karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-20

20

” ஏய் குரு …ஏன் இப்படி பண்ற …? ” பொன்னி பதறினாள் .

” சும்மாயிருங்க மதினி ்அவள் கொஞ்சநேரம் உள்ளே கிடக்கட்டும் .வாய் …வாய் …தாங்க முடியலை …”

” டேய் அவளுக்கு நீச்சல் தெரியாதாம் .நீ என்ன இப்படி செய்கிறாய் …? இது விளையாடும் நேரமில்லை …போ …போய் அவளை காப்பாற்று …” பொன்னி குருபரனை பிடித்து உள்ளே தள்ள முயன்றாள் .அவன் அசையாமல் நின்று கிணற்றினுள்  பூந்தளிரை கவனித்தான் .

” குரு போடா …பாவம்டா அவள் ….” பொன்னி தானே குதிக்க தயாராக அவளை தடுத்து நிறுத்தியவன் பூந்தளிரின தலை இரண்டாவது  தடவை  நீரின் மேல் தெரிந்து திரும்ப உள்ளே அமிழ்ந்த்தும் உள்ளே குதித்தான் .நீரினுள் மூழ்கியவன் கீழே போய்கொண்டிருந்த பூந்தளிரின் கூந்தலை பிடித்து மேலே இழுத்தான் .ஐம்பது விநாடிகளில் அவள் நீண்ட முடியை தன் கைகளில் சுற்றி அவளை இழுத்தபடி நீரின் மேல் வந்து கிணற்றின் படிக்கட்டில் போட்டான் .மேலே அண்ணாந்து பொன்னியை பார்த்து பயப்பட ஒன்றுமில்லை என சைகை செய்தான் .

பூந்தளிரை புரட்டி போட்டு அவள் முதுகில் தன் முட்டியால் அழுத்தி வயிற்றிலிருந்த தண்ணீரை ஙெளியேற்றினான் .வயிற்றினுள்ளிருந்த நீர் வெளியேறியதும் கொஞ்சம் உடல் லேசாக வாயாலும் , மூக்காலும் ஒரே நேரத்தில் சுவாசிக்க முயன்று திணறினாள் பூந்தளிர் .அவள் உச்சந்தலையில் அடித்து தலையின் தண்ணிரை வெளியேற்ற முனைந்தான் .

” கையை எடுங்க …எ…எவ்வளவு கோபம் உங்களுக்கு …? என்னை கி …கிணற்றில் …த …தள்ளி …கொ …கொல்ல பார்க்கிறீர்களா …? ” பேச முடியாமல் திணறினாள் .

,” உன் தொண்டையிலும் , மூக்கிலும் தண்ணீர் அடைத்துக் கொண்டுள்ளது .அதை வெளியேற்றினால்தான் உன்னால் நன்றாக பேச முடியும் ….நான் …” என்றபடி தன் முகத்தருகே நெருங்கிய அவனது முகத்தின் செயலை ஊகித்து அவன் கன்னத்தில் கை வைத்து தள்ளினாள் .

” வே …வேண்டாம் .தொடா …தீர்…கள் …தள் …ளி ..போ …போங்கள ….” அவள் தள்ள தள்ள அவள் முகத்தின் மீது கவிழ்ந்தவன் அவளது இரு கன்னங்களையும் பற்றி அவளது மூக்கின் மீது தனது வாய் வைத்து , அவளுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த நீரை உறிஞ்சி துப்பினான் .




இப்போது மூச்சு சீராக  “என்ன செய்கிறீர்கள் …? ” சிவந்த தன் மூக்கு நுனியை வருடியபடி முணுமுணுத்தாள் .

” இதுவரை ஒன்றுமே செய்யவில்லை ….” அவள் குரலைப் போலவே தானும் குரலிறக்கி முணுமுணுத்தான் .

” சின்னக்குழந்தைகளை குளிப்பாட்டியதும் மூக்கிலிருக்கும் தண்ணீரை எடுப்பார்களே .அப்படி செய்தேன் …” அவன் ஆட்காட்டி விரல் நீண்டு அவள் மூக்கு நுனியை வருடியது .

” இதைத்தவிர இப்போது வரை வேறு ஒன்றுமே செய்யவில்லை …” தாபம் தெறித்தது அவன் குரலில் .இந்த மோக தேடலில்  பூந்தளிரின் உடல் சிலீறிட ஏற்கெனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவள்  மேலும் நடுங்க தொடங்கினாள் .அத்தோடு திடீரென நினைவு வந்து அவசரமாக மேலே நிமிர்ந்து பார்த்தாள் .

” மதினி ..இல்லை .அப்போதே போய்விட்டார்கள் ….” அவளுக்கு தகவல் தந்துவிட்டு அவளுக்கு கீழிருந்த படியில் அமர்ந்து கொண்டு கிணற்றின் சுவரில் தன் இரு கைகளையும் தலையின் பின்னால் வைத்து சாய்ந்து கொண்டு வசதியாக அவளை விழியால் மேய்ந்தான் .

கொஞ்சம் முன்னால் குளிர்ந்த பூந்தளிரின் மேனியை இப்போது திடீரென சூடு சூழ்ந்த்து .உதட்டை கடித்து தன் உணர்வை அடக்கியவள் முழங்கால்களை உயர்த்தி உடலோடு கட்டிக்கொண்டு தன்னை குறுக்கியபடி அமர்ந்தாள் .கிணற்று நீர் இப்போதும் அவர்கள் இருவரின் உடலில் பாதியை மறைத்து தழுவி ஓடியபடி இருந்த்து .

தன் கைகளை குவித்து சிறது நீரை அள்ளியவன் சட்டென அவள் முகத்தில் எறிந்தான் .திடுமென முகத்தை தாக்கிய நீரில் திடுக்கிட்டு நீரை துடைத்து போட்டு விட்டு அவனை முறைத்தாள்.

” என்னை கிணற்றிற்குள் தள்ளி விடுமளவு கோபமா …? “

” ம் …உன் மேல் இருக்கிற கோபத்திற்கு உன்னை இன்னும் என்னென்னவோ செய்ய வேண்டுமென தோன்றிக் கொண்டேயிருக்கிறது .ஆனால் …உனக்கிருக்கிற கோபத்திற்கு அறைந்தாலும் அறைந்து விடுவாயென்றுதான் ….” அவன் குரலில் மேலும் கிளர்ச்சியை உண்டாக்க ….

” இதற்காகத்தான் திட்டமிட்டு கிணற்றினுள் தள்ளினீர்களா …? ” மெலிந்த குரலில் கேட்டாள் .

” எதற்காக ….? “

————–

” ஒரு விபரம் கேட்டால் சொல்லாமல் முறைத்தால் எப்படி தளிர் ….? ” அவன் கைகள் நீண்டு நீரினுள் வெளுத்துக்  துவண்டு   கிடந்த அவள் கால்களை தூக்கி தன் மடி மேல் வைத்துக்கொண்டது .வெளிர் கால்களில் சுருண்டிருந்த பச்சை நரம்புகளை வருடியவன் ” நீ உன் பெயருக்கேற்றபடி தளிர் போலவே இருக்கிறாய் …” என்றான் .பூந்தளிரின் உடல் துடித்து சிலிர்த்தது .

” குளிருதாடா … இங்கே  வா ….” ஆதரவாய் இரு கரங்களையும் விரித்தான் .வா …எனக்குள் வந்து அடங்கி விடு என அழைத்த அவனது அழைப்பு பூந்தளிரின் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை தூண்டிவிட்டது .

அவன்புறம் சாயத் தொடங்கி விட்ட உடலை கஷ்டப்பட்டு நிலை நிறுத்தி படியில் சாய்ந்து கொண்டவள்   ” ம்ஹூம் …” என மறுத்துவிட்டு , விழி திறக்க பயந்து கண்களை கரங்களால் மூடிக்கொண்டாள் .

முகம் மூடிய அவள் கரங்களை வருடியவன் , ” சரி வேண்டாம் .இப்போது கண்களை திறந்து சுற்றிலும் பார் ….” என்றான் .




கைகளை எடுத்துவிட்டு கண்களை சுழற்றியவளின் பார்வையில் பட்ட சூழ்நிலை திகிலூட்டியது . கரடு முரடான பாறைகள் ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருக்க , பாசி படர்ந்திருந்த சுற்றுச் சுவரில்  நிறைய வளர்ந்து நீண்டிருந்த ஏதேதோ செடிகள் , இடுப்பு வரை தொட்டிருந்த நீர் கருமையாக இருக்க , ஏதோ ஓர் ” உவ்வ் ” எனும்படியான ஓர் ஒலி அங்கே நிரம்பியிருக்க , அடியில் , பக்கவாட்டில் என அந்த கிணற்றில் சுரந்து கொண்டிருந்த நீரூற்றுக்களின் மெல்லிய நீரொலி இப்போதுதான் காதுகளில் கேட்க ..தானிருப்பது கிணற்றினுள் என்ற உண்மை அமானுஷ்யம் கலந்து பயமாய் தாக்கியது பூந்தளிரை .

” ய் …பயமாயிருக்கு ….” உடல் தூக்கி போட முகத்தை மூடி மெலிதாய் அலறியவளை அள்ளி தன் மேல் போட்டுக் கொண்டான் .

” ஏய் தளிர் இங்கே பார் …கண்ணை திறந்து என்னை பார் .நான் இருக்கிறேனில்லையா ….நான் இருக்கும் போது பயப்படலாமா …? ம் …நான் உன்னை அப்படி விட்டு விடுவேனா …? சுற்றிலும் பார் .இந்தக் கிணறு எனது சிறு வயதிலிருந்து எனக்கு பிடித்தமான இடம் .ஐயா எனது மூன்று வயதிலேயே இங்கே கூட்டி வந்து உள்ளே தண்ணீரினுள் இறக்கி விட்டு விட்டார் .ஆறே மாத்ததில் நான் இங்கே நீச்சல் கற்றுக் கொண்டேன் தெரியுமா …? “

” மூன்று வயதிலா …? அப்போது உங்களுக்கு பயமாக இல்லையா …? “

” என்ன பயம் .ஐயாதான் என் கூடவே இருந்தாரே ்அவர் துண்டை என் இடுப்பில் இறுக்கி கட்டிவிட்டு தண்ணீருக்குள் இறக்கிவிடுவார் .எனக்கு ஜாலியாக இருக்கும் .நீச்சல் பழகியதும் இந்த கிணறு எனக்கு பிடித்தமான இடமாக மாறிவிட்டது . பிறரிடம் சொல்ல முடியாத எனது தடுமாற்றங்களை  , துக்கங்களை எல்லாமே நான் இந்த கிணற்றுக்குள்தான் கொண்டு வந்து கொட்டியிருக்கிறேன் .அப்போது இந்த தண்ணீர் என்னை  தாயாக மாறி வருடிக் கொடுத்து ஆறுதல்படுத்தி அனுப்பும் .இப்படி எனது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இந்த கிணறை பிடிக்கவில்லை , பயமாக இருக்கிறது என்கிறாயே ….” தலையை வருடி , புருவங்களை நீவி , முதுகை தடவி …விரல்களை சொடுக்கெடுத்து மெல்ல மெல்ல தன் கருத்துக்களை பூந்தளிரினுள் இறக்கினான் .

கணவன் தந்த தைரியத்தில் இப்போது கொஞ்சம் திடமாக விழிகளை சுற்றி அந்த கிணற்றை பார்த்தாள் அவன் மார்பில் சாய்ந்தபடிதான் . இன்னமும் முழு தைரியம் வரவில்லை அவளுக்கு .அவள் கணவனுக்கு மற்றொரு அன்னை மடியாக இருந்திருக்கிறதா …இந்த கிணறு …??அப்படி என்ன இருக்கிறது இதனுள் …?

இன்னமும் மீதியிருந்த பயத்தில் படபடத்த அவள் நீள் இமை மயிர்களிலிருந்த நீர்த்துளிகளை விரல்களால் அழுத்தித் துடைத்து , நனைந்து ஒட்டியிருந்த முடிகளை பிரித்து விட்டவன் ” உன்னை முதன் முதலில் ரைஸ்மில் வாசலில் கோபாலனுடன்  பார்த்தேனே அன்று ….இங்கே இந்த கிணற்றிற்குள் இரண்டு மணி நேரம் இருந்தேன் . எதற்கென்றே தெரியாமல் மனதை அழுத்திய பாரத்தின் காரணம் தெரிந்து கொள்ள , ஆனால் தெரிந்து கொள்ளாமலேயேதான் அன்று மேலேறி போனேன் ….”

திடீரென தென்றலொன்று தனது கரத்தை வீசி கிணற்று .  தண்ணிரை அசைத்து பூந்தளிர் மேல் சிலீரென்று வீசியது .” எதற்காம் …? ” முகத்தை அவன் மார்பில் புதைத்தபடி கேட்டாள் .

” ம்ஹூம் …நேற்று வரை காரணம் தெரியவில்லை .இப்போதுதான் ஏதோ புரிவது போல் இருக்கிறது. உனக்கு ஏதாவது புரிகிறதா …யோசியேன் தளிர் ….” சொல்லிவிட்டு அவள் யோசிக்கும் திறனை முற்றிலும் இழக்கும் வகையில் அவள் கன்னத்தில் இதழ்களை அழுத்திப் பதித்தான் .இதற்கு கொஞ்ச நேரம் முன்பு நீருக்குள் மூழ்கி கிடந்த நிலையே பரவாயில்லை போலவே ….தண்ணீருக்குள் இருக்கிறோமென்ற உணர்வாவது இருந்த்து .இப்போதே முடிவற்ற ஆழ் குழி ஒன்றுக்குள் மூழ்குவது போல்ல்லவா உள்ளது .ஆனால் …அந்த ஆழ் குழி தன்னுள் ஆங்காங்கே மலர்களை நிரப்பி வைத்திருந்த்து . அவை அவ்வப்போது மெனமையும் , வாசமுமாய் தேனை அள்ளி பூந்தளிர் மேல் சொறிந்து கொண்டிருந்தன. தித்திக்கும் இனிப்பு சூழ மூச்சிலும் தேன் கசிய  தவித்துக் கொண்டிருந்த பூந்தளிரை யாரோ கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பது போல் பெயர் சொல்லி அழைத்தனர் .

யாரோ கிணற்றிற்குள் இருக்கிறார்கள் …இல்லையே நான்தானே இருந்தேன் …? ஏதேதோ குழப்பமான ஒரு  வித மயக்க  மனநிலையில் இருந்தாள் அவள் .நான்காவது முறை அவள் பெயர் சொல்லப்பட்ட போது , நனைவுக்கு திரும்பினாள் .அவசரமாக அவளை தன் மார்பிலிருந்து விலக்கியவன் ” அம்மா கூப்பிடுறாங்க தளிர் ….” என்றான் .அந்த உடனடி விலக்கலில் அவள் உடல் நடுங்க கண்டு மீண்டும் அவளை தன்னோடு சாய்த்து இறுக்கிக் கொண்டான் .” ஒண்ணுமில்லடா .மேலே அம்மா கூப்பிடறாங்க கவனி .இப்போ நாம் மேலே போகலாமா …” ஆசுவாசப்படுத்தினான் .

மெல்ல அவள் ” ம் …” எனவும் அவளை விலக்கி எழுப்பி நிறுத்தியவன் நீரில்  கலைந்து கிடந்த அவள் உடைகளை சரி செய்ய உதவினான் .” முன்னால் ஏறு ….” படிகளில் ஏற்றிவிட்டான் .

தடுமாறி ஏறிய அவளது தளர்ந்த நடையை கண்டவன் பின்னிருந்து அவள் இடைய அழுந்த இரு கரங்களாலும் பற்றி ஒரு பொம்மை போல் எளிதாக ஏந்திக்  கொண்டான் .” ஆசுவாசப்படுத்திக்கோடா  ” காதிற்குள் சொன்னான் .மேலே அவர்கள் தலை தெரியும் விளிம்பிற்குள் வந்த்தும் அவளை படிகளில் இறக்கி விட்டு ” போ …” மெலிதாக தள்ளினாள் .

இனியொரு முறை இந்த கிணறு அவளுக்கு பயத்தை தரப் போவதில்லை என்ற உறுதியுடன் , உடல் முழுதும் மலர்ந்திருந்த மலர்களுடன் மேலே வந்தாள் பூந்தளிர் .கிணற்றிற்கு சற்று தள்ளி நின்று இடுப்பில் கை வைத்து சுற்று முற்றும் பார்த்து அவளை தேடிக் கொண்டிருந்த சொர்ணத்தாய் அவளை பார்த்ததும் ….

” காலையிலிருந்து உனக்கு குளிக்க நேரம் கிடைக்கலையா …? கிளம்புகிற நேரம் கிணற்றுக்குள் குதித்திருக்கிறாய் …? ” என்றவள் , பின்னாலேயே மெல்ல கிணற்றிலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு தலையை உள்ளே இழுத்ந மகனை கண்டு கொண்டாள் .பூந்தளிர் பதில் சொல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்க …

” ம் …சரிதான் .இந்த ஈரத்தோடு எவ்வளவு நேரம் நிற்பாய் ..? போய் அந்த அறைக்குள் சேலையை  மாற்று …” என்றவள் …
” நான் இங்கிருந்து கிளம்பிட்டேன் …” என கிணற்றை பார்த்து கத்திவிட்டு போக , பூந்தளிர் வெட்கம் பிடுங்கித் திங்க அறைக்கிள் ஓடிவிட்டாள் .உள்ளே ” குரு இது உனக்கு தேவையாடா …? ” தன்னை தானே விரல் நீட்டி கேட்டுக் கொண்டான் குருபரன் .

இனிப்புக்கு ஒன்று , காரத்திற்கு ஒன்றென இலையில் இருந்த பணியாரங்களில் ஒரு விள்ளல் கூட பூந்தளிரின் வாய்க்குள் இறங்கவில்லை .உடலும் ,மனமும் ஏனோ நிறைந்திருக்க சும்மா பணியாரங்களை இலையில் உருட்டியபடி இருந்தாள் .

” சாப்பிடலை …? ” அவளருகில் அமர்ந்திருந்த குருபரன் காதிற்குள் கிசுகிசுத்து கேட்டான் .

” பசியில்லை ….” தலையை இலையிலிருந்து நிமிர்த்தாமல் கூறினாள் .

” எனக்கு அகோர பசி ….” என்றவன் குரலிலிருந்த பசியின் காரணத்தை உணர்ந்தவள் சட்டென தனது இலையை மடித்தபடி எழுந்துவிட்டாள் .சை .்இவனுக்கு நேரங்காலம் , இடம் ஒண்ணும் கிடையாது .வானம் நிறமிழந்து லேசாக கறுக்க ஆரம்பித்த போது அவர்கள் குடும்பம் சோம்பலாக வீட்டிற்கு கிளம்பியது .

இரவு உணவு முடிந்த பின்பு குழந்தைகள் டிவி முன்னால் உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்க ,தங்கள்  அறைக்குள் போக பயந்துபூந்தளிர்  தனது போனை நோண்டிக் கொண்டிருந்தாள் .குருபரன் ஹாலில் ஓரமாக கிடந்த சோபாவில் அமர்ந்தபடி என்ன செய்ய போகிறாய் …என இவளை கண்களால் கேட்டுக் கொண்டிருந்தான் .அவன் பார்வைக்கு பயந்து எழுந்து இடம் மாறி அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டாள் .

அப்போது அவள் போனில் முகநூல் மெசேஜ் வர திறந்து பார்த்தவள் வியந்தாள் .அந்த உழவன் மகனிடமிருந்து மெசேஜ் வந்திருந்த்து .அவள் அனுப்பிய கட்டுரை மிக நன்றாக , உதவிகரமாக இருந்த்தாக அதில் கூறப்பட்டிருந்த்து . பூந்தளிர் சந்தோசமாக அந்த மெசேஜிற்கு பதில் அனுப்ப தொடங்கினாள் .தொடர்ந்து அங்கிருந்து அவளை பற்றிய விபரங்கள் கேட்கப்பட , தயக்கமின்றி தனது விபரங்களை கூறத் தொடங்கினாள் .

டைப் செய்தபடியே எழுந்து பின்னால் அமர்ந்திருந்த கணவனிடம் சென்று அவனருகில் அமர்ந்தவள் ” ஏங்க இங்கே பாருங்களேன் .அந்த உழவன் மகன் எனக்கு மெசேஜ் அனுப்புகிறார் .எப்பவும் யாரிடமும் பேச மாட்டார் .இப்போ என்கிட்ட மட்டும்தான் பேசுகிறார் .என் விபரங்களையெல்லாம் கேட்கிறார் .ஐய்யோ …என்னால் நம்பவே முடியலையே .என் ப்ரெண்ட்ஸ் கிட்டெல்லாம் சொன்னால் பொறாமையில் வெந்துடுவாங்க ….” படபடவென தனது விபரங்களை டைப் செய்தாள் .

எட்டி அவள் டைப் பண்ணும் விபரங்களை படித்தவன் ” எல்லாத்தையும் தெள்ளத் தெளிவா சொல்லுவ போல …? ” ஒரு மாதிரி குரலில் கேட்டான் .

” ம் …அவர் கேட்குறாரே ….” தொடர்ந்து டைப் செய்தாள் .

” எவன்னே தெரியாதன்னெல்லாம் உன்னைப் பத்தி கேட்டால் உடனே உன்னை பத்தி ஒப்பிச்சுடுவியா …? “

இப்போதுதான் அவன் குரலில் வேறுபாட்டை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள் .” என்ன நினைத்து இப்படி பேசுகிறீர்கள் …? “

” எதிலும் கொஞ்சம் நிதானமாக நடந்துகொள் என்கிறேன் . இதையே உன் தோழிகளுக்கும் சொல் .இந்த பேஸ்புக் , வாட்ஸ்அப் எல்லாம் விஷப்பாம்பு மாதிரி .மருந்தாகத்தான் உபயோகிக்கனும் .உணவாக இல்லை .அது திரும்பி நம்மையே கொத்திடும் .ஜாக்கிரதையாக இருக்கனும் …”

” சின்னப்பிள்ளையா நான் …எனக்கு தெரியாதா …நான் என்ன இதில் இப்படி பேச யார் கிடைப்பாங்கன்னு அலைகிறேன்னு நினைக்கிறீங்களா …? இது வரை என் நெருங்கிய நட்புகளிடம் கூட இப்படி பேசியதில்லை .இந்த உழவன் மகனை நான் மிகவும் மதிக்கிறேன் .அதனால்தான் அவருக்கு பதில் சொல்கிறேன் …நீங்கள் ஏன் எதையும் கொச்சையாக பார்க்கிறீர்கள் ….? “

” பூந்தளிர் நான் சொல்வதை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய் .நான் …”

குருபரனின் விளக்கத்தை கேட்க விரும்பாமல் முகம் திருப்பிய பூந்தளிரின் காதுகளில் அந்த தீனமான அலறல் விழுந்த்து . தொடர்ந்து தடதடவென்ற சத்தமும் .

அவசரமாக அவள் எழுந்து ஓடி வந்து பார்த்த போது மாடிப்படியருகே ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள் பொன்னி.




What’s your Reaction?
+1
29
+1
19
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!