Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-9

9

” நான்  எதுவும் உதவி செய்யட்டுமா அக்கா ..? ” பின்னால் கேட்ட இனிய குரலில் முகம் மலர திரும்பினாள் பொன்னி .

பச்சையும் , ஊதாவும்  கலந்து ஓடிய அந்த எளிய காட்டன் புடவையில் , தலை குளித்து நுனி முடித்த கூந்தலும் மஞ்சள் பூசி மின்னிய கன்னங்களுமாக நின்ற பூந்தளிர் தானாகவே மனதிற்கு ஒரு புத்துணர்வை கொண்டு வந்தாள் .

” என்னம்மா அதுக்குள்ள எழுந்துட்ட …? ” இன்னமும் ஆறு மணி காட்டிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை பார்த்து விட்டு ஆராய்ச்சியுடன் அவள் முகத்தை பார்த்துக் கேட்டாள் .

” ஏன்கா …எப்பவுமே ஐந்து மணிக்கு எந்திரிச்சிடுவேன் .இன்னைக்கும் அது மாதியே எழுந்துட்டேன் .குளித்து வர இவ்வளவு நேரமாயிடுச்சு ….” கண்களை அடுக்களையை சுற்றி ஓட்டினாள் .

தரையிலமர்ந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த செண்பகம் ” என்னைக்கும் எந்திரிக்கிறதுக்கும் , இன்னைக்கு எந்திரிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே பூவு …” என்றாள் .

” என்ன வித்தியாசம் …? கொடுங்க்க்கா நான் அரைக்கிறேன் …” பொன்னியின் கை அம்மி குளவியை தான் வாங்கிக் கொண்டாள் .வத்தலையும் , தேங்காய் சில்லுகளையும் சேர்த்து நைத்து , இழுத்து அரைக்க துவங்கினாள் .   இவர்கள் இருவரும் குறிப்பாக எதை கேட்கிறார்களென அவள் அறியாமல் இல்லை .ஆனால் இவர்களுக்கு சொல்வதற்கான நிகழ்வுகளேதும் இல்லாத போது , அவள் எதை பற்றி பேச முடியும் …?

” முதலில் அப்படி உட்கார் .உன்னிடம் பேச வேண்டும் …”தூர இருந்த நாற்காலியை சுட்டிய  குருபரனின் விரலில் ஆணவம் இருந்த்து .

நான் அன்பிற்குத்தான் அடிபணிவேன் …ஆணவத்திற்கல்ல ….என்பது போல் பஞ்ச் டயலாக் எதுவும்  பேசுவோமோ …என யோசித்து விட்டு , வேண்டாம் இந்த சூழ்நிலைக்கு அது ஒத்து வராது என்ற முடிவெடுத்து வாயை மூடிக் கொண்டாள். சுட்டிய விரலுக்கு தலையசைக்க மனம் திமிறினாலும், இது போல் ஒரு ஆணுடன் தனித்திருக்கும் இந்த புதிய இரவு அனுபவம் ,அவளது நாவை கட்டிப் போட்டு திணற வைத்தது .

” என் வீட்டு ஆட்களிடம் நீ  எடுத்தெறிந்து பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன் …” உடனே விசயத்திற்கு வந்தான் .

” இதே உரிமை எனக்கும் உண்டல்லவா …? பெண் …அதிலும் குறைந்த சாதி பெண் என்பதால் …அதற்கு தகுதியற்றவளாக போனேனா …? ” கோபமாக கேட்க நினைத்தாலும் ஏனோ குரல் தளுதளுக்க அதற்காக தன் மீதே கோபம் கொண்டாள் .

” உனக்கும் …எனக்கும் வித்தியாசம் இருக்கிறது .நான் உன் வீட்டுக்கு பக்கம்  இனி வரப் போவதில்லை .நீ அப்படியில்லை .இங்கேயே காலம் முழுவதும் வாழ்ந்து தொலைய வேண்டிமென தலையில் எழுதியாகி விட்டது .வார்த்தைகளை யோசித்து பேசும் பொறுப்பு உனக்குத்தான் அதிகம் இருக்கிறது ….”

கல்யாணம் முடிந்ததும் என் அம்மா வீட்டிற்கு பக்கமே இவன் வரமாட்டானாம் .நான் மட்டும் இவன் வீட்டோடு தங்கியிருந்து இவன் குடும்பத்து ஆட்களுக்கெல்லாம் சேவகம் செய்ய வேண்டுமாம் .பூந்தளிரின் உதடுகள் துடித்தது

” அப்படித்தான் காலங் காலமாக நடந்து கொண்டிருக்கிறது ….” அவள் மனதை படித்தது போலிருந்தது அவன் பேச்சு .இப்போதும் இவனுக்காக சரியென தலையாட்டும் எண்ணம் வரவில்லை பூந்தளிருக்கு … .இவன் இப்படித்தான் தன் குடும்ப ஆட்களை குறைவாக நடத்துவானென தெரிந்துதானே ஓரிரவு தன் தாய் வீட்டில் கழிக்க கிடைத்த சந்தர்ப்பத்தையும் மறுத்துவிட்டு இங்கே ஓடி வந்திருக்கிறாள் அவள் .

” ம் …பார்க்கலாம் .இந்த ஒப்பந்த்த்தில் உங்களுக்கும் பங்கிருக்கறது .நினைவிருக்கட்டும் …” மறைமுக எச்சரக்கை ஒன்றை அவனுக்கு விடுத்து விட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள் .




” தூக்கம் வருகிறது .நான் பத்து மணிக்கெல்லாம் படுத்து விடுவேன் ….” என்ன செய்ய போகிறாயென அவன் உட்கார்ந்திருந்த சோபாவை பார்த்தபடி நிற்க , அவன் தன்னிச்சையாக எழுந்தான் .தலையணை ஒன்றுடன் படுத்தவள் உடனே தூங்கியும் போனாள் .

எதிர்காலம் எப்படி இருக்க போகிறதோ ….என்ற துயரத்தில் நான் இருக்கிறேன் .இவளுக்கு எப்படி படுத்ததும் உறக்கம் வருகிறது …? எரிச்சலோடு …கையில் தன் போனை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு போனான் .வெகு நேரம் கழித்து அவன் மீண்டும் அறைக்குள் வந்த போது அசையாமல் ,அலுங்காமல் பூந்தளிர் சோபாவில் படுத்திருந்த தோற்றம்அந்த இரவு விளக்கின் ஒளியில்  ஒரு செல்லுலாய்டு பொம்மை போலத் தோன்ற மீண்டும் சோபா புறம் நிலைக்க துடித்த விழிகளை கடிந்தபடி கட்டிலில் குப்புற படுத்து உறங்கி போனான் .

புது இடத்தில் …அதுவும் குறை சொல்லவெனவே கண்காணிப்புடனிருக்கும் இது போல் ஒரு அசுரனை அருகிலேயே வைத்துக் கொண்டு தூக்கம் எங்கே வரப் போகிறதென நினைத்தபடிதான் படுத்து கண்களை மூடினாள் பூந்தளிர் .ஆனால் ஆச்சரியமாய் படுத்ததுமே இதமொன்று வந்து ஆக்ரமித்து கொள்ள , கண்கள் சுகமாய் சொருகிக் கொண்டன. கொஞ்ச நேரத்திலேயே கண்களை உறுத்திய பெரிய விளக்கு அணைக்கப்பட்டு இதமான இரவு விளக்கு எரிய விடப்பட , திருப்தியான உறக்கமொன்று உடனேயே அவள் விழிகளில் வந்தமரந்து கொண்டது .

” ராத்திரி குரு உன்கிட்ட என்ன சொன்னான் …? ” அவளருகில் நெருங்கி வந்து நின்று கேட்ட பொன்னியன் கண்கள் அவளை ஊடுறுவின .

இதென்ன கேள்வி …? புருசன் பொண்டாட்டி அந்தரங்கத்தில் தலையிடுவது போல் …பூந்தளிர் ஆட்சேப பார்வை பார்க்க , கொஞ்சம் தயங்கிய பொன்னி …

” குரு கொஞ்சம் படபட பேர்வழி பூவு .மனசில எதையும் வச்சுக்க தெரியாது .எதையாவது பேசிட்டு பிறகு அதுக்காக வருத்தப்படுவான் ….”

ம் ….கொழுந்தனுக்காக …வக்காலத்து .அங்கே அவன் என் நடு நெஞ்சில் கத்தி சொருகிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் .இங்கே இவர்கள் அவனுக்காக பேசியாகிறது .இருந்தாலும் …பொன்னி பூந்தளிருக்கு ஓர்ப்படி .அவளை போலவே அந்த வீட்டில் வாழ வந்த பெண் .அவள் கணவன் குழந்தையென ஒரு நிறைவான வாழ்வை இங்கே வாழ்ந்து கொண்டிருக்கையில் தனது வாழ்வின் குறையை , தனது சக பெண்ணிடம் கோடிடவும் மனமின்றி சிரித்தாள் .குழவியை நிமிர்த்தி மசாலாவை வழிக்க துவங்கினாள் .

”  சும்மா இருங்க்க்கா எனக்கு வெட்கமாக இருக்கு ….” சிரம்ப்பட்டு வெட்கம் போலொன்றை முகத்தில் காட்டி வைத்தாள் .அந்த பாவனை பொன்னிக்கு ஓரளவு திருப்தியை கொடுத்தது .

” அடுப்படிக்குள்ளே இப்படி தலைமுடியை விரித்து போட்டு நின்றால் என்ன அர்த்தம் …? ” பின்னால் மாமியாரின் அதிகார குரல் கேட்க திரும்பியவள் சொர்ணதாய் தன்னையே முறைத்தபடி இருப்பதை பார்த்ததும்தான் அது தனக்கான வசவு கேள்வியென புரிந்து அவசரமாக தன்னை பார்த்தாள் ்வேகமான அம்மியிழுப்பில் நுனி முடிந்த கூந்தல் அவிழ்ந்து முதுகில் பரவியிருந்த்து .

” கவனிக்கலைத்தை ….” அவசரமாக தன் முடியை வாரி முடித்தாள் .

” ம் …அதே கையோடு இங்கே பாத்திரத்தை எதுவும் தொட்டுடாதே .போய் கையை நல்லா கழுவிட்டு வா …” உத்தரவிட்டு விட்டு ” என்ன சமைத்திருக்கிறாய் நீ …? ” பொன்னியிடம் கேட்டு திருத்தங்கள் சொன்னாள் .

” அனு இன்னும் எந்திரிச்சு வரலையா …? என்னைக்குத்தான் பொறுப்பா இருக்க போறாளோ …? ” இரண்டாவது மருமகளை சிறிது அர்ச்சித்துவிட்டு …மீண்டும் பூந்தளிர் பக்கம் திரும்பி பார்த்தாள் .அவளது பார்வையை சந்தித்ததும் பொன்னிக்கு முகத்தில் பவ்யம் வந்துவிடும் .அனுராதா மனதார இல்லாவிடினும் போலி பாவனையை கொண்டு வந்து வடுவாள் .ஆனால் பூந்தளிரோ …என்ன சொல்லுங்கள் என்ற இயல்பான கேள்வி பார்வையுடன் சாதாரணமாக அவள் கண்களை பார்த்தபடி நின்றாள் .இதனை சொர்ணத்தாய் விரும.பவில்லை .முகம் கடுத்தாள் .

“இது பெரிய இடம் .இங்கே எந்த இடத்தில் எப்படி நடக்கனும்னு இவளுக்கு விளக்கமா சொல்லிடு ….” தன் பக்கம் கை நீட்டி பொன்னியிடம்  சொல்லிவிட்டு போன மாமியாருக்கு எப்படி பதிலடி கொடுக்கலாமென பூந்தளிர் யோசித்த போது

” காபி கொடுங்க மதினி …” என அடுப்படியினுள் வந்து நின்றான் குருபரன் .அவன் விழிகள் வாயை மூடு என அவளை அதட்டின .இல்லை …முடியாது …நான் பதிலுக்கு பேசத்தான் போகிறேன் …பூந்தளிர் விழியிலேயே சொல்ல ,ம்ஹூம் …என அவளுக்கொரு அதட்டலை கண்களில் காட்டிக் கொண்டிருந்த குருபரனின் காது திருகப்பட்டது .

” எதுக்குடா காலங்கார்த்தாலே அடுப்படிக்குள் வந்து நிற்கிற …? ” சொர்ணத்தாய் வலுவாக திருகினாள் .

” ஷ் வலிக்குதும்மா .நான் காபிக்காக ….”

” தினம் …தினம் இப்படித்தான் இங்கேயே வந்து நின்று கேட்டு வாங்கி குடிப்பாயா …?கையில் காபியோடு உன்னைத் தேடி தேடி வீடு முழுவதும் சுத்தனுமே .இன்னைக்கு என்ன …? “

” இனியும் அப்படியே இருக்க முடியுமா சொர்ணாம்மா ..? இனி நம்ம சின்னத்தம்பி ஐயாவிற்கு அடிக்கடி அடுப்படிக்குள் வேலை இருக்கும் பாருங்களேன்….” செண்பகம் கேலியில் சேர்ந்து கொண்டாள் .

” இனி குரு நேரா நேரத்துக்கு சாப்பிட வர மாட்டேங்கிறானேங்கிற கவலை நமக்கில்லை அத்தை .மூணு வேளை சாப்பாட்டிற்கும் வீடு தேடி ஓடி வந்துடுவான் பாருங்களேன் …” பொன்னி தொடர பூந்தளிருக்கு தலையிலடித்துக் கொள்ளலாமா என வந்த்து .

அவன் இங்கே நான் யாரிடம் எப்படி பேசுகிறேனென வேவு பார்க்க வந்து நிற்கிறான் .இவர்களெல்லாம் என்னவோ பொண்டாட்டி மேல் அளவில்லா காதலில் வந்த்து போல் பேசுகிறார்களே …நொந்தாள்.




” எல்லோரும் பேசி முடித்தாயிற்றா …இப்போது எனக்கு காபி தருவீர்களா …இல.லையா …? ” உறுத்தலின்றி டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்த  வெட்கமற்ற குருபரனின் பதில் கேள்வியில் பூந்தளிருக்குத்தான் வெட்கமாக வந்து தொலைந்த்து .உளவாளி வேலைக்கு வந்துவிட்டு   இவன் இப்படி ஒரு காதல் கணவன் போன்ற பாவனையை முகத்தில் ஒட்ட வைத்துத்தான் ஆக வேண்டுமா என்றிருந்த்து அவளுக்கு .

” நிச்சயம் வேண்டும் ….” என்றான் குருபரன் அவர்கள் தனிமையில் .

” எனக்கு உன்னை பிடிக்கவில்லை .உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்பதை நான் இந்த வீட்டில் எல்லோருக்குமே சொல்லியிருக்கிறேன் .எல்லோருமே அறிந்த விசயம்தான் இது .ஆனால் இப்போது …நம் திருமணம் முடிந்த்தும் நிலைமை வேறு …என்னதான் நீ இந்த வீட்டிற்கு தகுதியானவளில்லை என்றாலும் தாலி கழுத்தில் ஏறியதும் நாம இருவரும் நன்றாக வாழ்ந்து விட மாட்டோமோ …என்றுதான் அனைவருமே எதிர்பார்க்கிறார்கள் .அவர்களை நான் ஏமாற்ற போவதில்லை .அதனால் நீ இங்பே ஒழுங்காக நடந்து பொள் ….” வழக்கமான அதிகாரம் குரலில் .

” இப்போ என்ன செய்யனுங்கிறீங்க …? ” எரிச்சலுடன் கேட்டாள் .

” அம்மாவிற்கு உன்னை பிடிக்காது .உன்னை ஏதாவது பேசத்தான் செய்வார்கள் .ஆனால் நீ பேசக்கூடாது .இன்னைக்கு காலையில அம்மாவை பேச தயாராக இருந்தாயே …அப்படி இனி நினைக்க கூட கூடாது ….”

இரண்டு கைகளிலும் இரண்டு கன்னத்தையும் தாங்கியபடி சோபாவில் அமர்ந்து சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் சலனமற்ற முகத்தை கோபமாக பார்த்தான் .

” நான் சொன்னது மண்டையில் ஏறுதா …? அங்கே என்னத்தை பார்க்கிற …? ” சன்னல் தாண்டி நிலைத்திருந்த அவள் பார்வைக்கான காரணம் கேட்டான் .

” மாமர குச்சி நல்லா வலுவா இருக்கும்ல ? ” சம்பந்தமற்ற இந்த கேள்வியில் விழித்தான் .” என்ன …? “

” அதோ இந்த சன்னல் புறம் சரிந்திருக்கே அந்த கிளையில் , இந்த ஓர குச்சி …இங்கிருந்தே கைக்கு எட்டும் .ஒடித்து இலையை உருவி போட்டு ஒரு சொடுக்கு சொடுக்கினால் ….சுளீர்னு முதுகில் விழாது …? செய்யலாமான்னு பார்க்கிறேன் …”

” யாரை  …? “

பதில் சொல்லாமல் அவனை ஏற இறங்கபார்த்தாள் .குருபரனின் முகம் கொதித்து சிவந்த்து .” என்னை அடிப்பாயா நீ ….? “

” இருக்கலாம் ….” தோள்களை குலுக்கி எழுந்தவளின் தோளை பற்றி இழுத்தான் .

” திமிராடி உனக்கு …? “

” எந்த உரிமையில் என்னை தொடுகிறீர்கள் …? ” தன் தோளில் பதிந்திருந்த அவன் கைகளை முறைத்தாள் .

” உன் அழகில் மயங்கி இப்படி  உன்னை உரசிக் கொண்டு  இருக்கிறேனென நினைத்தாயோ …? உன்னுடன் இப்படி நிற்பதெனபதை உலகில் மற்ற எதை விடவும் நான் மிக வெறுக்கிறேன் .நீயெல்லாம் எங்கள் வீட்டிற்குள் நுழையவே தகுதியற்றவள் .ஏதோ ஓர் முன் ஜென்ம புண்ணியத்தில் கிடைத்த இந்த வாழ்வை ஒழுங்காக பணிந்து எல்லோருக்கும் அடங்கி இருந்து வாழப் பழகிக் கொள் ….” அதிகாரமாய் ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாய் முடித்தான் .

மிகுந்த வெறுப்பை முகத்தில் தேக்கி அவனை பார்த்தாள் .தன் தோள்களை பற்றியிருந்த அவன் கைகளை உதறினாள் .அறை வாசலுக்கு நடந்தாள் .நீயெல்லாம் எனக்கு பொருட்டா …? சொல்லாமல் சொன்ன அவள் செய்கையில் ஆத்திரமுற்றவன் ….

” ஏய் நில்லுடி .எனக்கு பதில் சொல்லிட்டு போ “

” முடியாது போடா …” அறை வாசலில் நின்று நிதானமாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டு போய்விட்டாள் .அவள் அழைத்த ” டா ” வை கொஞ்ச நேரம் கழித்து உணர்ந்த குருபரன் சுர்ரென்று கோபம் உச்சந்தலையை தாக்க  அவளை அடித்து நொறுக்கும்  வேகத்தோடு அவள் பின் வந்தான் .பெண்ணென்ற கருணை இனி இவளுக்கு கிடையாது .இவளை …அறைந்து விட வேண்டியதுதான் …தனக்குள் தீர்மானித்தபடி தன்னறையை விட்டு வீட்டின் முன் கட்டிற்கு வந்தவன்  அந்த ” டா ” தருணத்தை விட அதிகமாக  அதிர்ந்தான் .

அங்கே நடுவீட்டில் சோபாவில் பொன்னுரங்கத்தின் அருகே சமமாக அமர்ந்து ஏதோ தீவிர பேச்சில் இருந்தாள்  பூந்தளிர் .




What’s your Reaction?
+1
30
+1
21
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!