Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம் -11

11

“மாடியில் இரண்டாவது ரூம் சாவி வேண்டும்” ஜீவிதா கேட்க, காதில் விழாதது போல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து நின்றிருந்தான் ஹரிஹரன்.

“உங்களைத்தான் கேட்கிறேன்”

” எல்லா சாவியும் அன்றே உன்னிடம் கொடுத்து விட்டேனே” 

“நீங்கள் கொடுத்த சாவியில் அந்த அறை திறக்கவில்லை” 

“எனக்கு தெரியவில்லை. அந்த அறை சாவி எங்கேயோ விழுந்துவிட்டது போலும். பிறகு பார்க்கலாம் “அசட்டையாக கூறியவனை எரிச்சலாக பார்த்தாள்.

“அந்த அறையை சுத்தம் செய்ய வேண்டும்.எனக்கு சாவி வேண்டும்” பிடிவாதமாக நின்றாள்.

 திரும்பி அவளை இடுங்கிய கண்களுடன் பார்த்தவன் “தேடி எடுத்துக் கொள்” என்று விட்டு கீழிறங்கி போய் விட்டான்.

 சவால் விடுகிறானா ?தேடி எடுத்து திறக்கிறேன். ஜீவிதா அந்த அறையில் எல்லா இடங்களிலும் சாவியை தேடினாள். அங்கு மட்டுமல்ல பக்கத்து அறை கீழே உள்ள அறைகள் என்று வரிசையாக தேடினாள்.ஆங்காங்கே கிடைத்த சாவிகள் எதுவும் அந்த அறைக்கு உரியது இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு சோர்வுடன் சோபாவில் அமர்ந்தாள்.

” சூடாக காபி தரவா?” கேட்டபடி அருகில் வந்து நின்ற மல்லிகாவிடம் மௌன சிரிப்பு இருந்தது. “என்னங்க மேடம் எதையோ தேடுறீங்க போல?” கேட்டவளை எரிப்பது போல் பார்த்தாள்.

“என்னன்னு சொன்னீங்கன்னா நானும் ஹெல்ப் செய்வேன்”

“ஒரு மண்ணும் வேண்டாம்.நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க” கத்திவிட்டு ஈசனை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்தாள்.பந்தினை அவன் கையில் கொடுத்து புல் தரையில் அவனை விளையாட விட்டுவிட்டு யோசனையுடன் அங்கும் இங்கும் நடந்தாள்.

“அம்மா பந்து அங்கே…”பக்கத்தில் இருந்த சரிவை காட்டிவிட்டு ஈசன் அதில் இறங்க முயல,வேகமாக ஓடிப் போய் அவனை தூக்கிக் கொண்டு பள்ளத்தை எட்டிப் பார்த்தாள். அது பள்ளம் இல்லை சிறு சரிவு மட்டுமே. சரிவின் கீழே இருந்த சமவெளியில் பந்து கிடந்தது.

” தம்பு வாங்க பந்தை எடுக்கலாம்” விளையாட்டு போல் அவனை உற்சாகப்படுத்திய படி அவன் கைபிடித்து மெல்ல சரிவில் இறக்கி தானும் இறங்கினாள்.

“நான் தான் ஃபர்ஸ்ட் “கத்தியபடி போய் பந்தை எடுத்த குழந்தையை அணைத்து முத்தமிட்டாள். அவன் அங்கேயே பந்தை போட்டு விளையாட ஆரம்பிக்க அப்படியே அந்த சரிவில் அமர்ந்து குழந்தையை ரசித்து கொண்டிருந்தாள்.

“காலையில சாப்பிடல மல்லிம்மா. இரண்டு தோசை ஊத்தி தரீங்களா?” மேலே குரல் கேட்டது.அது தோட்டக்காரன் குரல்.எஸ்டேட் தொழிலாளிதான்.ஹரிகரன் இங்கே அனுப்பி வைப்பான்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து தோட்டத்தை சுத்தப்படுத்தி செடிகளுக்கு தண்ணீர் விட்டு போவான். 

“அப்படி உட்காரு சுப்பு.தோசை எடுத்துட்டு வரேன்” மல்லிகாவின் குரல் கேட்டது.இந்த வீட்டின் எஜமானி யார்?மல்லிகாவின் குரலில் இருந்த முதலாளி பாவனை ஜீவிதாவை இப்படி நினைக்க வைத்தது.

“மகராசி நீங்க இருக்கறதுனால நெனச்ச நேரம் நான்கு வாய் சோறு தின்ன முடியுது”தோட்டக்காரன் பேசிய ஓசையில் இவளுக்கு நேர் மேலே இருந்த மரத்தடியில் அவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

“உங்கள மாதிரி வேலைக்காரங்களால தான் எங்கள மாதிரி முதலாளிங்கள் வாழ்ந்துட்டு இருக்கோம்.அதை மறப்போமா சுப்பு ?”மல்லிகா சொல்ல ஜீவிதா துணுக்குற்றாள்.முதலாளியுடன் தன்னையும் இணை கூட்டிக் கொள்ளும் இவள் இங்கே சமையல்காரி இல்லையா?

“உங்க அருமை இங்கு யாருக்கும்மா தெரியுது?”




 

” அப்படி யாருக்கும் தெரிய வேண்டாம்.நான் உண்டு என் வேலை உண்டு என்று இப்படியே இந்த வீட்டில் ஒரு மூலையில் இருந்து விட்டு போகிறேன்” மல்லிகாவின் குரல் கரகரத்தது.

“ஐய்யே அழாதீங்கம்மா.நீங்கெல்லாம் கண்ணீர் விட்டா பூமி தாங்காது”

 ஜீவிதாவிற்கு இவர்கள் பேச்சில் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.இங்கே என்ன நடக்கிறது?

“இரண்டாவதா வந்தவங்க எப்படி இருக்காங்க?” சுப்பு கேட்க காதுகளை கூர்மையாக்கினாள் ஜீவிதா.

” என்னத்த சொல்றது? மூத்தவங்கள தேவலையாக்கிடுவாங்க போல”

” இவங்களும் அடிக்கடி கத்துறாங்க போலயே? இன்னைக்கி காலைல கூட சத்தம் வெளியே வர கேட்டது”

” ஆமாம் சுப்பு மூத்தவுகளுக்கு தங்கச்சி தான இவங்க? அதே வியாதி இவங்க கிட்டயும் இருக்குமில்ல? ரெண்டு பேருக்கும் இடையில நான் தான் கிடந்து அல்லாடறேன்”

” மூத்தவங்கள ஐயா ரூமுக்குள்ள பூட்டியே வைத்திருந்தார்.இவுங்களை வெளியில விட்டிருக்கிறாப்ல தெரியுதே” 

“இவுங்களையும் உள்ள பூட்டி வைப்பாரு.ஆனா அதுக்கு கொஞ்ச நாள் ஆகணும். சரி நீ சீக்கிரம் சாப்பிட்டு தோட்டத்தை பாரு. நான் போய் மத்தியான வேலையை கவனிக்கிறேன்” மல்லிகா நடந்து செல்லும் ஓசையின் பின்னே தோட்டக்காரனும் எழுந்து செல்லும் அரவம் கேட்டது.

ஜீவிதா அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்.பந்து விளையாடி முடித்த குழந்தை தாயின் மடி தேடி ஏறி முடங்கிக் கொள்ள, அவனை அணைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள்.சுற்றுப்புறம் இருள துவங்குவதை அவள் உணரவில்லை.சிறிது சிறிதாக சூழலில் குளிர் அதிகரிக்க மெல்ல தன்னிலைக்கு திரும்பியபோது நன்றாகவே இருட்டி இருந்தது.

மேலே “ஜீவிதா” என்ற ஹரிஹரனின் அழைப்பு குரல் கேட்க திடுக்கிட்டு அண்ணார்ந்தாள். ஈசன் அவள் மடியில் கதகதப்பாக பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்க இங்கே இருக்கிறேன் என சொல்ல வாய் திறந்தவளுக்கு குளிரில் வாய் குழறியது. கை கால்களும் அதே போல் மரத்திருக்க கண்டவள் குழந்தையை பத்திரமாக தன்னோடு அணைத்துக் கொண்டு மெல்ல அசைந்து எழ முற்பட்டாள்.

 “ஷ்” என்ற சீறல் போல் கேட்க திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள். பெரிய பாம்பு ஒன்று படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தது. இருளில் அதன் கண்கள் ஒளிர்ந்தன. எழ எண்ணியவள் அப்படியே அசையாமல் உட்கார்ந்து விட பாம்பும் அப்படியே இருந்தது.

தாங்கள் இங்கு இருப்பதை ஹரிஹரனுக்கு தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கையில் தட்டுப்பட்ட சிறு கல் ஒன்றை அதிகம் உடலை அசைக்காமல் மேலே தூக்கி எறிந்தாள். அடுத்த இரண்டாவது நிமிடம் மேலிருந்து டார்ச் ஒளி இவள்மேல் பட்டது.

” ஜீவி “ஹரிஹரனின் பதட்ட குரல்.

” இங்கே பாம்பு இருக்கிறது” உதட்டை மட்டும் அசைத்து குரல் கொடுத்தாள்.

” அசையாதே ,அப்படியே இரு” எச்சரித்தவன்,பூமியில் அதிக அசங்கல் இன்றி கீழ் இறங்குவது தெரிந்தது.கையில் பெரிய குச்சியுடன் வந்தவன் இவள் அருகில் வந்ததும் பாம்பின் முன் குச்சியை நீட்டி ஒரு லயத்துடன் ஆட்ட, பாம்பு குச்சியில் சுழன்று கொண்டது. அப்படியே தூக்கி பள்ளத்திற்குள் விட்டெறிந்தான்.

 இப்போதுதான் சீராக மூச்சுக்களை விட்ட ஜீவிதாவை இறுக்கி அணைத்தான் ஹரிஹரன்.”ஏன்டி இப்படி பண்ணினாய்?” பிதற்றினான்.

இவ்வளவு நேரமும் குளிருக்குள் கிடந்தவளுக்கு அவனது உடல் கதகதப்பு இதமாக இருக்க வாகாக அவன் கைகளுக்குள் அமிழ்ந்தவளின் கண்கள் அவன் பின்புறம் பார்த்து திடுக்கிட்டன.பாதி சரிவில் மல்லிகா நின்றிருந்தாள்.அவள் கண்களில் சற்று முன் பார்த்த நாகத்தின் பளபளப்பு. 

” ஈசன் எப்படி இருக்கிறான்?” அவள் மடியிலிருந்து பிள்ளையை தூக்கி அணைத்துக் கொண்டான்.குழந்தை சிணுங்கி பின் தூக்கத்தை தொடர்ந்தான்.  

ஹரிஹரனின் கைகளின் பலத்தில் மெல்ல மேடேறினாள். இவ்வளவு நேரமாக இங்கேயா உட்கார்ந்து இருந்தாய்?என்பது போல் பார்த்தன மல்லிகாவின் விழிகள். அந்த பார்வையும் சூழலின் குளிரும் ஏதோ செய்ய ஜீவிதா கண்கள் சொருக மயக்கத்திற்கு போகத் துவங்கினாள்.

 கைகளுக்குள் இருந்த அவள் சரிவதை உணர்ந்த ஹரிகரன் குழந்தையை மல்லிகாவிடம் கொடுத்துவிட்டு,அவளை தாங்கி பிடித்து தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் போனான்.

 விறகு கணப்பின் முன் சோபாவில் அவளை படுக்க வைத்தவன் பரபரவென்று கை, கால்களை தேய்த்து விடத் துவங்கினான். 

“நான் ஹெல்ப் பண்ணவா?” மல்லிகா அருகே வர,” வேண்டாம் நீ குழந்தையை பார்த்துக் கொள் ” பரபரப்பும் தவிப்புமாக ஜீவிதாவை தன் மடியில் போட்டுக்கொண்டு கைகள் கால்கள் என தேய்த்து விட்டு அவள் உடம்பில் இயல்பான சூடு வரும் வரை பார்த்திருந்தான்.

 ஜீவிதா இயல்பாக தூங்க ஆரம்பிக்கவும் அவளை கைகளில் ஏந்தி கொண்டு போய் படுக்கை அறையில் படுக்க வைத்தான். தாயின் உடல் சூட்டிற்குள் கதகதப்பாக இருந்ததினாலோ என்னவோ ஈசன் எந்த இடையூறுமற்று  தூக்கத்தை தொடர்ந்திருந்தான். அவர்கள் இருவர் அருகிலும் உட்கார்ந்து இரவு வெகு நேரம் வரை அவர்களை பார்த்தபடியே இருந்தான் ஹரிஹரன்.

மறுநாள் காலை கண் விழித்ததும் அறைக்குள் இருந்த ஹரிஹரனை வியப்பாக பார்த்தாள் ஜீவிதா. சில நாட்களாகவே அவள் தூங்கி எழும்போதே அவன் இருக்க மாட்டான். இன்றோ கண்விழித்ததும் முன்னால் நின்றவனை பார்த்த உடனேயே ஏதோ ஒரு வகை சொல்லத் தெரியாத உற்சாகம் அவளுள் வந்து நிரம்பிக் கொண்டது.

” இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” 

“பரவாயில்லை நன்றாகிவிட்டது” என்றபடி எழுந்து அமர்ந்தவளின் தோள்களை பற்றினான்.

” எதற்காக அந்த பள்ளத்திற்குள் போய் உட்கார்ந்து கொண்டாய்?” கண்கள் கூர்மையான கத்தியாய் அவளை குத்தியது.

” தம்பு பந்தை கீழே போட்டு விட்டான். அதை எடுப்பதற்காக இரண்டு பேரும் இறங்கினோம். அப்படியே அங்கேயே விளையாண்டு கொண்டிருந்ததில் நேரம் போய்விட்டது”

” இதனை என்னை நம்பச் சொல்கிறாயா? இந்த குளிர் பிரதேசத்தில் இருட்டும் வரை யாராவது அப்படி பள்ளத்திற்குள் போய் உட்கார்ந்து கொண்டிருப்பார்களா?” குற்றவாளி போல் நிறுத்தி வைத்து அவன் கேள்விகள் கேட்டதில் ஜீவிதாவிற்கு கோபம் வந்தது.

” நடந்தது இதுதான். இதனை நீங்கள் நம்ப வேண்டும் என்று எனக்கு எந்த கட்டாயமும் கிடையாது” ஜீவிதாவின் உயர்ந்த குரலில் ஈசன் விழித்துக் கொண்டு சிணுங்க,பிள்ளையை பார் என்பது போல் ஜாடை காட்டிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.

குளித்து முடித்து வந்த போது ஹரிஹரனும் ஈசனும் டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்திருந்தனர். இருவருக்கும் தோசை கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. ஈசனுக்கு மென்மையான குட்டி தோசைகள். ஹரிஹரனுக்கு மொறுமொறுப்பான பெரிய தோசைகள். பார்த்து பார்த்து தயாரித்திருந்த விதம் தெரிந்தது. அவர்கள் இருவரின் தட்டை நோட்டமிட்டபடி தானும் உண்ண அமர்ந்தாள் ஜீவிதா.

” எனக்கு ஒரு முட்டை தோசை போட்டு கொண்டு வாங்க” உயர்ந்த குரலில் அடுப்படியை பார்த்து ஏவினாள். 

ஹரிஹரன் முகம் மாற இவள் பக்கம் குனிந்தான். “எதற்கு இவ்வளவு அதிகாரம்?”பற்களை கடித்தான்.

” தோசை தானே கேட்டேன்” 




“கேட்பதிலும் ஒரு முறை இருக்கிறது”

“நான் முறையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.முறை,தராதரமெல்லாம் உங்களுக்குத்தான் தெரியவில்லை” வீட்டுப் பணியாளை வைத்துக்கொண்டு அவன் தன்னை அடக்கியது கோபத்தை தர ஜீவிதாவும் பதிலுக்கு பதில் பேசினாள்.

“இரவு நேரத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு குழிக்குள் போய் உட்கார்ந்து கொண்டவள் தானே நீ? எனக்கு முறையைப் பற்றி வகுப்பெடுக்கிறாயா?”

” நானாக அப்படி உட்கார்ந்து கொள்ளாவிட்டாலும், நீங்களாக பிடித்து தள்ளிவிட மாட்டீர்களா? உங்கள் புத்தி தெரியாதா?”

” ஏய் என்ன பேச்சு ஒரு மாதிரியாக இருக்கிறது”

“இல்லை இப்போதுதான் சரியாக இருக்கிறது” இருவரும் மாறி மாறி வாய் சண்டை இட்டுக் கொள்ள ஈசன் உதட்டை பிதுக்கியபடி மெல்ல அழுகையை ஆரம்பித்தான்.

 ஹரிஹரன் சட்டென எழுந்து குழந்தையை தூக்கிக்கொண்டு “இந்த பிள்ளையைப் பற்றிய எண்ணம் கூட உன்னிடம் இல்லை” வெறுப்பாக சொல்லிவிட்டு குழந்தையோடு வெளியே போய் விட்டான்.

ஜீவிதா ஓரக் கண்களால் அடுப்படிக்குள் பார்க்க அவள் எதிர்பார்த்தது போன்றே வாசலில் இருந்து உள்ளே நகர்ந்தாள் மல்லிகா.

ஆறிக் கிடந்த தோசையை யோசனையுடன் பிய்த்தபடி இருந்த போது அவள் போன் ஒலித்தது”ஹேய் சாரு என்னடி உனக்கு என் ஞாபகம் எல்லாம் இருக்கிறதா ?”போனில் உற்சாகத்துடன் தனது கல்லூரி தோழியிடம் பேசினாள்.

” உதை வாங்கப் போகிறாய்.நான் உன்னிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. உன் கல்யாணத்திற்கு கூட எனக்கு சொல்லவில்லை தானே நீ?”

“அது ஒரு அவசரத்தில் நடந்து விட்டதடி” 

“அவசரமோ ஆத்திரமோ நம்ம ஹரி நினைத்ததை சாதித்து விட்டார்” ஜீவிதாவினுள் எதுவோ உடைந்தது.

“எதை சொல்கிறாய்?” 

“உங்கள் காதலை, நிச்சயம் நாங்கள் கல்யாணம் செய்து கொள்வோம் என்று எங்களிடம் சவால் போலவே விட்டிருந்தார் தெரியுமா? இப்போது சாதித்து விட்டார்.சரிதானே?”

“ம்.அப்படித்தான் சாரு.எனக்கு கொஞ்சம் வேலைகள் இருக்கிறது. பிறகு கூப்பிடுகிறேன்” ஜீவிதா நைந்த மனதுடன் போனை கட் செய்தாள்.




What’s your Reaction?
+1
46
+1
25
+1
1
+1
2
+1
0
+1
3
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!