Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே-6

6

 

“என்ன வேண்டும்?” உதயன் கடுப்புடன் கேட்க அவன் மேல் விழுந்து குதறி விடுவான் போல் பார்த்தான் அவன்.

” நான் பாரியை பார்க்க வந்திருக்கிறேன்.நகர்”

“எந்த வள்ளலையும் ஒளித்து வைக்கும் வழக்கம் எனக்கு கிடையாது.கொடுத்துவிட்டு போய் வாருங்கள்” டிபன் கேரியருக்கு கையை நீட்டினான்.

” உன்னை இங்கே தங்க அனுமதித்திருக்கிறோமே…நாங்கள் வள்ளல்தான்” நீண்ட கையை தட்டி விட்டு “பாரி” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தான்.

” அட என்னம்மா நீ இன்னுமா இப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? எழுந்து நாலு வாய் சாப்பிடு” பாரிஜாதத்தின் அருகே டிபன் கேரியரை வைத்து விட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவனை எரிச்சலாக பார்த்தான் உதயன்.

“நீங்க கிளம்புங்க நாங்க சாப்பிட்டுக்கிறோம்”

“யோவ் தள்ளி போய்யா. நான் பேசிக் கொண்டு இருக்கிறேனில்ல!ஓடிடு”

பாரிஜாதம் சட்டென எழுந்தாள்.”நீங்க போங்க அத்தான். நான் சாப்பிடுகிறேன்”

” இருக்கட்டும்மா.நான் இருக்கேன்”

பாரிஜாதம் டிபன் கேரியரின் உச்சியில் இருந்த இலையை உருவி விரித்து பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.அடிப்பாவி உன் கூடவே இருக்கிறேன் ஒருவாய் சாப்பிடுகிறாயா என்று கேட்க மாட்டாயா? பசியில் காந்திய வயிற்றை கைகளை குறுக்கே கட்டி அழுத்திக் கொண்டான் உதயன்.

பரக்க பரக்க வாயில் உணவை அள்ளி அடைக்கும் பாரிஜாதத்தை திருப்தியாக பார்த்தவன் “சரி சாப்பிடு.வருகிறேன்” எழுந்து போனான். அடுத்த நொடியே இலையை மூடிவிட்டு தானும் எழுந்து விட்டாள் பாரிஜாதம்.

” ஐயோ ஏம்மா உட்கார்ந்து சாப்பிடு” உதயன் சொல்ல, “வயிறு நிறைந்து விட்டது” இலையை போட்டுவிட்டு கையை கழுவினாள்.

” நீங்க சாப்பிடுங்க”

” நீ சாப்பிடவில்லை என்றால் அந்த பஃபல்லோ கிளம்பி இருக்க மாட்டான்.சரிதானே?” உதயன் கேட்க பாரிஜாதம் வியப்பில் விழி விரித்தாள்.”என்ன சொன்னீர்கள் ?”

“பஃபல்லோ …காட்டெருமை. அவனை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது”

பாரிஜாதத்தின் குவிந்த இதழ்கள் மெலிதாய் விரிந்தன.அதிகாலையில் பூவின் இதழ் ஒன்று மெல்ல விரிவது போல் தோன்றியது உதயனுக்கு.

ஆஹா சிரிக்கிறாளா என்ன!?  பற்கள் வெளி தெரியாத நிலையில் மீண்டும் இதழ்களை குவித்து கொண்டாள் பாரிஜாதம்.”அதுதான் அவர் பெயர்” சொன்னவள் குரலிலும் சிறிது நகை எட்டிப் பார்த்தது.

“எது ?”

“முத்துக்காளை “




இப்போது உதயனுக்குமே புன்னகை வந்தது.”சரிதான் பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார்கள்” சொன்னபடி சாப்பிட அமர்ந்தான்.

மீண்டும் தனது பழைய இடத்திலேயே அமர்ந்து கொண்டவளை பார்த்தபடியே உண்டு முடித்தான். வெளிறிப் போய் என்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒரு வண்ண சேலை.தலை குளித்து நுனி முடிந்து தரையைத் தொட்டு பரவி கிடக்கும் நீண்ட கூந்தல். ஒற்றை மூக்கில் பளீரிடும் வெள்ளைக்கல் மூக்குத்தி. இவை தவிர காது கழுத்து கை என சிறு ஆபரணங்களும் இன்றி நெற்றியில் பொட்டு கூட இல்லாமல் அமர்ந்திருந்தவள் வரைந்து முடித்துவிட்டு கிழித்து போட்டு கிடக்கும் அழகிய ஓவியமாக தோன்றினாள்.

அந்த ஓவியத்தை முழுதாக்கி அழகு பார்க்கும் ஆவல் கொண்டான் உதயன். இவளுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே.. இந்த சோகத்தை போக்க வேண்டுமே… தவித்தது அவன் உள்ளம்.அவனது போன் ஒலித்தது.

எதிரே ராஜீவ் “உதய் நீ சொன்ன ஆளை பிடித்து விட்டேன். இதோ என் எதிரில் தான் இருக்கிறான். காலையில் தான் கல்யாணம் முடித்துக் கொண்டிருக்கிறான். இப்போது கணவனும் மனைவியாக உலா போய்க் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய?அவனை தூக்கிக் கொண்டு வந்து விடவா?”

உதயன்  போனை காதில் வைத்தபடியே யோசித்தான். அவன் பார்வை பாரிஜாதத்தை தொட்டு வருடியது. இவளை விட்டு போவதா? தீர்மானமாக அவன் தலை ஆடியது. “இல்லை ராஜீவ்.அவனை விட்டு விடு”

” ஆனால் நீதானே அவசரம் என்று…”

” அந்த அவசரத்திற்கு இப்போது அவசியம் இல்லை. இங்கே எல்லாம் முடிந்து விட்டது.நான் பார்த்துக் கொள்கிறேன்”

” சரிதான் அப்போது நான் விலகி விடுகிறேன்”

“செய். அவன் இப்போது எங்கே இருக்கிறான்?”

” இது காட்டுக்குள் இருக்கும் ஏதோ ஒரு சிறிய கோவில். அந்த பெண் வீட்டினரின் குலதெய்வம் போலும். அங்கே தான் திருமணம் முடித்திருக்கின்றனர்.இதோ இப்போது காட்டுக்குள் கணவனும் மனைவியும் கைகோர்த்துக்கொண்டு…”

” சரி சரி விடு அவர்களை.என்ஜாய் பண்ணட்டும்” போனை கட் செய்து விட்டு நிமிர்ந்த உதயன் திகைத்தான். பாரிஜாதம் அவனுக்கு எதிரே நின்றிருந்தாள்.

“என்ன அண்ணனை பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?” உதயன் அவளை கூர்ந்தான்.நான் பேசியதை கேட்டிருப்பாளா?சிறிய தடுமாற்றத்துடன் தலையை ஒரு மாதிரி ஆட்டினான்.

” ஆமாவா? இல்லையா ?எல்லா பக்கமும் இப்படி தலையாட்டினால் நான் என்ன நினைப்பது?”

” ஹப்பா கையில் பிரம்பு மட்டும் தான் இல்லை.சரியான கறாரான டீச்சரம்மா நீ “சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்.

அசைவேனா என்பது போல கண்களில் கேள்வியுடன் அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் பாரிஜாதம்.

அவள் கண்களில் இருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டான். “இன்னமும் ஒன்றும் தெரியவில்லை”

பெருமூச்சு ஒன்றுடன் விலகிப் போனாள்.




இரவு உணவு கொண்டு வந்த முத்துக்காளை கதவை திறந்தவனிடம் “நாளை நீ கிளம்பி விட வேண்டும்”என்ற உத்தரவை இட்டுவிட்டு உணவுடன் பாரிஜாதத்திடம் நடந்தான்.

“ப்ப்போடா” அவன் முதுகிற்கு பேசியவன் தனது லேப்டாப்பிற்குள் நுழைந்து கொண்டான்.

“இதெல்லாம் தெரியுமா உனக்கு?” அருகில் வந்து நின்று லேப்டாப்பை விழிவிரித்துப்பார்த்தான் முத்துக்காளை.

“ஏதோ கொஞ்சம். சினிமா பாட்டும் படமும் பார்ப்பேன்” சொன்னவனின் திரையில் சிதறி கிடந்த கொச கொச எழுத்துக்களை பார்த்த முத்துக்காளை நம்பாத பார்வையை அவனுக்கு தந்தான்.




“நிஜம்தான் பஃபல்லோ.எனக்கு இது அவ்வளவாக தெரியாது”

” எனக்கெல்லாம் இது அலர்ஜி. இதை படித்தே ஆகணும்னு வாத்தியார் சொன்னதால தான் எட்டாவதோடு படிப்ப நிறுத்திட்டேன்”நிறுத்திய படிப்பையே தகுதி போல் அறிவித்தவனுக்கு இப்போதுதான் அந்த சந்தேகம் வந்தது.

“என்னை என்னவென்று கூப்பிட்டாய்?”

“அது….வந்து…உங்க பெயரை இங்கிலீஷ்ல சொன்னேன்”

“அட…பெயரக் கூட இங்கிலீசுல சொல்லலாமா?சரித்தான்”

“அத்தான்” அவசர அழைப்புடன் அறைக்குள் இருந்து வேகமாக வந்த பாரிஜாதம் உதயனை பார்த்ததும் தயங்கி நின்றாள்.

“இதோ இவளது பெயரை இங்கிலீசுல சொல்லுங்க” முத்துக்காளை கேட்க,அவள் இதென்ன கதை என உதயனை பார்த்தாள்.

அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்த அவன் மென்மையாக உச்சரித்தான்.”டிவைன் ப்ளவர்”

“அப்படின்னா?”

“தெய்வீகம்..தேவதை…இப்படி அர்த்தம்”

“ஆனால் இதில் பாரிஜாதமே வரலையே?”

“என் மனம் சொன்னதை சொன்னேன்.மற்றபடி…”




“போதும்…போதும்.உன் மனசு கண்டபடி சொல்லுது.நீ சொல்லு பாரிஜாதம்” முத்துகாளை இறுகிய முகத்துடன் நின்றான்.

கொஞ்சம் அந்தப் பக்கம் போயேன் என்பதாக கேட்ட பாரிஜாதத்தின் பார்வை புரிந்தும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான் உதயன்.

பெரும் சலிப்புடன் முத்துக்காளை பக்கம் திரும்பியவள் “என் போன் வேண்டும் அத்தான்”என்றாள்.

உதயன் அதிர்ந்து பார்க்க முத்துகாளை தலையை சொறிந்தான். “அது பெரியப்பா கிட்ட இருக்குதுன்னு நினைக்கிறேன். நான் பேசி வாங்கியார முயற்சிக்கிறேன்” போய்விட்டான்.

” ஆக உன் போனை எடுத்து வைத்துக்கொண்டு தர மறுக்கிறார்களா?” படபடத்தவனை அலட்சியம் செய்து மீண்டும் அறைக்குள் திரும்பினாள்.

“நீ ஏன் இப்படி இருக்கிறாய் பாரிஜாதம்? அப்படி என்ன உனக்கு இங்கே இருக்கிறது?” பின்னேயே வந்து கேட்டவனை முறைத்தாள்.

“என் குடும்பம் இங்கேதான் இருக்கிறது”அழுத்தமாகச் சொன்னாள்.

” எது உன் குடும்பம்? போனை பிடுங்கி ஒளித்து வைத்துக் கொண்டு அப்பா இறப்பிற்கு கூட அருகே வரவிடாமல் விரட்டுப்பவர்களா? சொல் பரிஜாதம்.எதற்காக உன் போனை எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்கள்?”

“அதெல்லாம் எங்கள் குடும்ப விஷயம்.இதில் நீங்கள் தலையிடாதீர்கள்”

உதயன் முகத்தில் அடி வாங்கினாற் போல் ஒரு நொடி நின்றான்.மறு நொடியே “எனக்கு உரிமை இருக்கிறது. நான் அப்படித்தான் கேட்பேன்”

பாரிஜாதம் எழுந்து நின்றாள். திமிராய் தலை உயர்த்தினாள். “நாளை காலை விடிந்தவுடன் நீங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்பலாம் உதயன்” கம்பீரமாக அறிவித்துவிட்டு மீண்டும் சரிந்து அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து அண்ணார்ந்து பார்த்தவள் அவளை பார்த்தபடியே எதிரே நின்றிருந்தவனை கண்டு புருவம் உயர்த்தினாள். மீண்டும் மீண்டும் அவன் முகத்தை ஆராய்ந்தும் எதுவும் பிடிபடவில்லை.

” என்ன இங்கே தங்குவதற்கு காரணம் தேடுகிறீர்களோ?”

” இல்லை…” என்று சொல்லி நிறுத்தியவன் “அப்படியே உன்னை சப்பென்று ஒரு அறை வைத்தால் என்ன என்று யோசிக்கிறேன்” என்றான்.

பாரிஜாதம் திகைத்து பார்க்க அடி கொடுக்கும் தீவிரம் குறைந்து மென்மையானது அவன் முகம். “என்னடா எதற்காக இந்த துன்பம்? இந்த உறவுகளுடன் இருந்தே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?”

மயிலிறகாய் வருடிய அவன் குரலை தவிர்க்க கால்களை கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்துக் கொண்டாள். அருகமர்ந்து அவளை தன் மார்பில் போட்டு ஆறுதல் அளிக்க துடித்த ஆவலை அடக்கியபடி பாதங்களை தரையில் அழுத்தி ஊன்றி பார்த்திருந்தான் உதயன்.

“யாரது வீட்டில் ?”கனத்த குரலுடன் ஓங்கி ஓங்கி வீட்டின் கதவு தட்டப்பட்டது.

” அந்த பஃபல்லோ தான்னு நினைக்கிறேன்.கொம்பால கதவை முட்டுது”என்றபடி வாசலுக்கு நடந்தவனை முந்திக்கொண்டு போனாள் பாரிஜாதம்.

“நீங்க இங்கேயே இருங்க நான் பேசிக் கொள்கிறேன்” மிக லேசாக தன் தோள் உரசியபடி அவசரத்துடன் சென்றவளை யோசனையாய் பார்த்தபடி மெல்ல பின் நடந்து எட்டிப் பார்த்தான்.




கடா மீசை வைத்த இரண்டு ஆண்கள் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.இல்லை சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்ற பார்க்கிறாயா? என்பது போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தது.

அண்ணனும் தங்கையும் போனை ஏன் எடுக்கவில்லை? என ஒருவன் கத்தினான்.உதயன் அவர்களுக்கு இடையே நுழைந்தான்.

“சாரி சார் பாரிஜாதத்தின் அப்பா நேற்று இறந்து விட்டார்.இவர்கள் அந்த வருத்தத்தில் இருக்கின்றார்கள்.

பாரிஜாதத்தின் போன் வேறு தொலைந்து விட்டது.அதற்குப் பதில் இந்த நம்பரை வைத்துக் கொள்ளுங்கள்” என்று உதயன் கொடுத்த நம்பர் அவனுடையது.

“இது இருக்கட்டும்.இப்போது எங்களுக்கு என்ன பதில்? பூ அலங்காரம் செய்து கொடுப்பதாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு அதை பற்றி பேச அழைத்தால் போனை எடுக்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது?”

“பூ அலங்காரம் தானே சார்… தேதியை சொல்லுங்கள். நிச்சயம் நல்லபடியாக முடித்து தருகிறோம்”

” நீங்க யாரு இவங்க தானே பேசுனது ?”

உதயன் தயங்கவே இல்லை.”நான் இவர்கள் தாய் மாமா.இப்போது உங்கள் ஆர்டரை நல்லபடியாக முடித்து தருவது என் பொறுப்பு.போய் வாருங்கள்” அவர்களை அனுப்பி வைத்தான்.

” இது என்ன ஆர்டர் பாரிஜாதம்?”

“போன மாதமே கல்யாண அலங்காரத்திற்காக வாங்கிய ஆர்டர். அண்ணன் முன்னிருந்து செய்து முடித்திருக்க வேண்டும்.அட்வான்ஸ் பணமாக ஒரு லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறோம்.செய்து முடிக்காவிட்டால் மிகவும் அசிங்கமாக போய்விடும்”பாரிஜாதம் குரலில் ஒருவித குன்றல் இருந்தது.

“இதற்கு ஏன் முகம் வாட விடுகிறாய்? கல்யாணம் ஆர்டர் தானே அருமையாக முடித்துக் கொடுத்து விடலாம்”உதயன் சொல்ல அவனை ஏறிட்டவளின் கண்களில் கண்ணாடித்தாள் பளபளப்பு.

“அது…வந்து… அட்வான்ஸ் பணம் அண்ணனிடம் தான் இருக்கிறது.பூக்கள் தவிர்த்து  அலங்காரத்திற்கான பொருட்கள் வாங்க வேண்டும்.ஆட்களுக்கு சொல்ல வேண்டும்.அண்ணன் எப்போது வருவார் என்று தெரியவில்லை”

உதயனுக்கு விளங்கியது.இந்த பணத்தை வைத்துத்தான் குமரன் தன் திருமணத்தை முடித்துக் கொண்டிருக்கிறான். அந்த நிமிடம் குமரன் மேல் மிகுந்த வெறுப்பு வந்தது அவனுக்கு.




What’s your Reaction?
+1
35
+1
35
+1
2
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!