Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-12

12

சில்லென்ற காற்று காதுகளை உரசி செல்ல,மூக்கு நுனி சிவந்து உடல்கள் குளிரில் குறுகின. “ம்மா ஜில்…ஜில்…”சிலிர்த்தபடி அவள் மேல் விழுந்து குளிருக்கு இதமாக தாய்மடி கதகதப்பை தேடினான் ஈசன்.அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள் பஞ்சு கன்னங்களில் அழுந்த இதழ் பதித்தாள் “ஆமாம் தம்பு. ரொம்ப குளிர்” 

அருகில் அமர்ந்து கார் ஓட்டிக் கொண்டிருந்த ஹரிஹரன் ஓரக்கண்ணால் இவர்களை திரும்பிப் பார்த்தான்.மகிழ்ச்சியும் ஏக்கமும் இன்னமும் ஏதோ புரிந்து கொள்ள முடியாத ஒரு எதிர்பார்ப்புமாக இருந்த அப்பார்வை, மனதிற்குள் மாலை சூரிய கதிர்களை விசிற,சுற்றிலும் நிறைந்த குளிர்ச்சூழலுக்கு எதிராக அவள் உடல் சூடேறி தகித்தது.

எப்போதும் இப்படித்தான் இவர்கள் இருவரும் கொஞ்சிக் கொள்ளும் போது, ஒரு மாதிரி பார்வை பார்த்து வைப்பான். நானும் வரட்டுமா? என்னையும் சேர்த்துக் கொள்கிறீர்களா? அல்லது எனக்கு கிடையாதா?என்பது போன்ற இப்பார்வைகள் உள்ளங்காலை உறுத்தும் மென் குறுமணலாய் ஜீவிதாவின் மனதிற்குள் நெடுநேரம் தங்கி கிடக்கும்.

நேற்று தான் தோழி சாரு ஹரிஹரனின் கல்லூரி காதலை இவளிடம் புட்டு வைத்திருந்தாள். பிறகும் மேலும் ஒன்றிரண்டு கல்லூரி தோழமைகளிடம் வெளிக்காட்டி கொள்ளாமல் இவள் போன் செய்து விசாரித்ததில் அனைவருமே ஒன்று போல கல்லூரி காலத்தில் ஹரிஹரனுக்கு இவள் மீது இருந்த காதலை உறுதி செய்தனர்.படிப்பு முடிந்த பிறகு இவர்கள் அனைவரிடமும் எந்த தொடர்பும் இன்றி இவள் தள்ளி இருந்ததில் நிறைய விஷயங்கள் தெரியாமல் போனது போலும்.

இவளை தவிர அனைவருக்கும் ஹரிஹரனின் காதல் தெரிந்திருந்தது.எப்போதோ படித்துக் கொண்டிருக்கும் போதே தன் மேல் கணவனுக்கு வந்துவிட்ட காதலுக்காக இப்போது மகிழ்வதா?அந்த காதலுக்கு அவன் செய்த துரோகத்திற்கு கவலை கொள்வதா? கலவையான உணர்வுகளுக்கு இடையே திண்டாடிக் கொண்டிருந்தாள் ஜீவிதா.

குட்டி கைகளால் மகனுக்கு டென்னிஸ் விளையாட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவனை ஜன்னல் வழியாக பார்த்தபடி நின்றிருந்தவள், புறங்கையில் சூடான துளிகள் பட “ஆ” என கையை உதறினாள்.




 

” ஐயோ சாரிங்க மேடம், காபி கொண்டு வந்தேன். மேலே பட்டுடுச்சு” கள்ளச் சிரிப்புடன் கையில் காப்பியுடன் நின்றிருந்தாள் மல்லிகா.

” கண்ணை பிடதியிலா வைத்திருக்கிறீர்கள்? முன்னால் உள்ளது கண்ணிற்கு தெரியாதா?” கத்தினாள்.

அவளுடைய கத்தலில் ஜன்னலுக்கு வெளியே இருந்த ஹரிஹரன் திரும்பிப் பார்த்தான். மல்லிகா கைகளை பிசைந்தபடி பரிதாப முகத்துடன் நின்றாள்.”சாரி மேடம்… தெரியாமல்” இறைஞ்சினாள்.

“பிளான் போட்டு செய்துவிட்டு…ப்ச்…இந்த சாரியையெல்லாம் தூக்கி குப்பையில போடுங்க”

“என்ன ஆயிற்று?” ஹரிஹரன் உள்ளே வந்திருந்தான்.

” சார் தெரியாமல் மேடம் மேலே காபி பட்டு விட்டது.அதற்கு…” மல்லிகா பேசிக் கொண்டிருக்கும்போதே ஹரிஹரன் வேகமாக வந்து ஜீவிதாவை திருப்பி ஆராய்ந்தான்.

” ரொம்ப சுட்டு விட்டதா?எங்கே?”

” இதோ இங்கே தான் சார்” 

புறங்கையை சுட்டி காட்டிய மல்லிகாவை திகைப்புடன் பார்த்தாள் ஜீவிதா. குரோதம் முகம் முழுவதும் பரவியிருக்க கண்கள் மட்டும் கலங்கி அழத் தயாராக நின்றாள் மல்லிகா.

“என்ன ஜீவிதா இதற்கா இவ்வளவு கத்தினாய்?” சட்டென மாறும் மல்லிகாவின் முகபாவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவள் இந்த கேள்வியில் எரிச்சலாக திரும்பினாள்.

“அடுத்த தடவை உங்கள் சமையல்காரியை காபியை என் மூஞ்சியிலேயே ஊற்ற சொல்லுங்கள்”

 லேசான விசும்பலுடன் மல்லிகா அழவே ஆரம்பித்து விட “ஷட் அப்” அதட்டினான் ஹரிஹரன்.

இன்னமும் அங்கேயே இருந்தால் மல்லிகாவிற்கு போட்டியாக தானும் கண்கலங்கி விடுவோமோ என தோன்ற ஆரம்பிக்க ஜீவிதா வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அவள் அருகே வந்து அமர்ந்தான் ஹரிஹரன். சட்டென எழுந்து கொள்ள போனவளின் மடியில் ஈசனை அமர வைத்தான்.

“தம்பு உன் அம்மாவை கிளம்பச் சொல்.நாம் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாம்”

“நான் வரவில்லை” கத்தரித்தாள்.

” ஈசன் போரடித்து கிடக்கிறான் ஜீவிதா. வா பேக்டரி வரை போய் வரலாம்.”

“அவனை மட்டும் கூட்டிப் போங்கள்”

” என்னால் தனியாக அவனை சமாளிக்க முடியாது. நீயும் வா. தம்பு அம்மாவை கூப்பிடு” மகனையும் ஏவி விட்டான்.குழந்தை அவள் கழுத்தை கட்டிக்கொண்டு கெஞ்ச ஆரம்பிக்க ஜீவிதா கிளம்பி விட்டாள்.

குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஹரிகரன் ஈசன் எனச் சொல்ல,இதென்ன பெயரென ஜீவிதா முகம் சுளித்தாள்.ஆனால் அப்போது குழந்தையிடம் அவளுக்கென்ன உரிமை இருந்தது?

அந்த பெயரையே சொல்ல மாட்டேனென்ற வீம்புடன் தம்பு என அவள் செல்லப் பெயரிட,அழுத்தமாக ஈசன் என்றே அழைப்பான் அவன்.இப்போதோ அவளை சமாதானம் செய்யவென அவளுடைய செல்ல அழைப்பு அவனிடம்.

நான் ஒன்றும் மயங்க மாட்டேன் போ…என விரைத்தாற் போல் முகத்தை வைத்துக் கொண்டாலும்,தன் பக்கம் சாயும் அவனது செய்கை அவளை இளக்கவே செய்தது.

 மூவரும் ஜிப்பில் கிளம்பும்போது வாசல் பக்க ஜன்னலில் மல்லிகாவின் முகம்,சற்று முன் பார்த்த அதே குரோதத்துடன். இதைச் சொன்னால் யார் நம்புவார்கள்?

“நமது தேயிலை தொழிற்சாலையில் பாரம்பரிய முறைப்படி தேயிலை தூள் தயாரிக்கிறோம் ஜீவிதா. இதனை பார்க்க நாமே பார்வையாளர்களையும் உள்ளே வரை அனுமதிக்கிறோம்.இன்று உனக்கும் அவற்றை காட்டலாம் என்று நினைத்தே அழைத்து வந்தேன்”ஹரிஹரன் சொல்ல தலையை அசைத்துக் கொண்டாள்.

 மூவருமாக தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கே டீத்தூள் தயாரிக்கப்படுவதை பார்த்தனர். நிறைய சுற்றுலாப் பயணிகள் தொழிற்சாலையினுள் ஆவலுடன் தயாரிப்பு முறைகளை பார்த்தபடி இருந்தனர்.பேக்டரி முழுவதையும் சுற்றிவிட்டு அவர்களுக்கான தனி அறையில் வந்து அமர்ந்ததும் ஒரு கப்பில் கொண்டு வந்து கொடுத்த டீயை ருசித்தவள் வியப்பில் விழி விரித்தாள்.




” ரொம்ப டேஸ்டாக இருக்கிறதே. இது என்ன டீ ?”

“இது ஒயிட் டீ.இதற்கான தூள் தேயிலைச் செடிகளின் தேர்ந்தெடுத்த காம்புகளில் இருந்து தயாரிக்கப்படும். உடலுக்கு மிகவும் நல்லது. இதன் விலை மிக அதிகம். அதனால் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே ஆர்டரின் பொறுத்து இந்த டீத்தூளை தயாரிக்கிறோம். இது தவிர 14 வகையான டீ தூள்கள் இங்கே தயாராகிறது” ஹரிஹரன் டீ தூள்களின் வகைகளை ஆல்பமாக காட்ட அவற்றை ஆவலுடன் பார்த்தாள் ஜீவிதா.

“இங்கே சுற்றுலா வருபவர்கள் தங்குவதற்கான விடுதிகளையும் கட்டி இருக்கிறேன்.அவர்கள் எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பதற்கும், போடி, மூணாறு, குரங்கணி போன்ற இடங்களை பார்ப்பதற்கும், ட்ரக்கிங் போவதற்குமான எல்லா ஏற்பாடுகளையும் நம்முடைய நிறுவனமே செய்து கொடுக்கிறது”

 ஆக, இங்கே எஸ்டேட் தொழிலை தவிர, அதனைச் சார்ந்த மற்ற தொழில்களையும் ஆரம்பித்து வைத்திருக்கிறான்.இவற்றிற்கெல்லாம் எவ்வளவு உழைக்க வேண்டியது இருக்கும்?அவள் அறிந்த நான்கு வருடங்களில் அவனுடைய உழைப்பை உணர்ந்து நெகிழ்வாய் அவனை நோக்கினாள்.

மிக உடனே அவளது நெகிழ்வை கண்களில் கண்டு கொண்டவன் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான். “ஜீவி நான் சொல்வதை கவனமாக கேள். மல்லிகா சமையல்காரி அல்ல. ஒருவகையில் எங்கள் குடும்பத்திற்கு தூரத்து உறவு.எல்லோரையும் விபத்தில் பறி கொடுத்து விட்டு யாருமற்ற அனாதையாக நான் இந்த மலை உச்சியில் தனியே கிடந்த போது, எனக்கு வேளைக்கு சமைத்து போட்டு என்னை தேற்றி கொண்டு வந்தவர்கள் மல்லிகாவும் அவள் அம்மாவும்தான். எனக்கு உதவ என்றுதான் அவர்கள் வீட்டிற்குள் வந்தார்களே தவிர சமைக்க அல்ல. அவளுடன் நீ கொஞ்சம் சுமூகமாக பழக வேண்டும்” ஹரிகரன் சொன்ன விவரங்களை வேக வேகமாக தன் மனதிற்குள் ஓட்டி, பிரித்து ஆராய்ந்தாள் ஜீவிதா.

அந்த மல்லிகா இங்கே முதலாளி தோரணையுடன் வளைய வருவதற்கு இதுதான் காரணமா? ஏதோ தூரத்து சொந்தமாமே!ஹரிஹரன் அவள் கையை மெல்ல அழுத்தினான். “ஜீவி ப்ளீஸ் செய்கிறாயா?”

இப்போது பள்ளி குழந்தை போல் எனக்கு ஒழுங்காக சமைக்கவில்லை. காபியை என் மேல் கொட்டினாள். என்று புகார் சொல்ல, ஜீவிதா விரும்பவில்லை. “ஸ்வேதாவை திருமணம் முடித்து வரும்போது மல்லிகா இங்கே இருந்தார்களா?”  இந்த கேள்வியை ஹரிஹரன் எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் தெரிந்தது. இதற்கு பதில் சொல்லும் விருப்பமும் அவனுக்கு இல்லை.”ம் “என்றொரு பதிலை உறுமலாய் தந்தான்.

“என் அக்காவிற்கு இங்கே என்ன நடந்தது ?”ஜீவிதாவின் இந்த அடுத்த கேள்வியில் மூக்கு விடைக்க எழுந்து விட்டான். ” போகலாம்” ஓரமாக டேபிளில் மேல் ஏறி விளையாண்டு கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பினான்.

மனதிற்குள் ஏதோ கணக்குகளை போட்டபடி அவனை பின்தொடர்ந்தாள் ஜீவிதா.




What’s your Reaction?
+1
41
+1
29
+1
3
+1
0
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!