Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-13

13


ஊரை விட்டே கிளம்பிச் சென்று விட்ட நந்தினி நிச்சயம் போன் செய்வாள், அல்லது கடிதமாவது போடுவாள் என்று எதிர்பார்த்திருந்த கிருபாகரனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.  அது ஒரு விதத்தில் சந்தோஷமாக இருந்தாலும், அநியாயமாக ஒரு பெண் மனத்தை நோகடித்து, படிப்பையும், இந்த ஊரையுமே வேண்டாமென்று தூக்கியெறிந்து விட்டுப் போகும்படி செய்து விட்டோமே? என்கிற ஆதங்கம் அவன் மனத்தை தினமும் அரித்துக் கொண்டேயிருந்தது.

“அட… நீ ஏன் சாமி… அதுக்காக வருத்தப்படறே?… அவ உன் கிட்ட காதலைச் சொல்லுறா… உன்னால் அதை ஏத்துக்கவா முடியும்?… நீயும் பெண்… அவளும் பெண்!.. ஆனா இது வெளியே சொல்ல முடியாத ரகசியம்… உன்னால்தான் என்ன பண்ண முடியும்?… விடு… விட்டுத் தள்ளு அவ ஞாபத்தையும்” மனதின் இன்னொரு பக்கத்திலிருந்து அவனுக்கு ஆதரவாக குரல் எழும்பியது.

ஓரளவிற்கு அவளையும், அவள் நினைவுகளையும் மனதின் சுவர்களிலிருந்து அழித்து விட்டு தன் படிப்பில் கிருபாகரன் முழுமையாக ஈடுபட்டிருந்த வேளையில்தான் அந்தக் கடிதம் வந்தது.  நந்தினிதான் எழுதியிருந்தாள்.

“அன்புள்ள கிருபாகரனுக்கு,

       எங்கள் வீட்டில் எனக்காக வரன் பார்க்கத் துவங்கி விட்டார்கள்.

       என்னால் உன்னைத் தவிர வேறு யாருக்கும் கழுத்தை நீட்டவும் முடியாது,

குடித்தனம் பண்ணவும் முடியாது.  அதனால் தற்கொலை செய்து கொள்வதென்று

 முடிவு செய்து விட்டேன். அநேகமாக நீ இந்தக் கடிதத்த படித்துக் கொண்டிருக்கும்   

 நேரத்தில் நான் இந்த உலகத்தை விட்டு போயிருப்பேன்.  இந்த ஜென்மத்தில்

 வேண்டுமென்றால் நாம ரெண்டு பேரும் சேராமல் போயிருக்கலாம்.  ஆனால்

 அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் சேருவோம்.  சேரணும்.  உனக்காக அங்கு

 காத்திருக்கிறேன்.. சீக்கிரம் வந்து சேர்”

 உன் நந்தினி.”

முகத்திலடித்துக் கொண்டு அழுதான் கிருபாகரன். “பாவிப்பெண்ணே!… நானும் உன்னைய மாதிரி ஒரு பெண்தாண்டி. பதினாலு… பதினஞ்சு வருஷமா இந்த உண்மையை உலகத்துக்குத் தெரியாம மறைச்சு வெச்சு ஆம்பளையா வாழ்ந்திட்டிருக்கேண்டி!… உன் கிட்டே அதைச் சொல்ல முடியாமல்தாண்டி உன் காதலையே வெறுத்தேன்!… என்னை.. என்னை மன்னிச்சிடு நந்தினி”

உண்மை நிலையை அறிந்து கொள்ள அவள் பெற்றோரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தான் எங்கும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்ணும் கிடைக்கவில்லை.  முகவரியும் கிடைக்கவில்லை.

நந்தினியின் மரணம் கிருபாகரனை வெகுவாகவே பாதித்தது.

தினமும் தனிமையில் அழுதான்.  ஒரு கட்டத்தில் அந்தப் பாதிப்பு தன் கல்வியைப் பாதித்து, தன் எதிர்கால டாக்டர் கனவைத் தகர்த்து விடுமோ?… தன் லட்சியங்களைக் குழி தோண்டிப் புதைத்து விடுமோ? என்கிற அச்சத்தில் தவித்தான்.

கூடாது… கூடவே கூடாது… நான் நானாகவே இருக்க வேண்டும்… என்னை வீழ்த்தும் அளவிற்கு விதி இருந்தால்… அந்த விதியை வீழ்த்தும் அளவிற்கு என் முயற்சிகளை நான் கூர்மைப்படுத்த வேண்டும்.




யோகா மூலமும், தியானம் மூலமும் தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு, படிப்பில் முன்னை விட அதிக அளவில் கவனம் செலுத்தி தனது மருத்துவக் கல்வியை வெற்றிகரமாக முடித்து ஒரு டாக்டராக கல்லூரியை விட்டு வெளியேறினான்.

அவனது சாதனை மதிப்பெண்கள் எடுத்த எடுப்பிலேயே அவனுக்கு ராணுவ மருத்துவமனையில் நல்ல பணியினைப் பெற்றுக் கொடுக்க, தனது லட்சியப் பயணத்தின் துவக்கமாய் அதை ஏற்றுக் கொண்டு சேவை மனத்துடன் டெல்லிக்குப் பறந்தான் கிருபாகரன்.

ஆனாலும், அடி மனத்தில் அந்த அச்சம் உறுத்திக் கொண்டேயிருந்தது.  “என் ரகசியத்தை என்னால் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள முடியுமா?… என்றாவது ஒருநாள் அந்த உண்மை வெளிப்பட்டு விட்டால் அரசுப் பணியில் இருக்கும் எனக்கு மிக மிக மோசமான தண்டனையும், அசிங்கமான அவப்பெயருமல்ல ஏற்படும்?”

*****

கேரளா.

உறக்கம் பிடிக்காமல் விடிய விடிய உட்கார்ந்தே சலித்த டாக்டர்,  அதிகாலை நேரத்தில் உறக்கத்தின் பிடியில் அவரையும் மீறி சிக்கினார். 

ஆனால் அந்த உறக்கத்திற்கும் அல்பாயுசு ஏற்படும் விதமாய், அந்த அறையின் மூலையில் இருந்த ஒரு பழங்கால கடிகாரம், “டண்ண்ண்ண்!… டண்ண்ண்ண்… டண்ண்ண்ண்” என தொடர் அதிர்வுகளோடு மண்டையில் ஓங்கி அடிப்பது போல் அடித்து ஓசை எழுப்ப,

துள்ளி எழுந்தார் டாக்டர்.  மணி ஏழு. வெளியே கேட்கும் பறவைகளின்  “கீச்… கீச்” ஓசையும், அறைக்குள் நிலவும் ஜில்லிப்பான சீதோஷ்னமும், அது ஒரு மரங்கள் அடர்ந்த பகுதி என்பதை டாக்டருக்கு உணர்த்தியது.


எழுந்து ஜன்னல் அருகே சென்று, அதைத் திறக்க முயன்றார். ம்ஹும்… அசையவில்லை.

அப்போது, அந்தப் பெரிய இரும்புக் கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, திரும்பிப் பார்த்தார். ஒரு மொட்டைத்தலை மனிதன் உள்ளே வந்தான்.

டாக்டர் அவரை வினோதமாய் பார்க்க, “என்ன பெருசு?… ஆள் மாறிடுச்சுன்னு பார்க்கறியா?…. அதுதான்  எங்க பாஸ் “புத்தா”வோட சாணக்கியம்!… கடத்தறவன் ஒருத்தன்…  காவல் காக்குறவன் ஒருத்தன்… காவு கொடுக்கிறவன் ஒருத்தன்!… ஆக்கத்திற்கு ஒரு கடவுள் … காப்பதற்கு ஒரு கடவுள்… அப்புறம் அழிக்கறதுக்கு ஒரு கடவுள்!னு நீங்க  வச்சிருக்கீங்கல்ல?… அது மாதிரி தான் இதுவும்” என்று சொல்லி விட்டு தனது காவிப்பற்கள் தெரிய விகாரமாய்ச் சிரித்தான்.

 “ச்சீய்… சிரிக்காதே!… மொதல்ல நீங்கெல்லாம் யாரு?… எதுக்காக என்னை கடத்திட்டு வந்திருக்கீங்க?… யார் அந்த புத்தா? சொல்லு” 

 மொட்டை முறைத்தான்.

“அட மொட்டை… உன்னைத்தான்  கேட்கிறேன்… சொல்லு!”

“த பாரு பெருசு!… அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்!… உனக்கு நேரா நேரத்துக்கு சாப்பாடு… அப்புறம் போட்டுக்கத் துணிமணி… எல்லாம் இங்கே கிடைக்குதா?…  ஒழுங்கா தின்னுப்புட்டு… இந்த குடோனிலேயே கிட!… புத்தாவைப் பத்தியெல்லாம் பேசாதே!.. ரொம்பப் பொல்லாத ஆளு!… போட்டு தள்ளிடுவாரு!”

அறைக்கு வெளியே நிழலாடியது.  நேற்றுச் செடி வெட்டிக் கொண்டிருந்தவன் கையில் ஒரு டிரேயுடன் நின்று கொண்டிருந்தான்.  டிரேயில் காலை உணவு வந்திருந்தது. வெளியே சென்று அதை வாங்கி வந்து கொடுத்த மொட்டை,  “இனி மதிய சாப்பாடு… சரியா ஒரு மணிக்கு வந்துடும்!… சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு!… வரட்டுமா?” கதவை வெளியே பூட்டி விட்டுச் சென்றான் மொட்டை.

*****

அதே நேரம், “டாக்டரைக் கடத்திக் கொண்டு வந்து குடோனில் அடைப்பது மட்டுமே எங்கள் வேலை… அதற்கு மேல் பாதுகாப்பதற்கும்… இடம் மாற்றுவதற்கும் வேற ஆளைப் பார்த்துக்கங்க” என்று சொல்லி விட்டு அந்தக் குடோனிலிருந்து கிளம்பி, திருச்சூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த வேனில் பாண்டியனும், முத்துவும் அமர்ந்திருந்தனர்.

“முத்து… எனக்கொரு விஷயம் நெருடலாயிருக்கு!” என்றான் பாண்டியன்.

“என்ன விஷயம்?”




“நாம பாட்டுக்கு இப்படிப் பாதில பிச்சுக்கிட்டு வந்திட்டோமே… நமக்குச் சேர வேண்டிய பனத்தை அந்த புத்தா அனுப்புவானா?… இல்லை இதையே காரணமா வெச்சு தர மாட்டேன்னு ரகளை பண்ணுவானா?”

“விட்டுடுவேனா?… நான் விடுட்டுடுவேனா?… அவன்தான் டாக்டரைக் கடத்திட்டு வரச் சொன்னான்ன்னு போலீஸ்ல சொல்லி… அப்ரூவர் ஆகி… டாக்டரை ஒளிச்சு வெச்சிருக்கற இடத்தையும் காட்டிட மாட்டேன்!.. அந்த பயம் அவனுக்கும் இருக்கும் அதனால… பணத்தைக் கொடுக்க தகராறு எதுவும் பண்ண மாட்டான்.”

சீராகச் சென்று கொண்டிருந்த வேன், திடீரென்று தாறுமாறாக சாலையின் வலப்புறமும்… இடப்புறமும்… மாறி மாறி ஓடியது.  வேனை ஓட்டிக் கொண்டிருந்த முத்து மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் இடப்புறமாய் நிறுத்தினான்.

“என்ன முத்து?… என்னாச்சு?” என்று பாண்டியன் கேட்க, “பஞ்சராகியிருக்கும் போலிருக்கு” என்று சொல்லிக் கொண்டே வேனிலிருந்து குதித்திறங்கி, வேனின் சக்கரங்களைச் சோதனை செய்தான்.

அவன் சொன்னது போலவே இடப்புற முன் சக்கரம் பஞ்சராகியிருந்தது.  “ஆமாம் பாண்டியா.. நான் சொன்ன மாதிரியே பஞ்சர்தான்!… ஒண்ணும் பிரச்சினையில்லை… வண்டில ஸ்டெப்னி இருக்கு… மாத்திட்டு பத்தே நிமிஷத்துல கிளம்பிடலாம்”

“ஆமாம் முத்து… நாம இங்கே ரொம்ப நேரம் நிற்க வேண்டாம்… அது ஆபத்து” என்றான் பாண்டியன்.

வேனின் பின்புறம் சென்று ஸ்டெப்னியை எடுக்க டோரைத் திறந்த முத்து அலறினான்.

 “என்ன முத்து பாம்பா?”

 “வண்டில ஸ்டெப்னி இல்லை” சொல்லி விட்டு தன் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்த முத்து, ”தப்பு பண்ணிட்டேன்!… தப்புப் பண்ணிட்டேன்” என்றான்.

 வேனிலிருந்து மெதுவாய் இறங்கி வந்த பாண்டியன், “என்ன முத்து?… ஸ்டெப்னி இருந்திச்சே…. எங்கே போச்சு?” கேட்டான்.

 “காலைல வேனைக் கழுவும் போது உள்ளார இருந்த மண்ணையெல்லாம் வெளிய தள்ளுவதற்காக நான்தான் அந்த ஸ்டெப்னியை எடுத்து வெளியே வெச்சேன்… அப்புறம் திரும்ப எடுத்து உள்ளார வைக்க மறந்திட்டேன்”

 “என்ன முத்து இப்படிப் பண்ணிட்டே?”

 “எல்லாம் அந்த புத்தாவால!… இப்ப பேசினோமே?… புத்தா பணம் தராம ஏமாத்திட்டா என்ன பண்ணலாம்?னு… வேணைக் கழுவும் போது நான் அதைப் பத்தித்தான் யோசிச்சிட்டே கழுவினேன்!… அந்த டென்ஷன்ல ஸ்டெப்னியை எடுத்து உள்ளார வைக்க மறந்திட்டேன்” முன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

 “சரி… போனது போகட்டும்!… அடுத்து என்ன பண்ணலாம்?”

 “போற வர்ற வண்டிகளை நிறுத்துவோம்… எவனாச்சும் நிறுத்தினா…. அவன் கூடவே அந்த குடோன் வரைக்கும் போய்… நம்ம ஸ்டெப்னியையே எடுத்திட்டு வந்திடலாம்”

 “சரி… வா!” இருவரும் சாலைக்கு மத்தியில் வந்து நின்றனர்.




What’s your Reaction?
+1
6
+1
5
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!