Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-13

13

ஜீப் கேட்டினுள் நுழையும்போதே ஜீவிதா வீட்டினுள் அதை கவனித்து விட்டாள். மல்லிகா மாடியில் இருந்தாள். அவள் இருந்த்து அந்த பூட்டப்பட்ட அறை…ஸ்வேதாவின் அறை. அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே இவர்கள் காரை பார்த்தபடியே நின்றாள்.

 ஜீப்பை முழுவதுமாக நிறுத்தும் முன்பாக கீழிறங்கி ஓடுபவளை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தான் ஹரிஹரன். “ஜீவிதா மெல்லப்போ. எதற்காக ஓடுகிறாய்?” 

 ஈசனை தூக்கிக்கொண்டு அவன் பின்னால் வரும் முன் ஜீவிதா மாடிக்கு போயிருந்தாள். ஆனாலும் அவ்வளவு வேகமாக அவள் வந்ததற்கு பலன் இல்லை.மல்லிகா அந்த அறையை பூட்டிவிட்டு வெளியே வந்திருந்தாள். ஓரக் கண்ணால் இவளை பார்த்தபடி அந்த அறையை  பூட்டி சாவியை எடுத்து தனது கழுத்தில் போட்டிருந்த சங்கிலியுடன் நிதானமாக கோர்த்தாள். பின்னர் சேலை மடிப்பிற்குள் செயினை மறைத்துக் கொண்டு ஓரக் கண்ணால் இவளை பார்த்தபடி ஒரு விதமான சிரிப்புடன் கீழே இறங்கி போய்விட்டாள்.

 ஜீவிதா அப்படியே அதிர்ந்து நின்றாள்.”ஜீவி என்னாச்சும்மா?” ஹரிஹரன் அவள் தோளை தொடவும் உணர்வுக்கு வந்தவள், “சாவி…இந்த ரூம் சாவி…”

 அவன் கண்களில் சலிப்பு தெரிந்தது.” இதை விட மாட்டாயா நீ? அந்த சாவிதான் எங்கேயோ தொலைந்து விட்டதென்று சொன்னேனே”




 

“இல்லை அது மல்லிகாவிடம் இருக்கிறது”

“விட்டால் அவள் இடுப்பில் சொருகிக் கொண்டு இல்லை என்கிறாள் என்பாயே. எதையாவது உளராமல் வா “அவள் கையை பற்றி இழுத்துக் கொண்டு போனான்.

“கண்டதையும் நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் தூங்குடா” கட்டிலில் படுக்க வைத்து பரிவாக தலையை வருடினான்.

உள்ளுக்குள் பல குழப்பங்கள் உருள கண்களை இறுக மூடிக்கொண்டாள் ஜீவிதா.” மல்லிகாவின் கழுத்து செயினை செக் பண்ணுகிறீர்களா?” 

 ஹரிஹரன் அதிர்ந்தான்.”ப்ச் பேசாமல் படுத்து தூங்கும்மா”

” முடிந்தால் செக் பண்ணி பாருங்கள்”  முனகியபடியே தூங்கிப் போனாள்.

ஜீவிதா மீண்டும் எழுந்த போது பின் மாலை ஆகிவிட்டது.மூடியிருந்த சன்னலையும் தாண்டி குளிர் எங்கிருந்தோ உள்நுழைந்து உடலை குத்தியது.இதென்ன குளிர் விசம் போல…?நினைத்தபடி எழுந்து லேசாக சன்னலை திறந்தாள்.வெளிப்புறம் வெண் புகையாக பனி பரவிக் கிடந்தது.உடலை சிலிர்த்துக் கொண்டு கதவை மூட நினைத்தவள் திடுக்கிட்டாள்.

அந்த குளிரில் பனி மூட்டத்திற்கிடையே ஈசன் நடந்து போய் கொண்டிருந்தான்.இதென்ன குழந்தை தனியாக எங்கே போகிறான்? ஜீவிதா குரலெடுத்து கத்தி அவனை அழைக்க நினைத்த போதுதான் கவனித்தாள்,அவன் பின்னால் ஹரிகரனும் போய் கொண்டிருந்தான்.சற்றே ஆசுவாசமடைந்தவள் இருவரும் எங்கே போகின்றனர்?

பனிப்படலத்திற்கிடையே கண்களை கூர்மையாக்கி பார்த்தாள்.

அதிர்ந்தாள்.

இருவரும் சென்று கொண்டிருந்த பாதை மல்லிகாவின் வீடு.ஓரமாக இருந்த சிறு மர வீட்டில்தான் அவள் வசித்து வருகிறாள்.அங்கே இவர்கள் இருவருக்கும் என்ன வேலை?

ஜீவிதா வேகமாக அறையை விட்டு வெளியே வந்து மரப்படிகள் சப்தம் எழுப்ப திடும் திடுமென வெளியே வந்தாள்.

வீட்டின் பின்புறம் ஓட ஆரம்பித்தாள்.இப்போது பனி அடர்த்தியாக விழ ஆரம்பித்திருக்க,புகையும் அடர்ந்திருந்தது.

எதிரில் இருப்பது தெரியாமல் சில நிமிடங்கள் அப்படியே நின்று அங்குமிங்கும் தேடி கண்களை கூர்மையாக்கி பாதையை கண்டுபிடித்து வேகமாக ஓடி வீட்டை அடைந்து கதவை தள்ளினாள்,அது இறுக உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

சட்டென எழுந்த ஆவேசத்துடன் கதவை ஓங்கி ஓங்கி அடிக்க,வேகமாக தாழ் திறந்த கதவின் பின்னே நின்றிருந்தான் ஹரிகரன்.

“ஜீவி…? என்னடா…?” 

ஜீவிதாவின் பார்வை வீட்டிற்குள் பரபரப்பாய் பாய்ந்தது. உள்ளே சிக்கனமான விளக்கு வெளிச்சம் நிறைய இருளையும்,கொஞ்சம் ஒளியையும் கொடுத்துக் கொண்டிருக்க,ஜீவிதா விழிகளை கூர்மையாக்கி தேடினாள்.

உள்ளறையிலிருந்து மல்லிகா வெளியே வந்தாள்.பாதி இருளும்,பாதி ஒளியுமாக தெரிந்த அவள் முகத்தில் ஒரு வகை அமானுஷ்யம்.கண்களை அகலமாக்கி,உருட்டி விழித்தபடி இவளை பார்த்திருந்தவளது தோள்களின் ஈசன்.ஒரு கையால் அவனை அணைத்தவள் மறு கையை குழந்தையின் கழுத்தடியில் வைத்து காற்றில் இழுத்துக் காட்டினாள்.

சிவுக்…ஐய்யோ…




“ஹரி…நம்ம குழந்தை.தம்பு…ஐயோ அவனை காப்பாத்துங்க.அவன் கழுத்தை சீவுகிறாள்..காப்பாத்துங்க” கதறினாள்.

“ஏய் என்னடி உளர்ற ? இப்போது நீ ஏன் இங்கு வந்தாய்?” ஹரிகரன் அவள் தோள் தொட்டசைத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தாள்.

  திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியாக சூரியக் கீற்று கட்டில் வரை வந்து இதமாக ஜீவிதாவை தீண்டி எழுப்பியது.இன்னமும் முந்தின இரவு குளிர் உடல் முழுவதும் உறைந்து கிடப்பது போன்ற பிரமையிலிருந்தவள், இந்த இத கதிர் வருடலில் சுகமாக உணர்ந்து மெல்ல கண்விழித்தாள்.

உடனேயே தன் அணைப்பிற்குள் ஒடுங்கிக் கிடந்த குழந்தையை உணர்ந்தவளின் உள்ளம் வெகுவாகவே அமைதியுற்றது. பெரு நிம்மதியுடன் குழந்தையை அணைத்தாற் போல் அப்படியே படுத்திருந்தாள். அறை கதவை திறந்து ஹரிஹரன் உள்ளே வந்தான்.

” எழுந்து விட்டாயா? காய்ச்சல் இருக்கிறதா?” கன்னத்தில் கை வைத்து ஆராய்ந்தான்.

” காய்ச்சல் இருந்ததா எனக்கு?” கேட்டவளை வெறுமையாய் பார்த்தான்.

“எதிரில் வரும் ஆள் தெரியாத அளவிற்கு பனி வீசிக்கொண்டிருக்கும் போது மெல்லிய இரவு உடையோடு பனிக்குள் ஓடி வந்தவளை காய்ச்சல் பாதிக்காதா?” ஜீவிதா முன் தினத்திற்கு நினைவுகளை ஓடவிட்டாள்.

 ஓ,அதனால்தான் அப்போது அவ்வளவு குளிர் இருந்ததா? இன்னமும் அதே குளிர் இருப்பது போல் உடலை குறுக்கிக் கொண்டாள்.ஹரிகரனும்,ஈசனும் குளிர் பாதுகாப்பு உடைகளுடன் நடந்து போனது நினைவில் வந்தது.

” சாரி ஏதோ ஞாபகத்தில் படுக்கையில் இருந்து எழுந்ததும் அப்படியே வந்து விட்டேன். நீங்கள் அங்கே என்ன செய்தீர்கள் ?” எவ்வளவோ மறைக்க பார்த்தும் அவள் கேள்வியில் சந்தேகம் தொனித்து விட,ஹரிஹரன் எரிச்சலாக பார்த்தான்.

“மல்லிகாவின் அம்மா,படுக்கையிலே இருப்பவர்கள்.அவர்களுக்கு திடீரென்று உடம்பு மோசமாக போய்விட்டது.டாக்டரை வரவழைத்திருந்தேன்.அவர்களை பார்ப்பதற்கு போனேன். எதற்காக கதவை அந்த இடி இடித்தாய்?”

” நீங்கள் எதற்காக கதவை பூட்டிக்கொண்டு…அவள் அம்மாவை பார்த்தீர்கள்?”

” முட்டாள் இந்த பனிப்பிரதேசத்தில் பனி கொட்டிக் கொண்டிருக்கும்போது கதவை பூட்டி வைக்காமல் திறந்து போடுவார்களா?” 

ஜீவிதா தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள் .”சாரி” மன்னிப்பு கேட்டுக் கொண்டவளுக்கு,முதல் நாள் அங்கே நடந்த நிகழ்வில்…தன் கண்கள் மீதே இப்போது சந்தேகம் வந்துவிட்டது.மல்லிகா உண்மையிலேயே குழந்தையை கொன்று…வந்து… அப்படி ஜாடை காட்டினாளா? இல்லையா? குழம்பினாள்.

அவள் முகத்தை பார்த்தபடியிருந்த ஹரிகரன் “வா” என்று குழந்தையோடு காரில் ஏற குழப்பத்துடன் அமர்ந்தாள். “எங்கே போகிறோம்?”

” சொல்கிறேன்.கொஞ்சம் தூங்கு” அவளுக்கு சீட் பெல்ட் போட்டு விட்டு காரை எடுத்தான்.

கார் வீட்டை விட்டு விலகும் போது பார்வை, ஜன்னலுக்குப் போக உள் நின்றபடி உற்சாகமாக இவளுக்கு கையசைத்துக் கொண்டு இருந்தாள் மல்லிகா. போ… போ என்பதான ஜாடை கையசைப்பு. 

சட்டென விதிர்த்துவிட பார்வையை திருப்பிக் கொண்ட ஜீவிதாவிற்கு தலைக்குள் புழுக்கள் நெளிவது போல் இருந்தது. பின்னால் சாய்ந்து அமர்ந்து தூங்கிப் போனாள்.

“இறங்கு ஜீவிதா” ஹரிஹரனின் குரலில் விழித்தவள் கார் அவள் அம்மா வீட்டின் முன் நிற்பதை கண்டு துணுக்குற்றாள். ஈசனை தோளில் தூக்கிக்கொண்டு அவளது கைப்பற்றி உள்ளே அழைத்துப் போனவன் “கொஞ்ச நாட்களுக்கு ஜீவிதா இங்கே இருக்கட்டும். அதுதான் அவளுக்கு நல்லது” என்றான் அவள் பெற்றோரிடம்.

“என்ன சொல்கிறீர்கள்? ஏன் ?” சகாதேவன் பட படத்தார்.

 கலைவாணி அவரைக் கையமர்த்தி விட்டு ஹரிஹரன் எதிரே வந்து என்று அவனை கூர்ந்து பார்த்தாள். “அப்படியே இதே வார்த்தைகள் தான். மூன்று வருடங்களுக்கு முன்பு இதே வார்த்தைகளை தான் சொல்லி ஸ்வேதாவை இங்கே கொண்டுவந்து விட்டுப் போனீர்கள். இப்போது ஜீவிதாவை…”

ஹரிஹரன் குற்ற உணர்ச்சியுடன் தலைகுனிந்து நின்றான்.




What’s your Reaction?
+1
40
+1
24
+1
3
+1
2
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!