Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே-8

8

 தன் பேச்சிற்கான விளக்கங்களை மனதிற்குள் உதயன் தேடிக் கொண்டிருக்க பாரிஜாதம் மீண்டும் தலை குனிந்து வேலையை ஆரம்பித்தாள். “சரியான ஓட்டை வாய் அண்ணா. எல்லாவற்றையும் உளறி வைத்திருக்கிறான்”

உதயன் ஆசுவாசத்துடன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.

“அதென்ன பாரிஜாதம் உன் அத்தான் பார்க்கத்தான் மலை மாடு மாதிரி இருக்கிறான்.உள்ளே வெறும் கூடு. ஒரே தள்ளில் பத்தடி தூரம் போய் விழுகிறான்.”

“அவர் இங்கே பெரிய சிலம்பாட்டக்காரர் தெரியுமா? அவரையே நீங்கள் மிரட்டி விட்டீர்கள்”

வெளிர் ரோஜா இதழ்கள் பிரிந்து முல்லை அரும்பென தெரிந்த பற்களை பார்த்தபடியே “என்னை மிரட்ட நினைத்தால் நான் சும்மா இருக்க முடியுமா ?”என்றான்.

“உங்கள் உடம்பு வாகை பார்த்து நோஞ்சான் என்று நினைத்து விட்டார் போல” பாரிஜாதத்தின் இதழ்கள் மென்மையாய் பிரிந்தன.

ஹையோ சிரிக்கிறாளே… ஒன்றை ஒன்று அடிக்கடி தொட்டுக் கொள்ளும் அந்த உதடுகளின் மேல்கூட பொறாமை வந்தது உதயனுக்கு.

“நோஞ்சானா? நானா ?சட்டையை கழட்டி காட்டட்டுமா? சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேனாக்கும்” தன்னை தானே பெருமை அடித்து கொண்டான்.

“இப்படித்தான் அத்தானும் சொல்லிக் கொண்டிருந்தார். சிலம்பம் சுற்றி காட்டட்டுமா என்று… எந்நேரமும் கையில் கம்பு ஒன்றுடன் சுற்றிக் கொண்டிருப்பார்.அவரோடு சிலம்பம் ஆடுகிறீர்களா?”

உதயன் விக்கித்தான். “என்ன சொல்ல வருகிறாய்?”

” வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று”

இரு கைகளையும் உயரத் தூக்கினான் “நான் சரண்டர். உன் அத்தான் பெஸ்ட் .சேட்டிஃஸ்பைடு ?”




“ரொம்ப திருப்தி” பாரிஜாதத்தின் முகத்தில் உண்மையிலேயே திருப்தியான பாவம்.

இரண்டு நாட்களாக இரவும் பகலுமாக மலர் அலங்காரங்களை செய்து முடித்தவள் அவற்றை வாழை மட்டைகளுக்கு இடையே வைத்து வாழைநார்களால் கட்டி பாதுகாத்தாள். மறுநாள் அவர்கள் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அது நகரின் மையத்தில் இருந்த பெரிய திருமண மண்டபம்.

மணமேடை அரண்மனை போன்ற செட் போட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவற்றிற்கு இடையே இவர்கள் கொண்டு வந்த பூ அலங்காரங்களை பொருத்த வேண்டுமாம்,

இரண்டும் எப்படி ஒத்து போகும் உதயன் கேட்க “அப்படி ஒத்துப் போக வைப்பது தான் நம் வேலை” புன்னகைத்தபடி வேலையை தொடங்கினாள் பாரிஜாதம்.

பிரம்மாண்டமான இந்த அரண்மனை அமைப்பு மணமகனின் விருப்பமாம்.வாசனை மலர்களால் அலங்காரம் என்பது மணமகளின் விருப்பமாம்.இரு வீட்டினரும் பேசி இரண்டு அலங்காரங்களையும் ஒன்றாக செய்ய பணித்திருந்தனர்.

ரத்தின கற்கள் பதித்தது போன்ற தோற்றம் கொடுத்த தூண்களில் சரமாக மல்லிகை தொங்கவிட துவங்கினர் இருவரும்.

“ஏய் என்ன இது? எங்கள் டெக்கரேஷன் என்ன ஆவது? இப்படியா அசிங்கப்படுத்துவீர்கள்?” கத்தியபடி வந்தார் ஒருவர். சற்று முன்பு இவர்கள் வந்தபோது தள்ளி நின்று அலங்காரத்தை ரசித்துக்கொண்டிருந்தவர்.

“நாங்கள் பூ அலங்காரம் செய்ய வந்திருக்கிறோம் அண்ணா” பாரிஜாதம் பணிவுடன் சொன்னாள்

“இதுபோல எங்கள் அலங்காரத்தை மறைத்து எதுவும் செய்யக்கூடாது அப்படி ஓரமாக இதோ இந்த மூலையில் அதோ அந்த ஓரத்தில் நான்கைந்து பூச்செண்டுகளை சொருகி விட்டு போங்கள்” கறாராக பேசினார் அவர்.

இரவும் பகலும் விழித்திருந்து இத்தனை வகைகளை தயாரித்து வந்து ஓரமாக போடவா? உதயன் சிலிர்த்தபடி அவரிடம் சண்டைக்குப் போனான் “நாங்கள் கொண்டு வந்த அலங்காரங்களை நினைத்த இடத்தில் பொறுத்தி விட்டுத்தான் போவோம்”

“அப்படி முடியாது”

இருவருமாக வாய் தகராறில் இறங்க, “உங்கள் டெக்கரேஷன் பாதிக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பாரிஜாதம் எவ்வளவோ வாதாடியும் பிரச்சனை மாப்பிள்ளை பெண்ணின் பெற்றோர் வரை போயே நின்றது. மணமகன் வீட்டினர் துள்ள, மணமகள் வீட்டினர் கொஞ்சம் இறங்கியே பேசினர்.

மணப்பெண் மணமகனை கெஞ்சுதலாக பார்க்க,அவன் கைகளை உயர்த்திக் கொண்டு நடுவில் வந்தான். “மேடம் நீங்கள் எங்கள் அலங்காரத்திற்கு பாதிப்பு இல்லாமல் பூ அலங்காரம் செய்யுங்கள்.எந்த இடத்தில் பிடிக்கவில்லையோ அதனை எங்கள் பக்க ஆட்கள் மாற்றி விடுவார்கள்”

” சரிதான் நான் அலங்கரித்து முடித்தபின் பாருங்கள்”

“இரண்டு மணி நேரத்தில் வருகிறேன்” அந்த டெக்கரேட்டர் விரைப்புடன் வெளியேறினார்.

உதயன் “செய்ததெல்லாம் வீணாகி விடுமா பாரிஜாதம்?” கவலையாய் கேட்டான்.

“இல்லை சரி செய்ய முயற்சிப்போம். வாருங்கள்”




பாரிஜாதம் சற்று முன் தோரணமாய் தொங்க விட்டிருந்த மல்லிகை இடையே சிவப்பு நிற ரச குண்டுகளை வாழை நாரோடு சேர்த்து ஒட்டினாள்.இதனால் மாணிக்க கற்கள் பதித்தது போன்ற தோற்றத்தில் இருந்த தூண்களோடு இந்த அலங்காரம் கச்சிதமாய் பொருந்திப் போனது.

மேலே சரம்சரமாய் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடி குண்டுகளுக்கு இடையே மல்லிகை பந்துகளை தொங்க விட்டாள். அரசரின் சிம்மாசனம் போல் போடப்பட்டிருந்த மணமக்கள் இருக்கையின் பின்புறம் தங்கமும் சிவப்பும் கலந்து மின்னிக்  கொண்டிருந்த வெல்வெட் துணியின் நடுவே மல்லிகை மலர்களால் செய்த இதய அமைப்பை வைத்தாள். கண்ணாடி ட்யூபுக்குள் கலர் கலராய் ஒளிர்ந்து கொண்டிருந்த மணமக்கள் பெயரை இந்த இதய வடிவ அமைப்பின் மேல் பொருத்துமாறு எலக்ட்ரீசியன்களை கேட்டுக் கொண்டாள். இப்போது சிகப்பு பட்டைக்கு நடுவே முத்துக்கள்  போன்ற மல்லிகைகளுக்கு இடையே வண்ண வண்ணமாய் ஒளிந்தது மணமக்கள் பெயர்கள்.

உயரமான இடங்களுக்கு ஏறி அவள் சொன்னதை செய்த கொண்டிருந்த உதயனுக்கு அவளுடைய கலையின் மேல் பிரமிப்பு வளர்ந்து கொண்டே போனது எவ்வளவு அழகாக சிந்திக்கிறாள்!

கிளிக் என்ற சத்தம் பக்கவாட்டில் மிக மெலிதாக கேட்க ஏணி மீது நின்றிருந்தவன் கோபத்துடன் இறங்கினான்.மேடையோரம் கும்பலாக நின்று கொண்டிருந்த நான்கைந்து இளைஞர்களில் ஒருவன் கையில் இருந்த போனை பறித்தான்.”யாரை போட்டோ எடுக்கிறாய்?”

” நான் டெகரேஷனை எடுத்தேன்”

” அப்படியா எங்கே காட்டு?” அவன் போனை பின்னால் மறைத்தான்.

“எங்கள் வீட்டு கல்யாண அலங்காரம். உனக்கு ஏன் காட்ட வேண்டும்?”

” அந்த அலங்காரத்தை செய்ததே நான் தான்.கொண்டா பார்க்கலாம்”வலுக்கட்டாயமாக போனை பிடுங்கி பார்க்க போனில்  இருந்தது பாரிஜாதம் மட்டுமே. கண்கள் சிவக்க பளாரென அவனை அறைந்தான் உதயன்.

போனை தூக்கி எறியப் போக அவன் பதறி தடுத்தான். “வேண்டாம் அண்ணா ,திரும்ப இன்னொரு போன் அப்பா வாங்கித் தர மாட்டார்”

“டெலிட் பண்ணுடா” இன்னமும் அங்கே நின்றிருந்த மற்றவர்களின் ஃபோனையும் செக் செய்த பிறகே அவர்களை விட்டான்.

” அதோ அந்த ஓரம் இந்த இருவாச்சி மலர்களை வட்டமாக சுற்றி வைத்தால் எப்படி இருக்கும்?” மேடையின் மறு ஓரம் நின்றிருந்த பாரிஜாதம் ஆலோசனை கேட்க அவளை முறைத்தான்.

” வேலை முக்கியம்தான் சுற்றிலும் நடப்பதை கவனியாமல் என்ன வேலை?”

பாரிஜாதம் அவனை ஏறிட்டாள். “வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாலே கழுகுகள் உடலுக்கு வட்டமிடத்தான் செய்யும்.அதற்கு பயந்தால் ஒன்று வீட்டிற்குள் முடங்கிக் கொள்ள வேண்டும் அல்லது உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு நடக்க வேண்டும். இரண்டில் எதை செய்யட்டும் நான்?”

உதயன் ஆச்சரியமாக அவளை பார்த்தான் “இத்தனை நாட்களாக நான்றிந்த பாரிஜாதம் இல்லை நீ”

” பயம் என்று வீட்டிற்குள் இருக்கவும் மாட்டேன்.சுதந்திரம் என்று நெஞ்சு திமிறி திரியவும் மாட்டேன். நான் எந்த இடத்திலும் நானாகத்தான் இருப்பேன்.இதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன்” அமைதியாக கூறிவிட்டு வேலைகளை தொடர்ந்தவளை மனம் நிறைய காதலுடன் பார்த்தான் உதயன்.

எப்போதும் புடவையே அணியும் பாரிஜாதத்தை அன்று வேலைக்கு செல்வதற்காக சுடிதார் அணிந்து கொள்ளமாறு யோசனை சொன்னான் .”அது எனக்கு பழக்கமற்ற உடை” என்று மறுத்திருந்தாள்.

அபாயமான இறக்கங்கள் அற்ற அவளுடைய சட்டையும் சேலையும் வெகு கவனமாக அவள் உடல் முழுவதுமே மூடித்தான் இருக்கும். ஆனாலும் அங்கிங்கு நகர்ந்து கைகளை உயர்த்தி இறக்கி என வேலை பார்க்கும் போது உடைகள் ஒதுங்குவது இயல்பு தானே! அது போன்ற நேரங்களை தான் அந்த விடலை படம் பிடித்து வைத்திருந்தான்.

உதயன் தயக்கத்துடன் போட்டோ விபரம் சொன்ன போது “என்ன செய்து விடுவான்? சோசியல் மீடியாவில் பரப்புவான், அவ்வளவு தானே? எனக்கு தெரியாமல் என்னை எடுக்கும் புகைப்படங்கள் எப்படி என்னையும் என் எதிர்காலத்தையும் பாதிக்கும்?இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கடந்து போய்க் கொண்டே இருப்பேன்” நிமிர்வாக அறிவித்துவிட்டு அடுத்த அலங்காரத்திற்கு நகர்ந்து போனவளை பிரமிப்பாக பார்த்தான்.

பின்னேயே போய் அவளுக்கு கை நீட்டினான் “கை கொடு பாரிஜாதம்.இந்த மாடர்ன் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களுக்கு நீ ஒரு முன் உதாரணம்”

” அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் என் இயல்புப்படி இருக்கிறேன்.தன்னியல்புகளை தக்க வைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் சிறப்பானவர்களே. இப்போது அலங்காரங்களை பார்த்து சொல்லுங்கள் எப்படி இருக்கிறது?”

மேடையை விட்டு இறங்கி அலங்காரங்களை பார்த்த உதயன் பிரமித்தே போனான்.அரண்மனை ஒன்று பூ அலங்காரங்களுடன் விசேஷத்திற்கு தயாரானாற் போல் இருந்தது அந்த மேடை. அதே நேரம் உள்ளே நுழைந்த அரண்மனை டெகரேட்டர் மண்டப வாயிலிலேயே நிலை குத்திய பார்வையுடன் நின்று விட்டார்.




” எப்படி இருக்கிறது ?”உதயன் புருவம் உயர்த்தி கேட்க  “அது… அது நல்லாத்தான் இருக்கு, பரவால்ல இந்த பொண்ணு கொஞ்சம் திறமைசாலிதான்.அந்த குமரன் எங்க கூட சரி மல்லுக்கு நின்னான் என் பூ அலங்காரம் தான் முதல்ல தெரியணும்னு…இவள் பரவாயில்லை சமாளிச்சுட்டாள்”

“ஓ குமரனிடம் முன்பே பேசி இருக்கிறீர்களா?”

” எங்க ரெண்டு பேரையும் உட்கார வைத்து தானே இரண்டு பக்க வீட்டுக்காரங்களும் பேசினாங்க”

ஆக பிரச்சனை இருக்கும் இடம் என்று தெரிந்தும் இதனை மறந்து விட்டு இதற்குரிய பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போய் திருமணம் செய்து கொண்டிருக்கும் குமரனை எந்த வகையில் சேர்க்க என்று உதயனுக்கு தெரியவில்லை.

“ஆஹா…அற்புதம்… சூப்பர்… ஃபென்டாஸ்டிக்…”இரு பக்கத்து வீட்டினரும் வந்து நின்று அலங்காரங்களை ரசித்து பாராட்ட மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் அப்பொழுதே மேடையில் ஆங்காங்கே நின்று செல்பி எடுத்துக்கொள்ள துவங்கினர்.

“ஆனாலும் ஆறு கூடை பூக்கள் மீதம் ஆகிவிட்டனவே பாரிஜாதம்?”

“அண்ணன் சொன்ன கணக்குப்படி தான் பூக்கள் ரெடி பண்ணினேன்” முடிந்தவரை மேடையை அலங்கரித்தும் விட்டோம். ஆனாலும் நிறைய மீந்திருக்கிறது” பாரிஜாதம் குழம்பினாள்.

“வீட்டு அலங்காரத்திற்கு எப்போது வருகிறாய் அம்மா?” மணமகளின் தாயார் வந்து கேட்க, “வீட்டில் அலங்காரமா?” என்றாள்.

” என்னம்மா அதற்கும் சேர்த்து தானே பணம் பேசினோம்.சாயந்தரம் நான்கு மணிக்கு எல்லாம் வீட்டிற்கு போய்விடு.அங்கே என் மாமியார் வேலைக்காரர்கள் இருப்பார்கள். இரண்டு மணி நேரத்தில் அலங்காரத்தை முடித்துவிட்டு போ”

பாரிஜாதம் புரியாமலேயே தலையை அசைக்க உதயன் அவள்புறம் குனிந்து மெல்லிய குரலில் சொன்னான் “இன்று இரவுக்காக அறையை அலங்கரிக்க சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்”

“இரவில் என்ன விசேஷம் இருக்கக்கூடும்?”

உதயன் நோகாமல் நெற்றியில் தட்டிக் கொண்டான்.”நல்லா நாலு பக்கத்துக்கு வசனம் மட்டும் பேசு. எதார்த்தம் தெரியாது. ஃபர்ஸ்ட் நைட் ரூமை டெக்கரேட் பண்ண சொல்கிறார்கள்”

“ஓ” பாரிஜாதத்தின் முகத்தில் சங்கடத்துடனான சிவப்பு.”அ… அது எப்படி நான் செய்ய முடியும்?”

“மணமேடை அலங்காரம் செய்தவள் தான் இதையும் செய்ய வேண்டும். மீந்திருக்கும் பூக்கள் இதற்குத்தான். கணக்கு புரிகிறதா?”

பாரிஜாதிற்கு புரிந்தது. இது அவளுடைய தொழில்தான். இதில் வெட்கத்திற்கோ கூச்சத்திற்கோ ஏதுமில்லைதான். உதயன் உடன் இருப்பதுதான் அவளுடைய கூச்சத்தின் காரணமாக இருந்தது.




What’s your Reaction?
+1
35
+1
28
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!