Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-17 (நிறைவு)

17

“அதிக பட்ச டென்ஷனால் மூளைப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் வெடித்து, மரணம் சம்பவித்துள்ளது” என்று கூறி டாக்டரின் மரணத்தை இயற்கை மரணம் என சான்று அளித்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், கூடவே இன்னொரு அதிர்ச்சியான செய்தியையும் சொன்னது.




அந்த செய்தி ஒட்டு மொத்த இந்தியாவையுமே ஸ்தம்பிக்க வைத்தது.

ஆம்!.. மருத்துவத்துறையில் தன்னிகரில்லா சேவை புரிந்து, அச்சம் என்பது சிறிதும் இல்லாமல் பல போர்முனைகளுக்குச் சென்று காயம் பட்ட ராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி புரிந்து, அந்தச் சேவைக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பவ சேவா விருதுகளைப் பெற்று, உலகமெங்கும் புகழ் பரப்பிய டாக்டர் கிருபாகரன் என்பவர் ஒரு ஆணல்ல… பெண்.

ஆண் என்ற போர்வையில் மறைந்து வாழ்ந்த ஒரு பெண்.

திணறிப் போன அரசாங்கமும், காவல்துறையும் அவரது பழைய சரித்திரத்தை கிளறிக் கொண்டு பின்னோக்கிப் போயினர். பத்திரிகைகள் அந்த அதிசயமான ஆச்சரியத்தை  வெவ்வேறு வார்த்தைகளில், விதவிதமாய் வர்ணித்து, தங்கள் சர்க்குலேசனை உயர்த்திக் கொண்டன.

ஒரு தொலைக்காட்சி, எங்கோ அமெரிக்காவில் யாரோ ஒரு ராணுவ உயர் அதிகாரி, பணி ஓய்வு பெற்ற பின்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மரணித்ததாகவும், சாவுக்கான காரியங்கள் செய்யப்படும் போதுதான் அவர் ஆணல்ல… ஒரு பெண் என்கிற உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் செய்தி வாசித்தது.

டாக்டரின் கல்லூரிச் சான்றிதழ்  “ஜெ. கிருபாகரன் – ஆண்” என்றது.

டாக்டரின் பள்ளிச் சான்றிதழும் “ஜெ.கிருபாகரன் – ஆண்” என்றது.

அதற்கும் முந்தைய. காலத்தை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறாததால் பிறப்பில் பெண்ணாகப் பிறந்த டாக்டர் கிருபாகரன் எதற்காகவோ ஆண் வேடத்திற்குள் தன்னை நுழைந்து கொண்டு, கிட்டத்தட்ட அறுபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேல் வாழ்ந்துள்ளார்.

அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்பதற்கான காரணத்தை யாராலுமே கண்டுபிடிக்க முடியாமலே போனது.


தனக்கென்று ஒரு பிரத்தியேக அறை அமைத்துக் கொண்டு, அதற்குள் தன்னைத் தவிர வேறு யாருமே பிரவேசிக்க கூடாது, என்று கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு மாடியறையில் ஒரு தனிமை வாழ்க்கையை அவர் வாழ்ந்ததற்கான காரணம் அவரது பி.ஏ.வான வாசுகிக்கு அப்போதுதான் புரிந்தது. அவள் மனம். அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.. 

“இது எப்படி சாத்தியம்?… ஒரு வருடம்… இரண்டு வருடம்… இல்லை கிட்டத்தட்ட. அற்பத்தி ஐந்து… எழுபது வருடங்களாக ஏன் அவர் அப்படி வாழ்ந்தார்?… எதற்காக?… என்ன காரணத்துக்காக?”


அவளுக்குள் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்துச் செல்ல, அந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடிக் கொண்டு டாக்டரின் பிரத்யேக அறைக்குள் வேக வேகமாக சென்றாள் வாசுகி.




அவருடைய பழைய பைல்கள், சான்றிதழ்கள், இதர டாகுமெண்ட்ஸ் எல்லாவற்றையும் பரிசோதித்தாள்.

அவர் ஆணாக இருக்கும் புகைப்படங்கள்  மட்டுமே அங்கு நிறைந்திருந்தன.

“டாக்டர்… இப்படி ஒரு சஸ்பென்ஸைக் கொடுத்து விட்டு போயிட்டீங்களே!…. இது நியாயமா டாக்டர்?” அவரது போட்டோவைப் பார்த்துக் கேட்டாள்.

அப்போதுதான் பழுப்பேறிப் போன அந்த பழைய டைரி அவள் பார்வையில் பட்டது. பீரோவின் கீழ் தட்டில் பெரிய பைல்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்த அந்த டைரியை மிகவும் சிரமப்பட்டு வெளியிலெடுத்துப் பிரித்தாள்.

மிகவும் பழைமையான டைரியானதால் அது லேசாய்த் தொட்டவுடனே அப்பளம் போல நொறுங்கி விழுந்தது.  பிறந்த குழந்தையை தொடுவது போல் மிகவும் லேசாக  பிடித்துக்  கொண்டு வாசிக்க ஆரம்பித்தாள் வாசுகி.

 “என்னுடைய உண்மைப் பெயர் “கிருபை”.  எனது பத்தாவது வயதில், அதாவது 1944-ம் வருடம் நான். உதவும் உள்ளங்கள் அனாதை ஆசிரமத்தில் இருந்தேன். அங்கு நடந்த கொடுமைகளைப் பற்றித் தெரிந்திருந்தும் நான் அமைதியாகவே இருந்தேன். ஒருநாள் எனக்குள் எதோ ஆகிவிட அதை சுப்புரத்தினம் அக்காவிடம் காட்டினேன்… அவள்  நான் பூப்பெய்து விட்டதாகச் சொல்லி, “இனி மேல் இங்கே இருக்காதே” என்று சொல்லி என்னை அங்கிருந்து தப்ப வைத்தார்கள்!.. தப்பி வந்த போதும் நான் சில வெள்ளைக்காரச் சிப்பாய்களால் சிதைக்கப்பட்டேன்!… பெண் பிள்ளைகளாய் இருந்தால் இந்த உலகில் பல இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட நான் பத்தாவது வயதில் என்னை ஆணாக மாற்றிக் கொண்டு பள்ளியில் சேர்ந்தேன்” 

தொடர்ந்து மேலே படிக்க இயலாமல், அதை மூடி வைத்து விட்டு, டாக்டரை எண்ணி கதறிக் கதறி அழுதாள்.

(முற்றும்)




What’s your Reaction?
+1
7
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!