Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-19

19 

பள்ளிக்கூடம் இடைவேளை நேரம் முடிந்து வகுப்புகள் துவங்கி இருந்தது.

“குழந்தைகளா! நாளை மறுநாள் நம்ம பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் தினம் நடக்கப் போகுது.”உங்க அம்மா அப்பாவை கட்டாயம் அழைத்து வர வேண்டும். வகுப்பாசிரியரின் கட்டளையை ஏற்று மாணவ, மாணவியர்கள் அனைவரும் தலையாடினார்கள்.”

“ஏய் எங்க அப்பா புது கார் வாங்கி இருக்காரே நாங்க அதிலேயே வருவோம்”

“எங்க அம்மா கூட புது புடவை வாங்கி வச்சிருக்காங்க. பொடிசுகள் ஒன்றோடு ஒன்று ஆர்வமாய் பேசிக் கொண்டிருக்க ஆர்த்தி மட்டும் தனியே இருந்தாள்.”

“டீ! ஆர்த்தி ஏன் நீ மட்டும் கம்முன்னு இருக்கே?”

“எனக்குத்தான் அம்மா இல்லையே?” ஆர்த்தியின் கண்கள் அழுகைக்கு தயாராயின.

“ஆனா கண்காட்சியின் அப்போ உன் கூட உங்கூட ஒருத்தர் வந்தாங்களே அவங்கதானே உங்க அம்மா.”

“அது வந்து.. அவங்க எங்களை பார்த்துப்பாங்க.”

“ஆர்த்தி அவங்க உனக்கு தலை சீவி, கதை சொல்லி, தூங்கவைச்சு, படிப்பு சொல்லித் தந்து, சாப்பிட வைக்கறது எல்லாமே அவங்கதானே.”

“ஆமாம் உஷா.”

“அப்போ அவங்கதான் உங்க அம்மா.”

“நிஜமாவா?” ஆனா எங்க அம்மா தான் சாமிகிட்ட போயிட்டாங்களே?”

“திரும்பி வந்திருப்பாங்க, எங்க அம்மா கூட போன வாரம் திருப்பதி வரை சாமிகிட்டே போயிட்டு வந்திட்டாங்க,ஏய் மாலா நீ சொல்லேன்.”

“ஆமாம் ஆர்த்தி உஷா சொல்றது உண்மைதான்.”

அதற்குள் மணி அடிக்கவும், பிள்ளைகள் அனைத்தும் வீட்டிற்கு திரும்பினர். ஆர்த்தி வந்த நேரத்திலிருந்து வசந்தியையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

இரவு நேரம்

சாப்பாடு அறையில், அனைவரும் அமர்ந்து இருந்தனர். வசந்தி ஆகாஷிற்கு சப்பாத்தி தயார் செய்து கொண்டிருக்க, ஆர்த்தி பாட்டியின் மடியில் தஞ்சம் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.





“பாட்டி அம்மான்னா யாரு?” சிறுமியின் இந்த கேள்வியால் அறையில் இருந்த அனைவரும் ஒரு விநாடி ஆடித்தான் போனார்கள்.

“ஏண்டா செல்லம்?”

“சொல்லுங்களேன்?”

பெரியம்மாள் விழிக்க, ஆனந்தன் குழந்தையை அணைத்துக் கொண்டான். “பாட்டி வயசானவங்க இல்லையா? உன் கேள்வி அவங்களுக்கு புரியல நீ சித்தப்பா கிட்ட கேளுடா?”

“சித்தப்பா அம்மான்னா என்னவெல்லாம் செய்வாங்க?”

“பாடம் சொல்லி, சாப்படு ஊட்டி, தூங்க வைச்சு..”

“சித்தப்பா இதையேதான் என் தோழிகளும் சொன்னாங்க.”

“என்னன்னு?”ஒரு வாய் சாதத்தை ஊட்டியபடியே கேட்டான் ஆனந்தன்.

“ஆர்த்தி உங்க அம்மா திரும்பி வந்துட்டாங்கன்னு?”

“ஆர்த்தி நீ சும்மா சாப்பிட மாட்டியா?”

ராஜ், அதட்டவும் குழந்தை வேகமாய் பேசியது.

“போ, அப்பா உனக்குத் தெரியாது. நாளைக்கு எங்க பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் தினம், அதுக்கு அம்மாவும் வரணும்.”

“ஆர்த்தி ! திடீர்னு அம்மா கேட்டா நான் எங்கே போவேன். ராஜ் எரிந்து விழ,வசந்தி இவர்களின் பேச்சை கேட்டு வெளியே வர ஆர்த்தி அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“இதெல்லாம் எனக்கு இவங்க தானே செய்யறாங்க. அதனால் இனிமே நீங்க தான் என் அம்மா, ஆனா என் தோழிகள் கூட அப்படித்தான் சொன்னாங்க. வசந்தியை கையைக் காட்டி, நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா?” என்று ஆர்த்தி கேட்க,

வசந்திக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, யார் முகத்திலும், ஈயாடவில்லை. “உனக்கு எப்படி பிடிக்குதோ நீ என்னை அப்படியே கூப்பிடலாம்.” என்றாள்.

“ஆகாஷ்..”

“அவனும்தான்.”

“ஐ… ! சரி அம்மா நீ என்னை தூங்கவை. குழந்தை வசந்தியின் கையைப் பற்றிக் கொண்டு இழுக்க,

பெரியம்மா வசந்தியை சங்கடமாய் பர்த்தாள், “அறியாத குழந்தை பாவம் தாய் பாசத்தில் உளறுறா? நீ போய் தூங்க வைம்மா என்றாள்.

“உளறலை அம்மா பெரியவர்கள் சொல்லத் தயங்குகிற விஷயத்தைக் கூட பல நேரங்களில் குழந்தைகள் சொல்லி விடுகிறார்கள்.”

“என்ன ஆனந்தா சொல்றே?”

“நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்? வாங்க அறைக்குப் போகலாம். அண்ணா, மலர் நீங்களும் கூட வரலாம். நான் பேசப்போற விஷயத்தில் உங்க இரண்டு பேருக்குமே பங்கு உண்டு” பீடிகையாய் விஷயத்தை ஆரம்பித்தான்.

“என்னப்பா என்னென்னவோ பேசறே?”

“அம்மா, அண்ணணோட வாழ்க்கை இப்படி ஆனதைப் பற்றி நீங்க கவலைப் படாத நாளே இல்லை. அதை மனசிலே வைச்சு நான் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கேன். அதுக்கு உங்க அனுமதி தேவை. இந்த நாலு வருஷத்திலே அண்ணணும், நீங்களும் குழந்தைகளோட ரொம்ப கஷ்ட பட்டுட்டீங்க.

“சென்னையிலே வசந்தியை எப்போ பார்த்தேனோ அவங்க அமைதி, கருணை வழியும் குணம், இதெல்லாம் நம்ம அண்ணன் குழந்தைகளை கவனிக்கப் பொறுப்பானவங்கள்ன்னு தோணிச்சு, ஆனா நான் முடிவு பண்ணா போதுமா, நீங்க அண்ணன்,முக்கியமா குழந்தைகள் இவங்க எல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டாமா?”




“அதனாலதான் பாதிரியார் மூலமா நான் அவங்களை வரவழைச்சேன். என் கணக்குத் தப்பலை இனிமே முடிவேவெடுக்க வேண்டியது நீங்கதான்.”

“ஆனா இரண்டாவது திருமணத்திற்கு வசந்தியும், அவங்க குடும்பமும் சம்மதிக்கணுமே?”

“வசந்திக்குன்னு தனியா யாருமில்லை? எல்லாமே மலருடைய குடும்பம் தான். மலருடைய அப்பா குணமானதும் இதைப் பற்றிப் பேசுவோம்.” தாயிடம் மௌனம்.

பெரியவளை விடவும் இளையவள் ரொம்பவும் யோசித்தாள். திட்டமிட்டு தந்தையின் உடல் நிலையைக் காரணமாக்கி என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான்.

“என்னம்மா? நம்ம பண வசதிக்கு ஏத்த குடும்பம் இல்லையேன்னு அந்தஸ்த்து பாக்குறீங்களா?”

“என் பிள்ளையின் நிம்மதியை விட எனக்கு எதுவும் முக்கியமில்லைப்பா? வசந்தியையும், மலரையும் பார்த்த மாத்திரத்தில் ரொம்பவும் பிடிச்சிப் போச்சு, உங்க வீட்டிலேயே இது விஷயமா நான் யார்கிட்ட பேசணும்?’

மலர் யோசிதாள். ஆனந்தன் தான் ஒரு மாதிரியே தவிர இந்தக் குடும்பத்து மனிதர்கள் எல்லாம் தங்கமானவர்கள் தான். வசந்தி அக்காவிற்கு இந்த இடம் அமைவதும் நல்லதிற்குதான். இதைப் பற்றி நீங்க அம்மாவிடம் தான் பேசணும் என்றாள்.

“சரிம்மா, நான் பேசறேன். முதல்ல அவங்க சம்மதத்தை கேட்டுகிட்டா பின்னாடி மத்ததை பேசி முடிவு பண்ணிடலாம்.”

மலர் தலையசைத்தாள், ஆனந்தன் அவளை ஓரப்பார்வை பார்வை பார்த்தான், அவளோ பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

மறுநாளே,மலரின் உதவியோடு மகேஸ்வரியிடம் பேசினார்கள்.

“எனக்கு என்ன பேசறதுனே தெரியலை?”

“அம்மா என் மகன் ரொம்பவும் நல்லவன், வசந்தியோட பொறுமையும், குணமும் எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு குழந்தைகளும் வசந்தின்னா உயிரை விடறாங்க அதனால தான் இந்த முடிவிற்கு வந்தோம்.”

“அம்மா ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அந்த மாதிரி உங்க பிள்ளைகளை நேரில் பார்த்ததில் இருந்தே நான் புரிஞ்சிக்கிட்டேன். வசந்தியோட வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம் வராதான்னு நான் வேண்டாத கடவுள் இல்லை. இருந்தாலும் மலர் அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு..”

“தாரளாமா.. நான் அப்புறமா வசந்தியை உங்ககிட்ட பேசச் சொல்றேன். பெரியம்மாள் தொலைபேசியை வைத்ததும், அனைவரின் முகத்திலும் திருப்தி.”

“மலர் நாளையிலேயிருந்து நம்ம வீட்ல நவராத்திரி கொலு வைக்கணும். தேவியம்மா கிட்டே சொல்லியிருக்கேன். அவர் போன பிறகு இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் கலந்துக்கறது இல்லை. அதனால் நீதான் கூட இருந்து கவனிச்சுக்கணும்.”

“சரிம்மா..”




“ஆனந்தன் அவளுக்கு தேவையான உதவியை செய்யுப்பா.சரி வசந்திக்கு இதில் விருப்பமான்னு யார் கேக்கிறது.’

“அதையெல்லாம் நான் பாத்துப்பேன். உங்க சம்மதம் கிடைச்ச பின்னாடி மத்த எல்லாமே ரொம்ப சுலபம் தான்.”

மலர் வெளியே வந்தாள். மனக்குழப்பங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அறைக்குள் நுழைந்தாள். எப்போது தூங்கினாள். எப்போது விழித்தால் என்றே தெரியாது.

கண் விழித்தப் பார்த்த போது வசந்தி குளித்து விட்டு புதுப்புடவை உடுத்தியிருந்தாள்.வழக்கமாய் புள்ளியென நெற்றியில் முளைத்திருக்கும் கறுப்பு பொட்டு காணமற் போய் சிகப்பு குங்குமம் ஒட்டியிருக்க, இளையவளைக் கண்டு சிரித்தாள் வசந்தி.

“அக்கா இன்னைக்கு நீ ரொம்ப அழகாயிருக்கே!” என்றாள்.

“போடி போக்கிரி..”

“பொய் இல்லைக்கா..உண்மையிலேயே இப்பத்தான் உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு.

“இதிலே உனக்கு சந்தோஷம் தானே.”

‘பூரணமா.”

“ஆனா சித்தியும், அப்பாவும் இதற்கு சம்மதிக்கணுமே”

“அந்த கவலையே உனக்கு வேண்டாக்கா. நான் அம்மா கிட்டே பேசறேன். சொன்னதோடு இல்லாமல், தாயிடம் பேசவும் செய்தாள்.”

“கண்ணுக்கு தெரியாதவங்க மத்தியில் திடீர்னு சம்மந்தம் பேசினா எனக்கென்னமோ பயமா இருக்கு வசந்தியோட வாழ்க்கையில் இன்னொரு முறை,,,”

“இல்லேம்மா ஒரு முறை இவங்களைப் பார்த்தாலேப் போதும் உங்க மனசு குளிர்ந்திடும் நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.”

“அப்பாவுக்கும் திருப்திதான். ஆனால் வசந்தியோட சம்மதம் முக்கியமாச்சே அவ என்ன சொல்றா?”

“எப்போ கல்யாணமின்னு இப்பவே கவலைப் படறா?”

“அப்படியா? எங்களுக்கும் சம்மதம் தான் நானே அந்த பெரியம்மாவிடம் சொல்லிடறேன். பத்திரம்மா.”

“என்னக்கா அம்மாவும் சம்மதம் சொல்லியாச்சு, இனிமே தடையில்லையே!”

மாலையே கடைவீதிக்குப் போய் பொம்மைகள், தோரங்கள் விளக்குகள் என அனைத்து வகைகளையும் வாங்கிக் கொண்டாள். நீலவேணியும் மலரும் சேர்ந்து 9 படிகள் கொண்டு பட்டுத் துணியை விரித்தார்கள். முதல் துணியில் புல்,செடி, கொடி, 2-ம் படியில் சங்கு, சிப்பி,பொம்மை, 3-ம் படியில் எறும்புகள் வண்டுகள், 4-ம் படியில் நண்டு, மீன்கள்.5-ம் படியில் மிருக பொம்மைகள்,6-ம் படியில் மனித பொம்மைகள், 7-ம் படியில் முனிவர்கள்,மகான்கள்,8-ம் படியில் தேவர்கள், நாயன்மர்கள், 9-ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவி, என் கடவுளின் உருவம் பொம்மைகளையும் அடுக்கினாள்.

ஒவ்வொரு படிக்கட்டுகள் அமைக்கும் போது அழகிய ஜிகினாக்களை படிக்கட்டுகளில் ஒட்டினாள்.

“எல்லா வேலையும் முடிந்தது. என்ன கோலம் போட்டா இன்னமும் நல்லா இருக்கும். ஆனா மொசைக் தரையில் எப்படி கோலம் போடுவது?”

“கோந்து இருந்தால் கோலமவோடு கலந்திடு இப்போ கோலம் போட்டா அழியவே அழியாது. “ரங்கோலி கோலமிட்டு அதன் மீது ஜிகினாத்தூவி பளபளவென மின்லிட்டது.

காலைப் பொழுது விடியும் போது அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு நிமிர்ந்தாள். இடுப்பும், கையும் கடுகடுத்தது. நீலவேணி, குளிப்பத்ற்காக சென்று விட்டாள்.

“மலர்” என்ற குரலோடு ஆனந்தன் கையில் காபியோடு நின்றிருந்தான்.

“இது நீங்க ஏன்?”

“எங்க வீட்டுக்காக உன்னை வருத்திக்கிட்டு நீ உழைக்கிறே! உனக்கு நான் இதைக் கூட செய்யக் கூடாதா?”

மலர் காபியை வாங்கிக் கொண்டாள்.

“மலர் உனக்கு ஞாபகம் இருக்கா?”

“இதே மாதிரி ஒரு நாள் அதிகாலையில் தான் நான் உன்னை கடைசியா சந்தித்தது.?”

“காபியை கடைசி சொட்டு வரை உறிந்து விட்டு, நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“சொல்லேன்?”

“நான் தான் இங்கே வரப்போறேன்னு உங்களுக்கு முன்பே தெரியுமா ?”

“ம்… கடைசி நிமிடத்தில்!”

“பொய்… முன்னாடியே எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிகிட்டு திட்டம் போட்டு திரும்பி போக முடியாத படி ஒப்பந்தமும் போட்டு என்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்து இருக்கீங்க?”

“மலர்..”

“அப்பாவோட உடம்பை காரணம் காட்டி வேலைக்கு கூப்பிட்டா வந்திடுவா? மடங்கிப் போட்டுடலான்னு பார்த்தீங்க அப்படித்தானே?”

“முட்டாள் மாதிரி பேசாதே?”

“பின்னே எதுக்காக இப்படி செய்தீங்க?”

“காதல்..”

“மலருக்கு மலர் தாவும் வண்டு நீங்கள் காதலைக் காரணம் காட்டுகிறீர்களா?”

“நான் சொன்னது ராஜ்- வசந்தி காதலை,”

“என்னது?”

“எங்கண்ணணும், உங்கக்காவும் வாழ்வில் ஒண்ணு சேர விரும்பினாங்க. இந்தக் குடும்பத்தோடு முக்கியமா குழந்தைகளோட மனசிலே இடம் பிடிக்கத்தான் இந்த அந்தமான் பயணம். நடுவில் உங்க குடும்ப சூழ்நிலையும் தெரிய பண உதவி செய்யறதா சொன்னேன். அவங்க ஏத்துக்கலை. வேலை செய்து பணத்தை கழிச்சிடறதா சொன்னாங்க.”




“நல்ல கதை ஆனந்த் உங்களை நல்லவராய் காட்டிக்க எங்கக்கா மேல பழி போடறிங்க?”

அத்தை உங்களைப் பற்றி சொன்னது சரியாத்தான் இருக்கு.நல்ல வேளை நான் தப்பித்தேன். அவள் நகர முற்பட,”

அவளின் தோளைப் பற்றி நிறுத்தினான்.

“யார் என்னைப் பற்றி சொன்னது?” எந்த அத்தை.

சட்டென வார்த்தையை விட்டது நினைவிற்கு வந்தது, உண்மையை சொன்னவர்களை காட்டிக் கொடுக்க முடியாது. அவனின் பிடியில் இருந்து உதறி கொண்டு போக,

“முட்டாள், காதல்ங்கிற வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியுமாடி, நம்பிக்கை, யார் என்ன அவதூறு சொன்னாலும், நம்பி விடுவாயா? உனக்கு சுயமா புத்தி இல்லையா?”

“ஆனந்த்…”

“என் காதல் உண்மை. நிஜம், நிச்சயமாய் அதை நீ உணருவாய்.” ஆனந்தன் நகர்ந்து விட்டான். மலர் குழம்பிய மனதோடு நின்றிருந்தாள்.

ஒவ்வொரு நாளும் வித விதமான பலகாரங்களோடு நவராத்திரி சிறப்பாக நடைபெற்றது. பெரியவர்கள் அனைவரின் சம்மதத்தோடு ராஜ், வசந்தியின் கல்யாண ஏற்பாடும் நடந்தது. எளிமையாய் நவராத்திரி முடிவில் கோவிலில் வைத்து திருமணம் நடந்தேறியது.

வசந்திக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஒரு புறமும், ஆனால், தன் வீட்டுப் பெரியவர்கள் இல்லையே என்ற ஏக்கம் ஒரு புறமும் தனிமையில் அதை தங்கையிடம் வெளிப்படுத்தினாள்.

ஒரு மாலை நேரம் பெண்கள் இருவரும், பேசிக் கொண்டு இருந்த போது ஆனந்தன் அவளருகில் வந்தான் என்ன அண்ணி, பட்டு புடவை முகமெல்லாம் புன்னகையென அமர்க்களப் படுகிறீர்கள். “எப்படி நான் சொன்னபடி, உங்களுக்கும், அண்ணணுக்கு கல்யாணம் செய்து காட்டிடேன் பார்த்தியா அண்ணி?”

“நன்றி ஆனந்த்”

“சரி, இந்த மாதம் குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை, நீங்க நாலு பேரும் சின்ன சுற்றுலா போக ஏற்பாடு பண்ணிடறேன். அதாவது சென்னைக்கு!”

“ஓ… மகிழ்ச்சி…”

ஆனந்தன் நகரவும், வசந்தி தங்கையிடம் எல்லாவற்றையும் கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். அப்போது ஆனந்தன் சொன்னது அத்தனையும் உண்மைதான, வெளியில் திகைப்பைக் காட்டிக் கொள்ளாமால் போனாலும், கால்பந்து போலும் எல்லாரும் தன்னை ஆளுக்கொரு மூலையில் உதைப்பது போலோரு பிரம்மை.

“என்னை மன்னிச்சிருடா? என் சுய நலத்திற்காக இங்கே..”

“விடுக்கா நீ நல்லதிற்குத்தானே செய்தே ராஜ் ரொம்பவும் நல்லவர்.”

“நீ என் உணர்வுகளை புரிந்து கொண்டாய் அது போல் சித்தியும் அப்பாவும் தவறாய்..”

“அக்கா உங்களுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைய வேண்டும் என்று அப்பாவும், அம்மாவும் பேசாத நாளே இல்லை அதனால் உங்க முடிவு அவங்களுக்கும் சந்தோஷம் தான் தரும்.”

தமக்கையின் ஆறுதலான பேச்சில் வசந்தி சமாதனமடைந்தாள். ஆனால் மலரின் மனம் மறுபடியும் குழம்பிய குட்டையானது. இரவு உறக்கம் கண்களை எட்டிப் போனது.

ஒரே நாள் வாழ்ந்தாலும் எத்தனை சுதந்திரமாய் வாழ்கிற பட்டாம்பூச்சி அதை விட கேவலம் மனித ஜீவன். நம்பிக்கைகள் தகர்கிற போது மனிதனின் வாழ்க்கை முடிவு பெற்றிட வேண்டும். மாலையில் படரும் பனிபோல் அவளின் எண்ணங்கள் விரிந்து கொண்டே இருந்தது.

என்றாவது என்னுள் உண்டாகும் சிறு சந்தோஷம் கூட, இப்போது ஊற்றில் எழும் நீர் குமிழ் போல் மறைந்து போய் விடுகிறதே!

தோட்டதில் ஒவ்வொரு மரமும் இடைவெளி விட்டு நிற்கிறது. இது போலத்தான் சுகங்களுக்கும் துயரங்களுக்கும் காலம் எனும் ஒரு சிறிய இடைவெளி தருகிறது. யோசித்துக் கொண்டே வந்தவளுக்கு வெகுதூரம் நடந்து விட்டதை காலின் மெல்லிய வலி உணர்த்தியது. திருப்பிப் போக எத்தனித்த நேரம் குசு குசுவென்று எங்கோ பேசும் ஒலி,

நீலவேணியும், ஆனந்தனும் தெரிந்தார்கள். இந்த நேரத்தில் இவங்க இரண்டு பேருக்கும் என்ன வேலை? மேற்கொண்டு அவர்களின் அருகில் நடந்தாள் மலர்! ஆனந்தன் ஏதோ கோபமாய் பேசுவது போலவும், நீலவேணி அழுது கொண்டே கையெடுத்து கும்பிடுவதையும் பார்த்ததும்,

“ச்சீ ஆனந்தன் இந்தப் பெண்ணையும் விட்டு வைக்கவில்லையா?” என்று கோபமடைந்தாள் மலர்.

பேசிய படி திரும்பி வந்த ஆனந்தன்.இவளை கண்டதும், “மலர் இதென்ன இந்நேரத்தில்!”

“அப்படி வந்ததால் தானே உங்களின் திருட்டுத் தனம் தெரிந்தது!

“என்ன சொல்றே?”

நீலவேணி திரு திருவென்று விழித்தாள்,அவளை சுட்டி காட்டி,”வேளை கெட்ட வேளையில் இந்த சின்ன பெண்ணுடன் ச்சே நினைக்கவே அறு வெறுப்பாய் இருக்கிறது.”

“மலர்..”

“அன்று என்னவோ காதலுக்கு நம்பிக்கைதான் முக்கியம் என்று வசனம் பேசினீர்கள் இப்போது என்னாயிற்று?”

“மலர் உண்மைக்கு திரையிட்டு கண்டதே காட்சி, கொண்டதே கோலமென்று பேசுவதை நிறுத்து”

“இனிமேலும், உங்களை பேச்சை காது கொடுத்து கேட்க நான் பைத்தியக்காரி இல்லை. எத்தனை பெரிய குடும்பத்தில் பண்பாளரான ஒருவரின் தம்பியாய் இருந்து கொண்டு இத்தனை கேவலமான புத்தியா உங்களுக்கு?”

படபடவென்று பேசிவிட்டு உடல் நடுங்க ஓடி விட்டாள். ஆனந்தன் தலையில் கைவைத்துக் கொண்டான்.

உண்மையெனும் பாலின் மேல் பொய்யின் ஆடை மூடி மறைத்து விட்டது. திரிந்து போன மனதோடு யாரோடும் ஒட்டியிருக்க முடியாமல் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தாள் மலர்.




What’s your Reaction?
+1
12
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!