Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-17

(17)

அந்த வெள்ளை சட்டையின் முதுகுப் பக்கத்தில் பக்கம் பக்கமாக கதை போல் எதுவோ எழுதப்பட்டிருந்தது. அது அம்மாவின் கையெழுத்து

பதற்றத்துடன் படிக்க முற்பட்டான். 

‘உமாபதி. இந்த சட்டை உன் கையில் கிடைக்க வேண்டும்; என்று கடவுளை வேண்டிக் கொண்டு எழுதுகிறேன்.’

அம்மா எழுதியிருக்கிறாள். பேய் பிடித்த அம்மா எழுதியிருக்கிறாளா?

ஏதோ ஓசைக் கேட்க சட்டென்று அறைக் கதவை தாழிட்டான். இருக்கையில் அமர்ந்து படிக்கத் தொடங்கினான்.

‘உமாபதி. இந்த சட்டை உன் கையில் கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு எழுதுகிறேன். நீ நினைப்பதைப் போல் எனக்கு பேய் பிடிக்கவில்லை. எனக்கு பேய் பிடித்திருப்பதாக உன் ஆச்சி உங்களையும், ஊரையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறாள்.’

தூக்கிவாரிப் போட்டது. அம்மாவுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று ஆச்சி ஊரை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறாளா? அம்மா இவ்வளவு தெளிவாக கடிதம் எழுதியிருக்கிறாள் என்றால் அவன் நினைத்ததைப் போல் கூட அவள் மனநோயால் பாதிக்கப்படவில்லை.

மேற்கொண்டு படித்தான்.

‘உமாபதி… இந்த பேய் பிடித்த நாடகத்தின் முடிவு என்ன தெரியுமா? என் சாவுதான். உனக்கு அதிர்;சியாகயிருக்கும். ஆனால் அது உண்மை. என்னை எப்படியாவது கொன்றுவிடுவாள் உன் ஆச்சி. அதை பேய் தான் ஏறிய உடம்பை பலி வாங்கிவிட்டது என கதைக் கட்டிவிடுவாள். அதை இந்த ஊரும் நம்பும். காரணம் அவள் சொன்ன கதையையெல்லாம் இந்த ஊர் நம்பிக் கொண்டுதானே இருக்கிறது?

நான் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றேன் என ஊரை நம்பவைத்தவள்தானே உன் ஆச்சி.

‘அப்படியானால் அம்மா அரளிவிதையை அரைத்துக் குடிக்கவில்லையா?’

‘நான் அரளிவிதையை அரைத்துக் குடிக்கவில்லை. குடிக்க வைக்கப்பட்டேன். நம்ப முடியவில்லையா?’

அதிர்ந்தான். அரளிவிதையை அரைத்து குடிக்க வைக்கப்பட்டாளா அம்மா? யார் கொடுத்தது?’

‘ கண்ணே… உன்னை விட்டு நான் சாக நினைப்பேனா? இந்த உலகத்தில் உன்னை தனியாக விட்டுவிட்டு போக நினைப்பேனா? அதுவும் உன்னுடைய உண்மையான நிலை தெரிந்தபின்னே…? இந்த சமுதாயத்தால் நீ எவ்வளவு பிரச்சனைகளை எதிர்க்கொள்வாய் என்றெல்லாம் தெரிந்தபின் உனக்கு கைக் கொடுக்காமல், உனக்கு பக்கபலமாக இருக்காமல் உன்னை அனாதையாக விட்டுவிட்டுப் போவேனா கண்ணா?’




உமாபதியின் நெஞ்சம் விம்மி கண்கள் கலங்கி வழிந்தது. 

‘அம்மா…உன்னைப் போய் தவறாக நினைத்தேனே. என்னை விட்டுவிட்டுப் போகத் துணிந்தாயே என ஆத்திரப்பட்டேனே. நீ மருத்துவமனையில் கிடக்கும்போது  உன் முகத்தில் விழிக்கும் தைரியம் இல்லாமல் ஊரைவிட்டு ஓடினேனே.’

‘உமாபதி… நான் மருத்துவமனையில் கண் விழித்தபோது நீ ஊரைவிட்டு ஓடிவிட்டதை அறிந்தபோது சத்தியமாக நான் எவ்வளவு சந்தோ~ப்பட்டேன் தெரியுமா? என் பிள்ளை எங்கோ… ஒரு இடத்தில் உயிருடன் இருந்தால் போதும் என நிம்மதி மூச்சுவிட்டேன். இல்லாவிட்டால் எனக்கு வலுக்கட்டாயமாக கை கால்களைக் கட்டிப் போட்டு உன் ஆச்சி அரளிவிதையை அரைத்து குடிக்க வைத்ததைப் போல் உனக்கும் கொடுத்து கொன்றிருப்பாள்.’

‘ஆச்சியா? ஆச்சியா அம்மாவுக்கு அரளிவிதையைக் கொடுத்தாள்? ‘ 

‘ஆச்சியா இப்படி செய்தாள்? என்று நினைக்கிறாயா? உன்னை ஆசை ஆசையாக வளர்த்த ஆச்சியா இப்படிசெய்யத் துணிந்தாள் என நினைக்கிறாயா? நானும் இப்படித்தான் நினைத்தேன். ஆனால்… அவள் கொலைக்காரி. ஆமாம் அவள் கொலைக்காரிதான். அவளுடைய சுயரூபத்தை தெரிந்துக் கொள்.’ 

அன்றைக்கு நடந்த காட்சிகளை எழுத்துருவில் விவரித்திருந்தாள் அம்மா. 

மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள் லலிதா. அழகான மாலை. அருமையான காற்று. அவை அவற்றிற்கே உரிய குணங்களைக் கொடுத்திருந்தாலும் அவள் அந்த குணங்களால் பாதிக்கப்படாமல் அமர்ந்திருந்தாள். விழிகள் எங்கோ வெறித்திருந்தன. சற்று முன் உமாபதி உளறிக் கொட்டிய வார்த்தைகள் அவளை உருக்குலைத்திருந்தன. 

உளறினானா? அவை உளறலா? உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த உண்மையல்லவா? உரைத்துவிட்டான். 

அவள் அதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. என்னவோ சொல்ல வருகிறான் என்றுதான் எதிர் நோக்கியிருந்தாள் அவன் முகத்தை. ஆனால்…எரிமலையை நெஞ்சில் கொட்டுவான் என்று நினைக்கவில்லை. அதிர்ந்துப் போனாள். ஆடிப்போனாள். அவமானப்பட்டுப் போனாள். ஆத்திரப்பட்டுப் போனாள். ஆண்டவன்    மேல் கோப்பட்டுப் போனாள். ஆனால் அவனை எதுவும் செய்ய முடியவில்லை. தனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க விளையாட்டாக பட்டுப் பாவாடைத் தாவணியைப் போட்டுக் காட்டினான் என்று சந்தோ\ப்பட்டாள். ஆனால்… அவன் பிறப்பே சந்தேகத்திற்குரியது என்பதை அறிந்ததும் துடித்துப் போனாள்.

அம்மாவிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்தாகிவிட்டது இனி அவள் பார்த்துக் கொள்வாள் என நினைத்தானோ என்னவோ உமாபதி போய்விட்டான். 

இவள் ஒன்றுக்கும் உதவாத மண் சிலையாய் உடைந்து உட்கார்ந்துவிட்டாள். அவளுக்கு தனிமையும், அமைதியும் தேவைப்பட்டது. 

கருவில் அவனை சுமந்த போது எப்படி அவனுடைய நலனை மட்டுமே, பாதுகாப்பை மட்டுமே நினைத்தாளோ… அதே தாய்மை உணர்வுதான் இப்பொழுதும் அவளுக்குள் நிறைந்திருந்தது.

என் குழந்தை… தன் பிறப்பைப் பற்றிய ரகசியத்தை என்னிடம் சொல்லயிருக்கிறான். கருவில் காப்பாற்றிய உயிரை எப்படி இந்த உலகிற்கு பத்திரமாக கொண்டு வந்தேனோ அதைப் போலவே அம்மா இந்த ரகசியத்தைக் காப்பாற்றி வழி நடத்தி என்னை இந்த உலகில் வாழ வைப்பாள் என உமாபதி நம்பியிருக்கிறான்.

உமா… உன் நம்பிக்கையை நான் பாழாக்க மாட்டேன். பதின் பருவத்தில் உனக்குள் இன்னொரு பிறப்பு நிகழ்ந்திருக்கிறது. நீ பெண்ணாகப் பிறந்திருக்கிறாய். இந்த இரண்டாம் பிறப்பையும் போற்றி வளர்க்க வேண்டியது ஒரு தாயின் கடமைதான்.

பெண் வேண்டும் பெண் வேண்டும் என்ற என் பிடிவாதமான ஆசைதான் உன்னை இப்படி மாற்றிவிட்டதா? உன் ஹார்மோன்களை தாறுமாறாக்கிவிட்டதா? பெண்ணாய் பிறந்தால் சாபத்தால் நீ இறப்பாய் என்றுதான் ஆணாய் படைத்து பெண்ணாய் மாற்றியிருக்கிறதா? கடவுளே…உலக உயிர்களின் படைப்பு உன்னுடைய சக்தி என்றால்… அந்த சக்தியின் ஒரு உருவம்தானே என் மகனின் புது பிறப்பு. இந்த புதுப் பிறப்பிற்கும் அன்னை நான்தானே? 

ஆனால்…. இந்த உண்மைத் தெரிந்தால் சுந்தரவள்ளி எவ்வளவு அதிர்ச்சியடைவாள்? வீரமணி எவ்வளவு வேதனையடைவான்? ஊரார் எப்படி சிரிப்பார்கள்?

யார் எப்படி நினைத்தாலும் சரி. நீ… என் பிள்ளை. உன்னை வாழ வைக்க வேண்டியது என் கடமை. 

கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். எழுந்தாள். இறங்கி கீழே செல்ல நினைத்தவள் வெளியே கேட்டைத் திறந்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்த தீவாளியைப் பார்த்தாள். இவள் ஏன் இங்கே வருகிறாள்?

                           

தீவாளி அந்த கிராமத்தின் மருத்துவச்சி. படிக்காத, பட்டம் பெறாத டாக்டர். அவளுடைய உண்மையான பெயர் ஊரில் கிழங்கட்டைகளைத் தவிர வேறுயாருக்கும் தெரியாது. தீவாளி என்ற பட்டப் பெயரால் மட்டுமே அழைக்கப்படுவாள்.

தீபாவளி பண்டிகையின் போது தீபாவளி பட்சண மருந்து தயாரிப்பாள். ஊர் முழுவதும் வீடு வீடாக விற்றுவிடுவாள். தீபாவளி முடிந்த கையோடு அந்த மருந்தை எல்லோரும் சாப்பிடுவர். அதனால் அவளை தீவாளி என்றே ஊரார் அழைத்தனர். அது தவிர பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு தரப்படும் பிரசவ லேகியம் தயாரிப்பாள். பிரசவித்த பெண்களுக்கு வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு செல்வாள். பால் கட்டிக் கொண்ட பெண்களுக்கு, மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கெல்லாம் அந்த கிராமத்தில் அவள்தான் மருந்துக் கொடுப்பாள்.

அவள் பொதுவாக தன் வீட்டைவிட்டு வெளியே வர மாட்டாள். அவள் யார் வீட்டுக்காவது சென்றால் அங்கே குழந்தைப் பிற்நதிருக்கிறது என்று அர்த்தம். 

இப்பொழுது இங்கே ஏன் வருகிறாள்? அத்தையிடம் ஏதாவது கடன் வாங்க வருகிறாளோ என்று நினைத்து அலட்சியப்படுத்தினாள்.

ஆனால்…. அவள் வந்த நோக்கம் அறிந்தபோது அதிர்ச்சியில் உறைந்துப் போனானாள்.




What’s your Reaction?
+1
7
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!