Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-18

(18)

லலிதா கீழே இறங்கி வீட்டிற்குள் வருவதற்குள் தீவாளியைக் காணவில்லை. வீட்டிலும் இல்லை. மாமியாரையும் காணவில்லை. இருவரும் சேர்ந்து வெளியில் எங்காவது போய்விட்டார்களோ என நினைத்தாள். 

அதன்பிறகு அதைப்பற்றி அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுப்பு வேலைகளைப் பார்க்கலாம் என சமையலறைக்குள் நுழைந்த போது மாடுகளுக்காக மாமியார் கலக்கி வைத்த தீவனம் வைக்கப்படாமல் அப்படியே இருப்பதைப் பார்த்தாள். கூடவே மாடுகள் மாற்றி மாற்றி ‘ம்மா….’என அழைப்பதைக் கேட்டவள் மாமியார் மாடுகளுக்கு தீவனம் வைக்காமல் போய்விட்டிருப்பதை நினைத்தவள் தீவனம் இருந்த அலுமினியக் கூடையை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்கு வந்தாள். 

அவளைக் கண்டதும் மாடுகள் அழைப்பதை நிறுத்திவிட்டு தீவனம் சாப்பிட ஆசையாக தலையை ஆட்டின. தீவனத்தை அவைகளுக்கு வைத்துவிட்டு அன்புடன் அவற்றின் முகத்தை தடவிக் கொடுத்தபோது ஏதோ ரகசியக் குரலில் யாரோ பேசுவது கேட்க துணுக்குற்றாள்.

உற்றுக் கேட்ட போது அது சுந்தரவள்ளியும், தீவாளியும் என்று புரிந்தது. 

தன் பெயர் அடிபடுவதைக் கேட்டு சற்று முன்னே சென்றாள்.  மாட்டுக் கொட்டகையின் பின் புறத்தில் சுந்தரவள்ளியும், தீவாளியும் பேசிக் கொண்டிருந்தது இப்பொழுது தெளிவாக் கேட்டது.

“அம்மா… என்னம்மா சொல்றிங்க?” தீவாளியின் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.

“ஆமா…தீவாளி நீதான் எனக்கு உதவிப்பண்ணனும். அதனாலதான் உன்னைக் கூப்பிட்டேன். நீ மட்டும் இதை செய்திட்டா உன்னோட ரெண்டு பொண்ணோடக் கல்யாணத்தையும் நானே என்னோட செலவுல ஜாம் ஜாம்னு பண்ணி வைப்பேன். களத்து மேட்டுப் பக்கம் உன்னை குடிசைப் போட்டுக் சொல்லி தந்திருக்கேனே அந்த இடத்தை உனக்கே எழுதி வச்சுடுவேன். நீ சொந்தமா வீடு கட்டிக்க கூட நான் பணம் தருவேன்.”

“அம்மா… அதுக்காக…”

“இங்க பார் நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை. என் மருமகளையும் அவ புள்ளையையும் சாவடிக்கிற மாதிரி ஏதாவது நாட்டு மருந்து எடுத்துக்கிட்டு வா”

தூக்கிவாரிப் போட வெடவெடவென ஆடிப் போனாள் லலிதா. 

‘கடவுளே… என்னையும், உமாபதியையும் கொல்லப் போகிறாளா? ஏன்? ஏன்?’ இதயம் எகிறி எகிறி வெடிக்குமளவிற்கு துடித்தது. தன்னை மீறி அலறிவிடுவோமோ என பயந்தவள் வாயை முந்தானையை எடுத்து அழுத்தி மூடிக்கொண்டாள்.

தலை கிறு கிறுவென சுற்றியது. அடுத்து அடுத்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக்  தெளிவாக கேட்க முடியுமா என்பது கூடத் தெரியவில்லை.

‘என் மாமியாரா? என் மாமியாரா கொலை செய்ய திட்டம் போடுகிறாள்? என்னை அவளுக்கு பிடிக்காதுதான். ஆனால்… கொலை செய்யமளவிற்கா? பேரப் பிள்ளையின் மீது உயிரையே வைத்திருப்பதாகக் காட்டிக் கொள்வாளே… அவனையும் கொலை செய்யப் போகிறாளா? கொலை செய்யுமளவிற்கு நாங்கள் என்ன தப்பு செய்தோம்?’




“இந்த உண்மை வெளியே தெரிஞ்சா எங்க பரம்பரை கௌரவம் என்னாகும் சொல்லு தீவாளி? என் பேரப்பிள்ளை ஆம்பளை சிங்கம்னு பெருமையாயிருந்ததேன். ஆனா… ஆனா…அவன் இப்ப பொண்ணா மாறிக்கிட்டிருக்கான்.’

திக்கென்றானது லலிதாவிற்கு. எப்படி… எப்படி இவளுக்குத் தெரியும்? என் பிள்ளை என்னிடம் மட்டுமே சொன்ன உண்மை இவளுக்கு எப்படித் தெரிந்தது?

“உமாபதி அவ அம்மாக்கிட்ட பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டுட்டேன் தீவாளி. நான் ஒட்டுக் கேட்டது அவங்க ரெண்டு பேருக்கும் தெரியக் கூடாது. இந்த விசயம் என் புள்ளையோட காதுக்கும் போவக்கூடாது. தெரிஞ்சா உடைஞ்சுப் போயிடுவான். வயித்துப் புள்ளையை எப்படி மறைக்க முடியாதோ அப்படித்தான் இந்த விசயமும். கொஞ்சம் கொஞ்சமா இந்த விசயம் வெளியில வந்திடும். இந்தப் பயலோட நடவடிக்கைகள் ஊருக்குத் தெரிஞ்சா என் குடும்ப கௌரவம் போய்டும். இந்தக் குடும்பத்துல இப்படி ஒரு புள்ளையான்னு ஊர் சிரிக்கும். என்னால இந்த அசிங்கத்தை தாங்க முடியாது. அதனாலதான்… அவளையும் அவ புள்ளையையும் யாருக்கும் சந்தேகம் வராதபடி சாகடிக்கனும். முக்கியமா என் புள்ளைக்கு சந்தேகமே வரக் கூடாது. முதல்ல உமாபதியை சாகடிக்கனும். பள்ளிக் கூடத்துல ஏதோ மார்க் பிரச்சனை தற்கொலைப் பண்ணிக்கிட்டான்னு சொல்லிடலாம். தொடர்ந்து இவளுக்கு விசத்தை வச்சுக் கொன்னுட்டு மவன் செத்த துக்கம் தாங்காம தானும் தற்கொலைப் பண்ணிக்கிட்டாள்னு என் புள்ளையையும், ஊரையும்  நம்ப வச்சுடலாம். அப்பறம் கொஞ்ச  நாள் கழிச்சு இந்த வீட்டுக்கு வாரிசு வேணும்னு என் புள்ளையோட மனசை மாத்தி அவனுக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணி வச்சுடுவேன். என்ன சொல்றே? நான் கேட்ட சாவு மருந்து அரைச்சுத் தருவியா?”

லலிதாவிற்கு வியர்த்துக் கொட்டியது. ‘கடவுளே… உமா என்னிடம் பேசியதையெல்லாம் இவள் கேட்டிருக்கிறாளா? அதனால்தான்…. இந்த திட்டமா?’

“அம்மா… வேண்டாம்மா. உமாபதி மாதிரி புள்ளஙை;க ஊர்ல இல்லையா? நம்ம ஊர்லயே… முனியாண்டியோட மவன் இப்படித்தானே இருக்கான். அதுக்காக அவனை ஊரைவிட்டா தொரத்திட்டோம்? நல்லது கெட்டதுக்கெல்லாம் அவன் வராமலாப் போய்ட்டான்? கொலைப்   பண்றதெல்லாம் பாவம்மா…”

“முனியாண்டி மவனை நாம ஊரைவிட்டுத் தொரத்தலை. ஆனா… ஊருக்குள் அவன் எப்படி திரியறான்? ஆத்தாக்காரி புடவையை எடுத்துக் கட்டிக்கிட்டு பொம்பளை மாதிரி திரியறான். ஊர்ல விசேசம்ன்னா இவன்தான் முன்னாடி அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கறான். அது மாதிரி என் பேரனும் திரிஞ்சா என் பரம்பரை கௌரவம் என்னாகறது? அவனுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணி இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசை தர முடியுமா? சரி தொலையுதுன்னு என் புள்ளைக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வேற பேரப் புள்ளையைப் பெத்துக்கலாம்ன்னாலும் யாராவது இவன் இப்படி இருக்கறது தெரிஞ்சா பொண்ணு கொடுப்பாங்களா? இதே மாதிரிதான் அடுத்தடுத்த புள்ளiயும் பொறக்கும்னு நினைக்க மாட்டாங்களா?’

இப்பொழுது தீவாளி எதுவும் பேசவில்லை. அமைதியாகயிருந்தாள்.

“என்ன சொல்றே?” சுந்தரவள்ளியின் குரல் லேசாக மிரட்டுவதைப் போல் வந்தது. 

“அம்மா… ஏற்கனவே நான் உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு ரெண்டு கொலைப் பண்ணிட்டேன். அந்த பாவமே என் மனசை இன்னும் அரிச்சுக்கிட்டிருக்கு. பொம்பளைப் புள்ளையே உங்க குடும்பத்துல பொறக்கக் கூடாதுன்னு பொறந்ததும் என்னை கள்ளிப் பாலைக் கொடுத்து கொல்ல சொன்னீங்க. நானும் அந்த பாவச் செயலை செய்துட்டேன்”

ஆடிவயிற்றில் ஆழமாக கத்தியால் குத்தியதைப் போல் இருந்தது லலிதாவிற்கு. விழந்து விடாமலிருக்க மாட்டுக் கொட்டகையின் கூரையின் கழியைப் பற்றிக் கொண்டாள். 

‘பெண் குழந்தைகள், என் இரு பெண் குழந்தைகளையும் கள்ளிப் பால் கொடுத்து கொன்றிருக்கிறார்களா?’ ஐய்யோ…. அவளுடைய நெஞ்சுக் கூடு கதறியது.

“இதப்பார்… மறந்து போன விசயத்தையெல்லாம் எதுக்கு நீ கிண்டிக் கிளறுறே? அதுக்கெல்லாம்தான் சரியான காரணத்தை சொல்லி ஊரை நம்ப வச்சுட்டேனே. என் குடும்பத்துல பெண் குழந்தை பிறந்தா சாபத்தால உயிரோட இருக்காதுன்னு ஆழமான காரணத்தை பரப்பி வச்சிருக்கேனே.”

“அம்மா… அந்த பொம்பளைப் புள்ளைகளை கொன்ன பாவத்துக்குத்தான் இப்படி கடவுள் உங்க பேரனை ஆணா படைச்சு பொண்ணாக்கிட்டாhர் போலிருக்கு. எப்படியும் இந்த வீட்ல பொண் குழந்தைதான் இருக்கனும்னு விதி போலிருக்கு. அதான் உமாபதி இப்படியாயிட்டான். இது கடவுளோட சித்தம்னு நினைச்சு நாம அதை ஏத்துக்கத்தான் வேணும்.”




‘இதப்பார்… எனக்கே புத்தி சொல்றியா? கடவுளே நினைச்சாக் கூட இந்த வீட்ல பொம்பளைப் புள்ளையை வளரவிட முடியாது. அந்த அம்பாளே பொண்ணா பொறந்து இந்த வீட்டுக்கு வந்தாக் கூட அவளுக்கும் கள்ளிப் பால்தான்.”

“அம்மா… ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டு அன்னைக்கு ரெண்டு உயிரைக் கொன்னுட்டேன். இப்ப… ரெண்டும் பெரிய உயிர். எப்படிம்மா?”

“இதப்பார் தீவாளி… பொண்ணு எந்த ரூபத்துல இந்த வீட்டுக்குள்ள வந்தாலும் அதுக்கு சாவுதான். நீ மட்டும் இதை செய்ய ஒத்துழைக்கலைன்னா…உன் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது. எப்படின்னு நினைக்கிறியா? இந்த வீட்ல பொண்ணு பொறந்தா செத்துப் போயிடும்னு எப்படி ஒரு கதையைக் கட்டி இந்த ஊரை நம்ப வச்சேனோ அதே மாதிரி உன் பொண்ணுங்க ரெண்டு பேரும் எவன்கிட்டயோ படுத்து புள்ளைக் களைச்சவளுங்கன்னு ஒரு கதையைப் பரப்பிடுவேன். அப்பறம் நீ எப்படி உன் பொண்ணை கட்டிக் கொடுப்பேன்னு பார்க்கறேன்” 

“அம்மா…” அவள் அலறிய அதே நிமிடம் மாட்டுக் கொட்டகையில் பொத்தென எதோ விழும் சத்தம் கேட்க இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு ஓடிவந்தனர்.

மாட்டு சாணத்தின் மத்தியில் மயக்கம் போட்டு விழுந்துக் கிடந்தாள் லலிதா.




What’s your Reaction?
+1
8
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!