மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-21(நிறைவு)

(21)

 “அடுத்த நிகழ்ச்சி உங்களோடதுதான். ரெடியா?” கேட்டபடியே ஒப்பனையறைக்குள் நுழைந்தாள். மாதவி.

தோள் துண்டை சரி செய்தபடியே அவளைப் பார்த்து தலையாட்டினார் வீரமணி. பட்டு வேட்டி பட்டு சட்டை தோள் துண்டு என கம்பீரமாகத் தெரிந்த வீரமணியைப் பார்த்து கண்களை அகலவிரித்து ஆச்சரியம் காட்டினாள் மாதவி. 

“வாவ்…அப்பா… அப்படியே கல்யாண மாப்பிள்ளை மாதிரியே இருக்கீங்க. “

“போம்மா நீ வேற? என்னைப் போட்டு வில்லுப்பாட்டுப் பாடுன்னு பாடாப்படுத்தி வச்சுட்டே. இப்ப மேடையேறப் போறேன். கல்லடி கிடைக்காமயிருந்தா சரி.” உள்ளுக்குள் இருந்த மேடையேறும் உதறலை சொன்னார்.

“அப்பா… தைரியமா பாடுங்க. நீங்க வேணா பாருங்க… உங்க வில்லுப்பாட்டுத்தான் சூப்பர் ஹிட் ஆகப் போகுது. காரணம்… நீங்க எடுத்துருக்கற தீம் அப்படி. பெண் குழந்தையாயிருந்தா அதை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடுமையையும், பெண் என்பவள் எந்த ரூபத்துல வந்தாலும் அவளுக்கு இழைக்கப்படற கொடுமைகளை திருநங்கைகளின் வாழ்க்கை அவலங்களைப்பற்றியும் அவங்களை இந்த சமுதாயம் எப்படி மதிக்கனும், எப்படி வாழவைக்கனும் அப்படின்னும் உங்க வில்லுப்பாட்ல சொல்லப் போறிங்க. உங்க கணீர் குரலும், பாட்டுத் திறமையும் எப்படி கூட்டத்தை கட்டிப் போடப் போகுதுன்னு பாருங்க.”

“போம்மா… நீ வேற ரொம்ப புகழ்ந்துக்கிட்டு” வெட்கப்பட்டார் வீரமணி. 

மேடையில் சங்கரய்யா நடத்திக் கொண்டிருந்த நாடகம் முடிந்ததற்கான கர ஒலி எழுந்தது. திரை விழந்தது. சங்கரய்யாவின் நாடகக் குழு உள்ளே வந்ததும் மேடையில் வில்லுப்பாட்டைப் பற்றிய அறிப்பு ஒலிக்க வீரமணி தன் குழுவுடன் வில்லுடன் மேடை ஏறினார்.

வில்லுப் பாட்டுக்குரிய இசைக் கருவிகள் வைக்கப்பட்டு நடுநாயகமாக அவர் அமர்ந்ததும் சுற்றிலும் குழவினர் அமர திரை உயர்த்தப்பட வில்லுப்பாட்டு ஆரம்பிக்கப்பட்டது. 

வழக்கமாக வில்லுப்பாட்டில் பாடப்படும் இறை வணக்கத்திற்கு பதில் திருக்குறள் மூலம் அன்னையையும், தந்தையையும் தன் கணீரென்ற குரலில் வணங்கினார் வீரமணி.




‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு.’  வில்லுப்பாட்டுக்குரிய ராகத்திலேயே சொல்லப்பட்ட திருக்குறள் வணக்கம் அனைவரையும் உற்சாகத்துடன் நிமிர்ந்து அமர வைத்தது.

தாய் தந்தை வணக்கம் முடிந்தபின் தமிழ் வணக்கம் பாடினார்.

அன்னைத் தமிழே போற்றிப் போற்றி 

அருமைத் தமிழே போற்றி போற்றி 

கன்னித் தமிழே போற்றிப் போற்றி…

கடவுளானாய் நீயே போற்றி போற்றி…’

வில்லுப் பாட்டு நாங்கள் பாட 

வித்தை தருவாய் போற்றி… போற்றி…”

 வில்லுப்பாட்டிலே நாங்கள் பாடப்போவது…சாமியை அல்ல பூமியை அல்ல..

மன்னனை அல்ல… மகேஸவரனையல்ல..காளியை அல்ல நீலியை அல்ல…

குழுவினர்: பின்ன யாரைய்யா  பாடப் போறிக?

வீரமணி: பூக்காமலே கிள்ளிப் போட்ட மொக்குகளை…

       காய்க்காமலே காய்ஞ்சுப் போன பிஞ்சுகளை…

       பாடாமலேயே பாழாப் போன குயில்களை

       ஆடாமலே காலெடிஞ்ச மயில்களை…

குழுவினர்:  யாரைப் பத்திப் பாடப்போறிங்க வெளக்கமா சொல்லுங்க…

வீரமணி;:  கதை சொல்லப் போறா… கள்ளிப் பாலு குடிச்சவ…

      எதை சொல்லி அழுவா..அவ எதை சொல்லி அழுவா?

      அம்மா… அகிலம் ஆள நினைச்சு நான் அவதரிச்சேன் உன் வயித்துல…

குழுவினர்:   அவதரிச்சேன் உன் வயித்துல அவதரிச்சேன் உன் வயித்துல…

வீரமணி:  ஆலகால விசம் கொடுத்து என்னை அழிச்சதென்ன நியாயமோ?

        அழிச்சதென்ன நியாயமோ?

        பட்டம் வாங்கி பதவி வாங்க பாசமாக வந்தவளை

        பாசானம் கொடுத்து நீங்க பாழாக்கினது நியாமா? 

        ஆடும் கூட மாடும் கூட பாலை நமக்கும் சேர்த்து கொடுக்கையில

        ஐய்யோ… நிங்க மட்டும் கள்ளிப் பாலை கொடுத்ததேன்? 

அவருடைய கணீர் குரலும் கருத்துடன் கூடிய பாடல் வரிகளும் இதயத்தில் அறைய அறைய  கள்ளிப்பாலால் இறந்த பெண் குழந்தை தன் கதையை அவர் வழியாக சொல்லலியது. 




பாடலின் தாக்கம் பாடுபவரின் குரலில் வழிந்த துக்கம் எல்லோருடைய கண்களிலும் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தது. வில்லுப் பாட்டு முடிந்தபோது விக்கி விக்கி சபை அழுதது. கரகோ~ம் வானை முட்டியது. உணர்ந்து பாடியதாலோ, தன் வாழ்வில் நடந்த உண்மையைப் பாடியதாலோ என்னவோ நிகழ்ச்சி முடிந்தபின்னும், திரை விழுந்தபின்னும் எழ முடியாமல் தடுமாறினார் வீரமணி. அவரை கைப்பற்றி அழைத்து வந்து உட்கார வைத்தனர். 

அவருடைய மனம் கனத்துப் போய்விட்டது. தன் வாழ்க்கை நிகழ்வுகள் வரிசைக் கட்டிக்கொண்டு வந்து அவரை வதைத்தன. 

கண்கள் கலங்கி வழிய நெஞ்சம் விம்ம மூச்சு விட தடுமாறிய அவரை தேற்றி மற்றவர்கள் தண்ணீர் கொடுத்த போது மேடையில் நடந்த நிகழ்ச்சிகளில் முதல் பரிசு பெற்ற வில்லுப் பாட்டுக்கு  பரிசை சிறப்பு விருந்தினர் தரப் போவதாக அறிவிக்கப்பட்டது.

மாதவி ஓடிவந்து அவருடைய கையைப் பற்றி அழைத்தாள். “வாங்கப்பா… உங்க வில்லுப் பாட்டுக்குத்தான் முதல் பரிசு”

“இல்லாம்மா…நான் வரலை. எனக்கு ஒருமாதிரி படபடப்பா இருக்கு. எங்க க்ருப்பல யாராவது ஒருத்தர் போய் வாங்கட்டும்” என்று மறுத்தார்.

“இல்லப்பா… நீங்கதான் வாங்கனும். வாங்க நான் கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போறேன்” என அவருடைய கையைப் பற்றி எழுப்பினாள்.

அவரால் மறுக்க முடியவில்லை. அவர் பாடியது அவர் பலி கொடுத்த பெண் குழந்தைகளைப் பற்றித்தான். பலி கொடுத்துவிட்டு பரிசு வாங்குவதா? குற்ற உணர்வுடன் போய் குனிந்த தலை நிமிர முடியாமல் நின்றபோது,

“திரு. வீரமணி அவர்களுக்கு வில்லுபாட்டைப் பாராட்டி நமது சிறப்பு விருந்தினர் மீனாள் அவர்கள் பரிசினை வழுங்குவார்.” ஓருங்கினைப்பாளர் உரக்க சொன்னார். 

மீனாள். சுளீரென தாக்கியதைப் போலிருந்தது அந்தப் பெயர். மீனாள்… மீனாள்… தன் பெண் குழந்தைகளுக்கு லலிதா வைத்து அழைக்கத் துடித்தப் பெயர். 

மெல்ல நிமிர்ந்தார். அவரருகே பரிசுப் பொருளை நீட்டியபடி சிரித்த அந்த பெண்ணைப் பார்த்தார்.

இத்தனை அழகாய்…தெய்வப் பெண்ணைப் போலொரு ஜொலிப்பில்…. அவள் !

“அப்பா….:” அவள் அழைக்க ஆடிப் போனார் வீரமணி. அந்தக் குரல்… அந்தக் குரல்… ஆண் குரல்…அவருடைய உயிருடன் கலந்த குரல்…உமாபதியின் குரல்…

தன்னையும் மீறி அவர் “உமா…: என உச்சரிக்க அந்தப் பெண் மையிட்ட கண்களை மூடித்திறந்து ஆமோதித்தாள்.

“உங்க.. உமாபதிதாம்பா.”

அந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரமணி மயங்கி சரிந்தார்.  

       


             

மாதவிக்கு மிகவும் ஆச்சரியமாகயிருந்தது. திருநங்கை மீனாள்தான் வீரமணி ஐய்யாவின் மகன் உமாபதி என்பது ஆச்சரியமாகயிருந்தாலும் அன்னைறக்கு உமாபதியின் புகைப்படத்தைப் பார்த்ததிலிருந்தே இந்த முக சாயலை எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற உறுத்தலின் உண்மை இப்பொழுது புரிந்துவிட்டது. 

வீரமணி கண்விழித்தபோது அவரை வருடிக் கொடுத்தபடி லலிதா. அவருடைய லலிதா. அவரால் நம்பவே முடியவில்லை. ‘என் லலிதாவா? என் லலிதாவா?’

அவளுக்குப் பக்கத்தில் உமாபதி மீனாளாக. அவரால் பேச முடியவில்லை. என் மனைவியும் மகனும் இல்லை… மகளும் கிடைத்துவிட்டார்களா? நான் காண்பது கனவா? நினைவா?“லலிதா…லலிதா…வந்துட்டியா வந்துட்டியா?

 லலிதா. இது…இது… என் உமாபதியா?”லலிதா கண்ணீரோடு தலையசைத்தாள். “ஆமாங்க. உமாபதிதான். முழுசா பெண்ணா மாறிட்டான். இப்ப…அவன் பெயர் மீனாள்.”வீரமணி மீனாளின் கையைப் பற்றிக் கொண்டு அந்த அழகான பெண் கோலத்தை பார்த்துப் பார்த்து ரசித்தார்.

“அம்மாடி…நீ எவ்வளவு அழகாயிருக்கே. என் கண்ணே பட்டுடும் போலிருக்கு. சிறப்பு விருந்தினரா யாரோ ஒரு தொழிலதிபர்  வர்றாங்கன்னு சொன்னதும்.. நான் யாரோன்னு நினைச்சேன். ஆனா… நீ .. என் புள்ளைதான் தொழிலதிபரா வருதுன்னு தெரியலை தாயி. லலிதா… என் பொண்ணு இவ்வளவு பெரிய தொழிலதிபரா? நம்பவே முடியலையே.”

“ஆமாங்க. அவ தொழிலதிபர்தான். அதுமட்டும் இல்லைங்க. பல அவார்ட்டெல்லாம் வாங்கியிருக்கா. கொரோனா காலத்துல கொத்து கொத்தா மனிதர்கள் செத்தப்ப செத்துப் போனவங்களோட உடம்பை புதைக்கவும், எரிக்கவும் மக்கள் தவித்த போது நம்ம பொண்ணு கொஞ்சம் கூட பயம் இல்லாம திருநங்கை அமைப்பிலயிருந்து எல்லா திருநங்கைகளையும் ஒருங்கிணைச்சு களத்துல இறங்கி பாடியையெல்லாம் எரிச்சா. அந்த சேவையைப் பாராட்டி அரசாங்கம் மட்டுமல்ல பல தன்னார்வ மையங்கள், வெளிநாட்டுல உள்ள சேவை அமைப்புகளெல்லாம் கூப்பிட்டு அவளை பாராட்டி விருதுகளைக் கொடுத்தாங்க.”

பெருமையால் பூரித்த அவர் “ கேட்கவே ரொம்ப பெருமையாயிருக்கு. இப்;படிப்பட்ட மாணிக்கத்தையா என் அம்மா கொல்லப் பார்த்தாங்க? நினைக்கவே வெட்கமாயிருக்கு.” என கலங்கினார். 

“லலிதா… என்கிட்ட உண்மையை சொல்லாம இப்படி ரெண்டு பேரும் என்னைவிட்டுப் போயிட்டிங்களேம்மா.”

தன்னையும் மீறி உடைந்து அழுதார்.

“அப்பா நான் மட்டும் வீட்டைவிட்டு அம்மாவைக் கூட்டிக்கிட்டுப் போகாம இருந்திருந்தா… அம்மாவை பேய் பூதம்னு பலிக் கொடுத்திருப்பாங்க. நானும் இன்னைக்கு இவ்வளவு உயர்ந்த நிலைக்குப் போயிருக்க முடியாது”

“உண்மைதாம்மா. ஆனா.. உங்க ரெண்டு பேரையும் நான் தேடி…தேடி… எவ்வளவு அலைஞ்சேன் தெரியுமா?”

“அப்பா… நம்ம ஆச்சி இப்ப எப்படியிருக்காங்க?”

“செஞ்ச பாவத்துக்கு அனுபவிச்சு செத்துட்டாங்க. ஆண்பிள்ளைதான் குடும்ப வாரிசாயிருக்க முடியும்னு நினைச்சு பெண் குழந்தைகளை கள்ளிப் பால் கொடுத்து கொன்னாங்க. கடைசியில ஒரு உறவுமே கிட்ட வர முடியாம, பெத்த புள்ளைக் கூட கொள்ளிப் போட முடியாம கொரோனாவால செத்து அனாதை பொணமா கவர்ன்மென்டே புதைக்கிற நிலைக்குப் போனாங்க. ஆயிரம் சொத்து சொகம் இருந்து என்ன? ஆயிரம் உறவு இருந்து என்ன? எதுவும் கூட வரப் போறதில்லைங்கற உண்மைத் தெரியாம மனு\ங்க போடற ஆட்டத்துக்கு கொரோனா நல்ல பாடம் கற்பிச்சுட்டு. ஆனா… மனு~ங்கத்தான் திருந்த மாட்டேங்கறாங்க. இருக்கும் போது உறவுகளோட சந்தோ\மா வாழனும். என் ஆசை அதுதான். உங்க நிழ்ல்ல இளைப்பாற தவிச்சிக்கிட்டிருந்தேன். கிடைச்சிட்டிங்க. எனக்கு அது போதும்.”

இருவரின் கையையும் பற்றி தன் முகத்தில் வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார்.அவர் தேடிய மல்லிகைப் பந்தலை அவர் அடைந்துவிட்டார். அந்த மல்லிகைப் பந்தலின் நிழலிலும், மணத்திலும் இனி அவருடைய காலம் இனிதாக செல்லும்.

                                (முற்றும்)




                 

What’s your Reaction?
+1
13
+1
11
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!