Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை -17

17

மலர் தன் மொட்டுக் கரங்களைக் குவித்து வணக்கம் என்று கூற எத்தனித்து, ஆனந்தனின் முகம் கண்டதும், நழுவுவது போல் இருந்தது, எதிர்பாராமல் இத்தனை பெரிய அதிர்ச்சியை தாங்கும் பலம் அவளின் பூவுடலுக்கு இல்லாமல் போனதால் அருகிலிருந்த தூணைப் பற்றிக்கொண்டாள்.

வணக்கம் மலர்? என்றான் ஆனந்தன்.

ஒன்றும் செய்வதறியாது கற்சிலையாய் நின்றுவிட்ட மலரை உசுப்பினாள் வசந்தி. என்ன மலர் அவர் வணக்கம் சொல்றார்? நீ சும்மா நிக்குறீயே?

எதிர்பாராமல் சந்திப்பு அவங்களை வியப்படைய செய்துவிட்டது போலும் ? ஆனந்தனின் பேச்சு அவளை மேலும் கலவரப்படுத்த…!

அக்கா மணலில் விளையாண்டது உடம்பெல்லாம் நமநமங்குது, நான் போய் குளிச்சிட்டு வரேன், மன்னிச்சிடுங்க, என்று கூறிவிட்டு வேகமாய் நடந்தாள். மலரின் இந்தப் போக்கு, வியப்பைத் தந்தாலும், வேறு வழியின்றி, காலையிலேயே அவளுக்கு உடம்பு சரியில்லை, நான் தான் வம்பு பண்ணி வெளியே கூட்டிப் போனேன் என்று வசந்தி சமாதானமாய் பேசினாள்.

நீங்க போய் அவங்களை கவனிங்க நான் அப்புறமா வந்து பார்க்கிறேன் என்றான் ஆனந்தன்.

வசந்தி ராஜைப் பார்த்து தலையசைத்து விட்டு நகரவும், வாப்பா, உனக்குப்பிடிச்ச அவல் கொழுக்கட்டை செய்யச் சொல்லியிருக்கிறேன் குளிச்சிட்டு சாப்பிடு, என்றார்.

நான் அண்ணன் கூட கொஞ்சம் பேசணும் அம்மா! நீங்க ரெஸ்ட் எடுங்க, குழந்தைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு அண்ணனும் தம்பியும் தனியிடம் சென்றனர்.

எண்ணன்னா உன் விஷயத்தை இன்னமும் அம்மாகிட்டே சொல்லலையா?





இன்னும் இல்லைடா, இப்பத்தான் வசந்தியும், மலரும் வீட்டிலே உள்ளவங்ககிட்டே சகஜமா பேசறாங்க. அதனால கொஞ்ச நாள் போகட்டும்ன்னு இருக்கேன். அது சரி உன்னோட வேலை எனாச்சு வெற்றியா ?

பாதி வெற்றி, தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்க அனுமதி
கிடைச்சாச்சு இன்னும் இரண்டு மாசத்திலே சென்னையிலும் ஒரு தொழிற்சாலை துவங்கிடலாம்.,

நல்லது…

அண்ணா இங்கே தொழிற்சாலை வேலையெல்லாம் எப்படி நடக்குது?

மகேஷ்தான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கான். நானும் அலுவலகத்திற்ககு போவதற்கு முன்பு தொழிற்சாலை பக்கம் ஒரு பார்வை பார்த்திட்டுதான் போவேன்.

சரி. மலரை அலுவலகத்திற்கு அழைத்துப் போனீயா?

நாளைக்குத்தான் கூட்டிப்போகும்படி அம்மா சொன்னாங்க?

சரி நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்.
ஆனந்தன் வெளியே சகஜமாய் பேசினாலும் மனம் முழுக்க மலருடன் தனிமையில்பேசும் தருணத்தை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தது. மலர் என்னை இந்த இடத்தில் எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டாள். பாவம் இந்த திடீர் அதிர்ச்சியை தாஙகிக் கொள்ள இன்னும் சில மணி நேரங்கள் அவளுக்குத் தேவைப்படும் . அதன் பிறகு அவளைப் போய் சந்திக்கலாம், வசந்தி கூட இருப்பதால் எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டாள். என்ற நினைப்புடன் தன் வேலையைக் கவனிக்கலானான்.

கடந்த காலம் கனவு, வருங்காலம் பெருமூச்சு. இவை இரண்டுமே மலரின் வாழ்வில் பெரும் புயலை கிளப்பி விட்டனவே என்ற நினைப்பில் அனலில் விழுந்த புழுவாய்த் துடித்தாள் மலர் கடவுளே நான் உனக்கு என்ன தீங்கிழைத்தேன். எனக்கு ஏன் இப்படியொரு வாழ்வைக் கொடுத்தாய். யாரை இனி அடையவே முடியாது என்றும், ஆனந்தனைப் பார்த்தால் திரும்பவும் எங்கே சலனப்பட்டு விடுவோமோ என்று பயந்து ஓடிவந்தேனோ, அவனிடமே வந்து அகப்பட்டுக் கொள்ளும்படி செய்துவிட்டாயே? என்று வருந்தினாள்.

தினமும் இனி இவனைக் கண்டு, பேசி அவனோடு இணைந்து பணிபுரிவது என்பது சாத்தியம் தானா? மற்ற அனைத்தையும் விட இது மிகவும் கடினமானதல்லவா? தினம் அவன் முகத்தைக் கண்டால், தான் இத்தனை நாள் கட்டிக் காத்த அனைத்தையும் இழக்க வேண்டியது அல்லவா வரும், என ஒரு முடிவிற்கு வர இயலாமல் தவித்தாள் மலர்.

அறை முழுவதும் இருட்டாய் இருந்தது, வசந்தி மலரின் பின்னேயே வந்தவள் விளக்கை உயிர்பித்து கட்டிலில் விழுந்து கிடந்த தங்கையின் தோளைத் தட்டினாள். திரும்பியவளின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் பதறித்தான் போனாள் பெரியவள்.

என்னம்மா மலர் ஏன் அழறே? என்று பதறியவளிடம்,

அக்கா நான் ஊருக்குப் போயிடட்டுமா? என்ற தங்கையின் கேள்வி குண்டைப் போட்டாற்ப் போல் இருந்தது.

என்னடாயிது ! நம்ம நிலைமையைப் புரிஞ்சிட்டுத்தான் பேசறீயா? அப்பாவோட ஆபரேஷன் செலவுக்காகத்தானே நாம இங்கே வந்திருக்கோம், எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும்போது, இப்ப என்னடா திடீர்னு? மதியம் கூட இங்க வந்தது என் மனசுக்கு ஆறுதலாயிருக்குன்னு சொன்னியே ? உனக்கு என்னதான் பிரச்சனை என்கிட்டே மனம் திறந்து பேசக்கூடாதா?

மலருக்கே கூட எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என்று தோன்றியது, ஆனால், விநாடியில் அந்நினைப்பை மாற்றிக் கொண்டாள். ஆனந்தனின் குடும்பத்தின் மேல் இருக்கும் நல்ல அபிப்பிராயம் கெடும். இந்த வயதிலேயே காதல் வலையில் விழுந்து விட்டாளே என்று தன்னையும் தவறாக நினைக்கக் கூடும். அதனால் எதைப்பற்றியும் இப்போது சொல்ல வேண்டாம் என்ற நினைப்பில்,

திடீர்னு அம்மா, அப்பா நினைப்பு வந்திடுச்சு அதான் அப்படிக் கேட்டுட்டேன் என்று உதடுகளை அழுந்தக் கடித்தபடி பேசினாள்.

அம்மாக்கிட்டே பேசறீயா ?

வேண்டாக்கா, இப்போ பேசினா அழத்தோன்றும், அப்புறம் அவங்களும் சங்கடப்படுவாங்க

இதோ பாரும்மா, நல்லதொரு குடும்பத்திற்கு மத்தியிலே வாழ நமக்குச் ச்நதர்ப்பம் அமைஞ்சிருக்கு, நீ உன் மனசிலே வேற எதையோ போட்டு குழப்பிக்கிறியோன்னு தோணுது.

எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்காகா. நான் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போகும்.

அப்படின்னா நீ ரெஸ்ட் எடு , நான் பிள்ளைகளுக்கு ஹோம்ஒர்க் சொல்லித்தரணும் என்று வசந்தி கிளம்பவும், அமைதியாய் யோசித்தாள் மலர்.

அக்கா சொல்வதும் சரிதான், ஆனந்தன் ஒருத்தருக்காக இத்தனை நல்ல உறவுகளை இழக்க வேண்டுமா? தவிரவும் தந்தை முழுமையாக உடல்நலம் பெற வேண்டுமே? அதுவரையில் பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டியதுதான். தனக்குள்ளாகவே ஒரு சமாதானத்திற்கு வந்தவள், வாசலில் அழைப்பொலி கேட்க வெளியே வந்தாள்.




வாசலில் ஆனந்தன் புன்னகையோடு நின்றான். ஏனோ அவளின் உள்ளத்தின் ஓரத்தில் சந்தோஷ மின்னல்கள் தெரிந்தன.

என்ன மலர் நான் உள்ளே வரலாமா? கேள்விக் கேட்டவனிடம் எந்தப் பேச்சும் பேசாமல் இருந்தாள் மலர். அவனாகவே உள்ளே நுழைந்தான். மெளனம் சம்மதம்,

அப்படி எடுத்துக் கொள்வது அறிவீனம், பிடிக்காமல் கூட பேசாமல் இருக்கலாம் இல்லையா?

அப்பப்பா உன் மவுனம் கரைந்து வாய் திறந்து விடடாயே அதுவே எனக்குக் கிடைத்த வெற்றிதான்.

வீண் பேச்சு எதற்கு? இங்கு ஏன் வந்தீர்கள்?

இந்தக் கேள்வி உனக்கே சற்று அபத்தமாக தெரியவில்லையா மலர்.

தவறுதான் இது தங்களுடைய வீடாகவே இருந்தாலும் அந்நியர்கள் இருக்கும் போது பிரவேசிக்ககூடாது இல்லையா?

நான் உன்னை அந்நியமாக நினைக்கவில்லையே? மலர் என் மேல் அப்படி என்தான் உனக்கு கோபம். நான் செய்த தவறை திருத்திக் கொள்ள எனக்கொரு சந்தர்ப்பம் தரலாமே?

பழைய விஷயங்களை எல்லாம் நான் எப்போதோ மறந்து விட்டேன். அதன் காரணமான சின்ன வடுக்கள் கூட இப்போது என்னுள் இல்லை,

இதை நான நம்ப வேண்டுமா?
அது தங்கள் விருப்பம்.

இன்னமும் உன் மனதில் நான் இருக்கிறேன் என்று என்னால் நிரூபிக்க இயலும்.

வீண் முயற்சி….

வெற்றியடைய முயல்வத தவறில்லையே நான் கஜினி முகம்மது பரம்பரையாக்கும்.

நான் பாறையாய் இறுகி விட்டேன் ஆனந்த்.

பாறை என்னைப் பார்த்த முதற்பார்வையிலேயே சற்று இளகிவிட்டதை நான்தான் கண்டேனே. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்றொரு பழமொழி உண்டு. சரி சரி முறைக்காதே, நான் இப்போ வேலை விஷயமாக பேச வந்தேன்.

நான் உங்களுடன் பணிபுரிவதாக சொல்லவில்லையே?

ஏன் பயமா மலர்?
அவன் குரலில் குழைவு ஏறி இருந்தது.

பயமா எனக்கென்ன பயம்…? உளறாதீர்கள்

மலர் எங்கே என்னுடன் பணிபுரிந்தாள் உன் கட்டுப்பாட்டை இழந்து என்னை நேசிக்க ஆரம்பித்து விடுவாயோ என்றுதானே பயப்படுகிறாய்.

என் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்குத்தான் அலைபாயும் மனது.

சரி அப்படின்னா எனக்கு கீழ் பணிபுரிவதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இருக்காது இல்லையா?

சில கணங்கள் யோசித்தவள், நாம் இப்போது மறுத்தால் ஆனந்தனின் கேலிக்கு ஆளாக நேரிடும் என்றும், இது தனக்கே ஒரு விஷப்பரிட்சை என்று எண்ணி, வருகிறேன் என்று தலையசைத்தாள்.

நன்றி !

ஆனா ஒரு கண்டிஷன் பழைய விஷயங்கள் எதையும் நீங்க…

நானாகப் பேசமாட்டேன்.

சரி இப்போ என்ன விஷயமாக வந்தீர்கள்?

அதற்கு முன்பு இன்று நான் வந்ததை முன்னிட்டு தேவியம்மா இனிப்பு செய்து இருக்காங்க. சாப்பிடலாம் வாயேன்.

மன்னிக்கவும், நீங்க வந்ததிலிருந்து எனக்கு சந்தோஷமே இல்லையே?

ஆனந்தன் சத்தமாய்ச் சிரித்தான். மலர் பொய் சொல்லவும் ஒரு திறமை வேணும். அது உனக்கு இல்லை, வீணாக முயற்சி பண்ணாதே, என்று கூறிவிட்டு ஒரு காந்தப் பார்வையை வீசிவிட்டு சென்றான் ஆனந்தன்.

அவன் போகும் வழியில் இருந்து கண்களை அகற்ற முடியாமல் தவித்தாள் மலர். ஆனந்தன் என் தடுமாற்றத்தை என்றுமே நீங்கள உணர்ந்து கொள்ள நான் காரணமாக மாட்டேன் என்று மனதிற்குள் சபதம் செய்து கொண்டாள். ஆனால், எல்லாவற்றையும் மிறி ஆனந்தனின் அந்தப் பார்வை அவளை என்னமோ செய்தது, இதிலிருந்து நாம் தப்பிக்க இயலுமா என்ற பயம் முதல் முதலாய் உதித்தது மலரினுள் !




 

What’s your Reaction?
+1
13
+1
17
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!