Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-14

14

“ஸ்வேதாவிற்கு என்ன ஆயிற்று அம்மா?” கேள்வி கேட்ட சிறிய மகளுக்கு பதில்  சொல்லாமல் அமர்ந்திருந்தாள் கலைவாணி.

 “அம்மா” ஜீவிதா  அழுத்தி  அழைக்க  கலைவாணி கண்கள் கலங்க அவளை ஏறிட்டாள். “இதோ இப்படித்தான், நேற்று நீ வந்து  நின்றாயே! அது மாதிரிதான்,  ஸ்வேதாவும்  அன்று வந்து நின்றாள். பரக்க பரக்க விழித்துக் கொண்டு,நீ கையில் குழந்தையோடு  வந்திருக்கிறாய்.அந்தக் குழந்தையை அன்று அவள் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள். இதே வார்த்தைகளை சொல்லித்தான்  மாப்பிள்ளை அவளை இங்கே விட்டுவிட்டு போய் விட்டார். அதன் பிறகு  இங்கே ஸ்வேதாவின் நடவடிக்கைகள்  கொஞ்சம் குழப்பமாகவே இருந்தன. தனக்குள் பேசிக்கொண்டாள். சிரித்தாள்.  அறையைப் பூட்டிக் கொண்டு தனிமையில்  யாருடனோ ஏதேதோ பேசினாள்”.  

“வயிற்றை பிடித்துக் கொண்டு என் குழந்தை…என் குழந்தை என்று புலம்புவாள்.நான் அவளிடம் உட்கார்ந்து பேச முயன்றால் அறைக்குள் போய் பூட்டிக் கொள்வாள்.இங்கே டாக்டரிடம் அழைத்து போய் காட்டினேன். பிரசவம் நெருங்கும் நேரம் சில பெண்களுக்கு இது போன்ற குழப்பமான மனநிலை ஏற்படலாம். நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் போது நாம் எந்த ட்ரீட்மென்ட்டும் எடுக்க வேண்டாம்.முதலில் குழந்தை பிறக்கட்டும் என்று விட்டனர். நான் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு பக்கத்தில் இருந்தே ஸ்வேதாவை கவனித்துக் கொண்டேன்”

” இதையெல்லாம் ஏன்மா என்னிடம் சொல்லவில்லை”

“நீதான் அப்போது இங்கே. வருவதேயில்லையே. போனிலும் சரியாக பேசுவதில்லை.

ஸ்வேதாவின் போனை எடுப்பதேயில்லை. பத்து தடவைக்கு இரண்டு தடவை என் போனை எடுப்பாய்.இரண்டே வார்த்தைகளில் பேச்சை முடித்து விடுவாய்.நிறைய வேலை அது இதுவென்று ஏதோ சொல்லிக் கொள்வாய்.அதனால் குழந்தை பிறந்த பிறகு உன்னை இங்கே அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் ஸ்வேதாவை  பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்த்த போது அவள் ரொம்பவே தன் வசம் இழந்து புலம்பி கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் பயமாக இருக்க உனக்கு போனில் சொன்னேன்.” 

 “பேறுகாலத்தில் இப்படி ஸ்வேதா நம்மையெல்லாம் விட்டுப் போவாள் என்று நான் நினைக்கவே இல்லை”கலைவாணி அழுதாள்.

” ஆனால் நான் நினைத்தேன்” உள்ளே வந்தார் சகாதேவன்.”எனக்கு இந்த சந்தேகம் முதலிலேயே இருந்தது.ஸ்வேதாவின் மரணத்திற்கு காரணம் ஹரிஹரன்தான்”

“அப்பா “ஜீவிதா கத்த, “சும்மா இருங்க” அதட்டினாள் கலைவாணி. “அவர் இப்போதும் நம் வீட்டு மாப்பிள்ளை. சும்மா எதையாவது பேசிக் கொண்டிருக்காதீர்கள்”

” இன்னமும் பேச என்ன இருக்கிறதுடி? இப்படித்தான் முதலில் இருந்தே மாப்பிள்ளை என்று என் வாயை மூடி வைத்து விட்டாய். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஹரிஹரன் மேல் சந்தேகம. அவர் ஸ்வேதாவை எதையோ சொல்லி மிரட்டி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.”




 

“எதையாவது மனம் போன படி பேசாதீர்கள் .அவர்கள் திருமணம் முடிந்த போது ஸ்வேதாவின் நிலையை மறந்து விட்டீர்களா?அப்படி மிரட்டி எல்லாம் ஒருவரை திருமணம் முடிக்க முடியாது”

” ஏன் முடியாது ?நம் கண்ணெதிரிலேயே நாம் பார்க்கவில்லை ?இதோ நம் ஜீவிதாவை மிரட்டி தானே அவர் திருமணம் முடித்தார் ?”

“அது குழந்தைக்காக” என்ற போது கலைவாணியின் குரல் இறங்கிவிட்டது.

“அதேதான்.இப்போது ஜீவிதா கையில் இருக்கும் குழந்தையைக் காட்டி…அப்போது ஸ்வேதா வயிற்றில் இருந்த குழந்தையைக் காட்டி… இப்படித்தான் ஹரிஹரன் இருவரையும் மிரட்டி ஏமாற்றியதாக நான் நினைக்கிறேன்” சகாதேவன் சொல்லச் சொல்ல முழுக்க மறுக்க முடியாமல் இரு பெண்களும் அமைதியானார்கள்.

 ஜீவிதாவின் மண்டைக்குள் புழுக்களின் குடைச்சல் அதிகமானாற் போல் இருந்தது.

மகள் நெற்றி பொட்டுகளை அழுத்திவிட்டு தலையை தாங்கிக் கொள்வதை கண்ட பெற்றோர் பதறினர்.”வேண்டாம்மா. நீ வேறு எதையும் நினைக்க வேண்டாம். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே. வந்து படுத்து நன்றாக தூங்கி எழு” கலைவாணி மகளை உள்ளே அழைத்து போய் படுக்க வைத்தாள்.

கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருந்த ஜீவிதாவின் மூளைக்குள் காட்டருவி ஒன்று ஆக்ரோசமாக பாய்ந்து கொண்டே இருந்தது.கிளைகளையும் பாறைகளையும் மரங்களையும் உருட்டி தள்ளியபடி நொடிக்கு நொடி வேகம் எடுத்தது அது.

நிம்மதியற்ற ஒரு உறக்கத்தின் பின் திடுக்கிட்டு விழித்த ஜீவிதா,அரக்க பரக்க எழுந்து அம்மாவை தேடினாள் அம்மா…அம்மா”

வீட்டின் பின்பக்க தோட்டத்தில் ஈசனுக்கு உணவூட்டிக் கொண்டிருந்த கலைவாணி மகள் வந்து நின்ற கோலத்தில் பதறினாள்.”ஜீவி என்னம்மா? எதற்கு இப்படி ஓடி வருகிறாய்?”

“அம்மா கேட்க மறந்துட்டேன்.அங்கே மல்லிகாங்கிறவளை பற்றி…?”

” எந்த மல்லிகாவை கேட்கிறாய்?’

“அங்கே எஸ்டேட் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தவள்…”

“அது…பேச்சியம்மா “

“ப்ச் இல்லைம்மா.மல்லிகா.ஒல்லியாக… உயரமாக…கீச்சுக் குரலோடு…”

“ஓ…நீ பேச்சியம்மாள் மகளை சொல்கிறாயா?அவள் சமையல்காரியா என்ன?”

“என்னம்மா இப்படி கேட்கிறீர்கள்?”

“ஆமாம்மா.கல்யாணத்திற்கு பிறகு ஸ்வேதாவை அங்கே கொண்டு விட்டு, பத்து நாட்கள் வரை அவள் துணைக்கு அங்கே இருந்தேன்.அப்போது பேச்சியம்மாள்தான் அங்கே இருந்தார்கள்.அவர்கள் மாப்பிள்ளை வீட்டினருக்கு ஏதோ தூரத்து உறவாம்.அவரை கவனித்துக் கொள்ளவென்று அங்கே வந்து இருப்பதாக மாப்பிள்ளை சொன்னார்”

“ஓ…சரிதான்.நீங்கள் சொல்வது மல்லிகாவின் அம்மாவை.அவர் இப்போது உடம்பு சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறார்”

“அடடா,உடம்பிற்கு என்ன?ரொம்ப நல்லவர் தெரியுமா?”

*அது…தெரியவில்லை.அவர் மகள் மல்லிகாதான் இப்போது அங்கே சமையல் செய்கிறாள் “

“ஏய்,அந்தப் பொண்ணு நிறைய படித்திருக்கிறாளாம்.என் மகள் கலெக்டராவாள்னு பேச்சியம்மா பெருமையாக சொல்லியிருக்கிறார்கள்.அவளை சமையல்காரின்னு சொல்லாதே.சொந்தமென்பதால் ஒரு உதவிக்காக இருப்பாளாயிருக்கும்”

ஓ…அவசர ஆத்திர உதவிக்கு வந்த உறவுக்காரியை வேலைக்காரியாக நான் நடத்தியதால்தான்…அவளுக்கு அவ்வளவு கோபமா? அதனால்தான் ஈசனை கொ…கொன்று விடுவேனென்று…ம்ஹூம்,மல்லிகா ஜீவிதாவின் எந்த கணிப்பு வட்டத்திற்குள்ளும் அடங்காமல் திமிறி வெளியேறினாள்.

“மல்லிகா அக்காவிடம் எப்படி பழகினாள்மா?”

“தெரியலையேம்மா.நான் அங்கிருந்த நாட்களில் மல்லிகாவை பார்த்ததே இல்லை.ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருப்பதாக பேச்சியம்மா சொல்வார்”

அப்போ ஸ்வேதாவும்,மல்லிகாவும் சந்தித்து கொண்டதே கிடையாதா? அல்லது அம்மாவும்,மல்லிகாவும் சந்தித்து கொண்டதில்லையா? ஜீவிதாவின் மண்டைப் புழுக்கள் அதிகம் குடைந்தன.ஒரே ஒரு சின்ன முடிச்சு இருக்கிறது.அதை அவிழ்த்தால் புதிர் அத்தனையும் வெளி வந்து விடும்.ஆனால் அந்த முடிச்சு யாரிடம் இருக்கிறதென்றுதான் தெரியவில்லை.ஜீவிதா நெற்றியை பிடித்துக் கொண்டு மீண்டும் படுத்துவிட்டாள்.




What’s your Reaction?
+1
58
+1
36
+1
2
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!