தோட்டக் கலை

வெயில் காலத்தில் உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தை பராமரிப்பது எப்படி?

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனா். இனிவரும் நாள்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

நம்மை கவனித்துக் கொள்வதை போலவே வெயில் காலத்தில், நம் வீட்டு தோட்டத்தையும் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்க வேண்டும். அதிலும் சூரிய ஒளி நேரடியாக தாக்கும் என்பதால், மாடித் தோட்டத்துக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். செடிகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது சீக்கிரமே வற்றிப்போகும். இதனால் அதீத வெப்பத்திலிருந்து செடிகளைப் பாதுகாக்க வேண்டும். தாவரங்களில் நீர் வற்றிப்போகாமல் இருக்க தேவையான அளவு நீரை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இலை, சருகுகள் உதவும்                                                                         

உங்கள் தோட்டத்தில் அங்கங்கே கிடக்கும் இலை சருகுகளை சேகரிக்கவும். செடிகளிலிருந்து தண்ணீர் ஆவியாகிப் போகாமல் இருப்பதற்கு காய்ந்த இலை தழைகளைக் கொண்டு செடிகளைச் சுற்றி அடர்த்தியாகப் போட வேண்டும். அந்தக் இலைகளின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். இதன் மூலம் தண்ணீர் செடிகளின் வேர்களை சென்றடையும். மேலும் தொட்டிகளில் இருந்து தண்ணீர் சீக்கிரம் ஆவியாகிப்போவது தடுக்கப்படும்.

மேலும் கோடைக்காலத்தில் செடிகளை புதிதாக நடுதல், பிடுங்கி இடம் மாற்று நடுதல், செடிகளைக் கிள்ளுதல், கவாத்து செய்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.




செடிகளை நெருக்கமாக வைக்கவும்

கோடைக் காலத்தில் எல்லா செடிகளையும் நெருக்கமாக வைக்க வேண்டும். இப்படி தொட்டிகளை அருகருகே வைக்கும்போது வெப்பம் தொட்டியின் எல்லா பக்கமும் விழாமல் தடுக்க முடியும். வெயில் படாமல் இருக்கும்போது தொட்டியில் உள்ள மண் அவ்வளவாக சூடாகாது. இதனால் செடிகள் பட்டுப்போவது தடுக்கப்படும்.

மேலும், தொட்டிகளின் ஒரு சில பக்கங்களே வெப்பத்தை உறிஞ்சும். மற்ற பக்கங்கள் குளிர்ச்சியாகவும், நடுவில் உள்ள தொட்டிகள் வெயிலால் எவ்வித பாதிப்புகளும் அடையாமல் இருக்கும். மேலும் நிழ ல்வலைகளையும் பயன்படுத்தலாம். இதனால் மாடித் தோட்டத்தில் வெப்பத்தின் அளவைக் குறைக்க முடியும். கோடைக் காலத்தில் செடிகளுக்கு திட உரங்களை வழங்குவதைக் காட்டிலும் திரவ ஊட்டங்களாகவே கொடுப்பது நல்லது.

கோடைக் காலத்தில் தோட்ட பராமரிப்பில் இந்த குறிப்புகளை தவறாமல் செய்து, உங்கள் தாவரங்களை காப்பாற்றி நல்ல விளைச்சலை பெறுங்கள்!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!