Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-12

12

” என்னடா இன்னும் கிளம்பலையா …? ” பொறுமையிழந்து சோபாவில் அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த தந்தைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி நின்றிருந்தனர் பிள்ளைகள் மூவரும் .இப்போதாவது திறந்து விடாதா என மூவரின் விழிகளும் ஏக்கத்துடன் அவரவர் அறைக்கதவை தொட்டு வந்த்து .

” என்ன இன்னமும் ஒருத்தியும் வரலையா …? ” கேட்டபடி வந்த சொர்ணத்தாய் நாவல் பழ நிற பட்டுப்புடவையும் வைர அட்டிகையுமாக பளபளத்தாள் .

” நீயே இப்பத்தான் வந்திருக்கே மருமகள்களை சொல்லனுமா ….இந்தா பூவை வச்சிக்கோ ….” டீப்பாயின் மீது இருந்த வெண்கல தாம்பாள தட்டில் இருந்த மல்லிகை பந்தை சுட்டிக்காட்டிய பொன்னுரங்கத்தின் பார்வை மனைவியன் அலங்காரத்தை மெச்சியது .நேரிடையாக அவர் முகத்தை பார்க்காவிட்டாலும் கணவரின் பார்வையை உணர்ந்த சொர்ணத்தாய் …போதும் என ஒரு விழியால் அவரை அதட்டியபடி மல்லிகை பந்தை பிரித்து தனக்கான பூவை துண்டித்து கொண்டையை சுற்றி சொருகிக் கொண்டாள் .

இப்போது கதிர்வேலன் , முருகேசன் அறைக் கதவுகள் திறந்து முதலில் குழந்தைகள் ஓடி வந்தனர் .விழாவிற்குரிய உடையணிந்திருந்தனர் மூவரும் .

” உங்க அம்மாக்களெல்லாம் என்னடா செய்கிறார்கள் …? ” கேட்டபடி சொர்ணத்தாய் தனது பேத்தியின் இரட்டை ஜடையினிடை மல்லிகை சரத்தை பாலமிட்டாள் .” பட்டுப்பாவாடை அழகாக இருக்கிறதுடா குட்டி …” பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டாள் .

” அம்மா ..தலை பின்னுறாங்க …”

” இல்லை சேலை கட்டுறாங்க …” ரவியும் , ராஜாவும் கத்தியபடி ஒருவரை ஒருவர் விரட்டியபடி வீட்டை வலம் வர தொடங்கினர் . அவர்கள் அணிந்திருந்த உயர்ரக ஜிப்பா உடையில் இருந்த ஓடுவதற்கான வசதி …பாரமாக கனக்கும் தனது பட்டு பாவாடையில் இல்லாது போனதால் கீர்த்தனா வேறு வழியில்லாமல் அமைதியாக பாட்டி அருகில் அமர்ந்து கொண்டாள் .

பேத்தியை உணர்ந்தாற் போல் பரிவாக அவள் தலை தடவி தன்னுடன் சேர்த்துக் கொண்ட சொர்ணத்தாய் ” ஏய் …பொன்னி …” கத்தினாள் .

” இதோ வந்துட்டேன் அத்தை …” அவசர குரலுடன் முதல் அறை திறந்து கொள்ள …பொன்னி வெளியே வந்தாள் .தொடர்ந்து அடுததடுத்த அறைகள் திறந்து அனுராதாவும் , பூந்தளிரும் வந்தார்கள் .

பொன்னி ரத்த சிவப்பு நிற பட்டுப்படவையில் இருக்க , அனுராதா கடலின் அடர் நீல வண்ண பட்டில் மின்னினாள் .பூந்தளிரின் பட்டு புடவை மாதுளம் பழ முத்துக்களின் நிறத்திலிருந்த்து . வெளியே வந்த பெண்கள் மூவரின் பார்வையும் சொல்லி வைத்தாற் போல் தங்கள் கணவனின் முகத்தில் பதிந்த்து .

கதிர்வேலனும் , குருபரனும்  தங்கள்  மனைவியின் பக்கமே விழி திருப்பாமல் இருக்க , முருகேசன் விழி நிரம்பி வழியும் காதலுடன் மனைவியை பார்த்தபடி இருந்தான் .மற்ற ஆண்களின் பார்வையை கவனித்து விட்டு தன் கணவனின் பார்வையையும் பார்த்த அனுராதாவிற்குள் மனதிள்குள் மகாராணி பாவனை வந்த்து .உங்கள் இருவரையும் விட நான் உயர்ந்தவளாக்கும்…ஓரக்கத்திகளிடம் விழி ஓரம் சவாலிட்டு விட்டு மிதப்பாக நடந்தாள் .




மாமியார் நீட்டிய மல்லிகை சரத்தை வாங்கிய போது , ” அனு அசத்தலாயிருக்க …” கணவன் காதிற்குள் முணுமுணுக்க அனுராதாவின் கால்கள் தரை மட்டத்திலிருந்து அரை அடி மேலே எழும்பி மிதக்க தொடங்கின .

” போதும் …போதும் மேலேயே மிதக்காமல் கீழே இறங்கி நடப்புக்கு வாங்க …” பொன்னுரங்கம் யாரிடமோ சொன்னபடி வெளியே நடக்க , சே …சே என்னை சொல்லலை …தன்னை தானே சமானித்தபடி ஒரு மாதிரி கழுத்தை உயர்த்தி வைத்துக் கொண்டு முன்னால் நடந்தாள் .

” என்னக்கா … மிதப்பு அதிகமாயிருக்கிறாப்பல இருக்கே ….” அவளுக்கு பின்னால் நடந்து கொண்டு அவளை கண்ணால் காட்டியபடி தன்னருகில் வந்து கொண்டிருந்த பொன்னியிடம் சொன்னாள் பூந்தளிர் .அவள் தன் உதட்டில் விரல் வைத்து காட்டினாள் .

அவர்கள் அனைவரும் குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பியிருந்தனர்
குருபரன் – பூந்தளிர் அவசர திருமணத்தால் அப்போது குலதெய்வம் கோவிலுக்கு போக முடியாததால் இப்போது புது மணமக்களுடன் க விலுக்கு போய் பொங்கல் வைத்து , தெய்வத்தை வணங்கி வர எண்ணி  கிளம்பியிருந்தனர்
.
குழந்தைகள் முதலில் வேனில் ஏறி சீட்டில் குதித்து வேனையே அசைத்துக் கொண்டிருக்க , அனுராதாவும் , முருகேசனும் ஜோடியாக தோள் உரசியபடி ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டனர் .பொன்னுரங்கம் முன்னால் டிரைவரோடு ஏறி விட சொர்ணத்தாய் ஒற்றை சீட் ஒன்றில் அமர்ந்து கொண்டாள் . கதுர்வேலன்  ராஜா , ரவியை அதட்டி உட்கார வைத்து அவர்களோடு ஒரு சீட்டில் அமர்ந்தான்.

செண்பகம் சாமான்களை சரி பார்த்தபடி , சில சாமான்களோடு கடைசி சீட்டுக்கு பானாள் .குருபரன் செண்பகத்திற்கு முந்தைய இரட்டை சீட்டில் கால்களை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து விட , பூந்தளிர் வேறு வழியின்றி கீர்த்தனாவோடு பொன்னி அமர்ந்திருந்த சீட்டில் அமர்ந்து கொண்டாள் .

” குரு தம்பிகிட்ட போய் உட்காரலையா ? ” பொன்னி கிசு கிசுப்பாய் கேட்டாள் .

” உங்க கொழுந்தனை நீங்களே பாருங்கள் …” பொன்னி திரும்பி பார்க்க குருபரன திரும்பி அமர்ந்து சன்னலில் முதுகை சாய்த்து சீட்டில் கால்களை நீட்டி  தூக்கத்திற்கே போய்விட்டிருந்தான் .

” ம் …” அலுத்தபடி திரும்பிய பொன்னியிடம் ” நீங்கள் மச்சானுடன் உட்காரலையா …? ” கேட்டாள் பூந்தளிர் .

” ஏய் …நாங்களென்ன திருமணம் முடித்த புது தம்பதியா …? “

” அவர்கள் மட்டும் புது மண தம்பதிகளா என்ன ? ” பூந்தளிர் கண்களல் பக்கத்து சீட்டை காட்டி கேட்டாள்.

அவர்களுக்கு பக்க சீட்தான் அனுராதா – முருகேசனுடையது .இரண்டு பெண்களின் கண்களும் அடிக்கடி நேற்றுத்தான் மணமுடித்த புது மண தம்பதிகள் போல் சிரிப்பும் , சிணுங்கலுமாக பேசியபடி வந்த கணவன் மனைவியின் மேல் அடிக்கடி படிந்து திரும்பியது .ஏதோ ஓர் ஏக்கம் இவளுக்குள் இருக்கிறதோ ….என பரஸ்பரம் இருவருமே ஒருவரையொருவர் எண்ணிக் கொண்டனர் .இருவருமே வாயை திறக்க பயந்து கண்களை மூடிக்கொண்டனர் .

விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகளும் கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து விட , வறட்சியாய ஓர்  அமைதி அந்த வேனினுள் பரவியிருந்த்து .அதிகாலை கிளம்பியவர்கள் காலை பத்து மணி அளவில்  திருச்செந்தூர் அருகே இருந்த அவர்களின் குலதெய்வ கோவிலை அடைந்தனர் .கோவிலை சுற்றி அடர்ந்திருந்த தாழம்பூ புதர்களை சிறு அச்சத்துடன் பார்த்தாள் பூந்தளிர் .

” அக்கா …இது தாழம் பூ தானே …? இதற்கு பாம்பு வரும் தானே …? “

” ஆமாம் பூவு பாம்பு வரும் தாழம்பூ புதர்கள்தான் இவை …” அவளது பயத்தை அதிகரித்து விட்டு நடந்தாள் பொன்னி .

” ஒவ்வொரு புதருக்குள்ளும் பத்து பாம்பாவது இருக்கும் .எதற்கும் ஓரமாக போகாமல் இந்த பக்கம் தள்ளியே வா ….” அவளை கடந்து போகிற போக்கில் குருபரன் சொல்லிப் போக நடுங்க ஆரம்பித்து விட்ட கால்களுடன் நடையை எட்டிப் போட்டு கணவனுடன் இணைந்து கொண்டாள் .

பெண்கள் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்க , ஆண்கள் பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்தனர் .

” அடுப்பு கூட்டி பானையை ஏற்று …” பொன்னிக்கு உத்தரவிட்டு விட்டு அடுப்பெரிக்க கொண்டு வந்திருந்த  பருத்திமார் சுள்ளிகளை ஒடிக்க தொடங்கினாள் சொர்ணத்தாய் .மாமியார் ஆணைக்கேற்ப ஓரத்தில் கிடந்த பெரிய கல்லை தூக்க முயன்ற பொன்னியை ….” விடுங்க்க்கா …” என அதட்டினாள் பூந்தளிர் .அவளது கண்கள் மேலே உதிர்ந்து விழும் ஆலமர சருகை நாசூக்காய் தள்ளி விட்டபடி கோவில் மண்டப படிக்கட்டில் கணவனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அனுராதா மேல் விழுந்த்து .வந்த்துமே சேலை அழுக்காகி விடுமென அவள் ஸ்டைலாக வேலைகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டாள் .




” ஏன் பொன்னிக்கா இவர்கள் மட்டும்தான் பட்டு கட்டியிருக்கிறார்களா ….? நமக்கு சேலை அழுக்காகாதா …கசங்காதா …? “

” உஷ் …பூவு பேசாமலிரு .அவள் குணம் அவளுக்கு .நம் குணம் நமக்கு .அவள்ளவு நாம் இறங்க வேண்டாம் .இப்போது அந்தப் பக்கம் நீ ஒரு கை கொடுத்தால் இருவருமாக கல்லை தூக்கி விடலாம் …” குனிந்து கல்லை தூக்க ஆரம்பித்தவளின் கையை தட்டிவிட்டாள் .

” ஏங்க …இங்கே வாங்களேன் …” கதிர்வேலனுடன் பேசிக் கொண்டிருந்த குருபரனை கை தட்டி அழைத்தாள் .ஓங்கி ஒலித்த பூந்தளிரின் சத்தத்தில் திரும்பி பார்த்து விட்ட அனைவரின் பார்வையில் கோபமுற்ற குருபரன் அவளை ஆத்திரத்தோடு நெருங்கினான் .

” எதற்கு என்னை ஏலம் போட்டுக் க ண்டிருக்கிறாய்…? ” பல்லை கடித்தான் .

” உங்கள் மதினி கல்லை தூக்கி காலில் போட்டு கொள்கிறேனென்கிறார்கள் .விட்டு விடவா …? “

உடனே அவன் முகம் சாந்தமானது .” ஏன் மதினி என்னை கூப்பிட்டிருக்கலாமே …? ” குனிந்து கற்களை தூக்கி வந்து பானை வைக்க தோதாக அமைத்து கொடுத்தான் .

” ஒவ்வொரு சின்ன விசயத்திற்கும்  நாங்கள் பெண்கள் சொல்லிக் கொண்டே இருக்க மாட்டோம் .நீங்களாக உணர்ந்து செய்ய வேண்டும் ….” பூந்தளிர் இதனை கூறியது கதிர்வேலனுக்காக .ஏனெனில் பொன்னி கல்லை தூக்க முயன்ற போது அவன் சற்று தள்ளிநிருந்து தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் , மனைவி அவ்வளவு பெரிய கல்லை தூக்க முயல்வதை பார்த்தபடி சும்மாதான் இருந்தான் .

அவளது பேச்சு காதில் விழாதது போல் கதிர்வேலன் கடந்து போய்விட , குருபரன் யோசனைநுடன் அவள் முகம் பார்த்தான் .கொஞ்ச நேரத்திலேயே நெய்யும் , வெல்லமும் மணக்க பொங்கல் தயாரானது .வாழையிலையில் சாமிக்கு படைத்து வணங்கினார்கள் .

” என் ஊர் கோவில் கும்பாபிசேகத்திற்கு ஏதாவது தடை வந்து கொண்டே இருக்கிறது பூசாரி ஐயா .அது நல்லபடியாக நடக்க வேண்டுமென நீங்களும் சேர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள் ….” பொன்னுரங்கம் பூசாரியிடம் கேட்டுக் கொண்டார் .பூசாரி தலையசைத்து காரியத் தடை நீக்கும் மந்திரமென உச்சரிக்க தொடங்கினார் .

சை …இந்த விசயத்தையே மறந்து போனேனே பூந்தளிர் நாக்கை கடித்து கொண்டாள் .அவள் திருமணத்தின் மையமே இந்த கோவில் கும்பாபிசேகம் தானே …அதையே மறந்து எப்படி இருந்தேன் …குழப்பத்துடன் கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாள் .

கொண்டு வந்திருந்த கலவை சாதங்களோடு சமைத்த பொங்கலைநும் சேர்த்து உண்டு விட்டு , அனைவரும் அலுப்பு தீர ஆங்காங்கே போர்வைகளை விரித்து அமர்ந்துவிட்டனர் .பூந்தளிர் விழிகளை சுழற்றி பார்த்து பொன்னுரங்கம் …தள்ளியிருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருப்பதை பார்த்து அங்கே சென்றாள் .

” வா தாயி .இங்கே உட்கார் …” தனக்கு அருகில் காட்டினார் .

” ம்ஹூம் …” தலையசைத்து மறுத்தவளின் பார்வை அருகிலிருந்த தாழம்பூ புதரின் மேல் பயமாக படிந்த்து .” இதற்குள் பாம்பு இருக்காதா மாமா ….? “

” இருந்த்து தாயி .முந்தி ஒரு காலத்தில் .நான் சின்ன புள்ளையா இருக்கும் போதெல்லாம் இந்த கோவிலே தாழம்பூ புதருக்குள் தான்
இருக்கும் . பாம்புகள் சுற்றி சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கும் .நாங்கள் பய பக்நியோடு கையில் ஒரு குச்சியோடு
பாதையில் உரசி ஒலியெழுப்பி , ஐயனின் கோசத்தை உரக்க பாடியபடி தாழம்பூ புதர்களை விலக்கியபடி இந்த கோவிலுக்கு வருவோம்.சத்தம் கேட்டு பாம்பகள் சரசரன்னு ஓடி ஒளிஞ்சினும். நாங்க சாமி கும்பிட்டு போவோம் .இப்போ காலம் மாறிடுச்சு .மழை குறைஞ்சுடுச்சு.புதர்களும் குறைஞ்சுடுச்சு .பாம்பு மட்டும் இருக்கவா செய்யும் …? நீ பயப்படாம உட்காரு தாயி ….”

பெஞ்சின் நுனியில் மெல்ல அமர்ந்தவள் , வெடுக்கென எழுந்து நின்று கொண்டாள் .பாம்பு எதுவும் கடித்து விட்டதா …என்பது போல் அவர் பார்க்க ” இருக்கட்டும் மாமா .நான் நம் ஊர் கும்பாபிசேக விசயம் பேச வந்தேன் .எங்கள் திருமணத்தோடே எல்லா பிரச்சனையும முடிந்தநென்றீர்களே …இப்போது என்ன மாமா …? “

” ம் …ஒன்று முடிந்தால் ஒன்று .உன் சொந்தக்கார பையன் குமரன் உங்கள் பக்க இளந்தாரி பயல்கள் கொஞ்ச பேரை கூட்டு சேர்த்துக் கொண்டு ஏதோ ஓர் இடைஞ்சல் பண்ணிக்கிட்டே இருக்கிறான் ….”

” பட்டுன்னு தலையில் நாலு தட்டு தட்டி தூக்கி போட வேண்டியதுதானே ஐயா ” சொன்னபடி வந்தான் குருபரன் .உனக்கு தட்டுவதை தவிர வேறு என்ன தெரியும் …சிவந்திருந்த அவன் முகத்தை பார்த்தபடி நினைத்தாள் பூந்தளிர் .

” நீங்க என்கிட்ட சொல்லவேயில்லையே ஐயா .முதலிலேயே சொல்லியிருந்தால் அவன் கையை காலை கட்டி கிணற்றில் வீசியிருப்பேன் ….”

” அதுதான் சொல்லவில்லை .சும்மாயிருடா .ஊருக்குள் இருக்கும் பிரச்சனை போதாதா …? “

” பேசிப் பார்க்கலாமே மாமா …? ” பூந்தளிர் மெல்ல கேட்க ….

” பார்த்தீங்களாப்பா …இவளோட இனப்பாசத்தை .அந்த தறுதலைகளை கூட்டி வந்து நாம் கூட்டம் போட்டு முடிவெடுக்கனுமாம் .இதுக்குத்தான் நான் அன்னைக்கே சொன்னேன் இவள் கும்பலோடு நமக்கு ஒத்து வராதுன்னு .நீங.கதான் கேட்காமல் கல்யாணத்தை முடிச்சிட்டீங்க . இப்போ நம்ம வீட்டு உப்பை தின்னுட்டு அவுங்க ஆளுங்க பக்கம் பேசுறா .”

” போதும் நிறுத்துடா .பூந்தளிருக்கு இந்த ஊர் மேல் இருக்கிற அக்கறை அவள் சாதியை விட பெரியது .எப்படின்னு கேட்குறியா …? சொல்றேன் .இருபத்தியைந்து வருடமாக நடக்காமலிருந்த மாரியம்மன் கோவில் கும்பாபிசேகத்தை நான் ரொம்ப முனைந்து பணத்தை அள்ளி வீசியாவது நடத்தி விட வேண்டுமென்று ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன் .அப்போது ஒருநாள் பூந்தளிர் என்னை வந்து பார்த்தாள் .அன்றொரு நாள் இரைக்க இரைக்க சைக்கிள் மிதித்து கார்த்திகை தீபம் வைத்த அன்று நம் வீட்டிற்கு வந்தாளே …அது போல் நெல் நாற்றுகளை நட்டு விட்டு அவற்றை நான் பார்வையிட்டபடி இருந்த போது வயலுக்கு வந்தாள் ….”

” ஐயா எங்க ஆளுங்களெல்லாம் நீங்க கும்பாபிசேகம் பண்ணக்கூடாதின்னு அரசாங்கத்தில் பிராது கொடுக்க போறாங்களாம் …”

” ஐயோ …ஏம்மா …? “

” இந்த கும்பாபிசேக வேலை பூராவும் உங்க சாதி ஆளுங்கதானே பாக்குறீக .அதனால் எல்லாம் முடிந்த்தும் எங்க சாதி ஆளுங்களை அந்தக் காலம் மாதிரி கோவிலுக்குள்ள கூட விட மாட்டீங்களாம் .கோவிலை உங்க சாதிக்கு சொந்தமாக்கிடுவீங்களாம்
அதனால் இந்த கும்பாபிசேகத்தை நிறுத்தனும்னு அடுத்த வாரம் நம்ம ஊருக்கு வரப் போகிற கலெக்டர்கிட்ட மனு கொடுக்க போறாங்களாம் .கவர்ன்மென்டையே கும்பாபிசேகம் பண்ண சொல்ல போறாங்களாம் ….”

கவர்ன்மென்டே செய்வதாக இருந்தால் அவர் கை காசை போட்டு பொன்னுரங்கம. ஏன் போராடிக் கொண்டிருக்கிறார் …ஐந்து வருடங்களாக அரசாங்கத்துடன் போராடிப் பார்த்து விட்டு நடக்கமல்தானே காரியத்தை தன் கையில் எடுத்துள்ளார் .

“பயிருக்கு உர விசயம் , மருந்தடிப்பது விசயமாக உங்கள் வயல்காட்டுக்கு அடிக்கடி வரும் போதெல்லாம் நீங்கள் இந்த கோவில் கும்பாபிசேகத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளையெல்லாம் நான் பார்த்துக் கொண்டும் , கேட்டுக் கொண்டும்தான்யா இருக்கிறேன் .அதனால்தான் இந்த விசயத்தை உங்கள் காதில் போட வேணும்னு தோ ணுச்சி .சொல்லிட்டேன் ….” சைக்கிளில் ஏறி பறந்துவிட்டாள் .

ரகசியமாக கலெக்டரிடம் பேச நினைத்திருந்த பூந்தளிரின் பக்க ஆட்கள் அங்கே திடுமென வந்து நின்ற பண்ணையாரை பார்த்து விழித்தனர் .தொடர்ந்து கலெக்டரை வைத்து நடந்த பேச்சு வார்த்தையில் தங்களது சாதிக்கான உறுதியை கொடுக்காமல் கோவில் கும்பாபிசேகத்தை நடத்தவிட மாட்டோம் என உறுதியாக நின்றனர்
அவர்களுக்கான உறுதியாக பொன்னுரங்கம் சொல்லும் யோசனைகள் எதையும் அவர்கள் ஏற்பதாக இல்லை .

கடைசியாக பொன்னுரங்கம் அவர்கள் சாதி பெண் பூந்தளிரை தனது மகனுக்கு மணமுடித்து தன் வீட்டு மருமகளாக்கி கொள்வதாகவும் , இதனால் அவர்கள் சாதி ஆட்கள் இவர்களுக்கு சொந்தமாகி விடுவதால் கோவிலுக்குள் தடையில்லாமல் நுழையலாம் என்ற யோசனையை கூற பூந்தளிர் பக்கத்து ஆட்கள பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்

இப்போது கலெக்டர் இடையீட்டு இது மிக நல்ல முடிவென இரு பக்கத்தினரிடமும் பேசி சுமூகமாக முடித்து அனுப்பினார் .வெறும் சொல்லோடு நின்று விடாமல் விரட்டி வந்த பல பிரச்சனைகளை சமாளித்து இவர்கள் திருமணத்தை நடத்தி காட்டினார் பொன்னுரங்கம் .

” நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லையே …? ” குருபரன் முனங்கினான் .கலெக்டரிடம் ஊர் ஆட்களோடு சேர்ந்து பொன்னுரங்கம் பேசி எடுத்து முடிவை அவன் அறிவான் .ஆனால் அதன் அடிப்படை பூந்தளிரென அவன் அறியமாட்டான் .

” நீ எங்கேடா என்னை பேச விட்டாய் …கல்யாணம் பேசிவிட்டு வந்த நாளிலிருந்து என்னை முறைத்து கொண்டே என் எதிரில் கூட வராமல் திரிந்தாய் .இதில் பூந்தளிரை உனக்கு எப்படி விளக்க ? உன் மனைவி உங்கள் திருமணத்திற்கு முன்பே அவள் சாதி ஆட்களை விட்டு விட்டு நம் பக்கம் யோசித்தவள் .அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை முதலில் நிறுத்து ….”

பொன்னுரங்கம் தன்னை புகழ்வதில் சிறு சங்கடப்பட்ட பூந்தளிர் ” அவரிடம் …குமரன் மாமாவிடம் பேசிப் பார்க்கலாமே மாமா …? ” பேச்சை திசை திருப்பினாள் .

தந்தையின் விளக்கத்தால் மனைவியை சிறு நெகிழ்வுடன் நோக்கியபடி இருந்த குருபரன் அவளது இந்த கேள்வியில் மீண்டும் கோபமுற்று அவளை முறைக்க ஆரம்பித்தான் .




What’s your Reaction?
+1
30
+1
14
+1
4
+1
1
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!