Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே-1

1

னது இலக்கை நீ அடைய இன்னமும் இருபது கிலோ மீட்டர்கள் இருக்கிறது,ஐம்பத்தைந்து நிமிடங்கள் ஆகலாம் போன்ற தகவல்களை காரோடு இணைந்திருந்த மேப் சொல்ல,கடவுளே!இருபது கிலோ மீட்டருக்கு ஐம்பத்தைந்து நிமிடங்களா? பெருமூச்சு விட்டான் உதயன்.

அவன் கையில் இருந்தது அதிகப்படி இழுவை தரத்துடனான நல்ல என்ஜின் உள்ள உயர் ரக கார்தான்.

டிரைவரை மறுத்து விட்டு தானே ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.இல்லாது அனுபவமான காரோட்டியிருந்தாலும் இதே தூரம் ,நேரம்தான் மேப் காட்டியிருக்கும்.ஏனென்றால் சாலை அப்படி.இன்னமும் இது போன்ற சாலைகளெல்லாம் நம் நாட்டில் இருக்கின்றனவா? கடந்த அரை மணி நேரமாக தன்னுடன் இணைந்து பயணித்து வந்து கொண்டிருந்த உயர மேடுகளையும்,அகல பள்ளங்களையும் உடல் குலுங்க அனுபவித்தபடி ஸ்டியரிங்கை சுழற்றிக் கொண்டிருந்தான்.

மல்லிகை பந்தல் என மஞ்சள் பின்னணியில் கறுப்பு எழுத்துக்கள் மின்னும் அறிவிப்பு பலகையை சற்றே வாகனத்தை மெதுவாக்கி வாசித்து பார்த்து கடந்தான்.அந்த ஊருக்குள் நுழையும் போதே மல்லிகை வாசம் வந்துவிடும்…ராஜீவ் சொன்னது நினைவு வர,மூக்கை உறிஞ்சி மூச்சிழுத்து பார்த்துக் கொண்டான்.




எங்கே வருகிறதோ வாசனை?சும்மா எதையாவது அடித்து விட வேண்டியது…ஏளனமாய் உதட்டை வளைத்துக் கொண்டான்.போன மாதம் வரை இது போலொரு ஊர் இருப்பதே தெரியாது.ஆனால் இருந்தது. அதுவும் அவனுக்கு மிக வேண்டியிருந்தது.விரட்டிக் கொண்டு வரும் இருளில் இந்த பாழடைந்த ரோட்டில் இப்படி உடம்பு நோக போக வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏன்?

நினைவுகள் எங்கோ ஓட ,பெருமூச்சுடன் தலையை உலுக்கினான்.பாதையில் கவனம் பிசகியதாலா அல்லது எதிரில் தெரிந்த உருவத்தின் அவசரத்தினாலா? கார் ஒரு நொடி தடுமாறி செருமியது.

எங்கே நிறுத்தாமல் போய் விடுவானோ எனப் பயந்து நடுச்சாலைக்கு இவனது கார் பாதையின் முன்பே வந்து நின்று கையாட்டிக் கொண்டிருந்த்து அந்த உருவம்.

மடக்கழுதை! இப்போது லிப்ட் கொடுக்கும் நிலையிலா நான் இருக்கிறேன்…பொங்கிய கோபத்துடன் காரை அந்த உருவத்தின் மேல் மோதுவது போல் மிக அருகே கொண்டு போய் நிறுத்தினான். சிறு துள்ளலுடன் சற்று பின் நகர்ந்தாலும் நிலை மாறாமல் நின்ற அவ்வுருவம்,அடர் ஊதா ஜீன்சும்,கரு நீல டி ஷர்ட்டும் அணிந்திருந்த ஆண்.

கார் கண்ணாடியை இறக்கியவன்,”அறிவில்லையா உனக்கு? கண்ணை மூடி முழிப்பதற்குள் மேலேயே ஏற்றியிருப்பேன் தெரியுமா?”கத்தினான்.

“சாரி சார்” இறைஞ்சி நின்றவனுக்கு இப்போதும் வழி விட்டு நகரும் எண்ணமில்லை.

பாதையின் நடுவே நிற்பவனை ஒதுக்கி போகும் நிலையும் உதயனுக்கு இல்லை.அவ்வளவு குறுகிய சாலை அது.இருண்டு வரும் இந்த நேரத்தில் எதற்கு இவனுக்கு கூலிங்கிளாஸும், தொப்பியும்?

“நகருய்யா.மரம் மாதிரி நிற்கிறாயே?என்னதான் வேண்டும் உனக்கு?”

“லி…லிப்ட்”

சலிப்புடன் தலையிலடித்தவன்”வந்து ஏறு.எங்கே போக வேண்டும்?” கியரை மாற்றினான்.

அவன் தயக்கத்துடன் காரருகே வந்து குனிந்தான்.”ப்ளீஸ் சார்,என்னை மதுரையில் விட்டு விட முடியுமா?’

உதயனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. அவன் இப்போதுதான் மதுரையிலிருந்து இந்த பாடாவதி ரோட்டை கடந்து,இந்த குக்கிராமத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறான்.மீண்டும் மதுரைக்கேவா?

“இங்கே பாருங்க மிஸ்டர்.லிப்ட் என்பது போகிற வழியில் ஒரு இடத்தில் இறக்கி விட்டுப் போவது…தெரியுமா?” நக்கலாக கேட்டான்.

வாடிய முகத்துடன் தலையசைத்தான் அவன்.”தெரியும் சார்.எனக்கு உயிர் போகிற அவசரம்.உடனே மதுரை போக வேண்டும்”

“யாருடைய உயிர்?” நக்கலை தொடர்ந்தான்.

“வெண்ணிலா.என் காதலி”

மீண்டும் தலை தலையாக அடிக்க தோன்றியது உதயனுக்கு.அடச் சை…ஆகக் கடைசியில் காதல்…!

“என்ன நீங்க வரலைன்னா செத்துப் போயிடுவேன்னு மிரட்டுறாங்களோ?”

உனக்கெப்படி தெரியுமென்பது போல் ஏறிட்டு பார்த்தான் அவன்.

“இதெல்லாம் ஆண்களை இழுக்க பெண்கள் மேற்கொள்ளும் தந்திரங்கள்”

அவன் தீவிரமாக தலையசைத்தான்.”என் வெண்ணிலா அப்படி இல்லை சார்”

“ஏன் அவள் பெண்ணில்லையா?”

சரக்கென நிமிர்ந்த அவன் விழிகளில் கோபச்சுடர்.”சார் உதவும் மனப்பான்மை இருந்தால் கூட்டிப் போய் விடுங்கள்.இல்லை நான் பார்த்துக் கொள்வேன்” விரைப்பாக நிமிர்ந்தான்.




“சரி பார்த்துக் கொள்ளுங்கள்” இப்போது பக்கவாட்டில் அவன் வந்துவிட்டதால் எதிரே கிடைத்து விட்ட பாதையில் காரை நகர்த்தி கிளம்பி விட்டான் உதயன்.பக்க கண்ணாடி வழியே பார்க்க,முகம் வாட காரை பார்த்து நின்றிருந்த அவன் தோற்றம் மனதை நெருட,பத்தடி தூரம் போயிருந்தவன் காரை நிறுத்தினான்.

உடன் அவன் கார்ருகே ஓடி வந்தான்.” சார்…”

“அடுத்து வரப் போகும் ஊர் மல்லிகை பந்தல்.அங்கே இறக்கி விடுறேன். ஏதாவது ஆட்டோ,டாக்சி டிரை பண்ணுங்களேன்”

“தெரியும் சார்.என் ஊர்தான் அது.அங்கே யாருக்கும் தெரியக் கூடாதென்றுதான் நான் இப்படி மறைந்து…”

அவனது தொப்பியும்,கண்ணாடியும்,அடர் நிற உடைகளும்…உதயனுக்கு சிரிப்பு வந்தது.கூடவே பரிதாபமும்.”சரி ஏறுங்க”அவனை ஏற்றிக் கொண்டு காரை வந்த வழிக்கே திருப்பினான்.

“நன்றி சார்.என் பெயர் குமரன்” காரிலேறியதும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“அதென்ன அவ்வளவு பயம்?”

“என் வெண்ணிலாவிற்கான பயம் சார் இது.ஏற்கெனவே நான் அவளை நிறைய முறை ஏமாற்றிவிட்டேன்.இந்த முறை நான் நேரத்திற்கு போகவில்லையென்றால் அவள் நிச்சயம் உயிரை விட்டு விடுவாள்.கிளம்பும் நேரத்தில் அப்பாவிற்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.அவரை மருத்துவமனை அழைத்துப் போய்,திரும்ப வீட்டில் விட்டு என்று தாமதமாகி விட்டது”

“ம்..நிலைமையை உங்கள் காதலியிடம் சொல்லியிருக்கலாமே?தனது இறுதி முடிவை அவரும் கொஞ்சம் தள்ளி வைத்திருப்பாரே?”

“அ…அவள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டாள் சார்”

உதயன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு உதடு பிதுக்கினான்.

“தவறாக நினைக்க வேண்டாம் சார்.இதற்கு முன்பே நான்கு முறைகள் நாங்கள் இப்படி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் முடிக்க திட்டமிட்டு,நான் போகாமல் ஏற்பாடுகள் நின்று போய் விட்டன.அதனால்தான் இந்த முறை நேரத்தை மட்டும் சொல்லி விட்டு,நான் எதுவும் சாக்கு போக்கு சொல்ல முடியாதபடி போனை அணைத்து விட்டாள்”

“வராவிட்டால் செத்து விடுவேன் என்ற மிரட்டலுடன்…ம்..?”

“ஏற்கெனவே பல முறை ஏமாந்த மனது சார்.இந்த முறை தனக்கான பாதுகாப்பு தேடுவதில் தப்பில்லையே?”

“சரிதான் குமரன்.இவ்வளவு ஆழமான காதலை எதற்காக நான்கு முறை தள்ளி வைத்தீர்கள்?”

“காரணம் எங்கள் குடும்ப நிலைமை”

“என்ன பொறுப்பற்ற அப்பா,நோயாளி அம்மா,வாழாவெட்டி அக்கா,காலேஜ் படிக்கும் தங்கை,பள்ளி படிக்கும் தம்பி…இப்படியா?”

குமரன் புன்னகைத்தான்.”எனக்கு அம்மா,அக்கா,தம்பி கிடையாது.அப்பாவும்,ஒரே ஒரு தங்கையும்தான்”

“ஓ…அந்த உடம்பு சரியில்லாத அப்பா?”

தலையசைத்தான்.”கூடவே அப்பா வழியில் நிறைய உறவினர்கள்.எல்லோரும் அங்கேதான்.பக்கத்து பக்கத்து வீடுகள்”

“அப்பாவை,தங்கையை பார்த்துக் கொள்ள நிறைய உறவுகள் பக்கத்திலேயே இருக்கும் போது,நீங்கள் உங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்வதில் என்ன தடை குமரன்?”




“எல்லோரும் பக்கத்திலேயேதான் இருக்கின்றனர்.ஆனால் எங்களுக்கு யாருமில்லை” குமரனின் குரல் கரகரத்தது.

“புரியவில்லை. அப்பா,தங்கையிடம்

உங்கள் காதலை சொல்ல முடியவில்லையா?”

“ப்ச்…அப்பாவிற்கு காதல் பிடிக்காது” குமரனின் கண்கள் வெளிப்புற இருளை வெறித்தன.

“ம்” மெல்லிய முனங்கலுடன் காரை செலுத்தியவனை திரும்பிப் பார்த்தான்.”மல்லிகை பந்தலில் நான் இப்படி போவது ஒருவருக்கு தெரிந்தாலும் என் குடும்பத்தையே காணாமலடித்து விடுவார்கள்.அதனால்தான் பதுங்கி பதுங்கி எங்கள் ஊருக்கு சம்பந்தமற்ற வெளியூர்காரரான உங்கள் உதவியோடு வெளியேற நினைக்கிறேன்.என் வெண்ணிலாவின் உயிரை காப்பாற்ற வந்த கடவுள் மாதிரி தெரிகிறீர்கள் சார்”

“உதயன்னு கூப்பிடுங்க.அப்பா சரி பழைய காலத்து ஆள்.உங்கள் தங்கைக்கு காதலை புரிய வைத்திருக்கலாமே?”

சட்டென குமரனின் முகம் மென்மையாவதை ஆச்சரியமாக பார்த்தான்.”என் தங்கை…பூ மாதிரி உதயன்.அ…அவளுக்கு ம்ஹூம்.நான் நேர்மையற்றவனாக விரும்பவில்லை”

“குமரன் ஒன்று சொல்லட்டுமா?இந்த பாதையே என்னை கடமுடாவென உருட்டத்தான் செய்கிறது. ப்ளீஸ் நீங்களும் அதே போல் புரியாமல் பேசி உருட்டாதீர்கள்”

குமரன் மென்மையாக சிரித்தான்.”இந்த பாதையின் கஷ்டத்தை மறக்கவேனும் என் குடும்ப கஷ்டத்தை உங்கள் தலையிலேற்ற சொல்கிறீர்கள்.கதையை கேட்டுவிட்டு பாதியில் என்னை காரை விட்டு இறக்கி விடாமலிருந்தால் சரி.அப்பாவிற்கு காதல் பிடிக்காது.ஏனென்றால் அவர் காதல் திருமணம் செய்து கொண்டவர்”

“ஆஹா!அருமையான ட்விஸ்ட்.ஆக தனது காதலால் தன் சொந்தங்களை இழந்த உங்கள் அப்பாவிற்கு காதல் மேல் வெறுப்பு வந்துவிட்டது.சரியா?”

“ம்…அம்மாவின் மீதும்…”

“அடடா இது தப்பாச்சே”

“தப்புன்னு சொல்ல முடியாது.அப்பா சூழ்நிலை கைதியாகிவிட்டார்”

“எப்படி…நான்கு முறை திருமண ஏற்பாடுகள் செய்தும் போக முடியாத சூழ்நிலை உங்களுக்கு வந்துவிட்டதே அப்படியா?”

குமரன் பதிலின்றி தலை குனிந்தான்.

“இது போன்ற சூழ்நிலைகளில் சிக்கியிருப்பவர்களுக்கு காதல் ஏன் குமரன்?” உதயனின் குரல் சீறலாக வெளிப்படவில்லை.வாயேன் காபி சாப்பிடலாம் எனும் நட்பு தொனியிலேதான் இருந்தது.ஆனால் எனக்கு கோபம் என்பதை எப்படியோ எதிராளிக்கு உணர்வித்தான்.




“உங்கள் கூற்று சரிதான் உதயன்.நானும்,பாரிஜாதமும் அப்படித்தான் முடிவெடுத்திருந்தோம்.எங்கள் அம்மா தன் பாடு பிள்ளைகளுக்கு வேண்டாமென,காதல் தவறு…உறவுகள்தாம் உண்மை என சொல்லி சொல்லியே எங்களை வளர்த்திருந்தார்கள்.பாரிஜாதம் எங்கள் அம்மாவிற்கு உண்மையானவளாகவே இருந்து வருகிறாள்.நான்தான் நேர்மையற்று போனேன்”

“இப்படி ஒரு கழிவிரக்கம் உங்களுக்கு.இதில் மாட்டிக் கொண்ட பரிதாப ஜீவன் உங்கள் வெண்ணிலா.ம்…”

“ஆமாம்.குடும்பத்திற்கும் காதலுக்குமிடையே திண்டாடி,இறுதியாக கல்யாண முடிவை எடுத்தே விட்டேன்”

“பாவம் இதற்காக வெண்ணிலா தன் கழுத்தில் கத்தியை பொருத்திக் கொண்டு ஊசி மேல் நின்று கொண்டிருக்கிறார்.சரி மதுரை வந்துவிட்டது.எங்கே போக வேண்டும்?”

“இங்கேயே இறக்கி விட்டு விடுங்கள் உதயன்.நான் ஒரு ஆட்டோ பிடித்து….”

“பரவாயில்லை.உங்கள் காதலியிடமே சேர்ப்பித்து விடுகிறேன்.வழி சொல்லுங்கள்”

குமரன் சொன்ன பாதையில் சென்று அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன் காரை நிறுத்தினான்.நான்காவது மாடி பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்த ஒரு பெண்ணுக்கு கையசைத்தான்.

“வெண்ணிலா வீட்டில் எல்லோருக்கும் சம்மதம் உதயன்.நாளை காலையில் கோவிலில் திருமணம்.முடிந்தால் நீங்களும் வாருங்கள்” காரிலிருந்து இறங்கி நின்று அழைத்தான்.

“முயற்சிக்கிறேன்” உதயன் புன்னகைத்தபடி காரை ஸ்டார்ட் செய்தான்.

அந்தப் பெண் மேலிருந்து ஓடி வந்தவள்,குமரனின் முன் இளைத்தபடி நின்று,அவன் கை,கன்னம்,முகமென தடவிப் பார்த்து”கனவில்லை நிஜம்” என்று விட்டு சட்டென அவன் மார்பில் சரிந்து இறுக்க அணைத்துக் கொண்டாள்.

“வெண்ணிலா இவர்தான் என்னை இங்கே…” தன் மேல் கிடந்தவளை விலக்க முனைந்தபடி சங்கடத்துடன் குமரன் அறிமுகத்தை ஆரம்பிக்க,வெண்ணிலா அவனை விட்டு இம்மியும் நகர மறுத்தாள்.

சிரித்தபடி காரை ரிவர்ஸ் எடுத்து திருப்பிய உதயன் பரவாயில்லை,வாழ்த்துக்கள் என்ற கை ஜாடையுடன் அவர்களை பின்னுக்கு தள்ளி காருடன் முன்னேறி மீண்டும் மல்லிகை பந்தல் பாதையை பிடித்து பயணத்தை தொடங்கினான்.




What’s your Reaction?
+1
46
+1
39
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!