறுப்பாகி, அங்கிருந்து நகர்ந்து டாக்டர் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடோனிற்கு வந்து கதவின் பெரிய பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

உள்ளேயிருந்த டாக்டர் அவர்கள் மூவரையும் மாறி மாறிப் பார்க்க,

“பயப்படாதீங்க டாக்டர் உங்களைக் காப்பாற்றத்தான் வந்திருக்கோம்” சொல்லிக் கொண்டே தன் தொப்பியையும், கூலிங் கிளாஸையும், தாடியையும் கழற்றி தன் உண்மை உருவத்தைக் காட்டினான் விஜயசந்திரன்.

 “நீ…நீ… அங்கே… வாளையாறுல என்கிட்ட ஆட்டோகிராப் வாங்கினவன்தானே?” 

 “ஆமாம் டாக்டர்…. அதில் நீங்கள் எழுதியிருந்ததைப் பார்த்து விட்டுத்தான் உங்களைக் காப்பாற்ற இவர்களோடு கிளம்பி வந்தேன்!… இவர் “தினப்புயல்” பத்திரிக்கை எடிட்டர்!… இவர் அதே பத்திரிக்கையில் ரிப்போர்ட்டர்” என்றன் விஜயசந்திரன்.

இடையில் புகுந்த எடிட்டர், “இப்போதைக்கு இந்த டீடெய்ல்ஸ் போதும்!… நாம உடனே இங்கிருந்து கிளம்பியாகணும்!” என்று சொல்ல,

எல்லோரும் வெளியே வந்தனர்.

அப்போது சிரித்தபடியே அவர்கள் எதிரில் வந்து நின்றான் மொட்டையன்… கையில் ஒரு நீளமான கத்தி.  “என்னப்பா மூணு பேரா வந்து டாக்டரைக் காப்பாத்தியிருக்கீங்க போலிருக்கே?….. இதுல யாரை நான் ஹீரோன்னு எடுத்துக்கறது?… உன்னையா?… உன்னையா?… உன்னையா?” என்று மூவரையும் பார்த்து நக்கலாய்க் கேட்ட மொட்டை, விஜயசந்திரன் கையிலிருந்த தொப்பி, கூலிங் கிளாஸ், ஒட்டுத்தாடி எல்லாத்தையும் பார்த்து விட்டு, “அடேய் சின்னப் பையா… நான்தான் மொட்டை… நான்தான் தொப்பி போடணும்… உனக்கெதுக்கு அது?… அதனால வம்பு பண்ணாம அதை என்கிட்டே குடுத்துடு” என்று சொல்ல,

அவற்றைத் தூக்கி எறிந்தான் விஜயசந்திரன்.

மெல்லக் குனிந்து, அவற்றை எடுத்துக் கொண்ட மொட்டையன் வாழ்க்கையில் தான் செய்யும் முதல் தவறாய் அவற்றை தான் மாட்டிக் கொண்டான்.

அவன் முதுகிற்குப் பின்னால் கட்டையடி வாங்கி மயக்கத்தில் கிடந்த முத்து மெல்லக் கண் விழித்தான்.  சற்று முன் விஜயசந்திரனை தொப்பி… தாடி.. சகிதமாய்ப் பார்த்திருந்த காரணத்தால் அவன்தான் திரும்பி நின்று கொண்டிருக்கிறான் என்றெண்ணிக் கொண்டு, தன் பக்கத்தில் அதே கட்டையை எடுத்து அந்த தொப்பி மண்டையில் “நச்”சென்று ஓங்கி அடித்தான்.




மண்டை மேல் இடியையும், மின்னலையும் ஒரு சேரக் கண்டு, மயங்கி விழுந்தான் மொட்டை.

அங்கு என்ன நடக்கிறது, என்பதை யூகித்து… சுதாரிப்பதற்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாக முத்துவை மூவரும் ஒன்று சேர்ந்து தாக்கினர்.  ஏற்கனவே மண்டையில் வாங்கிய கட்டையடியின் வலி தீராத நிலையில் அவர்களைச் சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்தான் அவன்.

ஓடிச் சென்று அங்கே கிடந்த கயிற்றை எடுத்து வந்து அவனது கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டான் வாசு.

அதுவரையில் அமைதியாய் இருந்த டாக்டருக்கு அந்த மூவர் மீதும் லேசான நம்பிக்கை வந்து விட, “ஹலோ மிஸ்டர் எடிட்டர்… இவங்க சாதாரண ஆளுங்க அல்ல… பெரிய நெட்வொர்க்!… அதனால நீங்க இம்மீடியட்டா… போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவோம்… இல்லேன்னா உங்களுக்குத்தான் அதிக பிரச்சினை வரும்!…“நீங்க என்னைக் காப்பாத்த வந்தவர்களாய் நினைக்காமல் நீங்கதான் என்னைக் கடத்திக் கொண்டு வந்தவர்கள்!”ன்னு உங்க மேலே சந்தேகப்படுவாங்க”

 “அப்ப… முதலில் பக்கத்தில் இருக்கற கேரள போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் டாக்டரை அவங்க கைல ஒப்படைச்சிட்டு… அப்படியே அங்கே ரோட்டில் இருக்கும் வெள்ளை நிற வேனையும் அந்த ஆளையும் மடக்கச் சொல்லுவோம்!… என்ன டாக்டர்… நான் சொல்றது சரிதானே?” எடிட்டர் டாக்டரிடம் கேட்க,”

 “இது கேரளாவா?” டாக்டர் திருப்பிக் கேட்டார்.


“ஆமாம் டாக்டர் … இது திருச்சூர் ரோடு” என்றார் எடிட்டர்.

 “ஓ.கே… நேரா திருச்சூர் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போங்க!… எதுக்குச் சொல்றேன்னா… இன்னேரம் அவங்களுக்கு நான் கடத்தப்பட்ட விஷயம் சொல்லப்பட்டிருக்கும்… அவங்களும் என்னைத் தேடிக்கிட்டிருப்பாங்க!”

டாக்டர் சொன்னது போலவே, திருச்சூர் கமிஷனரைச் சந்தித்து அவர் வசம் டாக்டரை ஒப்படைத்தனர்.

டாக்டர் கிருபாகரனும் அவர்கள் மூவரும்தான் தன்னைக் காப்பாற்றியதோடல்லாமல்… கடத்திய அந்த இரண்டு குற்றவாளிகளையும் பிடித்துக் கொடுத்துள்ளனர் என்று வாக்குமூலம் கொடுக்க, அவர்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பிச் செல்ல அனுமதித்தனர்.




What’s your Reaction?
+1
7
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!